தவிக்கும் தமிழன்
சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, எழுந்து பாத்ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..
போகிற வழியில் ஜன்னல் வழியாக வெளியில் மெதுவாக எட்டிப் பார்த்த எனக்கு பயந்தது போலவே அதிர்ச்சிகாத்திருந்தது. இரவில் நான் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்த பொழுது, இயற்கை சுறுசுறுப்பாய்த் தன் வேலையைச் செய்திருக்கிறது. ட்ரைவ் வே முழுவதும் முழுகிப்போகும் அளவுக்கு வெண்பனி பொழிந்து தாக்கியிருக்கிறது. இந்த சீஸனில் இதற்கு முன்னரே கொட்டித் தீர்த்திருந்த வெண்பனியைச் சுத்தம் செய்ததால் டிரைவ் வேயின் இரண்டு பக்கமும் ஐந்தடி உயரத்திற்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு மத்தியில், நேற்று இரவு வந்த வெண்பனி இரண்டு மூன்று இன்ச்சாக கொட்டிக் கலந்திருந்தது.
“மை கார்ட், என்ன ஊருடா இது.. என்ன எளவுக்கு இங்க வந்து மாட்டிக்கிட்டமோ”… இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக ஸ்னோ புளோ செய்ய வேண்டும் என்ற காரணத்தால் வந்த மைண்ட் வாய்ஸ் இது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஒரு முக்கியமான அப்பாய்ண்ட்மெண்டுக்காகச் செல்ல வேண்டும். காரை வெளியே எடுக்க வேண்டுமெனில், டிரைவ் வே முழுவதும் ஸ்னோ ப்ளோ செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை.
மனக்கண் முன் பல வருடங்களுக்கு முன்னர் இங்கு வருவதற்கு முன்னர் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கை நிழலாடுகிறது. காலையில் எழுந்தவுடன் வீட்டின் பின்புறம் இருந்த பாத்ரூமில் காலைக்கடன் முடித்து, முன்கட்டில் வந்து தரையில் அமர்ந்து, ஹிண்டு பேப்பரை தரையில் விரித்து வைத்துப் படிக்கத் தொடங்கியது நினைவுக்கு வருகிறது. நான் எழுந்து விட்டேன் என்று தெரிந்தவுடன் அம்மாவோ, அக்காவோ காஃபி போட்டுக் கொண்டு வந்து அருகில் வைத்து விட்டுப் போவார்கள். பேப்பரில் ஸ்போர்ட்ஸ் நியூஸ் படித்துக் கொண்டே காஃபியை மெதுவாக உறிஞ்சிக் குடித்து முடித்து அங்கேயே வைத்தது நினைவுக்கு வருகிறது. திரும்பவும் அம்மாவோ, அக்காவோ, வேலைகாரியோ வந்து காலி டம்ளரை எடுத்துக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. உட்கார்ந்த இடத்தில் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட காலமது.
பல் தேய்த்துவிட்டு வெளியே வந்தேன். வெளியில் ஸ்னோ ப்ளோ செய்ய ஒரு மணிநேரம் ஆகுமாகையால் அதற்குத் தயாராக வேண்டும். தெர்மல் வேரில் தொடங்கி இரண்டு மூன்று லேயர்களை அணிந்து கொண்டாகி விட்டது. மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்று, கிட்டத்தட்ட கணுக்கால் அளவு உயரமாயுள்ள ஸ்னோ பூட்ஸ் அணிந்து கொண்டாகி விட்டது. உடம்புக்கு ஒரு விண்டர் ஜாக்கெட், கைகளுக்கு இரண்டு லேயர் கொண்ட உறை, காதுகளை மூடிக்கொள்ள இயர் மஃப், தலைக்கு ஒரு மங்கிக் குல்லா. எல்லாம் அணிந்து கொண்டாகி விட்டது. இதற்குப்பின் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நிலவில் முதன்முதலில் காலெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்க் போலத் தெரிந்தேன். படுக்கையிலிருந்து எழுந்த அதே லுங்கி, டீ.ஷர்ட் டுடன் காலில் ஒரு ஹவாய் ஸ்லிப்பரை மாட்டிக் கொண்டு தெருமுனை வரை காற்றோட்டமாய் நடந்து சென்று ஆவின் பால் வாங்கிக் கொண்டு வந்த சென்னை வாழ்க்கை பற்றிய நினைவு என்னை மீண்டும் சுயபச்சாதபத்திற்கு உள்ளாக்கியது..
மட் ரூமின் வழியாக வெளிவந்து கராஜ் கதவைத் திறக்கிறேன். கதவின் மேல் காற்று வந்து இரவு முழுக்கக் குவிந்திருந்த பனியும், அதன் முன்னரே பலதினங்களாக இருந்து உறைந்து போயிருந்த ஐஸ் கட்டிகளும் சேர்ந்து ஒருவித கிரீச் சத்தத்துடன், மிகுந்த பிரயத்தனத்துடன் கதவு மேல் நோக்கித் திறக்கிறது.
கதவுக்குப் பக்கத்தில் சாய்த்து வைக்கப் பட்டிருந்த ஷவல் எடுத்து கதவை ஒட்டியிருந்த ஸ்னோவைப் பதமாகத் தள்ளுகிறேன், அப்பொழுதுதான் ஸ்னோ ப்ளோவர் இயந்திரத்தை வெளியில் எடுத்துவந்து முழு டிரைவ் வேயையும் சுத்தம் செய்ய இயலும். எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் செய்வதைப் பார்த்துக் கற்றுக் கொண்ட சில இலகுவான வழிமுறைகளில் இதுவும் ஒன்றும்.
நமது ஸ்னோ புளோவர் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது. நம் தமிழர்களுக்கே உரிய சிறப்புத் தன்மையினால், ஒரு நான்கு நண்பர்களாகச் சேர்ந்து ஒரே மாடலைப் பேரம் பேசி வாங்கியது. வாங்கும்பொழுது பல மாடல்களைப் பார்த்து, இதை வாங்குவது என்று நிர்ணயித்தோம். இதைவிட சக்தியில் சிறிது அதிகமான அடுத்த மாடல் வாங்கலாம் என்று பேசிக் கொண்டாலும், அது இருநூறு டாலர்கள் அதிகம் என்பதால், இந்த மாடலையே வாங்குவது என்று குழுவாக முடிவெடுத்தோம். அதன் சக்திக்கேற்பவே அதன் திறனும் இருக்குமல்லவா? நாற்பதடி அகல டிரைவ் வேவில் நம் சக்தி குறைந்த ஸ்னோ ப்ளோயரினால் பாதி தூரம் கூட ஸ்னோவை வீசி எறிய இயலாது. இதனால், ஒரு ஓரத்திலிருந்து தொடங்கி மையத்தில் எறிந்து, மீண்டும் மையத்திலிருந்து டிரைவ் வேயை விட்டு வெளியில் எறிய வேண்டும். பத்து வருடத்திற்கு முன்னர் மிச்சம் பிடித்த இருநூறு டாலர், இந்தப் பத்து வருடங்களில் இதனை உபயோகப் படுத்தியதால் வந்த இடுப்பு வலிக்கு அமிர்தாஞ்சன் வாங்குவதிலேயே செலவாகிப் போயிருந்தது.
நான் ஆரம்பித்து இருபது நிமிடங்களில், முக்கி, முனகி இரண்டு முறை மேலும் கீழும் போய் வந்திருப்பேன். அதிலும், தன்னால் ஒரு குறிப்பிட்ட அளவே ஸ்னோவைச் சுத்தம் செய்ய இயலும் என முரண்டு பிடிக்கும் இருநூறு டாலரை எனக்குச் சேமித்துக் கொடுத்த அந்த இயந்திரம். பாதி வேலையில் நான் மும்முரமாக இருக்கும்பொழுது எதிர் வீட்டு ஜிம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவார்.. அனாயாசமாய் ஒரு ராட்சத அளவிலுள்ள இயந்திரத்தை தனது புஜ பலத்தால் இழுத்தே ஸ்டார்ட் செய்வார் (நம் இயந்திரம் சிறிதாக இருந்தாலும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் – அதில் ஒரு அற்ப பெருமை நமக்கு). தனது இடது கையை உயர்த்தி நட்பாய் எனக்கொரு சல்யூட் அடித்து விட்டு ஏதோ ஜாக் செய்வதுபோல வேகவேகமாய் ராட்சத இயந்திரத்தைத் தள்ளிக் கொண்டு (அந்த இயந்திரம் அவரை இழுத்துச் செல்லும் என நினைக்கிறேன்) நடப்பார். அதுவும் சீராக அனைத்து ஸ்னோயை அழகாய் ஒரு வானவில் வடிவத்தில் ஒரு நூறடிக்கு மேலாக வீசி எறியும். கிட்டத்தட்ட அடுத்த வீட்டு டிரைவ் வேவரை விசிறியடிப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அடுத்த சில நிமிங்களில், பக்கத்து வீட்டு க்ரிஸ் வெளியே வருவான். எனக்கு நெருங்கிய நண்பன், நான் படும் அவலம் நன்குணர்ந்தவன். சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு தன் வேலையைப் பார்ப்பதை அவனின் முதுகுப் புறம் இருந்துகூட என்னால் உணர முடியும். அவனும் கிட்டத்தட்ட ஜிம் போலவே ஒரு ராட்சத இயந்திரம் வைத்திருப்பவன், இன்னும் கூடுதலாக அதன் முகப்பில் பிரகாசமாய் எரியும் ஒரு ஹெட் லைட் வேறு பொருத்தியிருப்பான். அதனைத் தொடர்ந்து எதிர்ப்புறம் ஜிம் வீட்டிற்கு அடுத்த வீட்டு கராஜ் கதவு திறக்கப்படும், அதிலிருந்து ஆஜானுபாகுவாய் வெளிவந்த ஜெஸ்ஸி, அவனும் ஒரு ராட்சத இயந்திரத்தால் ஸ்னோ இரு மருங்கும் விசிறி அடித்துக் கொண்டே வருவான். அவனும் எனக்கு நண்பன் தான். உடன் கால்ஃப் விளையாடும் பொழுது என்னுடைய ஸ்னோ ப்ளோயிங்க் மேனரிஸங்களைச் சொல்லிச் சிரிப்பான். அவனுடன் சேர்ந்து நானும் சிரித்துக் கொள்வேன். தன்னையே கேலி செய்து சிரித்துக் கொள்வது பெஸ்ட் செல்ஃப் டிஃபன்ஸ் என்று இந்த ஊருக்கு வந்த பிறகுக் கற்றுக் கொண்டது. இதற்குள், எதிர்வீட்டின் இடப்புறமுள்ள சிங்கப்பூர்க்காரி மற்றும் என் வரிசையில் எனக்கு இடப்புறமுள்ள சைனாக்காரர் எனத் தெரு முழுவதும் அனைவரும் வெளியில் வந்து ஸ்னோ ப்ளோத் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருப்போம்.
ஜிம், க்ரிஸ், ஜெஸ்ஸி என அனைவர் வீட்டு டிரைவ் வேயும் அவர்கள் சென்று முடிந்த பாதையில் கருப்பாய், அழகாய்ச் சுத்தம் செய்யப் பட்டிருக்கும். என் வீட்டு டிரைவ் வே எவ்வளவு முறை சுத்தம் செய்து திரும்பினாலும், இன்னும் வெள்ளையாய் ஒரு லேயர் ஐஸ் பதிந்திருக்கும். இவர்கள் மூவரும் தங்களின் டிரைவ் வேவை முடித்து, நடை பாதைகள், தபால் பெட்டிகளைச் சுற்றி, ஃபையர் ஹைட்ரண்ட்ஸ் அருகில் என எல்லா பொது இடங்களையும் சுத்தம் செய்து தீர்ப்பார்கள் – ஏதோ இது ஒரு சந்தோஷமான பொழுது போக்குப் போலவும், அதனை இன்னும் அதிக நேரம் செய்வதற்கு வழி பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அத்தனையும் முடித்து வீட்டிற்குள் சென்று கதவைச் சாத்திய பின்னரும், நான் இன்னும் எனக்கு இருநூறு டாலர் சேமித்துக் கொடுத்த இயந்திரத்துடன் போராடிக் கொண்டிருப்பேன்.
நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவனாயினும், நம் ஊரில் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு ஒரு வேலையாள், தோட்ட வேலை பார்ப்பதற்கு இன்னொருவர், காரோட்ட மூன்றாமவர் என்ற ராஜ வாழ்க்கை நடத்தியது நினைவுக்கு வருகிறது. என் அம்மா பார்த்தால், இந்த வாழ்க்கை உனக்குத் தேவைதானா என்று கேட்பார் என்று தோன்றியது. தலைவிதி யாரை விட்டது..
தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல் நான் என்னுடைய போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க எதிர்த்த வீட்டிற்கு இடப்புறம் இருக்கும் வீட்டிலிருக்கும் சிங்கப்பூர்க்காரி தன் வீட்டிலிருந்து என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறாள். சிங்கப்பூர்க்காரி என்றவுடன் “அன்பரே..” என்று டேப் ரெகார்டரில் பதிவு செய்து ரஜினிகாந்தைத் தெருத் தெருவாக அலையவிட்ட அழகுப்பதுமை கீதா என யாராவது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இவள் ஒரு நாற்பது வயதைக் கடந்து, தனிமையில் துணையின்றி பெருமளவு பிடிப்பின்றி வாழும் ஒரு சாதாரணப் பெண்மணி.
அருகில் வந்தவள் அவளுக்கே உரிய சைனீஸ் தொனி ஆங்கிலத்தில் தனக்கு ஒரு உதவி செய்வாயா எனக் கேட்டாள். நான் இங்கு படும்பாடு எனக்குத் தான் தெரியும், இதில் இன்னொருத்திக்கு உதவியா என மனதுக்குள் பட்டாலும், பெண்ணொருத்தி உதவி என்று கேட்டு இல்லையென்று சொல்லக் கூடாது என்ற எம்.ஜி.ஆர் தொடங்கி நேற்றைய மீசை முளைக்காத ஹீரோ வரை அனைவரும் செய்த எழுதப்படாத விதியைப் பின்பற்றி உதவி செய்ய ஒத்துக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தேன். தன்னுடைய ஸ்னோ புளோவர் ஸ்டார்ட் ஆகவில்லையென்றும் ஏன் என்று பார்த்துச் சரிசெய்து கொடுக்க இயலுமாவெனக் கேட்டாள். “அது சரி, இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது…” என்ற வடிவேலுவின் குரல் நம் காதில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது. எதுவும் பெரிதாகத் தெரியாவிடினும், ஏதோ தெரிந்தது போல எதையெதையோ தட்டிக் கொட்டத் தொடங்கினேன். இவனுக்கு நிறையத் தெரியும் என்றே எண்ணத் தொடங்கினாள் சிங்கப்பூர்க்காரி.
இயந்திரத்தைத் தள்ளிக் கொண்டு முன்னும் பின்னும் நடக்கும் பொழுது உணராத குளிரை, ஒரே இடத்தில் அமர்ந்து இயந்திரத்தைப் பழுது பார்க்கும் பொழுது மிகவும் அதிகமாக உணர முடிந்தது.கை விரல்கள் கையுறையை மீறி உறையத் தொடங்கியிருந்தன. எவ்வாறு சரி செய்வது என்றும் தெரியவில்லை, இயந்திரத்தை இன்னும் பெரிய அளவில் கெடுத்து விடுவோமோ என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது. அதை இதைச் சொல்லி அவளிடம் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
திரும்பி என் வீட்டு டிரைவ் வேக்கு வந்து, செய்தது வரை போதுமென்று உள்ளே செல்லலாமென முடிவு செய்தேன். எதேச்சையாய் தலையை உயர்த்திப் பார்த்த எனக்கு என் வீட்டு ஜன்னலின் உள்ளிருந்து நான்படும் அவஸ்தைகள் முழுவதையும் படமெடுத்துக் கொண்டிருந்த என் தர்மபத்தினி கண்ணில் பட்டாள். அவசரமாய் உள்ளே போய் என்னவென்று கேட்க, இந்தியாவிலிருக்கும் உறவினர்களெல்லோரும் பார்ப்பதற்கு YouTube வீடியோ தயார் செய்து கொண்டிருக்கிறாளாம்.
நம் செலவில் பலர் சந்தோஷப் படுகிறார்கள் என எண்ணிக் கொண்டே குளியலறையை நோக்கி நடக்கலானேன்.
– வெ. மதுசூதனன்
அருமை அருமை 🙂 🙂
அண்னே அவங்க வரலை!!! (நடிகர் கௌண்டமணி & செந்தில் ஸ்டைல்)
Madhu, Miga Sireppuu …. Thunbathilum oru enbam ( Ethir vituku uthavavathu) 😉