\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஒரு சகாப்தத்தின் முடிவு (கே.எஸ்.பாலச்சந்திரன் ஒரு பார்வை)

kbalanchander_620x868ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் தேவை கருதி ஒருவன் உருவாகுகிறான். தனது உறவுகள், சூழல் என்பவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு இலட்சியத்தை நோக்கி ஒரு புதிய பாதையில் பயணிக்கின்றான்.அப்படி உருவான ஒரு அற்புதக் கலைஞன்தான் கே .எஸ் .பாலச்சந்திரன் என்ற சமூகப் போராளி .1950 க்கு பின் ஆங்கிலப் புலமை பெற்ற ஒரு தலைமுறை உரிமை வேண்டி தமிழர்களுக்கும் தமிழுக்குமாகப் போராடியது .

தங்களின் அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இன்னொரு கூட்டம் மக்களைப் படாதபாடு படுத்தியது .மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் சின்னச் சின்ன அரச உத்தியோகங்களை வைத்துக் கொண்டு மக்களை அலைக்கழித்து அவமானப்படுத்தி தங்களை உயர்ந்த அந்தஸ்துள்ள வேற்று மனிதர்களாகக் காட்டிக்கொண்டது .அப்பாவி மக்களால் அவர்களை எதிர்த்துச் செயற்பட முடியவில்லை .மீறிச் செயல் படுபவர்கள் பழி வாங்கப்பட்டார்கள் .சட்டங்களும் அரச ஊழியர்களின் கடமைக்குத் தடை ஏற்படுத்தியது என்ற கண்ணோட்டத்திலேயே எதிர்க்கும் பொது மக்களைப் பார்த்தது .

இப்படியான ஒவ்வொரு மக்கள் விரோத செயற்பாடுகளும், உரிமை மீறல்களும் இந்த அவலங்களிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற உணர்வின் வெளிப்பாடுகளும்தான் பாலச்சந்திரன் என்ற ஒரு சாதாரண இளைஞனை கலை இலக்கியப் போராளியாய் மாற்றி உலவ விட்டது.

1944 ஜூலை 10ம் நாள் யாழ் -கரவெட்டியில் பிறந்த கணபதிப் பிள்ளை. சுப்பிரமணியம் .பாலச்சந்திரன் என்ற ஒரு குழந்தையைத்தான் சமுகத்தைத் திருத்தும் கே.எஸ்.பாலச்சந்திரன் என்ற ஆயுதமாகத் தமிழர் வரலாறு தத்தெடுத்துக் கொண்டது. கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும்,யாழ் மத்தியக் கல்லூரியிலும் கல்வி கற்ற திரு.பாலச்சந்திரன் உதை பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் இலக்கு முழுவதும் கலைத் துறை சார்ந்ததாகவே இருந்தது.

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தில் பணியாற்றிக்கொண்டே தனது இலக்கை நோக்கி அவர் நகர்ந்தார். 1965ல் நெல்லை-க.பேரன் எழுதி மேடையேற்றிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் தனது கலையுலகப் போராட்டத்தை தொடங்கிய கே.எஸ்.பாலச்சந்திரன் இறுதிவரை தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார். ஈழத்தில் நன்கு அறியப்பட்ட பன்முகக் கலைஞரான இவர் தனது அனைத்துக் கலைப் படைப்புக்களிலும் நகைச்சுவையையே ஊடகமாகப் பயன்படுத்தி மகத்தான வெற்றி பெற்றார்.

அவருக்கு இருந்த இரசிகர் பலத்தைப் புரிந்து கொண்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள், மற்றும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் அவரின் ஆக்கங்களுக்கு களமமைத்து ஊக்குவித்தன. 1970களில் தலை நகர் கொழும்பில் தனது அரச பணியை ஆற்றிக் கொண்டே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை தேசிய சேவை நாடகங்களில் ஈடுபாட்டுடன் நடிக்கத் தொடங்கினார். அத்துடன் கலைக்கோலம், விவேகச் சக்கரம் போன்ற நிகழ்சிகளை தயாரித்தும் வழங்கினார். அந்நாட்களில் தொலைக் காட்சியின் அறிமுகம் இல்லாமையால் மக்களின் ஒரே பொழுதுபோக்குச் சாதனம் வானொலி யாகத்தான் இருந்தது. இலங்கை வானொலியின் சேவை தமிழ் நாட்டிலும் தெளிவாகக் கேட்கக் கூடியதாக இருந்தமையால் இலங்கை வானொலிக்கு தமிழ் நாட்டிலும் இலட்சக் கணக்கான இரசிகர்கள் இருந்தார்கள். இதனால் கே.எஸ்.பாலச்சந்திரனின் புகழ் கடல் கடந்தும் பரவியிருந்தது. .

ஏறக் குறைய இருபது ஆண்டுகள் வானொலி நாடகங்களில் நடித்ததுடன் நிகழ்சித் தயாரிப்பு, நேர்முக வர்ணனை போன்ற துறைகளிலும் முத்திரை பதித்திருந்தார். 1992ல் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலியா ,நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் கொழும்பில் விளையாடியபோது அதற்கு நேர்முக வர்ணனை வழங்கி தனது இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்திப் பலரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இலங்கை வானொலியில் “தணியாத தாகம் “ என்ற தொடர் நாடகத்தில் இவர் நடித்த சோமு கதா பாத்திரம் காலம் கடந்தும் வாழும். இவரது யாழ்ப்பாணத் தமிழால் கவரப்பட்ட நடிகர் கமலகாசன் “தெனாலி”திரைப் படத்தில் இலங்கைத் தமிழ் பேசி நடிப்பதற்காக திரு.பாலச்சந்திரனிடம் ஆலோசனையும், பயிற்சியும் பெற்றது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்.

, ஒரு நாடகத்தை எழுதி, இயக்கி. நடித்து, மேடையேற்றி மக்களின் முன் கொண்டுபோய் அங்கீகாரம் பெறுவதென்பது சாதாரணமான விடயமல்ல. எல்லாவற்றையும் சமாளித்து, சாதித்து மேடை ஏறப்போகும் நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு முக்கியமான நடிகர் வரவில்லையென்றால் எல்லாமே விபரீதமாகி விடும். இவற்றுக்கெல்லாம் தீர்வாக அவர் கையில் எடுத்த ஆயுதம்தான் தனி நபர் நடிப்பு

திரு கே.எஸ்.பாலச்சந்திரனின் முதலாவது தனிநபர் நடிப்பு நாடகம்தான் “அண்ணை ரைட் “. ஏற்கனவே இந்த நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலையகத்தில் இரசிகர்கள் முன்னிலையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டபோது அவர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருந்தது. 1974ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது இந்த நாடகத்தை மாநாட்டு அரங்கில் பல்லாயிரக் கணக்கான இரசிகர்கள், மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் மேடையேற்றினார். நாடகம் தொடங்கி முடியும்வரை முழு அரங்குமே அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த நாடகத்தில் பருத்தித் துறையிலிருந்து நெல்லியடி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பாதை இலக்கம் 750 பேருந்தில் ஒரு நடத்துனராக கே.எஸ்.பாலச்சந்திரன் வாழ்ந்திருந்தார். மக்களின் விழிப்புணர்வுக்கான, சமுக மாற்றத்திற்க்கான பல தெளிவான சிந்தனைகளை இரசிகர்கள் மனதிலே பதிய வைத்தார். நாடக முடிவில் அதைப் பார்க்கும் இரசிகர்களுக்கெல்லாம் அந்த பஸ்ஸில் அவருடன் சேர்ந்து பயணித்த அனுபவமே விஞ்சி நிற்கும் அவர் வாழும் காலத்தில் பல பட்டங்கள் ,பாராட்டுக்கள் ,பரிசில்கள் அவரை அலங்கரித்திருக்கின்றன. ஆனால் “அண்ணைரைட் “ பாலச்சந்திரன் என்றே இரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர்.

ஏராளமான நாடகங்களையும் நகைச்சுவை சார்ந்த படைப்புக்களையும் வானொலிக்காக தயாரித்து ஒலிபரப்பியுள்ளதுடன் இலங்கையிலும், பின்னர் கனடாவில் வாழ்ந்தபோதும் தொலைக் காட்சிக்காக பல நாடகங்களையும், விழிப்பூட்டும் நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி மற்றொரு தடத்திலும் கால் பதித்து வெற்றி கண்டார்.

கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கை தலையணைப் பஞ்சுகளாய்,காரோட்டம் கலகாட்டக்காரர்கள், எங்கோ தொலைவில் மடிப்பிச்சை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றி கலையுலக சாதனையாளராக உயர்ந்து நின்றார். இலங்கையில் வீரகேசரி, தினகரன், ஈழநாடு போன்ற முன்னணி பத்திரிகைகளிலும், சிரித்திரன் சஞ்சிகையிலும் இவருடைய பல படைப்புக்கள் வெளி வந்துள்ளன. கனடாவில் தாய் வீடு பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரொன்றையும், வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை என்ற ஒரு தொகுப்பையும் எழுதிவாசகர்களைக் கவர்ந்தார். அத்துடன் கரையைத் தேடும் கட்டு மரங்கள், நேற்றுப் போல இருக்கிறது என்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்

இலங்கையில் தயாரான வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷர்மிளாவின் இதய ராகம் ஆகிய திரைப் படங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். வாடைக் காற்று திரைப் படத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றார். கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து இயக்கி தன்னை ஒரு பன்முகப் பரிமாணம் கொண்ட கலைஞனாக நிலை நிறுத்தினார்.

. ஒரு கலைஞனாக தமிழுக்கும், தான் சார்ந்த சமுகத்திற்கும் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் ஆற்றிய உயரிய பங்களிப்பு என்றும் மதிக்கப்படும். தனது கலையுலகப் போராட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பத்திரிக்கை, வானொலி தொலைக்காட்சி, சினிமா என அனைத்து ஊடகங்களிலும் அவர் பயணப்பட்டார்; வெற்றி பெற்றார். இலங்கையில் பொருளாதார ரீதியாக கலைஞர்கள் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சமுக மாற்றத்திற்காக அவர் நடத்திய இந்த யாகத்தை ஈழத் தமிழினம் என்றும் நினைவு கூறும் .

அன்னாரை இழந்து துயரத்தில் இருக்கும் அவரின் மனைவி, பிள்ளைகள் ,உறவுகள், கலையுலக நண்பர்கள் ஆகியோருடனும் “,அண்ணை ரைட் “பாலச்சந்திரன் பெப்ரவரி 26, 2014ல் கனடாவில் காலமானார் என்ற செய்தியால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அவரின் இலட்சக் கணக்கான இரசிகர்களுடனும் பனிப் பூக்களும் தன்னுடைய துயரைப் பகிர்ந்து கொள்கிறது.

ஓம் சாந்தி ,சாந்தி ,சாந்தி.

​​

– முல்லை சதா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad