மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
தினம் வழக்கமாக உதிக்கும் ஞாயிறுடன் ஃபிப்ரவரி 7, 1902 அன்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் உதித்தார். நெடிய நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழன்னை அன்று பெரிதும் மகிழ்ந்திருப்பாள். அவள் பெறுமை உலகறியச் செய்ய அரிமா ஒன்று பிறந்ததென்று. மெத்தப் படித்தோர் நிறைந்த நெல்லைச் சீமையில் ஞானமுத்து, பரிபூரணம் தம்பதியினருக்குப் பாவாணர் பத்தாவது மகவாகப் பிறந்தார். தேவநேசன் என்பது இவர் இயர் பெயர்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளுடன் இலத்தீனம், கிரேக்கம் , ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஆங்கிலோஸ் முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றறிந்தவர். சுமார் 40க்கு மேற்பட்ட மொழிகளை அறிந்து வைத்திருந்தார்.
ஆரிய மாயையில் மங்கிக் கிடந்த தமிழின் பெருமைகளை உலகறியச் செய்தவர். உலகத்தார்களுக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கே தமிழின் பெருமைகளை எடுத்துரைத்தவர். பாவாணர் தமிழில் எந்த அளவிற்குக் கரை கண்டாரோ, அந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினார். அவர் ஆங்கிலத்தில் பேசும்போதும், எழுதும்போதும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தாது அதற்குரிய சிறப்பான சொல்லையே பயன்படுத்துவது அவருக்கே உரிய தனிச் சிறப்பாகும். அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி பாவாணரின் பெயரை, “தேவநேசக் கவிவாணன்” என்று மாற்றினார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர்.
இவர் சீயோன் மலை உயர்நிலைப்பள்ளி, ஆம்பூர் கிருத்துவ நடுநிலைப்பள்ளி, ஆம்பூர் நடுநிலைப்பள்ளி, ஆம்பூர் உயர்நிலைப்பள்ளி , திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளி, சேலம் நகராட்சிக் கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் பணி புரிந்தார்.
தமிழ்ப் பகைவர்கள் இவருக்குச் செய்த தீங்கு எண்ணிப் பாவேந்தர் பாரதிதாசன் பாவாணருக்காக எழுதிய பாடல்
“நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று
கூவும் அதுவுமோர் குற்றமா? – பாவிகளே
தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்
யாவர்க்கும் செய்வதே யாம்”
என்று ‘குயில்’ பத்திரிக்கையில் வெளிவந்தது..
மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தில் பங்கெடுத்து அதற்காகப் பாடுப்பட்டார். மிகச்சிறந்த சொல்லாராய்ச்சியாளர். இவரின் சொல்லாராய்ச்சியின் முடிவாக
உலகின் முதன் மொழி தமிழ்.
உலகின் முதல் மாந்தன் தமிழன்
அவன் பிறந்த இடம் குமரிக்கண்டம்
என்னும் கொள்கையை ஆதாரங்களுடன் முழங்கியவர்.
இவர் சமஸ்கிருத மாயையில் இருந்தோரைத் தட்டி எழுப்பவும், தமிழ்ப் பகைவர்களை கருத்தாழமிக்க சொற்கணைகளால் தாக்கவும் தவறவில்லை.
16.01.1981 அன்று இந்த தனித்தமிழ் அரிமா தன் தமிழ்ப் பணியை இளையோராகிய நம்மிடம் விட்டு விட்டு, இப்பூலகை விட்டு விடை பெற்றது.
-சத்யா-
References