சத்யா நாதெல்லா
ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ பல்கலைக் கழகத்தில் தொழில் நிர்வாக முதுகலைப் பட்டமும் பெற்றார்.
சிறிது காலம் ‘சன் மைக்ரோ சிஸ்டத்தில்’ பணியாற்றிய இவர், அதனைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தனது திறமையை வெளிப்படுத்தி வெகு வேகமாக வளர்ந்தவர் பல உயர்நிலைப் பதவிகளை வகித்துள்ளார்.
மைக்ரோசாஃப்டின் நிறுவனர் பில் கேட்ஸ் தனது நிறுவனத்தின் புதிய தலைவரை அறிமுகப்படுத்திய போது “இன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை வழிநடத்த சத்யா நாதெல்லாவைவிடச் சிறந்த நபர் யாரும் இல்லை. பல நிலைகளில் சாதித்துக் காட்டியவர் சத்யா; சிறந்த பொறியியல் திறன்கள், வியாபாரத்திற்கான தொலைநோக்கு, மக்களை ஒன்றாக ஒருங்கிணைக்கும் திறமை என அனைத்துத் தகுதிகளையும் ஒருங்கே கொண்டவர். எதிர்காலத் தொழில்நுட்பத்தை பற்றி அவர் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குத் தேவை” என்று குறிப்பிட்டார்.
அவரைப் பற்றி மேலும் பலர் குறிப்பிட்டதில் மென்மையான மனமும் அதே சமயம் தனது முடிவுகளில் திடமான நம்பிக்கையும், அளவில்லாப் பணிவும் கொண்டவர் சத்யா என்பதை அறிய முடிகிறது.
“பல நிறுவனங்கள் உலகத்தை மாற்ற வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் சிலரிடம் மட்டுமே உலகை மாற்றத் தேவையான திறன் உள்ளது. மைக்ரோசாஃப்ட் அத்தகைய திறனுடன் தன்னை நிரூபித்தும் உள்ளது. இதை விடப் பெரிய தளம் எனக்கு எங்கும் கிடைக்காது” என சத்யா நாதெல்லா கூறியுள்ளார்
எனினும் மைக்ரோசாஃப்ட் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் வீழ்ச்சியை நிறுத்தி, இந்நிறுவனத்தை மிண்டும் முன்னுக்கு கொண்டு வருவதில் தான் சத்யாவின் திறமை அடங்கியுள்ளது.
– ரவிக்குமார்