ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4
(பகுதி 3)
அகதி உணர்வுநிலை
உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசித்து வருகின்றபோதிலும் அவர்கள் அங்கும் நிம்மதியுடன் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் ஊரில் திரிந்தவர்கள் ‘அகதி’ என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடுநாடாக அலையும் போது அவர்களுடைய கண்முன் அசைகின்ற எல்லாவற்றிறும், தான் ஓர் ‘அகதி’ என்ற உணர்வைப் பெறுகிறான். இவை அவலநிலையின் உச்ச வெளிப்பாடுகளாகி அவர்களை எழுதத் தூண்டுகின்றபோது, இந்த அவல வாழ்வின் உணர்வுகள் அப்படியே கவிதைகளாகப் புனையப்பட்டன.
“அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி
அன்னிய மண்ணில் அண்டிக் கிடந்து
மிகநலி மாந்தர் தம்நகர் மீளும்
வகையென ஒன்றென் மொழிவையோ நாராய்”1
சங்ககாலத்துச் சக்திமுற்றத்துப் புலவரின் சாயலில் அமைந்த இக் கவிதை வரிகள், தமது சொந்த நாட்டைப் பிரிந்து அந்நிய மண்ணில் பெரும் துயர்களுக்கு மத்தியில் காலத்தைக் கழிக்கும் பலரின் ஏக்க உணர்வினை வெளிப்படுத்தி நிற்கின்றன.
‘அகதி’ என்ற தலைப்பில் அமைந்த வயவைக்குமரனின் கவிதையொன்று மிகவும் சுருங்கிய வரிகளில் இலகுவான மொழியில் நகர்ந்து செல்கின்றது.
“ஓடு.
ஓடு
நில்லாதே ஓடு.
கடல் கடந்து
மலைகளைத் தாண்டி
பூமியின் எல்லைவரை ஓடு.
…………………………..
முடிந்தால் நிலைகொள்.
அம்மாவுக்கு
ஆசையாய் எல்லோருக்கும்
இதை எழுது
நான் ஒரு அகதியென்று.”2
மேலைத்தேசங்களில் அகதியாய் வாழும் இயந்திர மயமான வாழ்வினையும், ஓய்வற்ற நிலையினையும் கூறி, இதுவே முடிவற்ற தொடர்கதையாக இன்னும் நீண்டுகொண்டிருப்பதாகச் சொல்லாமல் சொல்லி முடிகிறது கவிதை.
“அகதி வாழ்வின்
அவலமும்
………..
நையாண்டிப் பேச்சுக்கள்
துளைத்தெடுக்க
வாழ்வு கூனிக் குறுகும்”3
எனத் தொடரும் கவிதை வரிகளில் அகதியாயும் கறுப்பர்களாயும் புலம்பெயர்ந்த தமிழர்கள் படுகின்ற அவஸ்தைகள் சொல்லில் அடங்காதவை என்பதும்; காலம் முழுவதும் கூனிக்குறுகி அடிமைகள் போல வாழவேண்டிய நிலை வந்துவிடுமோ என்று ஆதங்கப்படுவதும் புலனாகின்றது.
“ஒரு அகதியின் விண்ணப்பம்”4 என்ற தலைப்பிலமைந்த கவிதையொன்றில், உயிர்ப் பாதுகாப்புத் தேடியலையும் ஒரு குடியானவனின் நியாயமான ஆசைகளை வெளிப்படுத்தி, அந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்து அவசியம் என்பதையும் உணர்த்தி, இவையனைத்தும் ஒருங்கு சேர அமைவதற்குத் கடவுளிடம் இறைஞ்சிக் கேட்பதாக அமைந்து செல்கிறது கவிதை. இங்கு தன்னுடைய நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக ‘மேன்மையானவரே’ என மேலைநாட்டினரை விளித்துக் கூறுவதையும் காணமுடிகின்றது.
“அகதி என்ற தமிழ்ச் சொல்லின்
அர்த்தம் தேவை”5
“அந்தந்த நாட்டினர் முகத்தைச் சுழிக்கும்
அகதிப் பிண்டமாய்”6
இவை சில எழுமாணமான கவிதை வரிகள். புலம்பெயர்ந்தோருடைய வாழ்வில் ‘அகதி’ என்ற உணர்வு நிலையின் வெளிப்பாடு பெரியளவிலான தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. தாம் புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் பூர்வீக மக்கள் தமிழர்களுக்கு ‘அகதி’ என்ற பட்டம் சூட்டி மனநிறைவு கொள்வதையும் அதனைக் கண்டு இவர்கள் வருந்துவதாகவும் கவிதைகள் அமைந்துள்ளன. மேற்படி கவிதைகளின் மூலம் ‘அகதி’ என்ற உணர்வுநிலை ஒரு வகையிலான தாழ்வுச் சிக்கலையும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உருவாக்கியுள்ளமையினையும் அவதானிக்க முடிகின்றது.
இனி புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்ட இன-நிறவெறியின் தாக்கம் பற்றிய வெளிப்பாடுகளை அடுத்த இதழில் பார்க்கலாம்.
அடிக்குறிப்புகள்
1. திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.35
2. மேலது, பக்.62
3. மேலது, பக்.110
4. மேலது, பக்.106
5. மேலது, பக்.45
6. மேலது, பக்.179
-தியா-
SUPPER ( tHIS iS troo )
Mikachirarantha welikkonarvu
A good exposure to the world .