\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எம்.ஜி.ஆர்.

MGR_520x650தமிழ்த்திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்தவர் எம்.ஜி.ஆர். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் எனும் பெயரே, தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள பலர் மனதில் எம்.ஜி. ஆர். எனும் மூன்று எழுத்துக்களாக நிலை பெற்று விட்டது. இவரது பெற்றோர் கோபாலமேனன், சத்யபாமா. கோபாலமேனன் அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றி வந்தார். அநீதிக்கு துணை போக மறுத்ததால் பல இடங்களுக்கு மாற்றல் செய்யப்பட்டு இறுதியில் அவர் தனது வேலையை துறந்து குடும்பத்துடன் இலங்கை சென்றார்.
இவர்கள் இலங்கையில் கண்டியில் வசித்த போது, 1917ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி எம்.ஜி.ஆர். பிறந்தார். எம்.ஜி.ஆருக்கு முன்னர் பிறந்த இரண்டு ஆண், இரண்டு பெண் என இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். 1920 ஆம் கோபாலமேனன் இறந்து விட, திக்கற்று நின்றது குடும்பம். பின்னர் நோய்வாய்பட்டு இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தையும் இறந்து விட எஞ்சி இருந்தது எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியும் மட்டும் தான். சில வருடங்களில் மேலும் பல சிக்கல்களை சந்தித்த சத்யபாமா, தமிழகம் திரும்பி,. குழந்தைகளுடன் கும்பகோணத்தில் இருந்த தனது தம்பி நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். நாராயணன் “மதுரை ஒரிஜினல் பாய்ஸ்” நாடகக் குழுவில் பின்பாட்டு கலைஞராக பணியாற்றி வந்தார். குடும்பத்தில் ஏழ்மையை சமாளிக்க நாராயணன், சக்கரபாணியையும், எம்ஜிஆரையும் நாடகக் குழுவில் சேர்த்து விட்டார். அப்போது எம்.ஜி.ஆர் மூன்றாம் வகுப்பும், சக்ரபாணி ஏழாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தார்கள். இருவரின் பள்ளிப் படிப்பும் இந்நிலையில் முடிந்து விட பாண்டிச்சேரியில் நாடக குழு வாழ்க்கையை தொடங்கினர். தொடக்கத்தில் சிறு பாத்திரங்களில் நடித்து வந்த எம்.ஜி. ஆர். புராண படங்களில் பெரிய பாத்திரங்களில் நடிப்பதற்கு நல்ல கட்டுடல் தேவை என்பதை உணர்ந்து பல தேகப் பயிற்சிகள் செய்து வந்தார். 1936ஆம் ஆண்டு வேல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் எஸ். எஸ். வாசனின் சதிலீலாவதி கதையை திரைப்படமாகத் தயாரித்தனர். அதில் கதாநாயகனாக எம்.கே.ராதாவும், போலிஸ் அதிகாரி வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருந்தனர். அவர் நடித்த முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படம், எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகிய நால்வருக்கும் முதல் படமாக அமைந்தது. அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கன் இப்படத்தின் இயக்குனர்.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் “இரு சகோதரர்கள்”. இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் எம்ஜிஆருக்கு பார்கவி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார் சத்யபாமா. ஆனால் சில மாதங்களில் தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்த பார்கவி திடிரென இறந்தார். வெளியூரில், நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆருக்கு பார்கவியின் உடலை பார்க்க கூட முடியவில்லை. எம்.ஜி.ஆரின் துயரத்தை போக்க, சதானந்தவதி என்ற பெண்ணை அவருக்கு மறுமணம் செய்து வைத்தார் சத்யபாமா. இவர்கள் இருவரும் சென்னை நகரில், வால்டாக்ஸ் சாலையில் சிறிய வீட்டில் வாழ்க்கையை துவங்கினர். சில நாட்களில் சதானந்தவதி கர்ப்பம் தரித்திருந்த பொது காச நோய் தாக்க கரு அகற்றப்பட்டது.
பின்னர் அடையாறில் ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர். அங்கு வசித்தபோது, அவரது தாய் சத்யபாமா காலமானார். 1950 ம் ஆண்டில் இரண்டாவது கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் சதானந்தவதி படுத்த படுக்கையானார். அன்றிலிருந்து அவர் மறையும் வரை ஏறத்தாழ 20 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். படப்பிடிப்பு முடிந்து நேரங்கழித்து வந்தாலும் கூட சதானந்தவதிக்கு தேவையானவற்றை செய்து விட்டு அவரை படுக்கையில் உறங்க வைத்த பிறகு, படுக்கையினருகேயே நாற்காலியில் உட்கார்ந்தவாறு தூங்குவாராம்.

இதனிடையே பட உலகில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். 1941ல் “ஏழிசை மன்னர்” எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு “அசோக்குமார்” படத்தின் மூலமாக கிடைத்தது. அசோக்குமாரைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் பாடத் தெரியாது என்ற குறை இருந்தபடியால் எம்.ஜி.ஆரால் பெரிய, முக்கிய பாத்திரங்களில் நடிக்க முடியாமல் போனது. 1946ல் பின்னணி பாடும் முறை வந்தது. அதே சமயம், கருணாநிதியின் வசனத்தில் உருவாகி எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” படம் வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்றது. சில படங்களைத் தொடர்ந்து இவரது , “மந்திரிகுமாரி” மாபெரும் வெற்றி பெற்றது. கருணாநிதியுடன் நெருக்கம் கொண்டார் எம்.ஜி.ஆர். இருவரும் சேர்ந்து திரைப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினர். இவர்களது தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த “மலைக்கள்ளன்” படம் மகத்தான வெற்றி பெற்று, அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதனிடையே வி. என். ஜானகியுடன் ஒரு படத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., மறைந்த தனது முதல் மனைவி பார்கவியை போலவே ஜானகி இருந்ததால் அவரிடம் மனதை பறி கொடுத்தார். இதனையறிந்த சதானந்தவதி தானாகவே முன்வந்து எம்.ஜி.ஆருக்கு வி.என். ஜானகியை மணமுடித்து வைத்தார்.
கருணாநிதியுடன் நெருக்கம் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு, ஒருமுறை அறிஞர் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணாவின் கனிவான, பண்பான பேச்சு எம்.ஜி.ஆரை வசீகரித்தது. அதுவரை காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் தொண்டனாக இயங்கி வந்த எம்.ஜி.ஆர்., தி.மு.க.வின் உறுப்பினர் ஆனார். இந்த சமயத்தில் பெரிய பொருட் செலவில் தனது நாடோடி மன்னன் படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டார் எம்.ஜி.ஆர். “இப்படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் ; இல்லையென்றால் நாடோடி ” என்று அவரே சொல்லுமளவுக்கு கடன்பட்டு படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது . திரைப்படங்களில் இவர் பெற்றிருந்த புகழ் கட்சிக்கு பெரிதும் உதவியதால் கட்சியில் விரைவிலேயே பெரிய பதவிகளும் அளிக்கப்பட்டன. இப்படி பல உயர்ந்த நிலைகளை அடைந்த போதும் அவர் தனது ஏழ்மையில் வாடிய நாட்களை மறக்க வில்லை. ஏழை எளியவர் உதவி என்று கேட்காவிட்டாலும் அவர்களை அணுகி உதவிகள் செய்து வந்தார். எந்த நிலையிலும் மக்களுக்கு பசியென்ற உணர்வும், உணவுக்காக ஏக்கமும் வந்துவிடக் கூடாது என்பதை கொள்கையாகவே கொண்டிருந்தார். யார் எந்த நிலையில், உதவி என்று வந்தாலும் வாரி வழங்கி வந்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி சதானந்தவதியும் காலமானார்.
எம்.ஜி.ஆர். நடித்த ஒவ்வொரு படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலை வாரிக் குவித்தது. அடிமைப்பெண் , ஆயிரத்தில் ஒருவன், திருடாதே, எங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்று “வசூல் மன்னன்” என்ற பட்டத்தை அவருக்கு பெற்று தந்தது.

ஜனரஞ்சகமான விஷயங்கள் மக்களை எவ்வாறு கவர்கின்றன என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர், தனது படங்களுக்கென தனியொரு சூத்திரத்தை வைத்திருந்தார். சிறப்பான பாடல்கள், பெண்களை கவரும் கதாபாத்திர அமைப்பு, இளைஞர்களை கவர சண்டைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்து தனது படங்களின் வெற்றிக்கு வழி வகுத்து வந்தார். திரைப்படம் என்பது மக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்களை நல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாக இருக்க முடியும் என்று மெய்ப்பித்தவர். எம்.ஜி.ஆர்

1967ல் தேர்தல் வந்த போது காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியனை எதிர்த்து தி.மு.க நின்றது. பரங்கிமலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆர். போட்டியிட வாக்கு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த நிலையில், எம்.ஜி. ஆருடன் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்வதற்காக அவரது ராமாவரத் தோட்டத்துக்கு வந்திருந்த எம். ஆர். ராதா, பேச்சில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டு விட, கழுத்துப் பகுதியில் குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது தவறை உணர்ந்து எம்.ஆர். ராதாவும் தன்னையே சுட்டு கொள்ள முயன்று அதே மருத்துவமனையில் சேர்க்கப்பாட்டார். அந்த நிலையிலயும் எம்.ஜி.ஆர்., ‘ராதா அண்ணனை பார்த்துக் கொள்ளுங்கள் … அவருக்கு தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்று மருத்துவர்களிடம் வேண்டிக் கொண்டாராம். அப்போது நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், குண்டடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரின் புகைப்படம் பெரும் பங்கு வகித்தது. 1967 தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனார். ஆனால் அடுத்த ஆண்டே அண்ணாதுரை காலமாகிவிட கருணாநிதி முதல்அமைச்சர் ஆனார். அவர் முதல்வராக வேண்டும் என்று பாடுபட்டவர்களில் எம்.ஜி.ஆர். முக்கியமானவர். திரை உலகிலும் சரி, அரசியலிலும் சரி கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். ஆனால் 1971க்குப்பிறகு, யாரும் எதிர்பராத வகையில், கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
1972 அக்டோபர் 18ந்தேதி “அண்ணா தி.மு.க” என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். கட்சி ஆரம்பித்து ஏழே மாதங்களில், திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 1977 மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உலகிலேயே முதன் முறையாக திரைப்பட நடிகராக இருந்து ஒரு மாநிலத்தின் உயர் பதவியை அடைந்தவர் எம்.ஜி.ஆர்.

திரையுலகில் தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட்ட எம்.ஜி.ஆர், அரசியலிலும் அதையே பின்பற்றினார். தனது பலம், பலவீனம் இவற்றை முற்றிலும் உணர்ந்திருந்த அவர் தனது பலங்களை மேலும் பலப்படுத்தி கொண்டே வந்தார். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்தார். எதிர்ப்புகளை எப்படி வெல்ல வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவதில் அவர் கெட்டிக்காரராக விளங்கினார்.
ஏழ்மை நிலையினை முற்றிலுமாக உணர்ந்திருந்த எம்.ஜி.ஆர். பதவியேற்ற பின் ஏழை மக்களுக்கு பயன் படும் வகையில் திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்தார். காமராஜரின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டத்தினை, சத்துணவு திட்டம் என்று புதிய வடிவம் கொடுத்து உயிரூட்டி செயல் படுத்தினார். மதுவிலக்கை அமல்படுத்தி தாய்மார்களின் துயரைத் துடைத்து அவர்களது அன்பைப் பெற்றார். தொடர்ந்து வந்த 1980ம் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். 1984ல் சிறுநீரக பாதிப்பால் உடல் நலம் குன்றிய அவர், உடனடியாக அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் மெதுவாக தேறி வருகையில் மீண்டும் சட்ட மன்றத் தேர்தலுக்கான சமயம் வந்துவிட வேறு வழியின்றி அமெரிக்காவிலிருந்தே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். தொகுதிக்கு வராமல், மக்களை நேரிடையாக சந்திக்காமல் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதலமைச்சரானார். இக்காலங்களில் அவரது திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களும், வசனங்களும் அவருக்கு கை கொடுத்தன. குறிப்பாக ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற “ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டுவேன்..” என்ற பாடல் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அவருக்காக பல கோயில்களில் விசேட பூஜைகளும், விரதங்களும் கடைபிடிக்கப்பட்டன. ஓரளவு உடல் நலம் தேறிய பின் பிப்ரவரி 1985ல் சென்னைக்கு வந்து, மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது உடல் நலம் குன்றி சிகிச்சை மேற்கொண்ட அவர் 1987ல், டிசம்பர் 24ம் தேதி இயற்கை எய்தினார்.

தமிழகத்தில் பலர் தங்கள் குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்ட ஒருவர் இறந்து விட்டதாகவே கருதினர். முப்பதுக்கும் மேற்பட்ட அவரது தொண்டர்கள் தீக்குளித்து மாண்டனர். பல மாநிலங்களிலிருந்தும் அவரது உடலைக் காண ரசிகர்களும், தொண்டர்களும் சென்னையில் குவிந்தனர். தனக்கென வாழ்நாளில் ஒரு வாரிசு இல்லாமல் போனதற்காக வருந்திய அவருக்கு தமிழகமே ஒன்று திரண்டு ஈமக் கிரியைகளை நிறைவேற்றியது. தேவை என்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்னர் தாமாகவே வலியச் சென்று உதவி, ஏழை எளியவர்க்கு தோழனாய், தனி வசீகரத்துடன் வாழ்ந்த எம்ஜிஆருக்கு, ‘புரட்சி தலைவர்’, ‘மக்கள் திலகம்’, ‘ஏழைப் பங்காளன்’, ‘பொன் மனச் செம்மல்’ என பல அன்பு பட்டங்களுடன் ‘பாரத ரத்னா’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. பத்தாண்டு காலம் தொடர்ந்து பதவியிலிருந்த முதல் / ஒரே தமிழக முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இன்றும் கூட இவரின் பெயருக்கு தனி மரியாதையும், பெரும் வாக்கு வங்கியும் உள்ளன.

– ரவிக்குமார்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. சுந்தரமூர்த்தி says:

    அருமையான பதிவு திரு.ரவி

    எனது பாட்டி தீவிர எம்ஜிஆர் ரசிகை. என்னுடைய சிறு வயதில் பாட்டியின் வளர்ப்பின் வளர்ந்தவன் நான். அனைத்து படங்கள் பார்ப்பதும், அண்டை வீட்டினரும், உறவினர்களும் அவரைப் பற்றி பேசிக்கொள்வதை கேட்கவே அவ்வளவு பரவசமாக இருக்கும். இப்போதும் அவர் கூறுவார், கைக்குழந்தையான என்னை தூக்கிக்கொண்டு வெகு தூரம் நடந்து(ஓடி)ச் சென்று எம்ஜியாரின் காரின் ஒரு முனையில் இருந்து மிக அருகாமையில் என்னை பார்க்கச் செய்ததாக. அவர் இன்றும் என்றும் திரையிலும், அரசியலிலும் ஒரு சகாத்மம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad