பாகற்காய்க் கறி
கசப்பான பாகற்காய், நீரிழிவு நோயையும் தவிர்க்கும் அற்புதமான காய். பாகற்காய் தமிழகம் மற்றும் இலங்கையில் 10-12 அங்குல நீளமான வகைகளாகக் காணப்படுகிறது. தவிர மலைப்பிரதேச லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் சிறிய வகைகளும், சீன நாட்டில் இளம் பச்சை வகைகளாகவும் பல்வேறு வகைகளில் பயிராகிறது. மினசோட்டா மாகாணாத்தில் இந்த வகைப் பாகற்காய்கள் அத்தனையும் கிழக்காசிய சமூகச் சந்தைகளில் கிடைக்கின்றன.
பாகற்காயின் கசப்பை நீக்க மக்கள் பல்வேறு வகைகளில் பக்குவப்படுத்திச் சுவையாகச் சமைப்பர். சிலர் கடல் உப்புச் சேர்த்துச் சூரிய வெளிச்சத்தில் காயவைத்து பாகற்காய் வடகம் என்பதைத் தயாரிப்பர்., இதனைப் பொதுவாக மாரிக் காலத்தில் பொரித்தும், கறியாக்கியும் உண்பர். யாழ்ப்பாணம் மற்றும் தென்னை வளம் பெருகிய இடத்துக் கிராமியத் தமிழர் இளநீரில் பாகற்காயை ஊறவைத்து பின்னர் கறிவைத்தும் உண்பர்.
பாகற்காய் கறிக்கு வேண்டியவை
½ இறாத்தல் பாகற்காய்
10 வெந்தயம்
20 சீரகம்
1 கறிவேப்பிலைக்கிளை
5 அருவிய சின்ன வெங்காயம் – அல்லது 1 சிவப்பு வெங்காயம்
3 துண்டுபச்சை மிளகாய்
2 கோப்பை இளநீர் – அநேகமாக இரண்டு இளநீர்த் தேங்காய்கள்
2 கோப்பை கட்டித் தேங்காய்ப் பால்
1 ஒரு உள்ளம் கையுருண்டை அல்லது மேசைக் கரண்டி பழப்புளி
3-5 கறித்தூள் – யாழ்ப்பாணத்தில் கறி மிளகாய்த்தூள் என்பர்
1 தேயிலைக் கரண்டி சர்க்கரை
தேவையான அளவு உப்பு
தயாரிக்கும் முறை
பாகற்காயை அதன் நீளப்பகுதியில் சம 4 துண்டுகளாக வெட்டி, விதைகளை அகற்றித் தண்ணீரில் கழுவி பின்னர் ரொட்டித் துண்டுகள் அரிவது போல் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பழப்புளியை இலேசாகச் சிறிதளவு வென்னீரில் கரைத்து, இளநீருடன் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் பழப்புளி கலந்த இளநீரில் பாகற்காய்த் துண்டுகள், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் போன்றவற்றையும் சேர்த்து மத்திம வெப்பத்தில் அடுப்பில் கொதிக்கவிடவும்.
கறிச்சட்டியில் இருக்கும் நீர் வற்றும் தருணத்தில் கறித்தூள், தேங்காய்ப்பால், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பு வெப்பத்தை மத்திமப் பகுதியில் பேணவும். இருக்கும் குழம்பு ஓரளவு தடித்து வரும் போது சர்க்கரை சேர்த்துப் பிரட்டி வெப்பத்தைத் துண்டிக்கலாம்.
பாகற்காய் கறியானது சோற்றுடனும், மற்றும் இடியப்பம், புட்டு, உரொட்டி போன்றவற்றுடனும் பரிமாறலாம்.
– யோகி