\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாவில்  ஆன்மீகம்  

Minnesota_Aanmeekkam_1_520x520வரலாறு தெரிந்தவரை  மனிதன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவனாகவே இருந்திருக்கிறான்.  உலக நாடுகளில் மக்கள் பல்வேறு கடவுளரை வழிப்பட்டுத் தங்களது ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். அடிப்படையாக நமக்கு மேலே ஒருவன் நம்மைக் காப்பாற்றுகிறான் எனும் நம்பிக்கை பெரும்பாலான மக்களிடையே உண்டு. வானத்தில் பறந்து வாடிகன் (Vatican) போனாலும் , கால் வலிக்க நடந்து கைலாயம் சென்றாலும் இறைவனை வணங்கும்பொழுது இருகண்கள் மூடி பார்வை உள்நோக்கி இருகரம் கூப்பி வழிபடுவதில் உள்ள ஒற்றுமை  விந்தை தான்.

மனிதனுக்கு வலி பிறக்கையில் இங்கிலாந்து முதல் இந்தியா வரை, அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை கூப்பிடுவது இறைவனைத்தான்.

இதில் இந்து மதத்தை எடுத்துக் கொண்டால், ஒன்றோடு நில்லாமல், பலமுகம் கொண்ட பல கடவுள்களைக்   கொண்டாடும் மதமாக உள்ளது. ஹிரண்யகசிபுவைப்  போன்று “கடவுள் எங்கே இருக்கிறான்?” எனக் கேட்டவர்க்கு பிரகலாதரை வழங்கி,  கடவுள் எங்கும் இருக்கிறார் எனப் பதில் அளித்தவண்ணம் உள்ளது இந்து மதம்.  இந்தியாவில் தோன்றிய மதம் ஆனாலும்,  அதை புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் வெளிநாடுகளிலும்  காணப்படுகிறது. இந்து  மக்கள் வெவ்வேறு காரணங்களால் பலநாட்டிற்குச் சென்றாலும், அங்கும் மத ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

Minnesota_Aanmeekkam_2_620x349இந்தக் கட்டுரையில், பனிப்பூக்கள் இதழ் வெளியாகும் மினசோட்டா மாகாணத்தில், இந்து மதத்தின் ஆன்மீகத்தை எப்படி வளர்க்கிறார்கள் என்பதைப் பற்றிய சில குறிப்புகளைக் காணலாம்.

திரைகடல் ஓடி திரவியம் தேட மினசோட்டாவுக்கு வந்தேன். திரும்பிய பக்கம் எல்லாம் கோவில், மாதத்திற்குக் குறைந்தது இரண்டு பண்டிகைகள், கணக்கிலடங்கா உறவினர்கள் என வாழ்ந்தவனுக்கு   இந்த ஊர் வாழ்க்கை, உடனே ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றம். மனித இயந்திரமாக மாறாமல் மறுபிறவி தவிர்த்து முக்தி அடைய மினசோட்டாவில் வழி உண்டோ?  இந்த கேள்விக்குப் பதில், நிச்சயம் உண்டு. ஒரு வழி அல்ல, பல வழிகள் உண்டு என்பதே.

அதில் ஒரு வழிதான் சின்மயா மிஷன் (Chinmaya  Mission) எனும்அமைப்பு. நான் கடந்த இரண்டு வருடங்களாக சின்மயா மிஷன் சென்று வருகிறேன். இங்கு காக்கும் கடவுளான கணபதி மூலக்கடவுளாக இருக்கிறார். இயற்கையான சூழலில், வயல்வெளிகளுக்கு நடுவில் சாஸ்க்கா (chaska)  நகரில் இந்த அமைப்பு  உள்ளது. ஸ்வாமி சின்மயானந்தாவைக் குருவாக ஏற்று இதை நடத்தி வருகிறார்கள். மழலை பேசும் பிள்ளைகள் முதல் நரை கண்ட முதியவர் வரை அனைத்து வயதினரும்  இங்கு கூடுகிறார்கள். மொழி, சாதி, பொருளாதார வேறுபாடுகள் இங்கு இல்லை. “இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்” இங்கு ஏராளம்.சுவாமி சின்மயானந்தா ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். வேதங்களின் சாராம்சத்தை சாதாரண மனிதர்களுக்கு எளிய முறையில் விளக்கியவர். அவர் பல உபநிஷதங்களுக்கும் மற்றும் கீதைக்கும்  விளக்கவுரை எழுதியிருக்கிறார்.

Minnesota_Aanmeekkam_3_920x240
ஆன்மீகத்தில் இருக்கும் பலவழிகளில் அத்வைதத்தை இங்கு போதிக்கிறார்கள். பகவத்கீதை முதல் பஜகோவிந்தம் வரை விளக்கத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தி மக்களைச் சிந்திக்க வைக்கின்றனர். கடவுளை வேண்டும் பொழுது கண்களை மூடுவது, கடவுள்  நம்முள் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது எனும் தெளிவைக் கற்றுத்தருகிறார்கள். தாய்நாட்டை விட்டு வந்தவர்களுக்கு ஆன்மீக ஆர்வப்பசியைப் போக்கும் ஒரு நல்ல இருப்பிடமாக இந்த அமைப்பு திகழ்கிறது.  சுமார் 160 குடும்பங்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள். மிஷனின் மற்ற கிளைகளில் இருந்து ஆச்சார்ய ஸ்வாமிகள் பலர் இங்கு வந்து வேதங்களின் உள்ளர்த்தத்தை விளக்குகின்றனர். அவர்களுடைய தெளிவு காந்தம் போல் நம்மை ஈர்க்கிறது.

மிஷனின் சிறப்புகளில் மற்றுமொன்று கல்வி. குழந்தைகள் “பாலவிஹார்” எனும் கல்வி அமைப்பில் ராமாயணம், மகாபாரதம், வேதம், பக்தி பாடல்கள் எனப் பலவற்றை கற்கிறார்கள். நமது கலாச்சாரத்தைச் சரியாக அறியாமல்  இங்கு வளரும் குழந்தைகளுக்கு எதற்கு இறைவனை வணங்குகிறோம் என தெளிவற்ற நிலை உருவாகிறது.

அவர்களுக்கு  அதை உரிய முறையில் கதைகள் மூலமும் கருத்துப் பரிமாற்றம் மூலமும் கற்றுத்தருகிறார்கள். இங்கு தேர்வுகள்  கிடையாது, முதல், கடைசி இடங்கள் கிடையாது, ஆர்வம் மட்டுமே உள்ளது. எனது மகளும், மகனும் மிஷனுக்குச்  செல்ல மிகுந்த ஆர்வம் காட்டுகையில், நாம் சிறுவர்களாக இருக்கையில் பள்ளிக்குச் செல்ல எவ்வளவு அடம் பிடித்தோம் என்பது  நினைவுக்கு வரும். “ஊக்கமது கைவிடேல்” என்று சொன்ன ஔவை மூதாட்டி இந்த குழந்தைகளைப்  பார்த்தால் உற்சாகம் அடைந்திருப்பார். இங்கு இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள்.

இதன் தலைமை ஆசிரியரான அனந்த் அவர்கள் சொன்னது :

‘ “குழந்தைகள், நிரப்ப வேண்டிய   குடம் அல்ல; ஏற்றி வைக்க வேண்டிய விளக்கு” என்ற சுவாமி சின்மயானந்தா அவர்களின் அறிவுரைப்படி இந்த பள்ளி நடக்கிறது. குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கின்ற ஆர்வத்தைத் தூண்டி, கதைகள் மூலம் தருகின்றோம். இங்கு படிக்கும் பிள்ளைகள், படிப்பு முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் ஆன்மீகப் பணியைத் தொடர்கின்றனர். இங்கு இறைவனை வேண்டும்பொழுது எல்லோரும் ஒரே சமயத்தில் ஓம் எனும் மூலாதார மந்திரத்தை ஒரே ஸ்ருதியில் மென்மையாகப் பாடும்பொழுது ஆன்மாவே சிலிர்க்கும். அந்த அனுபவத்தை  விவரிக்க வார்த்தைகள் இல்லை.’

இதுமட்டும் அன்றி தமிழ் உட்பட ஐந்து இந்திய மொழிகளைக் கற்றுத் தருகின்றனர். இந்த ஊரில் பிள்ளைகள் அங்கிலம் பேசுவது அதிசயம்  இல்லை. ஆனால், அவர்கள் தமிழ் பேசினால் அது தரும் இன்பமே தனி. என் பிள்ளைகள் வீட்டில் தமிழில் எண்ணும் எழுத்தும் படிக்கும்பொழுது முற்பிறவியில் எதோ ஒன்றைச்  சரியாக செய்ததின் பலன் என எண்ணத் தோன்றுகிறது. “கலிஃபோர்னியா தமிழ் அகாடமி” புத்தகங்களைப்  பின்பற்றி ஆசிரியர்கள் ஆர்வத்துடன்  கற்றுக்கொடுக்கின்றனர். பக்தி வழிகாட்டல், ஆன்மீக இலக்கியம், தமிழ்க் கல்வி ஆகியவை தவிர இவர்கள் செய்து வரும் இதரப் பணிகளும்  நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்தியாவில் உள்ள CORD எனும் அமைப்பின் மூலம், கிராம வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு எனப் பல உதவிகள் செய்கின்றனர். அன்போடு இயைந்த வாழ்க்கைக்கு உவமை இந்த இயக்கம். மினசோட்டா மாகாணத்தில், வீடு/மனை இல்லாதவர்க்கு அடைக்கலம் கொடுக்கும்தொண்டு நிறுவனங்களுக்குச்  சென்று உதவிகள் செய்கிறார்கள். அது தவிர, பணம் மற்றும் பொருட்கள் அளித்தும் உதவி செய்கிறார்கள்.

ஹரியின் நாமத்தையும் ஓம் எனும் மந்திரத்தையும் இணைத்து ஹரி ஓம் என ஒருவரை ஒருவர் வரவேற்கின்றனர். இவர்களின் முயற்சியால் இப்பிறப்பிலேயே நாம் கம்பன் கண்ட உலகைக் காணுவோம்:

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை பொய் உரை இலாமையால்

வெண்மை இல்லை பல கேள்வி மேவலால்.(நகரப்படலம் 53)

இவ்வளவு நல்ல பண்பாடுகள் புகட்டப்பட்டு வளரும் குழந்தைகள், வாழ்க்கையில் நன்னெறி தவறாமல் வாழ்வது இயற்கை தானே?

இந்த அமைப்பின் சேவையைப் பாராட்டும் வகையில், ஒருசிறிய   அன்பளிப்பாக அவர்களின் பள்ளிக்கு,   தமிழ்ப் புத்தகங்களை வழங்குவதில் பனிப்பூக்கள்  பெருமை கொள்கிறது.

ஹரி ஓம்,
பிரபு

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. krishnamurthy says:

    Very sensible ideas and I welcome it. I remember a story after reading about Swami Chinmayanandha about kids knowledge to lit and not fill it. A student was sent to learn from 2nd guru by his father and his 1st guru got upset on this and to show his anger he sent a water filled pot through that disciple to the 2nd guru. Intention is 1st guru tries to indicate that he has taught this disciple everything and nothing to learn new from the 2nd guru. 2nd guru understood the 1st guru’s intention and put some sugar into the pot and mixed well and asked this disciple to give it to his 1st guru and taste it. 1st guru realised that there is no end to learning and each one can add a flavour to the existing knowledge. Hence the moral….nice article Prabu…keep going…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad