மின்னசோட்டாவில் நீயா? நானா?
தமிழகத் தொலைக்காட்சிகளில் பல்வேறு சினிமாத் தொடர்பான நிகழ்ச்சிகள் பரவலாகப் பார்க்கப் படுவதுடன், வியாபார விளம்பரங்களை அதிகம் குவிப்பதும் அவைதான். தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைப்படத்துறையின் ஒரு நீட்டிப்பாகத்தான் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது, மீறிப்போனால் குடும்ப உறவுகளை நாசமாக்கும் நெடுந்தொடர்கள் அவை கற்றுக்கொடுப்பதெல்லாம் ஆணவத்தையும், பழிவாங்குதலையும் தான். இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாகக் கருத்து மோதல் நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் மக்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய நிகழ்ச்சிதான் விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா? நானா? என்கிற விவாத நிகழ்ச்சி. எந்த ஒரு நிகழ்ச்சியும் அதை நடாத்துபவரின் திறமையை ஒட்டி மக்களிடையே சென்றடையும். அந்த அளவில் மிகவும் திறமையான ஒருவர் திரு.கோபிநாத்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் அமெரிக்கத்தமிழர் தவறாமல் கண்டு களிக்கும் நிகழ்ச்சியை நேரலையாக மினசோட்டாவிலேயே நடாத்தினால் என்ன என்பதன் முயற்சியே மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த திரு,கோபிநாத் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி. தலைப்பு “அமெரிக்க வாழ்க்கையில் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?”.
மினசோட்டா வாழ் தமிழர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் சுமார் 1 மணிக்குத் துவங்கிய ஆறாம் ஆண்டு சங்கமம் நிகழ்வு, தெருக்கூத்து நிகழ்ச்சிக்குப் பின் சங்கத்தலைவர் பாக்கியராசின் அறிமுகத்துடன் இனிதே துவங்கியது. அமெரிக்கக் கால்பந்தின் இறுதியாட்டம் அன்று இருப்பினும் 800க்கும் அதிகமான மக்கள் நிரம்பியிருந்தனர் அவையில்.
கோபிநாத் அவர்கள் 2009 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் தமிழ்ச்சங்கக் கோடைவிழாவில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தினார், அப்பொழுது சுமார் 350 பேர் பார்வையாளர்களாக வந்திருந்தனர். அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சி பார்க்க இயலாது ஆதலால் கோபிநாத்தை அறிந்தவர்கள் குறைவு, 2014ல் நிலைமையே வேறு, மிகப்பிரபலமான கருத்தாடல் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயர் எடுத்தவர் கோபிநாத், அதற்கு அன்று வந்திருந்த கூட்டமே சாட்சி.
”இழந்தது” அணியின் பெரும்பாலானோர் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர், “பெற்றது” அணியின் பெரும்பாலானோர் நாகரீக உடை அணிந்து பெற்றது அதிகம் என்பதை வெளிக்காட்ட நினைத்தனர்.
திரு.கோபிநாத் அவர்கள் பங்கேற்பாளர்களின் கருத்துகளை வேடிக்கையாக்குவதுடன் அவர்களை உடனடியாக வாக்குவாதத்தில் மடக்குவது தனிச்சிறப்பு, இதில் அதிகம் பாதிக்கப்படுபவர் பங்கேற்பாளர்கள், ஆனால் அதுவே பார்வையாளர்களைக் களிப்படையச் செய்தது என்பதும் உண்மை. தமிழர்களுக்குத் தன் கருத்துகளை இதைப்போன்ற கருத்தாடல் நிகழ்ச்சிகளில் வெளியிடப் பெரும் ஆர்வம் கொண்டவர்கள், அதற்காகவே பல கருத்துகளை வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வந்திருந்ததாகவே தெரிந்தது. கோபிநாத் அவர்கள் அவருடைய பாணியில் அவர் மனதில் படும் கருத்துகளை ஒட்டியே நடாத்துவது தனிச்சிறப்பு. அனைவரின் கருத்துகளையும் கட்டுப்பாட்டுடன் சுவை குறையாமல் தலைப்பை ஒட்டியே ஒருங்கிணைப்பது கோபிநாத் நிகழ்ச்சியின் பெரும் வெற்றியின் இரகசியம். அந்தச் சுவை குறையாமல் மினசோட்டாவிலும் நடாத்தியது பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
கோபிநாத் அவர்களுக்குச் சில முன் அனுமானிக்கப்பட்ட கருத்துகள் அமெரிக்காவைப் பற்றி இருந்தது, எடுத்துக்காட்டாகக் குழந்தை வளர்ப்பு, ஊடகங்களில் வெளிவரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை முன்னிறுத்தி பள்ளிக்குச் செல்லும் மாணாக்கர் அனைவரும் பயத்துடனேயே படிப்பதாக வாதாடியது கொஞ்சம் நெருடல். அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் பேச வாய்ப்பளித்தது சிறப்பு.
முத்தாய்ப்பாகக் கோபிநாத் அவர்களின் முடிவுரை நன்றாகவே இருந்தது, பங்கேற்று விவாதித்தவர்களும் பார்த்து இரசித்தவர்களும் இதைப் போன்ற நிகழ்வுகளை வருங்காலங்களில் தமிழ்ச்சங்கம் நடத்த வேண்டும் என்று கருத்து பகிர்ந்தனர்.
– சிவானந்தம் மாரியப்பன்
படங்கள் – நன்றி சச்சிதானந்தன் , பவித்திரா சிறீதர், லாறென்ஸ் ராஜன்