\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காதலர் தினம்

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 2 Comments

loversday_520x3731996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி..

அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்‌ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து கொண்டிருப்பவன் கணேஷ். பெங்களூரில் பொறியியல் மூன்றாமாண்டு பயின்று கொண்டிருப்பவள் லக்‌ஷ்மி. நெருக்கமான இரண்டு குடும்பங்கள். அவ்வப்பொழுது இவர்கள் அங்கு போவதும், அவர்கள் இங்கு வருவதும் வாடிக்கையான செயல். இப்பொழுது அவர்கள் இங்கு வந்துள்ளனர்..

சிட்டியில் சில வேலை இருக்கிறது, ஊர் புதிதாக இருப்பதால் துணைக்கு யாராவது வேண்டுமென்று கேட்ட லக்‌ஷ்மிக்குத் துணையாய் வந்தவன் கணேஷ். காலையிலேயே புறப்பட்டு வேலைகளெல்லாம் முடித்தாகி விட்டது. ”சும்மா பீச்சுக்குப் போலாமா” என்று லக்‌ஷ்மி கேட்க, “இன்னைக்கு வேலண்டைன்ஸ் டே, பீச்சுல ரொம்பக் கூட்டமா இருக்கும்” என சம்பிரதாயமாய்த் தட்டிக் கழிக்க முயல்கிறான் கணேஷ். “பரவாயில்லங்க, க்விக்காப் போய்ட்டு வரலாமே, ப்ளீஸ்….” அந்தக் குறுகுறுக்கும் கண்களும், அழகாய்ச் செதுக்கப்பட்ட கருமையான புருவங்களும், இளமைக் கொந்தளிப்பில் துளிர்க்கும் குளிர்ந்த கன்னங்களும் எல்லாவற்றிற்கும் மேலான அந்த அப்பாவி முகம் கேட்பதை முடியாது என்ற சொல்ல விஸ்வாமித்திரனாலும் முடியாது, கணேஷ் எந்த மூலை…

கூட்டத்தில் பிதுங்கி, தட்டித் தடுமாறு, சிலருடன் போராடியபடியே இருவரும் இறங்குகின்றனர். இறங்குபவர்களை இறக்கி விட்டுப் பேருந்து நகர, எதிர் முனையில் பிரம்மாண்டமாய் நிற்கும் அண்ணாவின் சமாதி. அண்ணா யாரென்றும், அவரின் தமிழறிவு எவ்வளவு என்றும் தனக்கே உரிய பாணியில் கன்னடத்துப் பெண் லக்‌ஷ்மிக்கு விளக்கிக் கொண்டே, சாலையைக் கடக்கிறான் கணேஷ்.

பேசிக் கொண்டே கடற்கரை மணற்பரப்பை அடைகின்றனர். பெங்களூரில் கடலில்லை என்ற காரணத்தால் எப்பொழுது மெட்ராஸ் வந்தாலும் கடற்கரை வருவதற்கு மறப்பதில்லையாம் பேச்சினிடையே லக்‌ஷ்மி தெரிவித்த தகவல். எதையெதையோ பேசிக் கொண்டே நடக்கின்றனர். பட்டாணி சுண்டல், பஜ்ஜியெனக் கண்ணில் கிடைத்ததையெல்லாம் வாங்கித் தின்றாகி விட்டது. வழியில் பலூன்களைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் விளையாட்டு ஸ்டால் ஒன்று இருக்கிறது. லக்‌ஷ்மிக்கு துப்பாக்கி சுடும் ஆசை வந்து விட்டது. ஸ்டாலை நடத்தும் வயதானவரிடம் பணம் கொடுக்க, அவர் தனது பழங்கால ரைஃபிளில் பால்ரஸ் லோட் செய்து கொடுக்கிறார்.. லக்‌ஷ்மி சுடத் தொடங்க, பலூன்கள் எங்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற நினைப்பில் சற்றும் சேதமுராமல் ஒய்யாரமாய் வீற்றிருக்கின்றன. “இப்டிப் புடி, இப்டிக் குறிபாரு, இப்டித் தான் சுடணும்”… பலமுறை சொல்லியும் முன்னேற்றம் எதுவுமில்லாததால் அருகில் சென்று, பக்கவாட்டில் நின்று துப்பாக்கிப் பிடிப்பது எப்படி எனச் செயல் முறையில் காட்டத் தொடங்குகிறான் கணேஷ்.

துப்பாக்கி சுடுவதற்குச் சொல்லிக் கொடுக்கத்தான் அருகில் சென்றான் கணேஷ். இதமாக அவள் கூந்தலிலிருந்து தவழ்ந்து வந்த மல்லிகையின் மணம், கர்நாடகத்திற்கே உரித்தான சாண்டல் பௌடரின் கிறங்கடிக்கும் வாசனை என ஒவ்வொன்றாய் கணேஷின் கவனத்தைத் திசை திரும்பச் செய்தது. சில காலங்களாகவே அவனின் மனதில் அவள் குடிகொள்ள ஆரம்பித்திருந்தாள் என்பதை அவன் உணர்ந்து தானிருந்தான். சென்ற முறை வந்திருந்த பொழுது அவள் செய்த பரத நாட்டிய அரங்கேற்றத்தில் தொடங்கியது என்று நினைவு. கள்ளமில்லாத அந்தச் சிரிப்பு பலமுறை தூங்குகின்ற இவன் கனவில் வந்து போனதுண்டு. நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் அதிகமாக, அதிகமாக, அவளில் தன்னை இழப்பதை உணர்ந்தான் கணேஷ், ஆனால் யாரிடமும் சொல்வதற்குப் பயம். குறிப்பாக அவளிடம் காட்டிக் கொள்ள மிகவும் பயம், பயம் என்பதைவிட கௌரவக் குறைவு என்ற நினைப்பு.

அவளின் இடது புறம் நின்று கையைப் பின்புறமாய் வளைத்துக் கொண்டு துப்பாக்கி பிடிக்கச் செல்கையில், பெண்மையின் ஸ்பரிசத்தை மென்மையாய் உணரத் தொடங்கினான் கணேஷ். லக்‌ஷ்மியின் முழு கவனமும் துப்பாக்கிச் சுடக் கற்றுக் கொள்வதில் இருந்தது. காதலர் தினத்தில் பொதுவாக இளைஞர்கள் செய்யும் லீலைகளை ரசிப்பதற்காகவே வந்து சேரும் கும்பலொன்று, பூஜை வேளைக் கரடியாய் இவர்களின் பின்னின்று இவர்களின் காதுபடக் கிண்டல் செய்யத் தொடங்கியிருந்தது. தமிழ்த் தெரியாத லக்‌ஷ்மியால் என்ன நடக்கிறது என யூகிக்க முடிந்தாலும், என்ன சொல்கிறார்கள் என விளங்கிக் கொள்ள இயலவில்லை, அதனால் அவர்களின் கிண்டல் அவளை பாதிக்கவுமில்லை. கணேஷ் அவசர அவசரமாய் ‘சுட்டு’த் தீர்த்துவிட்டு, லக்‌ஷ்மியை துரிதப்படுத்தி அந்த இடத்தைவிட்டு அகன்றான்

பல நிஜக் காதலர்களையும், பல சந்தர்ப்பவாதத் தம்பதிகளையும் கடந்து மணற்பரப்பில் நடந்து பேருந்து நிலையத்தை அடைகின்றனர். வருகிற வழி முழுதும், பின்னால் நின்று கிண்டல் செய்த கும்பலின் வார்த்தைகள் மனதில் எதிரொலித்தாலும், சுகந்தமான லக்‌ஷ்மியின் அருகிலிருந்து வந்த பெண்மையின் வாசனை கணேஷின் நாசி தொடங்கி நாடி வரை முழுவதுமாக வியாபித்திருந்தது. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினர். அதே 20C பிதுங்கிய கூட்டத்திரளுடன் வந்து நின்றது.

இதை விட்டால் வேறு வழியில்லை என்பதால் பலருக்கு மத்தியில் முட்டி மோதி பேருந்தில் ஏறிக் கொள்கின்றனர். கூட்டத்தில் மற்றவரின் மேல் உரச வெட்கி, கணேஷியின் கையைப் பற்றிக் கொண்டு அவன் வகுக்கும் வழியில் மெதுவாய் பேருந்தினுள்ளே முன்னேறுகிறாள் லக்‌ஷ்மி. கணேஷும் முடிந்தவரை முண்டியடித்து சற்று மூச்சுவிடுமளவுக்கு ஒரு இடத்தைப் பிடித்து, லக்‌ஷ்மியைப் பத்திரமாய் பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கை ஒன்றின் கம்பியில் சாய்ந்து நிற்பதற்கு உதவி செய்கிறான். கடந்த இரண்டு மணிநேரங்களில் முதன்முறையாக இருவரும் ஒருவரையொருவர் வெளிச்சத்தில் பார்த்துக் கொள்கின்றனர். லக்‌ஷ்மியின் நெற்றியில் முத்துக்களாய்த் தோன்றியிருக்கும் வியர்வைத் துளிகள் கணேஷின் கவனத்தைக் கவர்கிறது. ஒரு சிறு வினாடி நான்கு கண்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ள, அவர்களுக்கிடையே பிரளயம் ஒன்று தோன்றி மறைந்தது.

இருவராலும் ஒரு சில வினாடிகள் எதுவும் சொல்ல இயலவில்லை. தங்களைச் சுற்றி முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்யும் ஒரு அறுபது எழுபது மனிதர்களோ, “டிக்கெட்ஸ், டிக்கெட்ஸ்..” என்று கூவிக் கொண்டே முதல் ஸ்டேஜ் வரை மட்டும் பேருந்துக்குள் முன்னே பின்னே போய் வரும் நடத்துனரோ, “மேல வா, சாவுக்கிராக்கி, சாவுறதுக்கு என் வண்டிதான் கிடைச்சுதா..” என ஃபுட் போர்ட் பயணிகளை ‘மரியாதையுடன்’ அர்ச்சிக்கும் ஓட்டுனரோ – எவரும் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

“அடுத்த திங்கக் கெழம, US எம்பஸிக்கு விசா ஸ்டாம்பிங்க்குப் போறேன்…” கணேஷ்..

“என்ன US போறீங்களா?” அதிர்ச்சியில் லக்‌ஷ்மி…

“எங்கூட வந்துர்ரியா?” கணேஷ்.. பாரதிராஜா வடிவமைத்திருந்தால் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் லக்‌ஷ்மியின் கண்களில் மின்னியிருக்கும் இப்போது. எவன் சொன்னான் “ஐ லவ் யூ” என்ற வார்த்தைகளைக் கொண்டுதான் காதலை வெளிப்படுத்த முடியுமென்று….

2014 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி..

அமெரிக்காவில் தனது வீட்டின் லிவிங்க் ரூமில் லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறான் கணேஷ். அடுப்பங்கரையிலிருந்து லக்‌ஷ்மியின் குரல்..

“என்னங்க, பெரியவளுக்கு நாளைக்குத் தமிழ் கிளாஸ் இருக்கு, ஹோம் ஒர்க் முடிச்சுட்டாளா பாத்தீங்களா? எனக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரிஞ்சா ஒங்கள கேக்கக்கூட மாட்டேன்…

சின்னவளுக்கு மூக்கொழுகுதுங்க, CVS ஃபார்மஸி வரைக்கும் போய்ட்டு வாங்க.. எல்லா வேலையும் என் தலைலதான்.. இன்னைக்கு வேலண்டைன்ஸ் டேன்னு தான் பேரு.. ஒரு சின்ன ரோஸாவது உண்டா…

எப்போப்பாத்தாலும் லேப்டாப்பை வைச்சுக்குட்டு, மோட்டு வளையைப் பாத்துக்குட்டு எதையோ எழுதறேன்னு சொல்லி கிட்டு….”

லக்‌ஷ்மியின் பாட்டு அவனை உலுப்பி எழுப்ப, கணேஷ் 20C பேருந்துலிருந்து வெளி வந்து கொண்டிருந்தான்..

– வெ. மதுசூதனன்

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Priya C K says:

    நல்ல கதை . இது கதை போல தோன்றவில்லை 😉 , இதுதான் இன்றைய யதார்த்தம் . யார் படித்தாலும் இதில் பல நிகழ்வுகள் அவர்கள் வாழ்கையில் நடந்திருக்கும் . அருமை .

  2. Anonymous says:

    really impressed ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad