வாழ்த்து மடல் – லெட்சுமணன்
அ.லெட்சுமணன்,
சென்னை – 35
21/04/2014
பனிப்பூக்கள்
செட்டிநாட்டுப்பகுதியில் திருமணச்சடங்குகளில் ஒன்று “பூ மணம் இடுதல்” . இதில் என்ன செய்வார்கள் என்றால், பூக்களைப் பாலில் தோய்த்து மணமக்களின் கை மற்றும் தோள்களில் இரு வீட்டாரும் வைப்பார்கள். இந்தச் சடங்கின் விளக்கம் என்னவென்றால், பூக்கள் எவ்வாறு மணம் பரப்புகிறதோ அதே போல் மணமக்களும் இந்த பூவுலகில் புகழ் மணம் பரப்ப வேண்டும் என்பதாகும்.
அதே போல் இந்தப் பனிப்பூக்களும் தேசம் கடந்து பனி தேசத்தில் தமிழ் மணம் பரப்புகிறது. 70 களில் வந்த கையெழுத்துப் பத்திரிக்கைகள் போன்றது தான் இந்த சிற்றிதழ்கள். எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா திருச்சியில் நடத்திய கை எழுத்துப் பத்திரிக்கையில் கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். அன்று அவர்களுக்குத் தங்கள் கருத்தை தேசம் கடந்தெல்லாம் கடத்தக் கிடைக்காத வாய்ப்பு இன்றைய தகவல் மற்றும் தொலைத்தொடர்புப் புரட்சியால் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதை நான் சொல்வதன் காரணம் என்னவென்றால், பனிப்பூக்களில் எழுதுபவர்களும் பின்னால் சுஜாதாவாகவும் வாலியாகவும் வர வேண்டும் என்பதே. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை என்பது அனைவரும் அறிந்ததே.
ஆரம்பம் முதலே எனக்குப் பனிப்பூக்களின் வடிவமைப்பு நேர்த்தியும் அதில் வரும் படங்களின் நேர்த்தியும் மிகுந்த உவப்பைத் தரும். இந்த நேர்த்திக்கு காரணமானவர் இத்தருணத்தில் பாராட்டப்பட வேண்டியவர். சாதாரணமாக இணையத்தில் வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் இணையதளங்கள் மட்டுமே இவ்வாறு நேர்த்தியாக (Professional Look) வடிவமைக்கப்படிருக்கும்.
பொதுவாக இது போன்ற இணைய தளங்கள் தொழில் சார்ந்த விசயமாக இல்லாமல் நடத்துபவர்களில் விருப்பம் சார்ந்த விசயமாக இருப்பதால் சீக்கிரமே நின்று போகும். ஆனால், இதை நடத்துபவர்கள் கருத்தியலாக ஒரு நிலையை அடைந்தவுடன் அதில் உறுதியாக இருப்பது தெரிகிறது. அதனால் தான் ஒரு வருடம் கடந்தும் அவர்களின் பணி தொடர்கிறது. சிற்றிதழ்களுக்கே வரும் சிரமங்கள் எதுவும் வந்து விடக்கூடாது என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எசப்பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கிறது. இந்த எசப்பாட்டின் நையாண்டித்தன்மையும் தேசம் கடந்த வீச்சும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் பகுதி நன்றாக இருக்கிறது. பலராலும் பல அரங்குகளில் விவாதிக்கப்பட்ட விசயமாக இருந்த போதிலும் படிக்க படிக்க இன்பம் தருகிறது. இது போன்றே பாரதியும் பனிப்பூக்களின் வரும் இதழ்களில் வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.
வரலாறும், மாதத்தின் மாமனிதரும் சிறந்த பகுதிகள் தான். ஆனால் ஏதோ சிறுவர்களுக்கு வரலாற்றுப்பாடம் எடுப்பது போல் உள்ளது. இன்னும் கொஞ்சம் விரிவான அலசல் இருந்தால் நன்றாக இருக்கும். கருத்து மோதல்களைத் தவிர்க்கவே இது போன்ற வரலாறு மட்டும் தருவதாக ஆசிரியர் குழு கூறினால் எனக்கும் அதில் உடன்பாடே.
என்னுடைய நேர ஒழுங்கின்மை காரணமாக எல்லா இதழ்களையும் நான் முழுவதும் வாசிக்கவில்லை. அதனால் என்னால் முழுமையாக எதைப்பற்றியும் விரிவாக எழுத முடியவில்லை. வரும் இதழ்களை முழுவதுமாகப் படிக்க முயற்சிக்கிறேன்.
முழுவதுமாகப் படித்து அலசி கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. ஏதோ என் உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறேன் என்று கொள்ளுங்கள்.
காலமெனும் ஓடையிலே ஓராண்டு கடந்தாலும்
காத தூரம் நடந்தங்கே வந்து வாழ்த்தாவிட்டாலும்
அன்பெனும் ஓடையிலே அகப்பட்ட நாமெல்லாம்
பனிப்பூக்கள் பலகாலம் வாழ இணையவழி இணைந்து வாழ்த்துவோம்
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! பல்லாண்டு பல்லாயிரத்து நூறாண்டு.