\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இதுவும் ஒரு அஸ்வமேதம்

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 2 Comments

Aswametham_620x447சுப்பு ஐயர் செத்துப்போனது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். நல்ல மனுஷன். ஒரு ஈ, எறும்புக்குக் கூடக் கெடுதல் நினைக்காதவர். காசு பணத்தால் அவரால் உதவ முடியாது. ஆனால் ஆரோக்கியம் இடம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உடலால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முதலில் நிற்பார்.

வசதி இல்லாமலோ அல்லது அனாதையாக யாராவது   செத்துப் போனால் முதல் தகவல் சுப்பு ஐயருக்குத்தான் போகும். சடங்குகள், சவசம்ஸ்காரம் ஆகியவைகளை முன்னிருந்து நடத்துவார். ஊர்க்குக் கோடியில் ஒரு சாவடி இருக்கும். வழிப்போக்கர்கள், ஏழைகள், பிச்சைக் காரர்கள் அங்கு படுத்திருப்பார்கள். சில நேரங்களில் அங்கேயே செத்துப் போவதும் உண்டு. அப்படி இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கிற்காக பலரிடம் தானே பணம் வசூல் செய்து எல்லாவற்றையும் முன்னின்று நடத்தி வைப்பார். அவர் வாழ்நாளில் சுமந்த பிணங்களின் எண்ணிக்கை எவ்வளவோ! அவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.

அவருடைய முயற்சியினால்தான் சுடுகாட்டிற்கே சாலை போடப்பட்டது. ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்கள் உதவியுடன் சமூக சேவையாகச் சாலை அமைத்தார். இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போவார்களோ, நரகத்திற்குப் போவார்களோ அவற்றிலெல்லாம் அவருக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் இடுகாடு வரைக்கும் செல்லும் பாதையாவது நன்றாக இருக்க வேண்டும் என்று வெறும் உடல் உழைப்பாலேயே சாலையை அமைத்தார். அவர் செத்துப் போனபோது சாதி வித்தியாசம் இல்லாமல் அவரைத் தூக்க நான், நீ என்று பல தரப்பினரும் முன் வந்தார்கள். ஆனால் சவசம்ஸ்காரம் ஆனபிறகு இரவு எத்தனை நேரம் ஆனாலும் எல்லாம் முடிந்த பின்பு ஸ்னானம் செய்துவிட்டு பூணல் மாற்றிக் கொண்டுதான் சாப்பிட உட்காருவார். அது சம்பந்தமாக போலிஸ் ஸ்டேஷன், முனிசிபாலிட்டி இவைகளுக்கு அலைய அவருக்கு உதவியாக இருக்க, ராமருக்கு ஒரு வானர சேனை இருந்தது போல அவருக்கு ஒரு இளைஞர் கூட்டம் இருந்தது.

சுப்பு ஐயருக்கு ஒரே பிள்ளை கணேசன். காசி, ராமேஸ்வரம் போய்த் தவம் இருந்து பெற்ற பிள்ளை. அவனுக்கு ஒரு வாரிசு இல்லையே என்பதுதான் அவருக்கு வருத்தம். புத்திரன் இல்லாது போனவர்களுக்கு “புத்” என்கிற நரகம் தான் கிடைக்கும் என்கிற சாஸ்திரத்தில் எல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன என்று ஒரே சமமாக நினைப்பவர். கணேசனுக்குக் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்கள் ஆகியும் கூடக் குழந்தை பிறப்பதற்கான அறிகுறியே இல்லை. கோவில், குளம், மருத்துவ சோதனைகள் என்று எல்லாவற்றையும் பார்த்து இன்று பிறக்கும், நாளை பிறக்கும் என்று காத்திருந்து விட்டு கடைசியில் ஆசை நிறைவேறாமலேயே காலமானர் சுப்பு ஐயர்.

ஒவ்வொரு வருடமும் சிரார்த்தம் செய்யும் போதெல்லாம் நாகநாத வாத்தியார் ”உன் அப்பா அவர் காலத்துல எத்தனை பிணங்களைச் சுமந்திருப்பார் தெரியுமா? ஒவ்வொரு சவ சமஸ்காரமும் ஒரு அஸ்வமேத யாகத்துக்குச் சமானம். அப்படிப் பட்ட ஒசந்த மனுஷரோட பிள்ளை உனக்கு வம்சாவளி இல்லாமப் போறதை நெனச்சா மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு. நீ ஒரு தடவை சிரமத்தைப் பாக்காம உன் அப்பா பண்ணின மாதிரி ராமேஸ்வரத்துக்குப் போயி சமுத்திர ஸ்னானம் பண்ணிட்டு ராமநாதஸ்வாமிக்கு அர்ச்சனை பண்ணி தரிசனம் பண்ணிட்டு, வைதீக காரியங்களையும் பண்ணிட்டு, கடல் கரையிலிருந்து மண் எடுத்துண்டு போய் காசிக்குப் போயி கங்கையிலே ஸ்னானம் பண்ணிட்டு விஸ்வநாதர் விசாலாட்சியைத் தரிசனம் பண்ணிட்டு, கயாவுலே போயி பிதுர் காரியங்களைப் பண்ணிட்டு பிரயாகையிலே கங்கா ஜலம் எடுத்துண்டு வந்து திரும்பியும் ராமேஸ்வரம் வந்து ராமநாதஸ்வாமிக்கு கங்கை ஜலத்துலே அபிஷேகம் பண்ணினா எல்லாம் நல்லபடியா நடக்கும். ”எதுலயும் நம்பிக்கையோட பண்ணனும்” என்பார்.

கணேசன் பல தடவை யோசித்தான். குழந்தை பிறக்கிறதோ இல்லயோ அது வேற விஷயம். அம்மாவுக்கும் வயசாயிண்டே போறது. காசிக்கு ஒரு தடவை போயிட்டு அப்பாவுக்குக் காரியம் பண்ணணுங்கற ஆசை அம்மாவுக்கு உள்ளூர இருக்கு. எல்லாத்தையும் ஒரே மூச்சில முடிக்கலாம்னு கணேசன் முடிவு பண்ணினான்.

நன்றாகத் திட்டமிட்டு, நல்ல நாள் பர்த்துக் கணேசன், அவன் மனைவி விமலா, அம்மா எல்லோரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் பயணமானார்கள். அம்மா மங்களத்தம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம். கணேசன் பிறக்கறதுக்கு முன்னால இனிமேல் குழந்தை பிறக்காதுன்னு சுப்பு ஐயர் கயாவிலே போயி ஆத்ம பிண்டமும் போட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் தான் கணேசன் பிறந்தான். ஒருவேளை கணேசனுக்கும் அப்படித்தான் குழந்தை பிறக்கும்னு பிராப்தமோ என்னவோன்னு மங்களம் நம்பினாள்.

ராமேஸ்வரம் சமுத்திரம் அமைதியாக இருந்தது. அங்கு ஸ்னானம் செய்வது ஒரு ஆனந்தம். கணேசனும், விமலாவும் சமுத்திரத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். சமுத்திரத்தை விட்டு கரைக்கு வரவே மனசில்லை. மங்களம் ஸ்னானத்தை முடித்துக் கொண்டு புடவை, துணிகளைக் கடற்கரை மணலிலேயே காய வைத்து விட்டு –

“கணேசா! நீங்க ரெண்டு பேரும் சாவகாசமா குளிச்சுட்டு, சந்தியா வந்தனம் எல்லாம் முடிச்சுட்டு இருங்கோ. நான் சித்த காலாற நடந்து போயிட்டு சமுத்திரக் கரையிலேயே உக்காந்து ஜபம் எல்லாம் முடிச்சுட்டு வரேன். என்னைக் காணம்னு தேட வேண்டாம். ஒரு மணி நேரமாவது ஆகும்!” என்றாள்.

“அம்மா! பத்திரம், இன்னும் இருட்டுப் பிரியலே! மணி அஞ்சுதான் ஆறது, எங்கயாவது பாதை தவறிப் போயிடப் போற! சித்தே இரு! நாங்களும் வந்துடறோம், விமலா கிளம்பு அம்மாவோட நாம்பளும் போகலாம்!”

“நான் என்ன சின்னக் குழந்தையா? பாதை தெரியாமக் காணாமப் போறதுக்கு? கடல்கரை ஓரமா நெடுக நடந்தா திரும்பி அதே பாதையிலேயே வந்துடறேன்! சந்தா பொந்தா பாதை தவற? அடையாளத்துக்குப் புடவை துணியெல்லாம் ஒணத்திருக்கேன்! வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் சாவகாசமாக் குளியுங்கோ” என்று பதிலுக்குக் காத்திராமல் நடையைக் கட்டினாள்.

அலைகள் காலடிவரை வருவதும், திரும்பிப் போவதும் மங்களத்திற்கு வேடிக்கையாக இருந்தது. காய்ந்த மணலில் நடந்தால் பாதம் மணலில் புதைந்து நடக்கக் கஷ்டமாக இருக்கும் என்று கடற்கரையின் ஈர மணலில் கைத்தடியை ஊன்றிக்கொண்டு நடந்தாள். ஜபம் செய்து கொண்டே கடலை ஒட்டி  நடந்தாள்.

கணேசனும், விமலாவும் ஒருவழியாகக் குளித்து முடித்துவிட்டுக் கரையேறினார்கள். கிழக்கு ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் சூரியன் உதயமாகி விடுவான். துணிகளை மாற்றிக்கொண்டு இருவரும் ஈரத் துணிகளை அம்மாவின் புடவைக்குப் பக்கத்தில் காய வைத்த போது –

“விமலா! அம்மா போயி எவ்வளவு நேரம் ஆயிடுத்து? இன்னும் காணமே, நாம குளிச்சிண்டு இருந்த ஆனந்தத்துலே நேரம் ஆனதைக் கவனிக்கவே இல்லே. எங்கு போனாளோ தெரியல்லே” என்று பதை பதைத்தான்.

“நாம்பளும் கூடவே போயிருக்கணும். தப்புப் பண்ணிட்டோம். எங்கே போயிருப்பா? நேரம் போனது தெரியாம ஜாஸ்தி தூரம் போயிருப்பாளா? துணி எல்லாம் இங்கேயே இருக்கட்டும்! துணியை எடுத்துண்டா அம்மாவுக்கு அடையாளம் தெரியாது. கிளம்புங்கோ அம்மாவைத் தேடலாம்” என்று விமலா அவசரப்படுத்தினாள்.

கணேசனுக்கு வயிற்றைச் சங்கடம் செய்தது. வெளிச்சமும் வந்துடுத்து இன்னும் அம்மாவைக் காணமே!

“கோவில் பக்கம் போயிப் பாக்கலாமா?”

“அம்மா அப்பிடியெல்லாம் நம்பளை விட்டுட்டுத் தனியாக் கோவிலுக்குப் போக மாட்டா! அதுவும் இல்லாம நாம கோவில் பக்கம் போனா அம்மா திரும்பி வந்து நம்பளைக் காணம்னு தேட மாட்டாளா?  விஷயம் இன்னும் சிக்கலாயிடும். பேசாமா கடல்கரை ஓரமாவே நடந்து பாக்கலாம்” என்று நடந்தனர்.

இப்போது நன்றாக வெளிச்சம் வந்து விட்டது. கிழக்கில் ஆரஞ்சுப் பழம்போல சூரியன் பெரிதாகத் தெரிந்தான். சிறிது தூரம் நடந்திருப்பார்கள்.

“அதோ! தூரத்துல வரது அம்மா மாதிரி இல்லே?” என்றாள் விமலா.

“ஆமாம், அம்மாவே தான்” என்று சந்தோஷத்துடன் சொன்னான் கணேசன்.

“அம்மாதான்! கையிலே என்ன மூட்டை? போறபோது வெறும் கையோடதானே போனாள்! அதுவும் புடவைத் துணி போல இருக்கு? புடவை துணியெல்லாம் அங்கே காய வெச்சுட்டுத்தானே போனா?”

கணேசனுக்கு அழுகையே வந்து விட்டது. அம்மாவை அருகில் பார்த்ததும் எங்கேயம்மா போனே? ஒன்ன எங்கேன்னு தேடறது? ஊர்விட்டு ஊர் வந்து…. இருட்டுகூடப் பிரியாத நேரத்துலே தனியாப் போக வேண்டாம்னு நான் சொல்லியும் கேக்கல்லே! கொஞ்ச நேரத்தில ஆடிப் போயிட்டோம்” என்று அம்மாவின் தோளைப் பிடித்தான்.

“ஆமா, அது என்னம்மா கையிலே துணி மூட்டை? போறபோது வெறும் கையோடதானே போனேள்” என்றாள் விமலா.

அந்த மூட்டை லேசாக அசைந்தது. ஆவல் மேலிட விமலா துணி மூட்டைக்குள் பார்த்தாள். உள்ளே –

ஒரு சின்னஞ்சிறு சிசு!! லேசாக மூச்சு விடுவது தெரிந்தது.

“என்னம்மா? இது ஏதும்மா கொழந்தை?” என்றாள் ஆவலை அடக்க முடியாமல்.

“இது என்னம்மா, காலாற நடந்து போயிட்டு ஜபம் பண்ணிட்டு வரேன்னுட்டுப் போனவா இப்போ ஒரு கொழந்தையோட வந்து நிக்கறேளே?” என்றான் கணேசன்.

மங்களத்திற்கு மூச்சு வாங்கியது. கைத்தடியையும், குழந்தையையும் விமலாவிடம் கொடுத்து விட்டு அப்படியே கடற்கரை மணலில் உட்கார்ந்து விட்டாள். கணேசனும், விமலாவும் உடன் உட்கார்ந்தனர். குளிர் காற்று வீசியது. விமலா குழந்தையை மூடிக் கொண்டாள். மங்களம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு நடந்ததைச் சொன்னாள் –

”இன்னும் கொஞ்ச தூரம் நடக்கலாமுன்னு தோணித்து! நடந்த போது ஏதோ ஒரு வித்யாசமான சத்தம் கேட்டது. குழந்தையோட அழுகைக் குரல் போலவும் இருந்தது. அப்போதான் துணி சுத்தின ஒரு மூட்டையைப் பாத்தேன். சுத்தி நாலஞ்சு நாய்கள் சண்டை போட்டுண்டு இருந்தது. துணி மூட்டையிலருந்துதான் அழுகைக் குரல் கேட்டுது. எப்பிடியோ தைரியத்தை வரவழச்சிண்டு கையிலே இருந்த குச்சியால நாய்ங்களை வெரட்டிப்புட்டுப் பாத்தா அந்தத் துணி மூட்டைக்குள்ளே இந்தக் குழந்தை!

யாராவது இருக்காளான்னு சுத்தி முத்திப் பாத்தேன். யாரையும் காணல்ல! பச்சைக் குழந்தையை இப்பிடி விட்டுட்டு அம்மா எங்கே போயிருப்பான்னு பாத்தபோதுதான், நஞ்சு, தொப்புள் கொடியோட அப்பிடியே இருந்தது. பொறந்து அரை மணி நேரம் கூட ஆயிருக்காது போல இருக்கு! கணேசா! கத்தி ஏதாவது இருந்தாக்குடேன் நஞ்சைத் தனியாக்கி தொப்புள் கொடியை வெட்டிடலாம்.”

நல்ல வேளையாக கணேசனின் கைப்பையில் புதிய பிளேடு ஒன்று இருந்தது. மங்களம் அவசரம் அவசரமாகத் தொப்புள் கொடியை வெட்டித் துணியைக் கிழித்து அதன் நுனியில் கொஞ்சம் விட்டு இறுக்கி முடிச்சுப் போட்டாள். நஞ்சை கடற்கரை மணலிலேயே புதைத்தார்கள். புடவைத் துணியாலேயே குழந்தையைச் சுத்தம் செய்தார்கள்.

”ஒடனே ரூமுக்குப் போகலாம்! அங்கே போயி மிச்சத்தைப் பேசிக்கலாம். கணேசா, நீ போயி ஒடனே பால் வாங்கிண்டு வா! நானும் விமலாவும் நேரா ரூமுக்குப் போறோம்”

விமலா குழந்தையைத் தூக்கிக் கொள்ள மங்களம் பின் தொடர்ந்தாள். குளிர் காற்று மெல்லியதாக வீசினாலும் குழந்தைக்கு ஆகாது என்று அதை நன்றாக மூடிக் கொண்டு வேகமாக நடந்தார்கள். ரூமிற்கு வந்தவுடன் உடனடியாக வென்னீர் போட்டு குழந்தையைச் சுத்தம் செய்தார்கள். அதற்குள் கணேசன் பாலுடன் வந்தான். கொஞ்சம் பாலைச் சுடு நீரில் கலந்து கைப்பையில் இருந்த பஞ்சை எடுத்துப் பாலில் தோய்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் வாயில் பிழிய அது பாதியை வழியவிட்டுப் பாதியைக் குடித்தது. பிறகு தூங்கி விட்டது.

“இது யார் பெத்த கொழந்தையோ தெரியல்லே! இது ஏதாவது மொறை தவறிப் பொறந்திருக்கணும். இல்லேன்னா யாராவது இப்பிடி அனாதையா சமுத்திரக் கரையிலே விட்டுட்டுப் போவாளா? இல்லே பொண் கொழந்தைங்கறதுக்காக விட்டுட்டுப் போயிருப்பாளா? நல்ல வேளை கொல்லாம அப்படியே விட்டுட்டுப் போனாளே மகராஜி, அது வரைக்கும் பெத்தவளுக்கு இரக்க மனசுதான் நான் மட்டும் ஒரு வினாடி தாமதமா வந்திருந்தேன்னா அந்த நாய்கள் ரத்த வாசனைக்குக் கடிச்சுக் கொதறியிருக்கும். என் கையிலே தடி இருந்தது பெரிசு இல்ல, அதை வெரட்ட எனக்கு எப்பிடித் தைரியம் வந்ததுன்னு இப்ப நெனச்சாக்கூட ஆச்சரியமா இருக்கு. ஆபத்துன்னு வந்தா தைரியம் தன்னால வரும்போல இருக்கு.”

”அது சரிம்மா, இப்போ என்ன பண்றது? இந்தக் கொழந்தையை என்ன பண்றது? போலிஸ்லே ஒப்படைச்சுடலாமா?” என்றான் கணேசன்.

”அம்மா விமலா, நானும் கணேசனும் திரும்பியும் சமுத்திரக் கரைக்குப் போய் இந்தக் கொழந்தையைப் பாத்த இடத்துல போயிப்பாக்கறோம். யாராவது கொழந்தயைக் காணம்னு தேடறாளான்னு பாக்கறோம், அதுவரை நீ குழந்தைக்கு அப்பப்ப அழறதப் பாத்து பால் குடுத்து அழாமப் பாத்துக்கோ! கணேசா, கெளம்பு போகலாம். எதுக்கும் அந்தப் புடவைத் துணியையும் எடுத்துக்கலாம். அதைப் பாத்து யாராவது அடையாளம் கண்டுண்டு வராளா பாக்கலாம்”

“இது என்னம்மா பைத்தியக் காரத்தனமா இருக்கு? இது என்ன பர்ஸா, பெட்டியா? தொலஞ்சு போயிடுத்துன்னு தேடிண்டு வர! இது உயிருள்ள குழந்தை. வேணும்னே தொலைச்சவா இதை எப்படித் தேடிண்டு வருவா? எனக்கென்னவோ நம்பிக்கை இல்லே! ஒன்னோட ஆசையையும் கெடுப்பானேன்.” என்று அம்மாவுடன் கிளம்பினான்.

பகல் பன்னிரண்டு மணி வரைக் கையில் புடவைத் துணியுடன் நின்று கொண்டிருந்ததுதான் மிச்சம். யாரையும் காணவில்லை. பித்ருக் காரியம் செய்பவர்கள், யாத்ரிகர்கள் கூட்டம், சமுத்திர ஸ்னானம் செய்பவர்கள் என்று கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போலத் தேடிவிட்டுத் திரும்பவும் லாட்ஜிற்கு வந்தார்கள்.

குழந்தை விமலா மடியில் தூங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் போனதிலிருந்து விமலா குழந்தையைக் கீழே விடவேயில்லை. கடவுளே, குழந்தையை யாரும் தேடிக் கொண்டு வரக்கூடாது என்று மானசீகமாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய புடவையை நன்றாக மடித்துக் குழந்தையை அதன்மீது வைத்துக் கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட ஒரு அழகான குழந்தையை விட்டுவிட்டுப் போக அந்தத் தாய்க்கு எப்படி மனம் வந்தது?

கணேசன் திரும்பவும் “அம்மா போலிஸ் ஸ்டேஷனில் ரிப்போர்ட் கொடுத்துக் குழந்தையை அங்கேயே விட்டு விடலாம்” என்றான்.

அதற்கு விமலா, “நான் இந்தக் குழந்தையைக் கொடுக்க மாட்டேன். குழந்தை வரம் கேட்டு ராமேஸ்வரம் வந்தோம். ராமநாதஸ்வாமியாப் பாத்து குழந்தையாகவே வரம் கொடுத்திருக்கார். யாராவது தேடிண்டு வந்தால் குடுத்திடலாம். அதற்காக நாமாப் போயி போலிஸ் ஸ்டேஷன்ல குடுத்தா மட்டும் அவாதான் என்ன செய்வா? ஏதாவது அனாதை ஆஸ்ரமத்துலே குடுத்துடுவா. தவிரவும் ஊர்விட்டு ஊர்வந்து நாம்பளும் போலிஸ் கேசுன்னு அலையணும் இதெல்லாம் தேவையா? அதைவிட இதை நாம்பளே வெச்சுக்கலாம்” என்றாள்

கணேசன் யோசித்தான். மங்களமும் விமலா சொன்னதையே ஆமோதித்தாள். நம்ப கிட்ட வந்த குழந்தையை நிராதரவா விட எனக்கு மனசில்லே! இது நம்ப கையிலே மட்டும் ஏன் கெடைக்கணும்? பகவானாப் பாத்து குழந்தை வரம்தேடி ராமேஸ்வரம் வந்த நமக்கு இந்தப் புண்ய ஷேத்திரத்திலே இந்தக் குழந்தையைக் கொடுத்துருக்கான். காசிக்குப் போறதுக்கு முன்னாலேயே கெடச்சிருக்கு. இதை நம்ப கொழந்தையாவே எடுத்துண்டு வளக்கலாம்! நாம திருடல்லே, அடுத்தவாளோட சொத்தை அபகரிக்கல்லே. யாருக்கோ இது வேண்டாம்னு எறிஞ்சுப்பிட்டா. நமக்கு இது தேவையாய் இருக்கறதாலே எடுத்துண்டு வளக்கலாம்” என்றாள் மங்களம்.

அப்போது கூட அந்தக் கொழந்தையை எடுத்துண்டு போகாம ராமேஸ்வரத்துலேயே தங்கிக் குழந்தையின் தாயைத் தேடி அலைந்தார்கள். ஒரு வேளை குழந்தையைக் கடற்கரையிலேயே போட்டு விட்டு சமுத்திரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அல்லது விட்டு விட்டுப் போயிருக்கலாம். ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திருந்தால்? ஊர் விட்டு ஊர் வந்து போலிஸ் கேஸ் என்று அலைய வேண்டியிருக்குமே என்று மேலும் தாமதம் செய்யாமல் ஊரை விட்டுக் கிளம்பினார்கள்.

அம்மா சொன்னாள் –

”அப்பா எத்தனையோ பிரேதங்களைச் சொமந்திருக்கார். சவ சம்ஸ்காரங்கள் பண்ணியிருக்கார். நாகு வாத்யார் ஒவ்வொரு தடவையும் அப்பா தெவசத்தின்போது ஒவ்வொரு சவ சம்ஸ்காரமும் ஒரு அஸ்வ மேத யாகத்துக்குச் சமானம்னு சொல்வார், உசிர் போனதுக்கப்பறம் இந்த ஒடம்புக்கு எந்த மதிப்பும் இல்லே! வெறும் கட்டைக்குச் சமானம். அதுக்குச் சம்ஸ்காரம் பண்றதே அஸ்வமேத யாகம்னா, உசிரோட இருக்கற ஆதரவு இல்லாத அனாதைக் கொழந்தையை எடுத்து வளக்கறது பத்து அஸ்வமேத யாகத்துக்குச் சமானம். ஜனக மஹாராஜா புத்ர பாக்யம் வேணும்னு தங்கக் கலப்பையினால உழுது புத்ர காமேஷ்டி யாகம் பண்ணினபோது கொழு மொனையிலே பெட்டியிலே சீதா கெடச்சா! அது மாதிரிப் பிள்ளை வரம் வேணும்னு ராமேஸ்வரத்துக்குப் போன ஒங்களுக்கு சமுத்திரக் கரையிலே அதுவும் மண்ணுலேயே தான் இவளும் கெடச்சிருக்கா! அதுனால இவளை மைதிலின்னே கூப்பிடுங்கோ!” என்று நாமகரணம் செய்து வைத்தார் அம்மா.

குழந்தை வேண்டுமென்று தவம் இருந்துக் கோவில் குளம் ஏறி எறங்கறவாளுக்குப் புதிர பாக்யம் கெடைக்கறதில்லே! வேண்டாம்னு நெனக்கறவாளுக்கு வலுவுல வந்து பொறக்கறது. இதுதான் பகவானோடா விளையாட்டு.

பெண்ணே! தேவையோ, இல்லியோ, நீ இந்த மண்ணிலே வந்து விழுந்து விட்டாய், உன்னைக் கண்ணின் மணிபோல, கண்ணின் இமைபோல வைத்துக் காப்பாற்ற ஒரு அப்பாவும், அம்மாவும் உனக்குக் கிடைத்து விட்டார்கள். ஒரு விதத்தில் நீயும் அதிருஷ்டம் செய்தவள்தான். அதனால் தான் உனக்கு இப்படி ஒரு அம்மா அப்பா கிடைத்திருக்கின்றனர். பெண்ணே! நீ, சீரும் சிறப்புடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வாய்!!

–    ஜெயா வெங்கட்ராமன்

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Ganesh Natarajan says:

    Very nice story, with an unexpected twist and a positive ending.

  2. Krishnamurthy says:

    Shri Sri Shreedhar from Chennai is doing the great assistance in cremating orphan dead bodies and happy to be part of his team. Please see his interview in the below link.

    https://www.youtube.com/watch?v=x9ssJ9lxfo8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad