\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வயற்காற்று (பாகம் – 01)

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments

vayatkaarru_520x728“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “

“முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை”

செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள்.

தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் கேட்பார்கள்.

இடையிடையே மணியம் விதானையார் மைக்கைப் பிடித்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

பூசாரி ஆறுமுகம் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். மஞ்சள் சால்வை கட்டிய சில தொண்டர்கள் அங்குமிங்கும் அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.

செண்பகமோ எப்ப திரை விலகும் எப்ப முருகனருள் கிடைக்கும் என விழிகள் அகலத் திறந்து முருகன் சந்நிதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஊரின் ஒரேயொரு சைவக் கோயில் அந்தச் சிறிய முருகன் கோயில்தான்.

குளக்கட்டுப் பிள்ளையாரும் முருகனும் தான் அவளுடைய நீதிமன்றங்கள்.

இருபது வருஷத்துக்கு முதல் யாழ்ப்பாணத்திலை இருந்து முருகன் வேல் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்த போது முன்னின்று உழைத்தவர்களில் இவளுடைய கணவன் அம்பிகைபாலனுக்கும் பெரும் பங்குண்டு.

முருகன் கோயில் அமைந்துள்ள இரண்டேக்கர் காணியில் அரை ஏக்கருக்கு சொந்தக்காரனும் இவன்தான். தன்னுடைய விடா முயற்சியாலும் உடல் வலிமையாலும் நிலத்தைப் புரட்டி எடுத்துத் தொழில் செய்யும் விவசாயிகளில் அம்பிகைபாகனும் ஒருவன். முறுக்கேறிய உடல் திரண்டு பருத்த கைகள் மண்ணிறத்திலான கேசம் என ஐம்பது வயதாகி விட்டது என்ற அடையாளமே இன்றி அவனது தோற்றம் அமைந்திருந்தது.

வேலியோரம் இருந்த புல் பூண்டுகளை செதுக்கி கோயில் சூழலை துப்புரவாக வைத்திருப்பதில் கண்ணுங் கருத்துமாய் இருந்த அவனுடன் சில இளவட்டங்களும் கூடித் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இடையிடையே தன் கணவனின் பார்வைப் பரிமாற்றத்தை ருசித்த வண்ணம் கந்தன் அருளுக்காக ஏங்கிக் கிடந்தாள் செண்பகம். ஆனால் சில நிமிஷங்களில்…

“அக்காள் உன்னைக் கண்டு பிடிக்கவே முடியல்லை… அந்தப் பக்கம் சமையல் வேலை நடக்குது மரக்கறி வெட்ட ஆளில்லையக்கா வாறியே…”

அவளுக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. இருந்தாலும்

“முருகன் சன்னிதி தானே… நாங்கள் என்ன உவையளுக்கே பணிவிடை செய்யிறம் முருகனுக்குதானே”

என்ற முடிவுடன் எதுவும் பேசாமல்

“உம்”

என்றபடி எழுந்து நடக்கத் தொடங்கினாள். அப்போது வேலியோரம் அம்பிகைபாலன் யாரோ கொடுத்த தண்ணீரை ஒரு மூச்சு பிடித்துக்கொண்டிருந்தான்.

சமையல் வேலையில் எல்லோரும் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர். செண்பகம் தன்பாட்டில் மரக்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தவளருகில் வந்து அமர்ந்தாள் செல்லம்மா கிழவி.

வரிஷத்திலை ஒருமுறை வாற பெரிய விழாக்களில் இதுவும் ஒன்று என்பதனால் ஊரிலுள்ள எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவதுதான் வழமை.

“என்ன பெத்தா எப்பிடியணை இருக்கிறியள்”

செண்பகம்தான் முதலில் பேச்சு கொடுத்தாள்.

“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில இருக்கிறம் மோனே”

என்றவாறு இன்னும் அருகில் வந்தாள் கிழவி. ஊரிலை உள்ள பழைய கால மனிசர்களில் கிழவியும் ஒருத்தி. ‘பெத்தா’ என்றால் தான் ஊரிலை எல்லாருக்கும் தெரியும். மனிசி பதினொன்று பெத்ததாலயோ என்னவோ பெத்தா என்ற பெயர் நிலைச்சு விட்டது. காசி பெரிய வேட்டைக்காரன்

“காசிக்குஞ்சியின் மனிசி” என்றால் ஊரிலை ஒரு தனி மரியாதை.

“என்ன மோனே உன்ரை பொட்டை எப்பிடி இருக்கிறாள் மோனே… வெளியிலை வாறதையே காணல்ல”

என்றாள் கிழவி.

“அவள் பெத்தா தானுண்டு தன்ரை வேலையுண்டு என்று வீட்டுக்கையும் தோட்டத்துக்கையுமாய் அடங்கிக் கிடக்கிறாள்… இப்பதானேணை கம்பஸ் முடிச்சு வந்தவள் வேலையும் கிடைக்கலை அதுதான்…”

“அது சரி மோனே உதுகள் உங்கடை இனசனம் இருக்க… பெட்டைக்கு மாப்பிளை எடுக்கேலாமல் போட்டுதே உங்களாலை…அதுவும் மூத்தவள் இருக்க இளையவளுக்கு அதுக்குள்ளை என்னமோனே அவசரம் வந்து வெளியிலை பிடிச்சு அனுப்பினிங்கள்… ஏதோ நடக்கட்டும்… நெருப்பில்லாமல் புகையுமே…”

என்றாள் மிகவும் தாழ்ந்த குரலில்.

“உதெல்லாம் ஆரணை உனக்குச் சொன்னது?”

என்றாள் சற்று இறுகிய குரலில்.

“உதுக்கே மோனே ஊரிலை ஆக்களில்லை… உன்ரை கொண்ணன் பொஞ்சாதிதான் சொன்னவள்…”

பெரிய சக்கரைப் பூசணிக்காயை உருட்டிச் சீவியபடி கிழவி சொல்லிக்கொண்டிருந்தாள். செண்பகம் குரலில் ஒரு நிராசையுடன்

“வேற ஒண்டும் சொல்லலையோ?”

என்றாள்.

“இல்ல மோனே ஏன்?”

ஓன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு

“நான்…நான்…போக வேணுமணை பூசை தொடங்கப் போகுது போல கிடக்கு…”

என்றபடி மெதுவாக எழுந்தாள். அவளுக்குள் பெரும் மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் அதனை மறக்க அவள் மனம் ஒப்பவில்லை. நடந்த அந்த சம்பவம் தானே இத்தனைக்கும் காரணம். அது நடந்திராவிட்டால் இண்டைக்கு…

காற்று வீசும்…

– வேட்டையன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad