காத்திருப்பேன் நண்பரே!
காத்திருக்கிறேன் நண்பரே! மணி ஆறரை ஆகி விட்டது. என்றுமே தவறாமல் ஆறு மணிக்கெல்லாம் என்னுடன் பேச வரும் என்னுடைய ஆத்ம நண்பர் இன்று இன்னமும் வரவில்லை. முப்பது வருட நட்பு. தினமும் ஆறு முதல் எட்டு வரை என்னிடம் பேசுவார். அவர் தான் பேசுவார். நான் பொறுமையாகக் கேட்பேன். அவர் வீட்டைத் தாண்டி எவர் சென்றாலும் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களுடன் பேசுவார். எல்லா விஷயங்களும் அவருடையப் பேச்சில் இருக்கும். அதனால் அவரின் நண்பர்கள் சரித்திரமும் எனக்குப் பரிச்சயம். அவரைப் பற்றி அவரின் குடும்பத்தை விட எனக்குத் தெரியும் என்றால் அது மிகையில்லை. நேற்றும் இயல்பாகத் தான் இருந்தார். ஆனால் அவரது குரலில் என்றுமே இல்லாத அளவு ஒரு சோர்வு தெரிந்தது. மணி ஒன்பதைத் தாண்டியும் என்னுடனே இருந்தார். பேசக் கூட இல்லை. தூக்கம் வரவே தான் எழுந்துச் சென்றார். அப்படிப்பட்ட மனிதர் இன்று இன்னமும் வரவில்லை என்றால் பதட்டமாகத்தானே இருக்கும். காத்துக் கொண்டே இருக்கிறேன் நண்பரே!
உடல் நிலை சரியில்லையோ என்று யோசிக்கும் பொழுது எனது நண்பரின் சகோதரர்கள் என்னை நோக்கி வந்தனர். என்னைப் பார்த்து சில நிமிடங்கள் கண் கலங்கித் தயங்கி நின்று விட்டு, என்னைத் தாண்டிச் சென்றார்கள். “இவர்கள் எதற்கு வருகிறார்கள்? இவர்களுடன் சண்டை ஆயிற்றே?” அதற்கு விடை தெரியும் முன், நண்பரின் மகன்கள் எனக்கு அருகில் நாற்காலிகளை வரிசையாக அழுதுக் கொண்டே அடுக்கினார்கள். அடுத்த சில மணி நேரங்களில் பலர் வந்துக் கொண்டே இருந்தனர். ஆனால் எனது நண்பரைத் தான் காணவே இல்லை. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இரவு முழுதும் யாரும் தூங்கிய மாதிரித் தெரியவில்லை. விடிந்தப் பிறகுத் தான் எனது நண்பரின் முகத்தைக் காண முடிந்தது. ஆனால் என்ன இது? அவரை ஒரு ஓலைப் பாயில் படுக்க வைத்து இருக்கிறார்கள்! எனது நண்பரின் முகத்தில் சலனமும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் நாலு பேர் அவரைத் தூக்கிச் சென்றனர். காத்திருக்கிறேன் நண்பரே!
மாலை ஆறு மணி ஆகப்போகிறது. வெளியேச் சென்ற அனைவரும் வந்தனர். எனது நண்பரைத் தவிர. மற்றவர்கள் காலைச் சுத்தம் செய்துக் கொண்டு உள்ளேச் செல்ல அவரது மகன் மட்டும் என்னருகில் வந்தான். அழுதுக் கொண்டே பேசினான் “அப்பாவிற்கு சாயந்தரம் பொழுது போக்கே இந்த காம்பவுண்ட் சுவர் தான். ரோடில் போவோர் அனைவருடனும் பேசுவார். ஒருவரும் இல்லாவிட்டால் மெல்லிய குரலில் இந்த காம்பவுண்ட் சுவரிடம் பேசுவது போலத் தனக்குத் தானே ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார். அப்பாவின் ஆத்ம நண்பர் இந்த காம்பவுண்ட் சுவர் தான். இதைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனி அப்பாவின் ஞாபகம் தான் வரும்”. அவன் எதற்கு அழுகிறான் என்றே புரியவில்லையே?”
மணியும் ஆறு ஆகிவிட்டது. நண்பரையும் காணவில்லை. இன்றாவது வருவாரா? காத்திருப்பேன் நண்பரே!
– ரத்ன சுப்பிரமணியன்.