ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-5
(பகுதி 4)
இன-நிறவெறித் தாக்கம்
தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற அனேகமான நாடுகள் வெள்ளையர்களினால் ஆளப்படுபவை. இந்நிலையில் இன-நிற அடிப்படையிலான பாகுபாடுகள், அதனால் வெளிப்படுகின்ற தாழ்வுச் சிக்கல் மற்றும் அந்நிய உணர்வு முதலானவையும் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகளில் பரவலாகப் பேசப்பட்டன.
“திரைகடல் ஓடித் தம்முயிர் பேணத்
திரிந்தவர் தமக்கோ எங்கணும் அவலம்
கரியவர் அயலர் எனவசை கேட்போர்
கவலைகள் நீயும் உணர்வையோ நாராய்”8
“கற்றுக்கொள் கறுப்பு நாயே
சாகப் பிறந்த பன்றியே
தொழுவத்தை விட்டு
ஏன் வந்தாய் வெளியே?
கறுப்பர் அழிந்தால் மட்டும்
புனிதமடையும் பூமி”9
குடிவரவு அதிகாரியின் அக்கினிப் பார்வையின் முன்னால் ‘கறுப்பன்’ என்ற அவனது அடையாளம் மட்டுமே பேசப்படுகிறது. அவனை மனிதனாக மதிக்கும் பண்பு அங்கில்லை என்பதைப் பன்றிக்கு ஒப்பிட்டமை கொண்டு அறிய முடிகின்றது. பொதுவாகக் கறுப்பர், வெள்ளையர் என்ற நிறவாதக் கெடுபிடிகள் ஒரு காலத்தில் ஆப்பிரிக்கர்களை மட்டுமே மையங்கொண்டிருந்தது. காலப்போக்கில் மேலைத்தேசத்தவர்கள் கறுப்பு நிறத்தைக் கண்டாலே ஒருவித வெறுப்புடன் நோக்கும் நிலை வந்துவிட்டதாகக் கவிதைகள் புனையப்பட்டன.
“தலித்தாய் பிறந்து
தமிழனாய் குனிந்து
கறுப்பனாய் எனை உணர்ந்தேன்.”10
“வியாகுலப் பிரசங்கம்” என்ற தலைப்பிலமைந்த செல்வம் அருளானந்தம் எழுதிய இந்தக் கவிதையில் சொந்த நாட்டில் சாதித் தளைகளால் கட்டுண்டு தங்களைத் தலித்தாக உணர்ந்த பலர், சாதிய அடுக்குநிலைகளினால் உயர்வு, தாழ்வு பாராட்டப்பட்டு அவமானப் படுத்தப்பட்ட நிலையில் பிற நாடுகளுக்குச் சென்று சாதிய முறை நீங்கி வாழலாம் என முனையும் வேளையில் தமிழனாய், கறுப்பனாய் மேலும் அவமானத்துக்குள்ளானதாகக் குறிப்பிடுகின்றார்.
“ஏன் இங்கு வந்தாய்
எட்டிநில் கறுப்பனே”11
“No Black
No Dog”12
இன-நிற வேற்றுமைகள், அவல வாழ்வு, அவமானப் படுத்தல்கள் முதலியவற்றின் இயல்பான வெளிப்பாட்டுத் தன்மைகளை இக் கவிதை வரிகளின் மூலம் உணரமுடிகின்றது. அத்துடன் தமிழர்களின் தனித்துவமான சமூக அடுக்கமைவு பற்றிய கேள்வியும் இங்கு மேலெழுகின்றது.
துஷ்யந்தன் எழுதிய “விழு”13 என்ற தலைப்பிலமைந்த கவிதை முற்றுமுழுதாக இன-நிற வாதத்தினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் குரலாக ஒலிப்பதைக் காணலாம். வெள்ளையாய் விழுகின்ற பனிகூட, இத்தகையோருக்கு வெறுப்பைத் தருவதாகக் கவிஞர் குறிப்பிடுகின்றார். இந்த நீண்ட கவிதையில் வெளிநாட்டவன், அகதி, பிச்சைக்காரன், கறுப்பன், நாடோடி எனப் பல பெயர்களினால் புலம்பெயர்ந்த தமிழர்கள் சுட்டப்படுவதனையும் அறிய முடிகின்றது. முன்னர் குறிப்பிட்டது போல இத்தகைய பாதிப்புக்கள் புலம்பெயர்ந்தவர்களை ஒருவகையான தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளி விடுகின்றமையினையும் அவதானிக்க முடிகின்றது.
அடிக் குறிப்புகள்
8. திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள , பக்.35
9. மேலது, பக்.61
10. மேலது, பக்.66
11. மேலது, பக்.72
12. மேலது, பக்.133
13. மேலது, பக்.140
-தியா-