\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

புகைத்தல் மது அருந்துவதையும் தூண்டுவிக்குமா?

smoking_and_drinking_620x594நிக்கொட்டீன் (Nicotine) போதைப்பொருளானது புகைத்தலின் போது உட்கொள்ளப்படும் போதைப்பொருளாகும். இது மன அழுத்தம், உளைச்சலை உண்டு பண்ணும் உடல் உட்சுரப்பிகளில் (Hormones) உடன் கலந்து மூளையின் இரசாயன அமைப்பை மாற்றி மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கிறது.

தலைப்புச் செய்தி – புகைப்பிடித்தல் மதுபானத்தையும் அருந்தத்தூண்டும் என்று உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

நவீன மயமான இருப்பத்தியோராம் நூற்றாண்டில் மனித வர்க்கம் புதுமை பலவற்றைச் சாதிப்பினும் சுகாதார ரீதியில் பார்க்கும் போது பழமையான சில கடைப்பிடிப்புக்களில் இருந்து விடுபடவும் தொடர்ந்தும் பாடுபடுகிறது எனலாம்.

புகைத்தல், மதுபான உட்கொள்ளல் பல இளைய தமிழ் ஆண்களையும் பெண்களையும் நமது புகுந்த நாடுகளை விடப் பிறந்த நாடுகளிலேயே ஆட்கொள்ளும் தருணத்தில் இவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளை விஞ்சான ரீதியில் அறிந்து கொள்வதும் பயனே.

மது அருந்துபவர்கள் உடல் பாதிப்பு மேலும் இது புகைத்தலுடனும் தொடர்புள்ளது என்பது பொதுவாக ஊகிக்கக் கூடியதாக இருப்பினும் அவற்றின் பின்னணி்க் காரணிகள் இதுவரை அறிந்து கொள்ளப்படவில்லை.

தற்பொழுது மதுவுக்கும் புகைத்தலுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆராய்ச்சி முடிவுகள் நியூரான் (Neuron) என்னும் மருத்துவச் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. இந்த ஆராய்ச்சி பிரதானமாக மூளையின் நிக்கொட்டீன் போதைப் பொருள் பாதிப்பும் அதனால் ஏற்படும் இரசாயன மாற்றங்களையும், பாரிய பிரதி விளைவுகளில் ஒன்றாக மது அருந்தலைத் தூண்டும் செய்வினைகளைப் பற்றியும் தெளிவுபடுத்துகிறது.

டோபமீன் (Dopamine) என்பது ஒருவகை நரம்புத் தகவல் செலுத்தி (Neurotransmitter). அது ஒரு நரம்புக் கலத்தில் இருந்து இன்னொரு நரம்புக் கலத்திற்கு சிறப்பு இலத்திரனியல் இரசாயனச் சுரப்பிகளினால் தகவல் பரிமாற வழிவகுக்கும். நரம்புத் தகவல் செலுத்திகளானவை முளையில் ஆரம்பித்து, உடல் முழுதும் பரவிய நரம்பு வலைப் பிரதேசங்களில் காணப்படுபவை.

நரம்புத் தகவல் செலுத்திகள் உடலெங்கும் பல்வேறு தகவல்களைப் பரிமாறுகின்றன. உதாரணமாக மெலனின் (Melanin) எனப்படும் நரம்புத் தகவல் செலுத்தி எமது உடலின் பகல், இரவு, ஓய்வு, உறக்கம், விழிப்பு, விழித்தெழுதல் போன்ற உடலின் உள்ளே இருக்கும் இயற்கைக் கடிகாரத்தைப் பராமரிக்கும் உபகரணமாகும்.

இதே போன்று டோபமீன் நரம்புத் தகவல் செலுத்தியானது பலதரப்பட்ட அத்தியாவசிய தகவல் பரிமாற்றங்கள், கட்டுப்பாடுகளையும் உண்டு பண்ணும். டோப்பமீன் ஆனது மனம் ஒருமுனைப்படுத்தல் (Concentration), மனநிலை மாற்றங்கள், சுயநிலையற்ற உடல்தசை இசைவுகள் போன்றவற்றைப் பராமரிக்கும் உபகரணமாகும். மனநிலை மாற்றங்களைப் பராமரிப்பதன் இன்னொரு பகுதி போதைப் பொருட்களுக்கு அடிமையாவதற்கும் வழிவகுத்தலாகும். இதிலும் டோபமின் காரணியாகவுள்ளது.

ஒருவர் போதையேற்றும் மருந்துக்களாகிய மதுபானம், கொக்கெயின், கஞ்சா போன்றவற்றிற்கு அடிமையாகும் பட்சத்தில் போதை மருந்துக்கள் மூளையில் டோபமீன் சுரப்புக்களை அதிகமாக்கும். ஆயினும் போதைப் பொருட்கள் படிப்படியாக உடலில் கரையும் பட்சத்தில் டோபமீன் சுரப்பியும் பழைய நிலைக்கு வந்துவிடும்.

ஆயினும் போதைப்பொருட்களைத் தொடர்ந்து உபயோகிக்கும் பட்சத்தில் மூளையானது அதிகரித்த டோப்பமீன் சுரப்புகள் புதிய சம நிலையான சூழல் என எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக மூளைக்குத் தேவையான அதிகரி்த்த டோபமீன் நிலைக்கு மீழ, அதனால் வரும் மன உந்தலைப் பெற, உடல் புதிய இராசயனப் போதைப் பொருள் விடாயை உண்டு பண்ணும்.

இது பற்றி பெயிலர் (Baylor) மருத்துவக் கல்லூரி விஞ்ஞானக் கூடம் தமது பரிசோதனைச் சாலை எலிகளைச் சோதித்து அறிந்து கொண்டனர். எலிகளிற்கு முதலில் புகைத்தலின் போது பெறப்படும் நிக்கோட்டீன் போதைப் பொருளும், மற்ற எலிகள் கூட்டத்திற்கு சேலீன் (Saline) உப்புக் கலந்த நீர் இரத்தத்தில் ஏற்றினர். மூன்று மணித்தியாலங்களின் பின்னர் இருதரப்பு எலிக் கூட்டத்திற்கும் மதுவை இரத்தத்தில் நேரடியாக, மனித மூளைக்கு எவ்வளவு உட்கொண்டால் போதை வருமோ அவ்வளவை எலியின் நிறைக்கேற்ப புள்ளி விபரவியல் சராசரிப்படி எற்றினர்.

நிக்கோட்டீன் போதைப் பொருளானது அதன் சக்தியின் அரைவாசியை உட்கொண்டோர் உடலில் 45 நிமிடங்களில் இழக்கும். ஆராய்ச்சியாளர்கள் மூன்று மணித்தியால அவகாசத்தை நிக்கொட்டீன் போதை ஏறிய எலிகளின் இரத்த ஓட்டத்தில் இருந்து அகல இடம் கொடுத்தனர்.

இதன் போது அவர்கள் அவதானி்த்தது என்னவென்றால் போதையற்ற மாற்றுப்பொருளான உப்புத் தண்ணீர் ஏற்றப் பெற்ற வரையறுக்கப்பட்ட எலிக்கூட்டம் (control group) அவற்றின் டோப்பமீன் சுரப்பு பழைய உப்பு நீர், மது ஏற்பதற்கு முன்புள்ள சாதாரண நிலையை அடைந்தது.

ஆயினும் நிக்கொட்டீன் புகைத்தல் போதைப்பொருள் ஏறிய எலிகள் தமது மூளையில் டோபமீன் சுரப்புகள் சாதாரண நிலைமையை அடையாமல் இருந்தன. இதனால் பின்னர் நிக்கொட்டீன் போதை எலிகள் மதுவை உட்கொண்டபோது சுரக்கப்பெற்ற டோபமீன் மூலமே புதிய சமநிலையை அடைந்தன. இது பலமணிநேரத்திற்கு முன்னர் இழக்கப்பட்ட நிக்கொட்டீன் போதைப் பொருளினால் ஏற்பட்ட டோப்பமீன் தட்டுப்பாட்டை, இரசாயன போதை விடாயை மீண்டும் மதுவினால் தான் மீளப் பெற்றுக் கொண்டனவாம்.

இந்த ஆராய்ச்சி அறிக்கை நீண்டாதாயினும் அதன் முடிவுகள் மிகவும் அறுதியானவை. ஆராய்ச்சியாளர்கள் இள வயதினர் புகைப்பிடித்தலைப் பொழுதுபோக்காக, பரீட்சார்த்தமாக ஆரம்பித்தாலும், மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் மூளை நிச்சயமாக இரசாயன மாற்றத்திற்கு உட்படும். இதனால் மதுபானம் உட்கொள்ளுதலும் அதன் போதை அவர்களை ஆக்கிரமிக்கலாம் என்றும் தெளிவாக் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முக்கியமாக போதை மாற்று சிகிச்சைகளுக்கும் உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குடி குடியைக் கெடுக்கும் என்ற தமிழ்ப் பழமொழி புதியதொரு பாணியில் நாம் புகைத்தல் குடித்தலைத் தரும், குடி குடியைக்கெடுக்கும் ஆதலால் புகைத்தல் குடியையும் கெடுக்கும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

– யோகி

உட்சந்துணை – Neuron, Volume 79, Issue 3, 406-407, 7 August 2013

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad