\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மொரார்ஜி தேசாய்

morarji-desai_180x251பொதுவாக, நாட்டுக்காக உழைத்த, எளிமையாக வாழ்ந்த, தன்னலமற்ற பல தியாகிகளையும், தலைவர்களையும் வரலாறு கண்டு கொள்வதில்லை. அதிலும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சிறப்பு நாளான ஃபிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்து இந்திய நாட்டுக்கு அரும்பணியாற்றிய மொரார்ஜி தேசாயை அனைவரும் மறந்தே விட்டார்கள்.

மொரார்ஜி தேசாய் – 1896-ம் ஆண்டு ஃபிப்ரவரி 29-ஆம் நாள் இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் பிறந்தவர் . இவரது தந்தை ரங்கோட்ஜி தேசாய், பள்ளி ஆசிரியர். தாய் வஜியா பென்.

மொரார்ஜிக்குப் பதினைந்து வயதாகியிருந்த போது, அவருடைய தந்தை இறந்த மூன்றாவது நாள், சுராஜ்பென் என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. 1918ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று மும்பை மாகாணத்தில் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார் மொரார்ஜி. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1930ம் ஆண்டு காந்திஜியின் விடுதலைப் போரில் கலந்துக் கொள்வதற்காகத் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டுக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். கட்சியில் பல உயர் பதவிகளைப் பெற்ற அவர், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1932 முதல் 1934 வரை 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். “செய் அல்லது செத்துமடி’ என்ற மகாத்மாவின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு, 1942-ம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். அதன் காரணமாகக் கைது செய்யப்பட்ட அவர் 1945-ம் ஆண்டுதான் விடுதலை ஆனார்.

1952-ம் ஆண்டு புல்சார் தொகுதியில் போட்டியிட்டு வென்று பம்பாய் மாகாண முதலமைச்சர் ஆனார்.

1956ல் ஜவஹர்லால் நேருவின் அழைப்பை மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 1958ல் நிதியமைச்சராகவும் செயல்பட்டார். மூத்த தலைவர்கள் எல்லாம் ஆட்சிப் பணியைத் துறந்து கட்சிப்பணிக்குச் செல்ல வேண்டும் என்ற காமராஜரின் திட்டத்தை ஏற்று 1963-ஆம் ஆண்டு அவர் பதவி விலகினார். 1964-ஆம் ஆண்டு பண்டித நேருவின் மரணத்துக்குப்பின் அரசியலில் ஒரு மாபெரும் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது பிரதம மந்திரி பதவிக்குப் போட்டியிட விரும்பிய மொரார்ஜி, காமராஜரின் அறிவுரையை ஏற்று போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். சாஸ்திரியின் மரணத்துக்கு பிறகு மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பினார்

மொரார்ஜி.

அனால் இம்முறை மொரார்ஜிக்குப் பதிலாக இந்திரா காந்தி களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் காமராஜரின் வற்புறுத்தலின் பேரில் துணைப் பிரதம மந்திரியாகப் பணியாற்றினார் மொரார்ஜி. ஆனால் பல மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்தினால், இந்திராவால் பிற்போக்கு எண்ணம் கொண்டவர் என்று முத்திரை குத்தப்பட்டு, வெளியேற்றப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சி பிளவுபட்ட போது ஸ்தாபன காங்கிரசில் இணைந்தார்.

1975ல் இந்திய நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தபட்ட போது மொரார்ஜி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பின் ஜெயப்ரகாஷ் நாராயணின் தலைமையை ஏற்று ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டார். அவசரநிலை எல்லை மீறல்களால் வெறுத்து போயிருந்த மக்கள் பெரும்பான்மையாக ஜனதா கட்சிக்கு ஓட்டளித்து மொரார்ஜியைப் பிரதமராக்கினர். 1977-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, 81 வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார்

பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காலக் கொடுமைகளை நீக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அடிப்படை உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார்.

அடிப்படையில் காந்தியவாதியான மொரார்ஜி, காந்திஜியின் சித்தாந்தமான ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்ற கூற்றினை ஏற்று கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி பெரும் வெற்றி கண்டார். விவசாயத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நில வரிக் குறைப்பு, மானியம் வழங்குதல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார். இந்தியா முழுமையும் ஒரே வேளாண்மைப் பிராந்தியமாக அறிவித்து விவசாயிகளின் விளைபொருள்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வகை செய்தார். அதன் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்தது. உணவுப் பதுக்கல் தவிர்க்கப்பட்டு ரேஷன் கடைகளில் மலிவான விலையில் மக்களுக்குப் பண்டங்கள் கிடைத்தன. கடைகளில் விற்கப்படும் பொருளுக்கு ‘அதிக பட்ச விலை’ நிர்ணயித்தல், கட்டாய வேலை வாய்ப்பு மூலம் கிராமங்களில் சாலையிடுதல், பாசன வசதிக்கான பணிகள் போன்றவை நிறைவேற்றப்பட்டது. இங்கு வேலை செய்த ஏழை எளிய மக்களுக்குச் சம்பளத்துக்குப் பதிலாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதால், கிராமங்களில் மதுவின் கொடுமைப் பிடி விலகியது.

ஜனதா சாப்பாடுத் திட்டத்தைக் கொண்டு வந்து, எந்த உணவகமானாலும் கட்டாயமாக, ஒரு குறிப்பிட்ட சதவீதம், ஒரு ரூபாய்க்கு சாப்பாடு விற்க வேண்டும் என்ற முறையினை அறிமுகப்படுத்தினார். இது ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்தது. இயற்கையின் சீற்றங்கள் பல நேரிட்ட போதிலும், பஞ்சம் எனும் சொல்லுக்கு இடமில்லாமல் போனது.

தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார நிலையைச் சீரமைத்தார்.

அந்நிய நாட்டு முதலீடு என்ற பெயரில் இந்தியாவின் வளம் சுரண்டப்படுவதைத் தவிர்க்க உள்நாட்டு சிறு தொழிற்துறையையும், வணிகத் துறையையும் ஊக்கப்படுத்தினார். அதே சமயம், ரஷ்ய, அமெரிக்க உறவுகளைச் சமநிலையில் வைத்திருந்து இரு நாடுகளுடனும் நல்லுறவை நிலை நாட்டினார். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் நட்புக்கரம் நீட்டி உறவுகளைப் பலப்படுத்தினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கியது மாபெரும் சாதனையாகும்.

உள்கட்சிப் பூசல் காரணங்களால் இரண்டே ஆண்டுகளில் மொரார்ஜியின் அரசு கவிழும்படி ஆனது. இதை உணர்ந்த அவர் தனது பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பின்னர், மும்பையில் வாழ்ந்தவர், 10 ஏப்ரல் 1995-ம் ஆண்டு தனது 99-வது வயதில் மறைந்தார். பொது வாழ்விலும், தனி வாழ்விலும் நேர்மையையும், எதற்கும் அஞ்சாத துணிவையும், கொள்கை உறுதியையும் கொண்டிருந்தவர் மொரார்ஜி.

அவரின் நேர்மைக்குச் சான்றாக ஒரு சம்பவம் – மொரார்ஜி முதலமைச்சராக இருந்த நேரத்தில், அவரது மகள் இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததாக மதிப்பெண் வர நம்ப முடியாமல் நிலை குலைந்து போனார் அவரது மகள். நன்றாகப் படிக்கும் அவர், விடைத்தாளைத் திருத்துகையில் ஏற்பட்ட கூட்டல் தவறினால் மதிப்பெண் குறைந்திருக்கலாம் என நினைத்து தந்தையிடம் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அனுமதி கேட்க மறுத்து விடுகிறார் தேசாய். அவரது அதிகாரிகளும் மறு கூட்டலுக்குப் பரிந்துரை செய்கிறார்கள். அனால் கண்டிப்புடன் மறுத்துவிடுகிறார் தேசாய். அதற்கு அவர் சொன்ன காரணம், “என் மகள் நன்கு படிப்பவள் தான்… ஆனால் ஒரு பாடத்தில் தோற்றிருக்கும் நிலையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து அவள் தேர்ச்சியே பெற்றாள் எனினும்… முதலமைச்சர் மகள் என்பதனால் தேர்ச்சி பெறவைத்து விட்டார்கள் என்று சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்… வீண்பழி வேண்டாம் … அடுத்த முறை எழுதித் தேர்ச்சி பெற்றுக் கொள்ளட்டும்…யாரும் இதனை மீறவேண்டாம்..” என்று உறுதிபடச் சொல்லிவிடுகிறார். அதனால் ஆதங்கம் அடைந்த அவரது மகள் தற்கொலை செய்து கொண்டார்.

மற்றொரு முறை அவர் வணிகத் துறை அமைச்சராக இருந்த போது வீட்டு வாடகை செலுத்தாததால் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப் பட்டார். அந்த நிலையிலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாது, அவர் குடும்பத்துடன் அமைதியாக வெளியேறினார். இதனைப் பொறுக்க முடியாத அவரது மருமகள் தற்கொலை செய்து கொண்டார்.

தொடக்க காலத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒன்றில், மொரார்ஜியை பூணூல் அணியாத பிராமணர் என்று சொல்லி அவருக்கு ஓட்டளிக்க எதிர்ப்புகள் கிளம்பிய பொழுது, மொரார்ஜி “பூணூலுக்குத் தான் ஓட்டு என்றால் – என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்.

நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்குப் போடுங்கள்“ என்றார். அப்படிப்பட்டவர் பிரதமராக இருந்த போது அவர் சாதி மனப்பான்மையோடு செயல்படுகிறார் என்ற பழி சுமத்தப்பட்டது வருந்தத்தக்கது.

இந்தியாவின் பாரத ரத்னா விருதையும், அதற்கு இணையான பாகிஸ்தானின் ‘நிசான் இ பாகிஸ்தானி’ என்ற விருதையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி.

பழமைவாதி, பிடிவாதக்காரர், அனுசரித்துப் போக மாட்டார் என அவரைப் பற்றிப் பல கருத்துக்கள் நிலவிய போதும், எளிமை, சத்தியம், உறுதி, தைரியம் கொண்டவராக வாழ்ந்தவர் மொரார்ஜி தேசாய். இவரைப் போன்ற நேர்மையும், உறுதியும் கொண்ட அரசியல் தலைவர்களை காண்பது அரிதிலும் அரிது.

– ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad