பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்
எங்களால் மகேந்திரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட பாலு மகேந்திரா, யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர். அந்தக் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அக்காலத்தில், என்னுடன் பணி செய்த தேவு குலதுங்கவும் நானும் சேர்ந்து அறுபதுகளில் தயாரித்த ”நீயும் நானும்” என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பாலு மகேந்திரா நடித்திருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் அவர்.
ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கருகே, புகைவண்டி இருப்புபாதைகளை ஒட்டி, கழுத்தில் புகைப்படக் கருவியைக் தொங்க விட்ட வண்ணம் வலம் வந்த மகேந்திரனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பார்த்த மாத்திரத்தில், என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்ட எனக்கு, அழகான சூரிய அஸ்தமனத்தைப் படம் பிடிக்க வந்திருப்பதாகப் பதிலளித்தார். அதனுடன் கூட, சர்வே டிபார்ட்மெண்டில் பணியாற்றுவதாகவும், இந்தியா சென்று ஃபில்ம் இன்ஸ்டிடூட்டில் சேர்ந்து புகைப்படத் துறையில் பயிற்சி பெறப் போவதாகவும் தெரிவித்தார்.
சில வருடங்களுக்குப் பிறகு – ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் தொடக்கம் என்று நினைவு – மகேந்திரன் வெள்ளவத்தையிலுள்ள எனது இல்லத்திற்கு வந்திருந்தார். வந்த அவர், ஃபில்ம் இன்ஸ்டிடுயூட்டின் இறுதித் தேர்வுக்காகத் தான் எடுத்திருந்த குறும்படம் ஒன்றினைக் காண சேவாய் சினிமா (Savoy Cinema) வருமாறு அழைப்பு விடுத்தார். முதல் படத்திலேயே அவர் காட்டியிருந்த நேர்த்தியான, நுட்பமான ஒளிப்பதிவை கண்டு மிகவும் வியந்து அவரைப் பாராட்டிச் சென்றேன்.
சில தினங்களுக்குப் பிறகு வெள்ளவத்தையிலுள்ள எனது இல்லத்தில் மீண்டும் சந்தித்த போது அவரின் குறும்படம் குறித்து மிகவும் விளக்கமாக விவாதித்தோம். என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தான் சேர்ந்து பணியாற்றுவது இயலுமா எனக் கேட்ட பாலு மகேந்திராவிற்கு, நான் அப்போது எடுத்துக் கொண்டிருந்த எனது இரண்டாவது சிங்களப் படம் பாதி முடிந்திருந்ததால் அடுத்தப் படத்திலிருந்து பணியாற்றலாம் என்றே என்னால் கூற முடிந்தது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகேந்திரன், மலையாளப் படம் ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதாகக் கூறினார். இந்தியத் திரைப்பட உலகம் இலங்கைத் திரைப்பட உலகத்தை விட பல மடங்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக இருந்த காரணத்தால், நான் அவரிடம் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினேன்.
என்னுடைய வாழ்த்துக்களுடன் என்னை விட்டகன்ற மகேந்திரனை நான் பார்த்தது அதுவே கடைசி முறை. இந்தியத் திரைப்பட உலகில் அசைக்க முடியாத முத்திரை பதித்த ஒரு ஜாம்பவனாக என்னுடைய மகேந்திரனைப் பற்றி அறிய சொல்லவொண்ணா மகிழ்ச்சியும், பெருமையும் என்னுள் ததும்பி வழிகிறது.
– மறைந்த பாலு மகேந்திரா குறித்து பிரபல இலங்கை திரைப்பட இயக்குனர் ஜோ தேவ் ஆனந்தன்
– தமிழாக்கம்: வெ. மதுசூதனன்.
படம் – நன்றி தேவ் ஆனந்தன் குடும்பத்தினர்