நீர்க்கசிவுப் பாதிப்பு செலவை நிவர்த்தி செய்தல்
(Household Water Damage Prevention)
ஆயிரம் ஆயிரமான நீர்ச்சுனைகளும் ஆறுகளும் காணப்பெறும் அழகிய மினசோட்டா மாநிலத்தில் வெப்பதட்ப காலவித்தியாசங்களும் வித்தியாசமாகவே காணப் பெறுகின்றன. இதன் காரணமாக இவ்விடம் மக்களும் வதிவிட கட்டிடப் பொருட்கள் நம்மில் பலர் பிறந்த பூமியில் கிடைக்கும் விதத்திலிருந்து வித்தியாசமாகக் காணப்படுகிறது. மினசோட்டா மாநிலத்தில் வதிவிடம் வாடகைக்குப் பெறினும், வீட்டு உரிமையாளராக இருப்பினும் நீர்க்கசிவு, நீர்த்தேக்கத்தால் ஆகும் மிகுந்த செலவான பாதிப்புக்களை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று அறிந்திருப்பதும் சிக்கனம் தரும் சிந்தனையே.
பிரதானமாக உள்வீட்டிலும், வெளியிலும் நீர் உபயோகிக்கும் சாதனங்களை கால அளவில் பரிசீலித்துப் பேணுவதன் மூலம் பாரிய பாதிப்புத் திருத்தச் செலவுகளை நாம் தவிர்த்துக்கொள்ளலாம். இது பிரதானமாகப் புதிய வீடு உரிமையாளர்கட்கு உகந்த விடயமும் ஆகும்.
பொதுவாக பருவகால மழைகூடிய வெப்பவலய நாடுகளில் காலநிலை பெரிய மாற்றங்களிற்கு உட்படுவது இல்லை. இதனால் பிரதானமாகக் கட்டிடங்கள் சீமந்து, மற்றும் செங்கல், இரும்பு கொண்டும் சிறிய அளவு மரக்கட்டிடப் பொருட்களையும் கொண்டு கட்டப்படும். அவை அதிக ஈரப்பதமான காலநிலையைத் தாக்குப்பிடிக்கக் கூடியவை.
கீழே நாம் எமது மாகாண வதிவிடத்தில் உள்ள வெவ்வேறுபட்ட நீர் சார்ந்த உபகரணங்களைப் பார்ப்போம்.
வெள்ளநீர் அகற்றும் நீர்ப்பாசனக்கருவி Sump Pumps
· இந்த உபகரணங்கள் பிரதானமாக அடை மழை மற்றும், வசந்தகால திடீர்ப் பனி உருகலினால் உண்டாகும் நீர்ப்பெருக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கப் பயன்படும் சாதனம் ஆகும். இந்தக் கருவியை உற்பத்தியாளர்கள் உபயோகநூல் சொல்லுவது போன்று பரிபாலிப்பது அவசியம்.
· நீர்ப்பாசனக் கருவியைப் பொறுத்து 2-3 மாதங்களுக்கு ஒருமுறையோ இல்லை வருடாந்திர மழை மற்றும் பனி உருகல் காலங்களிற்கு முன்னர் பரிசோதனை செய்வது அவசியம்.
· மேலும் உபகரணத்திற்கு, மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உதவியாக அமையும் துணை மின்கலங்களை (Batteries) இரண்டு மூன்று ஆண்டுகளிற்கு ஒரு முறை தரம் மாற்றுவதும், இணைப்புக்களை அவதானிப்பதும் மிகவும் முக்கியம்.
உள்வீட்டு நீர்க்குழாய்களும், பிரத்யேக நீர்சார்ந்த பரிமாற்றுக்குழாய்களும்
· குளிர் தேசங்களில் வாழம் நாம், வருடந்தோரும் பார்வையளவில் நீர்க்குழாய்களைப் பரிசீலிப்பது முக்கியம். இதற்கு அடிப்படைக் காரணம் நமது வெப்பவலய வாழ்க்கை போன்றில்லாமல் வாழும் சூழல் அதிக ஈரப்பதன் வேறுபாடுகளுக்கு (moisture difference) உள்ளாகுதலேயாகும். ஈரப்பதனானது நீர், மற்றும் பிரத்தியேகக் குழாய்களில், அவற்றின் இணைப்புக்களில், மற்றும் பலவீனமுறும் பகுதிகளில் நீர்க்கசிவு, குழாய்கள் கறள் பிடித்தல் (corrosion) போன்றவற்றுக்கு உள்ளாக வாய்ப்புக்கள் இருப்பதே.
· உள்வீட்டு நீர்க்கசிவை கண்டுபிடிக்கப் பல முறைகள் உண்டு. வழக்கத்தை விட நீர் உபயோகம் திடீரேன அதிகரித்தால் அது நீர்க்கசிவுக்குக் காரணமாக அமையலாம்.
· உள்வீட்டுக்குழாய் தண்ணீர் நிறம் மாறி பழுப்பு மண்ணிறமாகக் காணப்பட்டால் உடன் திருத்தல் நிபுணர்களை அழைத்துக்கொள்வது அவசியம்.
· குளியல், கழிவறைத் தரையானது மேடு பள்ளமாக சமமின்றி மாறினால், நீர் சேகரிப்புத்தொட்டிகளில் நீர்க்கசிவு சிறிதளவில் தென்பட்டாலும் உடன் திருத்துவது அவசியம். இல்லாவிடின் நாளடைவில் பாரதூர பதிப்புச் செலவுகளை உண்டு பண்ணலாம்.
· வீட்டின் வெளியே கூரை முகட்டு அறைகள் (Attic) உள்ளே காணப்படும் நீர்க்குழாய்கள் நன்கு உறைபனிக்குளிரில் இருந்து காப்பது அத்தியாவசியம். குளிரான காலங்களில் நீர்க்குழாய்களில் நீர் உறைந்தும், நீர்த்தேக்கம், மற்றும் உறைபனியினால் நீர்க்குழாய்கள் வெடிப்பதிலிருந்தும் காலாகாலப் பரிசீலனை மூலம் செலவுகளை நிவர்த்தி செய்ய முடியும்.
வீட்டுக்கூரை
· மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலத்தில் உள்விட்டு வெட்பதட்ப சூழல் சார்ந்த செலவுகளைப் பேண வீட்டு முகடு, மற்றும் வீட்டுக் கூரையைப் பேணுதல் அத்தியாவசியமானதொன்றாகும். கூரையானது வருடாந்திரப் பரிசீலனைக்குட் படுத்துவது உரிமையாளர்களின் கடமை.
· வீட்டுக் கூரையானது பருவகால மாற்றங்களால் பாதிக்கப்படுவது சகசமான விடயம். குறிப்பாகப் பனிக்கட்டி மழைகளினால், மற்றும் உறைபனி படிதல் மாற்றங்களினால் சிறிது ஓடுகள் உடைதல், கிழிதல், மற்றும் நீண்டகால நீர்த்தேக்கங்கள் ஏற்படலாம். இப்படித் தேக்கமாகும் நீர் நாளடைவில் சுவர்கள் மற்றும் அத்திவாரமாக இருக்கும் மரத்தூண்களையும் பாதிக்க வாய்ப்புண்டு.
· குளிர்ப் பிரதேசமாகிய இவ்விடத்தில் வீட்டுக்கூரையின் எந்தப்பகுதி அதிகக் குளிரை எதிர்நோக்குகிறது, அதை எவ்வாறு பனிமழைகளில் இருந்தும், குளிர்காற்றிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று வழிபார்ப்பதும் (extra insulation) அவசியம்.
வீட்டின் குளியல் மற்றும் கழிவறைகள் (Toilets)
· வீட்டின் கழிவறை நீர்த்தொட்டிகள் (Toilet Bowls) சரியாக நீரைச் சேகரிக்கின்றனவா இல்லை நீர் ஓராலாக ஒழிந்தோடி வீணாகிறதா என்றும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
· இந்தக்கூடத்தில் நீர்க்குழாய்கள் மூலம் நீர்ப் பெருக்கமானது சுமார் 6 மாதங்களுக்கு ஒரு தடவை பரிசீலிப்பது மேலதிகச் செலவுகளைத் தவிர்க்க உதவும் ஒரு கைமுறை
· கழிவறையில் நீர் சேகரித்து விடும் ஓரதர் (valve) சேகரிப்புத்தொட்டியை உரிய நிரப்பல் அளவுக்கு தாமாகவே நீரைச் சேகரித்து நீர்க் குழாயை தொடர்ந்தும் நீர் ஒழுகாது நிறுத்தி விடுகிறதா என்றும் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
துணி துவைக்கும் உபகரணங்கள் (Washing Machine)
· துணி துவைக்கும் கருவியானது உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் என முன்கூடியே தெரிந்தால் உபகரணத்திற்கு நீர் தரும் குழாய்களை தேவைப்படும் வரை மூடிவிடுதல் உபயோகமான விடயம். முக்கியமாக விடுமுறைக் காலங்களில் ஒரு வாரத்திற்கு மேலாகப் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளில், நீர்க்கசிவு, ஒழுக்குகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்க்க இந்த முறை உதவும்.
·துவைக்கும் உபகரணங்களை வீட்டில் ஆட்கள் இல்லாதபோது ஓடச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
· உபகரணத்திற்கு நீர் கொண்டுவரும் குழாய்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்வது பெரிய அளவு பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு உதவும்.
வெப்ப அனல் சுடுநீர் உபகரணம் (Water Heaters)
· குளிர் நாட்டில் வெப்பநீர் தரும் சாதனங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. ஆயினும் இக்கருவிகள் அவை உருவாக்கும் சூட்டினால் அவற்றின் உள்ள அனலைத் தரும் கம்பிகளைக் (Anode Rods) கண்காணிப்பது தேவையான செயல்.
· இந்தக்கருவி உற்பத்தியாளர்கள் உத்தரவாதம் இருக்கும் மட்டும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும், அதன் பின்னர் வருடாவருடமும் பரிசீலிப்பது அவசியம்.
· அனல் கம்பிகள் கறள், மற்றும் மாசுக்களைத் தாமாகவே நாளடைவில் கவரும். இதன் காரணமாக சுடுநீர் சேகரிப்புத் தாங்கிகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவது (Flush the water) அவசியம். இது மினசோட்டா மாநிலத்தின் கடும் நீர் சூழலில் (Hard Water) மேலதிக நீர் உடைப்புக்கள் சார்ந்த பெரும் செலவுகளைத் தவிர்க்கவும் உதவும்.
மேலே கூறப்பட்ட பலவேறு வீட்டுச் சாதனங்களை தெளிவுடன் பராமரிப்பதன் மூலம் இந்த ஊரில் நீரழினால் வரக்கூடிய திருத்தச் செலவுகள், காப்புறுதிக்கட்டணங்களை மட்டுப்படுத்தலாம்.
-யோகி