தொலைத்து விட்ட நாட்கள்
ஆடித்திரிந்த வண்ணத்துப் பூச்சி
அழகாய் விரித்த இறகினில்
அடையாய்ப் பொழிந்த மழையிலும்
அழியா திருந்த ஓவியத்தில்
அகலா திருந்த மனம் ….
பாடிப் பறந்த தட்டாரப்பூச்சி
பத்தடி உயரத்தில் பறக்காதிருந்து
பாசாங்கு ஒன்று புரிகையில்
பாதிப் பயணத்தில் மரித்ததென
பதைத் தழுத குணம் ….
தேடித் தொடர்ந்த திங்களது
தேய்பிறைக் கால விரதமேற்று
தேகமிளைத்து தளர்ந்த காலத்தில்
திரள்முகில் கொன்று தின்றதென
தேம்பித் துவண்ட தருணம் …
மூடிக் கிடந்த முல்லை
முகிழ்ந்து திறந்த மாலை
முகர்ந்து மகிழ்ந்த நறுமணம்
முடிந்து போமே மறுதினமென
மருகி வாடிய புலம் …
பரிவுற்று அறிவற்ற பால்யம்!
படிப்பறிவு பலதைப் பலியிட
பகுத்தறிவு சிலதைப் புதைத்திட
பட்டறிவு மெதுவே உரைத்திட
பரிதவித்துத் தேடுகிறேன் நான்..
தொலைத்து விட்ட நாட்களை !
– ரவிக்குமார்
களத்து மேட்டில்
காலை நேரம் மல்லி சென்டில்
கன்னமுச்சு ஆடிய நாட்கள்
மார்கழி மாத
மாலை நேர
பிள்ளையார் கோயில் பொங்கல்
நிறைந்த குளத்தில்
நண்பர்களுடன் குதித்த
நன் நாட்கள்
திரு கார்த்திகை அன்று
மம்மளி சுற்றிய நாட்கள்
தந்தையுடன் கலர
கதை பேசி நடந்த நாட்கள்
தொலைத்து விட்ட நாட்கள்!