\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அந்நியன்

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments

anniyan_620x441க்ளோவர் ஃபீல்ட் நிலையத்திலிருந்து பேருந்து மெதுவாகக் கிளம்பி நகர்ந்தது. இந்துவின் கண்கள் பிரேம் எங்காவது தென்படுகிறானா என்று தேடி அலைந்தது. யாரோ ஓடி வருவதைப் பின் கண்ணாடி வழியாக பார்த்து விட்டு ஓட்டுனர் வண்டியை நிறுத்தியபோது,. அவனாக இருக்குமோ என்ற ஆதங்கத்தில் அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள். வேறு யாரோ ஒரு பெண் அவசரமாக ஓடி வந்து “தேங்க்ஸ் ..ஜோ …” என்று சொல்லியவாறு ஏறிக் கொள்ள பேருந்து நகர்ந்து, பிரதான சாலையில் திரும்பி வேகமெடுத்தது.

காலை ஏழரை மணியாகியும் சூரியன் முழுதாக வெளிவரவில்லை. பேருந்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் விண்ணிலிருந்து விழுந்துக் கொண்டிருந்த பனித்துளிகள் விலகி ஓடினாலும், உருண்டு திரண்டு, தும்பைப்பூவின் தூய்மையோடு ஒரேவொரு பனித்திரள் விடாப்பிடியாக கண்ணாடி ஜன்னலில் ஒட்டிக் கொண்டு பயணித்தது. தலையை லேசாக ஜன்னலில் சாய்த்து, பிடித்த பிடியை விட மாட்டேன் என முரண்டு பண்ணிக் கொண்டிருந்த பனித்திரளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து.

பக்கத்தில் பிரேம் இல்லாதது என்னவோ போலிருந்தது. என்ன அவஸ்தை இது? மனம் அவனது அருகாமையை நாடித் தவிப்பதும் அறிவு அதை தவிர்க்கத் துடிப்பதும்? திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு இதெல்லாம் தோன்றுவது சகஜம் தான். ஆனால் திருமணமாகி, பதினோரு வயதில் பிள்ளையோடு, நாற்பதைக் கடந்து சில மாதங்களான இந்துவுக்கு?

நாலரை வருடங்களுக்கு முன்பு, இந்துவின் தோழி புஹானா தான் பிரேமை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். டவுண்டவுனில் வேலை முடித்துவிட்டு வீடு செல்லப் பேருந்துக்காகக் காத்திருந்த போது, அங்கே வந்து நின்ற அவனைப் பார்த்து நலம் விசாரித்த புஹானா இந்துவுக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். அதற்கு முன்பே ஓரிருமுறை அவனைப் பேருந்தில் பார்த்திருந்தாலும், முதல் அறிமுகத்திலேயே எதோ நெடுநாள் பழகியவன் போல் பச்சக்கென்று இந்துவின் நெஞ்சில் பதிந்து போனான் பிரேம். அன்று அதிகம் பேசவில்லையென்றாலும் – வசீகரிக்கும் அவனது கண்கள் இந்துவை என்னவோ செய்தன. அதன் பின்பு சில நாள், காலை நேரங்களில் அவன் க்ளோவர் ஃபீல்டிலிருந்து மூன்று நிறுத்தங்கள் தள்ளி, வில்லியம் சர்க்கிளில் பேருந்து ஏறி, தான் இறங்க வேண்டிய நிகோலேட் பில்டிங் நிறுத்தத்தில் இறங்குவதைக் கவனித்தாள். இந்தச் சந்திப்புகள் ஒரு சிறிய புன்முறுவலுடனோ அல்லது விரலசைப்புடனோ முடிந்து போனாலும் பின்னர் ஐந்து நிமிடங்களாவது அவளது மூளைக்குள் நுழைந்து என்னவோ செய்தது அவனது கண்கள்.

ஒரு முறை ஸ்டேட் ஃபேர் நடந்த சமயத்தில், பேருந்தில் கூட்டம் அதிகமிருந்த காரணத்தினால் வில்லியம் சர்க்கிளில் ஏறிய அவன் உட்கார இடம் தேடியபோது, தன்னையறியாமல் நகர்ந்து இடம் அளித்தாள் இந்து. பல சமயங்களில் கணவன் ராகுலோடு இன்னும் நெருக்கமாக இழைந்து உட்கார்ந்திருந்த போதிலும், சில சமயங்களில் பயணங்களின் போதோ, திரையரங்கிலோ வேறொரு ஆண் பக்கத்தில் உட்கார்ந்த போதிலும் தோன்றாத ஒரு உணர்வு பிரேம் பக்கத்தில் வந்து உட்கார்ந்த போது தோன்றியது.

பிரேம் நன்றாகத் தமிழ் பேசியது கூடுதல் நெருக்கத்தைக் கூட்டியது.

“எனக்கு இங்க வில்லியம் சர்க்கிள்ல வீடு.. சில நாள் இந்த ஸ்டிரிப் மால்ல பார்க்கிங் தேடி வண்டியைப் பார்க் பண்ணிட்டு வர்றதுக்குள்ள பஸ்ஸத் தவற விட்டுடுவேன். அதான் அன்னைக்கு புஹானா உங்கள அறிமுகப்படுதினப்ப எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தாலும், சட்டுனு ரிகலெக்ட் பண்ண முடியல”

“நீங்க இங்க பனியில நின்னு வெயிட் பண்றதுக்கு பதிலா, ஒரு மூணு மைல் தூரத்திலிருக்கிற க்ளோவர் ஃபீல்ட் ட்ரான்சிட் ஸ்டேஷனுக்கே வந்திடலாமே” என்றாள்.

“ஆமா நீங்க சொல்றது சரிதான் .. என்ன ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே கிளம்பணும் .. பட் தட்ஸ் ஓகே .. முயற்சி பண்ணிப் பாக்கிறேன்”.

அடுத்த நாள் காலை அவள் வரும் முன்பே பேருந்தில், அவள் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்திருந்த பிரேமைப் பார்த்த போது மனம் அவளையறியாமல் குதூகலித்தது.

“நீங்க வர்ற வரைக்கும் உங்க இடத்தை வார்மா வைச்சிருந்தேன்” ..என்றவன் அவளுக்காக இடத்தை விட்டு எழுந்த போது,

“இல்லை நீங்க உக்காருங்க … நான் இங்க உக்காந்துக்கிறேன் .” என்று சொல்லி அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அன்று முதல் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பயணிக்கத் துவங்கினர்.

பிரேமின் விஸ்தாரமான ஞானம் அவளை ஈர்த்தது. ஆப்பிரிக்காவின் கசப்ளாங்காவுக்கும், வாஷிங்க்டன் டி.சி.க்கும் உள்ள ஒற்றுமையைப் பேசினான். இளம்பூரணரைப் படித்திருந்தான்; அடேல் அட்கின்ஸ் பாடல்களை ரசித்திருந்தான். தனக்கு எல்லாம் தெரியுமென்பதை வலுக்கட்டாயமாகத் திணிக்காதது பிடித்தது.

“எப்படி இதெல்லாம் தெரிஞ்சுக்கறீங்க?”

“பெரிசா ஒண்ணும் படிக்கிறதில்லை. வீட்ல நானும் என் பொண்ணு சார்மியும் மட்டுந்தான். அவளுக்கு பன்னெண்டு வயசாகுது.. பெரும்பாலும் அவளோட வேலைகளை அவளே பார்த்துப்பா. அந்த நேரங்கள்ல இன்டெர்நெட் மட்டும் தான் எனக்கு துணை..”

‘உங்க மனைவி எங்கே’ என்று கேட்கத் தோன்றியதைக் கஷ்டப்பட்டுத் தவிர்த்தாள். அவனும் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. பொதுவாகப் போய்க்கொண்டிருந்த பேச்சுகள், சில வாரங்களுக்கப்புறம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எனத் தொடங்கியது. பிரேம் எதிலும் எல்லை தாண்டாமல், நிஜமான அக்கறையோடு காது கொடுத்துக் கேட்டது ராகுலிடமிருந்து அவனைச் சற்று வேறுபடுத்திக் காட்டியது.

ராகுல், இரண்டாம் தலைமுறை அமெரிக்க இந்தியன் – அமெரிக்காவில் பிறந்து, படித்து, வளர்ந்தவன். ஏதோ ஒருவகையில் தூரத்துச் சொந்தமென இந்துவுக்கு அவனை மணமுடித்து வைத்தார்கள். ராகுல் மிகவும் நல்லவன். இந்துவிடம் பாசமாக இருந்தாலும், பல நேரங்களில் எந்தவித ஒட்டுதலும் இல்லாமல் இருப்பது போலத் தோன்றும். திருமணம் முடித்து வந்த முதல் சில மாதங்கள், அவனைப் புரிந்துக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டாள் இந்து. அவனுக்கு அவ்வளவாக தமிழ் பேச வராததும் ஒரு காரணமாகிப் போனது. தனது விஷயத்தில் அதிகம் தலையிடாமல் இருப்பதும், அவசியமேற்பட்டால் மட்டுமே பேசுவதும் அவன் தனக்களிக்கும் சுதந்திரம் என்று புரிய சில மாதங்களானது இந்துவுக்கு. பின்னர் அவள் வேலைக்கு போகத் துவங்கி, இரண்டு மூன்று வருடங்களில் அஜய் பிறந்த பின்பு அது பழகிப் போனது. இயந்திரமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கையில், தென்றலாய் பிரேமின் அறிமுகம் வருடிச் சென்ற போது சற்று திக்குமுக்காடிப் போனாள்.

ஓரு முறை பிரேமை எதேச்சையாகக் கடையில் சந்தித்த போது உடனிருந்த ராகுலை அறிமுகம் செய்து வைத்தாள். ராகுலும் சம்பிரதாய பேச்சுடன் நிறுத்திக் கொண்டானே தவிர இந்துவிடம் எதுவும் பெரிதாகக் கேட்கவில்லை. ஆனாலும் இந்து அவ்வப்போது தனக்கும், பிரேமுக்கும் தினமும் பேருந்தில் நடக்கும் உரையாடலைப் பற்றி குறிப்பிட்டவள், ராகுலின் ஆர்வமின்மையால் நிறுத்தி விட்டாள்.

ஒவ்வொரு காலையிலும் பிரேமைச் சந்தித்த போது மகிழ்ச்சி கொண்டவள், மெதுவே ஒவ்வொரு காலைக்காகவும் காத்திருக்கலானாள். அவன் சிலோன் வானொலியின் ‘பொங்கும் பூம்புனல்’ பற்றியும், சரோஜ் நாராயணசாமியின் ‘ஆகாஷவானி’ செய்திகள் பற்றியும் பேசிய போது இந்துவுக்கு முப்பது வருடங்களுக்கு முன் மறைந்து போன இனிமையான பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. வாணி ஜெயராமின் ‘போலு ரே பப்பி ஹரா’ வையும், ஜென்சியின் ‘ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்’ பாடலையும், இளையராஜாவின் ‘பாடும் வானம்பாடி’ இசை நுணுக்கங்களையும் பேசியபோது பலமுறை மனதுள் அழுதிருக்கிறாள். எவ்வளவு நுட்பமான ரசிகன் இவன்?

அவனுடன் அதிக நேரம் தனிமையில் பேச வேண்டுமென்பதற்காகவே ஒரு முறை மதிய இடைவேளையின் போது ரெஸ்டாரண்டுக்குச் சென்றவள் அவனது குடும்ப வாழ்க்கையை, அவனது மனைவி தனது அம்மாவின் உடல்நிலை காரணமாக இந்தியாவில் தங்கியிருப்பதை அறிந்தாள். ஒரு ஆணாக அமெரிக்காவில் தனது பெண்ணை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை விளக்கிய போது வருந்தினாள்.

வீட்டில் எதாவது புதிய உணவு சமைத்தால் மறுநாள் அவனிடம் கொடுத்து ‘இது சார்மிக்காக நான் சமைத்தது’ எனச்  சொல்வாள். அதைப் பற்றி அணு அணுவாக பிரேம் சிலாகித்து பேசும் பொழுது காரணமில்லாமல், ராகுல் சாப்பிட்டு விட்டு ‘இட்ஸ் குட்’ என்று ஒரே வார்த்தையில் சொன்னது நினைவு தட்டும். என்றாவது அவசரத்தில் பொட்டு வைக்காமல் சென்று விட்டால் ‘இன்னைக்கு வித்தியாசமா இருக்கீங்க ..’ என்பதும், நேரமிருக்கிற நாட்களில் லிப்ஸ்டிக் போட்டுச் சென்றால் ‘ஆஃபிஸ்ல எதாவது பார்ட்டியா?’ எனக் கேட்பதும் அவளை வெட்கப்படுத்தினாலும் பிரேமின் கவனிப்புகளை ரசித்திருக்கிறாள்.

இப்படி ஏதோ ஒரு வகையில் ஒரு அன்னியோன்யம் வளரத் துவங்கி தனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக அவன் வளர்ந்து வருவதை அவளால் தடுக்க இயலவில்லை. ஒரு முறை ஏதோ காரணங்களுக்காக அவனை பேருந்தில் பார்க்க முடியாமற் போன போது இருப்புக் கொள்ளாமல் அவனுக்கு ஃபோன் செய்து விசாரிக்க, பின்னர் அதுவே, சமயம் கிடைக்கும் மாலை நேரங்களில் அவனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசும் வழக்கமாகிப் போனது.

இப்படி ஒரு எல்லையை மீறி பிரேம் மீது நாட்டமேற்படுவது அவளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆரம்ப நாட்களில் அவனுடன் பேருந்தில் சகஜமாகப் பக்கத்தில் அமர்ந்து வரும் போது ஏற்படாத உணர்வு, போகப் போக, நாம் இப்படி தினமும் இவனுடன் அமர்ந்து வருவதை யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற ஒரு குற்ற உணர்வு ஏற்படத் துவங்கியது. பல நேரங்களில் வீட்டில் ராகுலுடன் ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் கூட பிரேம் இதற்கு என்ன சொல்லியிருப்பான் என ஒப்பிடும் நிலை உருவானது. இதெல்லாம் சரியா தவறா என்ற குழப்பம் ஏற்பட்டாலும் அவனுடன் பழகுவதைத் தவிர்க்க முடியாமல் தவித்தாள்.

பிரேம் மிகவும் கண்ணியமானவன் தான். இத்தனை வருட பழக்கத்தில் ஒரே ஒரு முறை, சார்மி வயதுக்கு வந்த போது, அவளுக்கு வேண்டியவற்றை முன்னிருந்து செய்த போது இந்துவின் கையைப் பிடித்து நன்றி கூறியதைத் தவிர்த்து, ஒரு முறை கூட அவன் விரல் நுனி அவள் மீது பட்டதில்லை. ஆனாலும் அவனது ஆளுமை மனதில் பரவிக் கொண்டே வருவதையுணர்ந்து பயந்தாள்.

பலமுறை பிரேம் அவளுடைய கனவில் தோன்றியதை அவனிடம் சொன்ன போது, ‘உடனே பயந்து போய் எழுந்திருப்பீங்களே? இன்று முதல் தூங்கும் போது விபூதி வைத்துக் கொண்டு தூங்குங்கள். கெட்ட கனவுகள் வராது.’ என்று சொல்லியோ ‘கனவில் பச்சைக் கலர் சட்டை போட்டு வந்தேனா?’ என்று கேட்டோ சிரிப்பான்.

இப்படி நான்கு வருடங்களில் அவன் அவளது மனதிலும், நினைவிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததை ஒரு வித அச்சத்துடனும், ஆர்வத்துடனும் ரசித்துக் கொண்டிருந்தவள் சென்ற வார நிகழ்வுக்குப் பின் அவனது ஆக்கிரமிப்பு எல்லை மீறிப் போவதையுணர்ந்து வருந்தினாள். இத்தனைக்கும் அந்த நிகழ்வுக்கு பிரேம் எந்த விதத்திலும் காரணமில்லை என்று அவளுக்குத் தெரியும்.

சென்ற வாரத்தில் ஒரு நாளிரவு, மேலே படுத்து இயங்கி கொண்டிருந்த ராகுலின் விரல்கள் கட்டுப்பாடின்றி அவளுடலில் மேய்ந்த போது, சம்பந்தமேயில்லாமல் பிரேமின் நினைவுகள் மனதில் தோன்றி, உணர்ச்சி மிகுதியில் ‘போதும் பிரேம் ..’ என சொல்லத் தோன்றிய அந்த நொடி .. அடி வயிற்றில் கத்தியைப் பாச்சியதைப் போலுணர்ந்து எழுந்தாள். கடவுளே என்ன இது? நான் எப்படி இவ்வளவு கேவலமாகிப் போனேன்? எதற்காக நான் அவனின் அடிமையானேன். கணவனின் நெருக்கத்தில் கூட ஒரு அந்நியனின் நினைவா?

பல கோடிக் கேள்விகள் அவளைத் துளைத்தெடுக்கப் புழுவெனத் துடித்தாள். அடுத்த நாள் காலை அனலாகக் காய்ச்சலடிக்க அலுவலகம் போகவில்லை. சொல்லி வைத்தாற் போன்று மதிய உணவு இடைவேளை சமயத்தில் பிரேம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது எடுத்துப் பேச மனம் துடித்தாலும் சென்ற இரவின் தாக்கம் அவளைத் தடுத்தது. ஃபோனை எடுக்கவில்லை. மாலையிலும் அவன் தொடர்பு கொண்ட போது தவிர்த்துவிட்டாள்.

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் அலுவலகம் சென்ற போது வழக்கம் போல பிரேமைச் சந்திக்க நேர்ந்தது.

‘உடம்பு சரியில்லையா .. யூ லுக் டயர்ட்..’

‘ஆமா .. ஃப்ளு மாதிரி இருந்தது .. இன்னும் நார்மலாகல. நீங்க கூப்பிட்டிருந்தப்ப என்னால எழுந்து ஃபோனை எடுக்க முடியலை ..சாரி ..’

‘சேச்ச .. உங்களைக் காணோமேன்னு கூப்பிட்டிருந்தேன் .. மத்தபடி வேற விஷயமெதுவுமில்லை ..’

‘எந்த தொந்தரவும் இல்லாம ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு ..’ சொன்ன போது இந்துவுக்கு மனது வலித்தது.

‘கண்டிப்பா … உங்களுக்கு அது மிகவும் தேவை .. என்னோட பக்கத்திலேயிருந்து உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது .. நீங்க குணமாகி வந்தப்புறம் ஃபோன் பண்ணுங்க..’

‘உன்னுடைய இந்த குறிப்பறிதல் தான் பிரேம் என்னுடைய பிரச்சினை. வலியில்லாத ஊசியாய் இறங்கி என்னுள் உன் நினைவுகளை விதைக்கச் செய்கிறாயே, அது தான் பிரச்சினை’ எனக் கதறத் தோன்றியது.

அடுத்த சில நாட்கள் வழக்கத்தை விட சீக்கிரமாகச் கிளம்பி ஆறரை மணிப் பேருந்தில் செல்லத் துவங்கினாள். ஒவ்வொரு நாள் பயணமும் நரகமாகயிருந்தது. ஃபோன் அடிக்கும் போதெல்லாம் இது அவனாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் இருக்கக் கூடாதே என்ற கலக்கமும் மாறி மாறித் தோன்றின. ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டு அழுத்துவதை போல நெஞ்சிலொரு அழுத்தம் இருந்து கொண்டேயிருந்தது.

நேற்று இரவு, ராகுல் கட்டிலில் அமர்ந்து ‘இந்து டார்லிங் ..’ என்ற போது, ஐயோ போன முறை போல இந்த முறையும் நடந்து விடுமோ … இன்னைக்கு வேண்டாம் ராகுல் ப்ளீஸ் என மனதுள் நினைத்து ‘ம்’ என்றாள்.

‘வாட்ஸ் அப் வித் யூ? ரொம்ப கலவரமா இருக்க .. எனி ப்ராப்லெம்ஸ் வித் பிரேம்?’

சுளீரெனப்பட்டது அவளுக்கு.

‘இன்னைக்கு பிரேமை எதேச்சையா காஸ் ஸ்டேஷன்ல பாத்தேன் .. ஹி வாஸ் ஆஸ்கிங் அபௌட் யுவர் ஃபீவெர். நீ லீவ்ல இருக்கிறதா நெனச்சிட்டிருக்கார்.. ‘

கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தாளவள்.

‘ஐ நோ ஹி இஸ் க்ளோஸ் டு யு. ஏன் இப்ப திடீர்னு அவரை அவாய்ட் பண்ற?’

வெடித்தாள்.

‘ஐ ஆம் சோ சாரி ராகுல் … நான் வேணுமின்னே எதுவும் பண்ணலை .. உங்களைத் தாண்டிப் போகணும்னு நான் என்னைக்குமே நெனைக்கல .. என்னை நம்புங்க ராகுல் … எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியல ..’

‘ஹே .. ஹே.. என்ன ஆச்சு எதுக்கு இப்ப அழற .. ஈசி .. ஈசி ..’ என்று அவளது தலையைத் தோளில் சாய்த்து அழுந்தப் பிடித்துக் கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் பிரேமை புஹானா அறிமுகப்படுத்திய நாள் முதல் கடைசியாக அவனைச் சந்தித்த நாள் வரை அனைத்தையும் அழுகை, மன்னிப்புகளுக்கிடையே சொல்லி முடித்தாள் இந்து.

பெருமூச்செறிந்து பக்கத்தில் மேசை மேலிருந்த குடுவையிலிருந்து ஒரு கிளாசில் தண்ணீரை நிரப்பி அவளிடம் நீட்டினான்.

‘ஸோ .. வாட் ஆர் யு கோயிங் டு டூ நவ்?’

‘தெரியல .. எனக்கு பஸ்ல போகப் பிடிக்கல … அந்த வேலைக்குப் போகப் பிடிக்கல .. ‘

‘நீ வேலைக்கு போனா போ … இல்லைனா விடு .. ஐ டோன்ட் ரியலி கேர் .. பட் ஐ டோன்ட் திங்க் யு ஷுட் அவாய்ட் பிரேம்.’

சட்டென அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

‘யா .. இந்த உலகத்தில இது போல அனுபவம் கிடைக்காது .. இட்ஸ் ரேர்.

நெனச்சுப் பார் .. இத்தனை வருஷத்தில நீ எத்தனை பேரைப் பாத்திருப்ப? தௌசண்ட்ஸ் ஆஃப் பீப்பிள்? ஆனா எல்லாரும் இந்த மாதிரி இன்ஃபுளுயன்ஸ் பண்றதில்ல .. சில பேர் மட்டும் நம்மள அட்ராக்ட் பண்றாங்க .. அவங்க நம்ம மனசில எங்கேயோ எப்படியோ தங்கிடறாங்க.. ‘

‘…’

‘ஸீ … இந்த உலகத்தில இருக்கிற சில ரிலெஷன்ஷிப் அப்படியே இருந்தா தான் அழகு … அதை மாத்தணும், அடுத்த லெவலுக்கு போகணும்னு நெனச்சா அது ஒடஞ்சிடும் .. யுவர் ரிலெஷன்ஷிப் வித் பிரேம் இஸ் லைக் தட் .. இந்த உறவுக்கு பேர் கிடையாது .. ஃப்ரெண்ட், ப்ரதர், லவ் இப்படின்னெல்லாம் .. டோன்ட் ப்ராண்ட் இட் .. மத்தவங்களுக்காக இந்த உறவுக்கு பேரு வெச்சு அதுக்கு ரூல்ஸ் எல்லாம் போடாத ‘

‘..’

‘ரூல்ஸ் போட்டா எதிர்பார்ப்பு ஜாஸ்தியாகும் நீ நினைக்கிற மாதிரி நான் உன்னோட வேவ்லெந்த்ல இருக்கேன்னே வெச்சுக்கோ .. அஸ்யும் இட் .. மியூசிக், சாப்பாடு அப்படின்னு உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிச்சு .. எல்லாமே சிங்க்ல இருந்தாலும் மேரேஜ்ஷிப் அதை நசுக்கிடும் …டெஸ்ட்ராய் பண்ணிடும் .. ஏன் தெரியுமா? பொசசிவ்னெஸ் .. ‘

‘அதில்ல..’

‘நீ நிறைய கன்ஃப்யூஸ் ஆயிட்டு இதெல்லாத்தையும் மைண்ட்ல சப்ரஸ் பண்ணதால தான் இத்தனை பிரச்சனையும்… நீ ஆரம்பத்தில என் கிட்ட பிரேம் பத்தி சொன்னதைக் கூட நீ என்கிட்டே இதுக்கெல்லாம் பர்மிஷன் வாங்க வேண்டான்னு தான் இக்னோர் பண்ணேன்… ஸீ . இதே ஒரு பொண்ணா இருந்தா? லெட் அஸ் அஸ்யூம் தட் பெர்சன் இஸ் பிரேமா .. இதெல்லாம் உனக்கு தோணியிருக்குமா? நோ … அப்புறம் ஏன் இப்ப மட்டும்? ‘

‘..’

‘எனக்கு உன்னை தெரியும்..யூ லவ் மீ.. யூ லிவ் ஃபார் மீ .. ஃபார் அவர் ஃபேமிலி. பிரேம்னால இதில் எந்தக் குழப்பமும் வராது ’

இந்து அழுகையில் விம்மிக் கொண்டிருந்தாள்.

‘நான் சொன்னதை யோசனை பண்ணு .. யூ டோண்ட் நீட் டு அக்செப்ட் மீ .. பட் திங்க் அபௌட் இட் ..’

ராகுல் சொன்னதைப் பலமுறை யோசித்துப் பார்த்தும் இந்துவுக்குத் தெளிவு பிறக்கவில்லை. ஒரு குழப்பத்தோடு தான் இதோ, இன்று, வழக்கமான சமயத்தில் பேருந்தில் பயணிக்கிறாள்.

அவன் சொன்னது போல் பல்லாயிரம் பேரைப் பார்த்திருக்கிறாள், ஆனால் எவரிடமும் பிரேம் மீது ஏற்பட்டது போன்றதொரு பற்று ஏற்பட்டதில்லை. ஏன் என்று தெரியவில்லை. ராகுல் சொன்னது போல் இது எந்த வகையைச் சார்ந்தது எனத் தெரியவில்லை. எதிர்பார்ப்பில்லாமல் விருப்பு வெறுப்புகளை பரிமாற; நம்பிக்கையோடு குட்டிக் குட்டி ரகசியங்களைச் சொல்ல ; சின்னச் சின்ன இன்ப துன்பங்களைப் பகிர, ஒரே லயத்தில் உரையாட …ஒரு அற்புதமான, பெயரில்லாத உறவு ..

பேருந்து அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்தது … கைப்பையிலிருந்து ஃபோனை எடுத்து பிரேமின் தொலைபேசி எண்ணை அழுத்தினாள்.

ஜன்னல் கண்ணாடியில் இன்னமும் வெண்மையான அந்த ஒற்றைப் பனித்திரள் ஒட்டிக்கொண்டிருந்தது.

– மர்மயோகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad