பனிப்பூக்களின் ஓராண்டு நிறைவு
ஃபிப்ரவரி 21 – உலகம் முழுவதும் தங்களது தாய் மொழியினைக் கொண்டாடும் தினமாக யூனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தினம். எங்கள் பனிப்பூக்கள் குழுவினருக்கு அதை விட மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்த பொன்னாள். ஆம். இந்த ஃபிப்ரவரி 21ம் நாள் எங்களது சஞ்சிகை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. சென்ற ஆண்டு இதே நாளில் முதல் இதழை வெளியிட்ட போது இருந்த படபடப்பும், பெருமிதமும் இன்னமும் அடங்கியபாடில்லை. அதற்குள் ஓராண்டு ஓடி விட்டது.
ஒவ்வொரு இதழையும் வெளியிட நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் படும் பாடுகளும் இதழ் வெளியாகி உங்களின் பின்னூட்டங்களை கண்ட பின்பு நாங்கள் அடையும் உவகை “மகவினை ஈன்ற பிறகு ஒரு தாய் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடானது” என்றாலது மிகையில்லை. எங்களது ஓராண்டு வெற்றியில் வாசகர்களாகிய உங்கள் ஒவ்வொருக்கும் பங்குண்டு. நாங்கள் மகிழ்ந்த போது மகிழ்ந்து, துவண்ட போதெல்லாம் தேற்றி, தவறிய போதெல்லாம் திருத்தி எங்களுடன் பயணித்த உங்கள் ஒவ்வொருக்கும் நன்றி.
அப்படிப்பட்ட வாசகர்களாகிய உங்களை நாங்கள் எளிதில் மறந்து விட இயலுமோ? அதனால் தான் பனிப்பூக்கள் முதலாண்டு நிறைவினை வாசகர்களோடு சேர்ந்து கொண்டாட எண்ணி ஒரு சிறிய விழாவினை கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி நடத்தினோம். அதில் பல உள்ளூர் வாசகர்கள் கலந்து கொண்டு எங்களைக் கௌரவித்துச் சிறப்பித்தனர். வெளியூர் வாசகர் பலரும் மின்னஞ்சல் மூலமாக தங்களது வாழ்த்துக்களை அனுப்பி எங்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.
எங்களது வாழ்நாளில் குறிப்பிடத்தக்கதாக அமைந்த இந்நிகழ்வினைப் பற்றிய விரிவான கட்டுரை அடுத்த இதழில் இடம்பெறும். அதுவரையில் காத்திராமல் அவ்விழாவின் மகிழ்ச்சிகரமான தருணங்களை புகைப்படமாக்கித் தந்த எங்களது நிழற்பட நிபுணரின் சில படங்களை இந்த இதழில் வெளியிட்டுள்ளோம்.
இத்தருணத்தில், பனிப்பூக்கள் மலர்ந்து ஒளி வீசக் காரணமாய், உறுதுணையாய் இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம்.
நன்றி! நன்றி!! நன்றி !!!
ஆசிரியர் குழு.
மிக்க மகிழ்ச்சி… அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
அருமையான படைப்பு
ஆசிரியர்குழு உழைப்பு
இனிமையான பகுதிகள்
ஈத்துவக்கும் அறிஞர்கள்
உறையவைக்கும் வண்ணங்கள்
ஊடகத்தின் மேன்மைகள்
எண்ணிலா வாசகர்கள்
ஏங்கவைக்கும் கவிதைகள்
ஐய்யமிலா புகழ்
ஔடதத்தின் நிகர்
ஒருவளமான பதிவு
ஓராண்டின் நிறைவு
அஃதே பனிப்பூக்கள்
– உறைந்துபோன பூக்கள் அல்ல உறையவைக்கும் பூக்கள்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .
விரும்பி படிக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி . அருமையான படைப்புகள் . மேலும் பல ஆண்டுகள் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
Congrats!
Vazhthukkal…Sachi appadiye yen Karuthai Kavithaiyaai Padam pidithuirukiraar…
மலர் கண்டு மகிழ்ந்தேன். ஆசிரியர் குழுவிற்கு ஒரு கேள்வி? மின்னெசோட மாநிலத்தில் தமிழ் பெண்கள் இல்லையா? குழுவில் பணி செய்ய.
வணக்கம் பச்சை நடராஜன் அவர்களே
உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி. எமது சஞ்சிகைக் குழுவிற்ரு பெண் எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்களையும், தொடர்ந்தும் வரவேற்றவாறுள்ளோம். இதுவரை ஓவியராக திருமதி மம்தா மதுசூதனன், மற்றும் எழுத்தாளராக திருமதி ராணி போன்ற அம்மணிகள் தீவிரமாக உதவியாவாறுள்ளனர். இதை விடப் பின்னணியில் பங்கு பெற்றுவோரும் சிலர். மிகவிரைவில் மேலும் பெண் அங்கத்தவர்களை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
பணிவுடன்
யோகி அருமைநாயகம்
பனிப்பூக்கள் வெளியீட்டாளர்
வாழ்த்துகள்!
பனியை தமிழ்ப்
பணியால் வென்றிட்ட
பூக்களுக்கு!!