விதி
விவரம்பல அறிந்தவரும் விழுந்திடும் காரணம்
விதியென்ற ஒன்றின் விந்தையான செயலாம்
விபரீதம் பலபுரியும் விதியதன் செய்கை
விளங்கியது இல்லையென விரக்தியில் சொல்வர்
விலகித் தெளிந்து விளக்கம் உணர்ந்த
விடிவெள்ளி தர்மனும் விரும்பிச் சூதாடினனாம்!
விரிந்த சபைநடுவே விவாகத்தில் இணைந்தவளை
விகாரமாய்த் துயிலுறிய விதியிதென்று நின்றனனாம்!!
விரும்பி எவரும் விழைந்து கேட்டிடில்
விளைநிலம் அனைத்தும் விருப்பமாய் வழங்கும்
வினையமிலாக் கர்ணனுக்கும் விதியதன் வலியால்
வியத்தகு அஸ்திரமும் விளங்கிடாது போனதாம்!!
விளக்கம் வேண்டுமென்று விதவிதமாய்த் தேடிட
விவரமறிந்த பலரையும் விடைக்காக நாடிட
விவரித்துக் கூறாமல் விளக்கமது இல்லாமல்
விடலைகள் பலரிடமும் விதைத்தனர் விதிநச்சை
விவரமில்லா வீணர்களின் விவேகமில்லா வார்த்தைகள்
விளையாட்டுப் பிள்ளைகளின் விடியல் தகர்த்திடுமென்ற
விசனம் மிகுதியால் விளக்கம்பெற எண்ணியே
விரைந்து பலநூல்கள் விரிவாகப் படிக்கலானோம்
விருட்சமென வளர்ந்து வியாபித்து நின்றிட்ட
வியத்தகு வசிட்டனின் விருந்தான யோகவாசிஷ்டம்
விழைந்து படித்ததனால் விடைபல அறியலானோம்
விசாலக் கவியதை விஞ்சிடும் வேறொரு
விருத்தப்பா இல்லையென விருதொன்று அளித்து
வியந்து நாம்போற்றி விளக்கமாய் உரைக்கவெண்ணி
விஞ்ஞானம் மிகுந்திட்ட விந்தைமிகு இந்நாளில்
விதையிடும் முயற்சியிலே விடாது தொடர்ந்திட்டோம்!!
விசும்பு பொழிந்ததால் விளைந்த நெல்மணியை
விருந்தாய்ப் படைத்திட விரும்பிய சனகனவையில்
விதியுண்டு என்பவர் விரல்நுனியும் அசைத்திடேல்
விதியிருந்தால் சுவையான விருந்தது வாய்புகும்
வினையமாய் அறிவித்தான் விசைமிகு வசிட்டனும்
விஸ்வத்தின் நண்பனாம் விஸ்வாமித்ரன் முன்னிலையில்
விதியென்று சொன்னவர்கள் விலாசம் இழந்து
விம்மலுடன் தோல்வியேற்ற விசித்திரம் நடந்தேறியது!!
விதியென்ற சொல்லதை விகுதியாகத் தலையுடன்
விந்தையாய் இணைத்தே விளித்தனர் தலைவிதியென்று!
விளங்கிடும் கூர்நோக்கால் விதியென்ற சொல்லது
விளக்குவது சட்டதிட்டமெனும் விரிவான பொருளையென்று!!
விசும்பது இயற்கையின் விதியால் பொழிவதாய்
விளக்கிக் கொண்டால் வினையமாய்க் குடைகொணர்தல்
விதியை வெல்லும் வியத்தகு மதியாம்
விளங்கியதா இப்போது விதியைமதியால் வெல்லுதல்?
விலகா இயற்கையின் விந்தையை உணர்ந்த
விருப்பு வெறுப்பற்ற விளக்கம் பெற்றவர்
விரிவாய்க் கூறுவது விதியென்று ஒன்றிலை
விரைந்து முனைந்தால் விளையும் வெற்றியேயென்பதேயாம்!!
– வெ. மதுசூதனன்.