\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அம்பேத்கர்

Ambedkar_520x575வரலாற்றை உற்று நோக்கினால், நாட்டுக்காகத் தன்னலமற்று பணியாற்றிய எத்தனையோ தலைவர்கள், வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் வெளிச்சத்துக்கு வராமல் போய்விட்டனர். பரந்த சமுதாயப் பார்வையும், மனிதநேயமும், ஆழமான அறிவாற்றலும் கொண்டிருந்த அம்பேத்கரின் நிலையும் அதுதான். இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர் என்ற அளவில் மட்டுமே அறியப்படும் அம்பேத்கரின் பன்முகத் திறன் வியக்கத்தக்கது.

மத்தியப்பிரதேச மாநிலம் அம்பாவாதே எனும் ஊரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ராம்ஜி சக்பால்-பீமாபாய் ஆகியோருக்கு பதினாலாவது பிள்ளையாகப் பிறந்தவர் பீமாராவ் சக்பால் அம்பாவாதேகர்.

பள்ளியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்த பீமாராவின் மேல் பாசம் கொண்ட ஒரு ஆசிரியர் அம்பேத்கர் எனும் தன் குடும்பப் பெயரை பீமாராவுக்கு சூட்டினார். பள்ளியில் நல்ல மாணவன் எனப் பெயரெடுத்தாலும் தானும் தன் குடும்பத்தினரும் சமூகத்தால் வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்தார் அம்பேத்கர். பள்ளியில் தனியே அமர்த்தப்படுவது, மற்றவரின் புத்தகத்தையோ, பையையோ தொடவோ , சக மாணவருடன் பேசவோ அனுமதிக்கப்படாதது என அனைத்து விஷயங்களிலும் தான் ஒதுக்கப்படுவதை உணர்ந்தார். தண்ணீர் குடிக்க வேண்டுமென்றாலும் அதற்காக நியமிக்கப்பட்ட ஒருவர் குவளையில் தண்ணீர் எடுத்துக் கையில் ஊற்ற குடிக்க வேண்டியிருந்தது. அந்த நபர் வேறு வேலையாக இருந்தாலோ பள்ளிக்கு வரவில்லையென்றாலோ தண்ணீர் அருந்த முடியாது. இதெல்லாம் இளம் வயதில் அவர் மனதில் பதிந்ததே அவர் பிற்காலத்தில் தலித் இனத்தினருக்காகப் போராடத் தூண்டியது.

வறுமை வாட்டிய பொழுதும், குடும்பத்தினர் அனைவரின் ஆதரவால், அம்பேத்கர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். இவரின் திறமையையும் ஏழ்மை நிலையையும் அறிந்த பரோடா மன்னர் இவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவினார். பி.ஏ. பட்டப்படிப்பு முடிந்ததும், நன்றிக் கடனாக மன்னரின் அரண்மனையில் பணி புரிந்தார். ஆனால் அங்கு நிலவிய சாதிப் பிரிவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் பிடிக்காமல் விலக முடிவெடுத்து மன்னரிடம் தெரிவிக்க, அம்பேத்கரின் நிலைக்காக வருந்திய மன்னர் அவரை மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்தார்.

1913 ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்த அம்பேத்கர் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த முதல் முதுகலைப் பட்டதாரி என்ற பெருமையும் , படிப்பிற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். .அரசியலைமைப்பு, பொருளாதாரம் எனப் பலத் துறைகளில் ஆய்வுகள் செய்து ஆழ்ந்த அறிவைப் பெற்று முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் இந்தியா திரும்பிய அம்பேத்கர், பல கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களும் அரசியல் பற்றி படித்திட அரசியல் துறை சார்ந்த பாடங்களை கல்லூரிகளில் அறிமுகப்படுத்தினார்.

1920ல் அரசியலில் நுழைந்த அம்பேத்கர் கூட்டங்கள், மாநாடு போன்ற வகைகளில் மக்களை நேரடியாகச் சந்தித்தும், பத்திரிகை, புத்தகங்கள் வாயிலாகவும் சாதி, மதங்கள் என்ற பெயரால் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவது ஏற்புடையது அல்ல என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். பொதுக் கிணறுகள், குளங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் நீர் எடுக்கும் வகையிலும், கோயிலுக்குள் செல்ல அனுமதி வேண்டியும் போராட்டங்கள் நடத்தி வென்றார். பொருளாதாரத்தில் சிறந்த அறிவாற்றல் பெற்றிருந்த அவர் இந்திய ரிசர்வ் வங்கி அமைய பரிந்துரை செய்த குழுவில் அங்கம் வகித்தார்.

பின்னர் பம்பாய் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பேத்கர் விவசாயி அடிமைத்தனத்தை ஒழித்து, தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரப் பணி, ஓய்வூதிய முறை போன்றவற்றை அறிமுகப் படுத்தினார். அறிவு மட்டுமே மனிதனை மேம்படுத்த உதவும் என்று ஆழமாக நம்பிய அவர் சிறு பிள்ளைகள் படித்திட பல கல்விக் கூடங்களை நிறுவினார். பம்பாயில் பணிக்காக குடியேறிய தமிழர்கள் மற்றும் பிற மொழியினரின் பிள்ளைகள் அவரவர்களின் தாய்மொழியைக் கற்க உண்டான செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் உண்டாக்கினார். தீண்டாமை ஒழிப்புக்கான சட்டம், தாய்மார்களுக்கான பேறுகால உதவிகள் போன்ற சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களில் ஈடுபட்டாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டவர் சுதந்திரத்துக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காகவும் பேசினார்.

இது தொடர்பாக அவர் உண்டாக்கிய திட்டம் தான் ‘இரட்டை வாக்குரிமை’. அதாவது தாழ்த்தப்பட்ட இனத்தினர், தொகுதியின் பொது நலனுக்காக ஒரு தலைவரையும், தங்கள் குறைகளை எடுத்துரைக்கத் தங்களுக்கென ஒரு தலைவரையும் தேர்ந்தெடுப்பது என்பதே அந்த திட்டம். இது நாட்டில் பெரும் குழப்பத்தையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் என்று நினைத்த காந்தி இதனை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் நாட்டில் கலவரங்கள் உண்டாக பல தலைவர்கள் தலையிட்டு சமரசம் உண்டாக்க முயன்றனர். இறுதியில் இரட்டை வாக்கெடுப்பு என்பதற்கு பதிலாக தனித்தொகுதி ஒதுக்கீடு எனும் ஏற்பாடு முடிவானது.

இந்தச் சந்தர்ப்பங்களில் காந்திஜியுடன் பழக நேர்ந்த போது அவருடைய பல கருத்துகள் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடாக அமைந்திருப்பதாக அம்பேத்கர் நினைத்தார். இதைப் பல தருணங்களில் காந்திஜியிடமே நேரில் தெரிவித்தார்.. “மிஸ்டர். காந்தி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!” என்று காட்டமாகவே பேசி வந்தார். ‘சமூகத்துக்கு இயற்கை வழங்கிய முறையே சாதியமைப்பு’ என்பதில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டவர், மேல்தட்டு வர்க்கத்தினர் புரிந்த அநீதிகளுக்கு எப்போதுமே எதிர்த்துக் குரல் கொடுக்காதவர், நாலாயிரம் சாதிகளை நான்கு வர்ணங்களில் அடக்கி வர்ணாஸ்ரமக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதோடு காந்தியின் சாதி ஒழிப்பு நின்று விடுகிறது என்று பலவகைகளில் காந்தியின் கொள்கைகளை எதிர்த்து வந்தார் அம்பேத்கர். காந்தியின் சாத்திய அணுகுமுறை, தொழிற்துறை மற்றும் இயந்திரமயமாக்கலுக்கு எதிரான கோட்பாடுகள் மிகவும் பிற்போக்கானவை என்று வாதிட்டார்.

இருவருக்கும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற வேண்டுமென்ற பொதுவான எண்ணமிருந்தாலும், உள்நாட்டு விவகாரங்களில் கொள்கையளவில் வேறுபாடுகள் பல கொண்டிருந்தனர். ‘சாதாரண முறையில் குடிதண்ணீர் கூட அருந்த முடியாத அளவுக்குத் தீண்டாமை புரையோடிக் கிடக்கும் போது, இது என் நாடு என்ற உணர்வு என் மக்களுக்கு எப்படி வரும். எங்களுக்குத் தாய்நாடு என்று ஒன்று கிடையாது’ என்று தீண்டாமைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்கக் கோரினார். காந்தியின் கொள்கைகளுக்கு அந்த நாட்களில் ஆங்காங்கே எதிர்ப்புகள் இருந்தாலும், மிகக் கடுமையாக விமரிசித்தவர் அம்பேத்கர்.

அம்பேத்கரின் தொடர் முயற்சியால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு பல மாநிலங்களில் சம உரிமை கிடைத்தது. மேல் சாதியினரை அங்கத்தினர்களாக கொண்ட வைசிராய் நிர்வாகக் குழுவில் அம்பேத்கர் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். சில காலங்கள் தொழிற்துறை அமைச்சராக செயல்பட்ட அவர் தொழிலாளர் முன்னேற்றத்துக்காக அரும் பணியாற்றினார். விடுதலைக்கு முன் இராஜேந்திர பிரசாத் அவர்களின் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, அம்பேத்கரை நாட்டின் அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் கமிட்டியின் தலைவராக நியமித்தது.

விடுதலைக்குப் பின், காங்கிரஸின் கொள்கைகள் பிடிக்காததால், முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார் அம்பேத்கர். இவரது பொருளாதார, அரசியல் அணுகுமுறைகளையும், ஆழ்ந்த அறிவினையும் நன்கறிந்த நேரு பிரதமாரான பின், அம்பேத்கரை சட்ட அமைச்சராக நியமித்து, அவரின் தலைமையில் உருவான அரசியல் சாசனத்தைச் சட்டங்களாக்கினார். இத்தருணத்தில் தீண்டாமை ஒழிப்பு ஒரு சட்டமாகவே நிறைவேற்றப்பட்டு, அம்பேத்கரின் நீண்ட கால முயற்சி வெற்றி பெற்றது. சட்ட அமைச்சராக இருந்தபொழுது, ‘இந்து சட்டத் தொகுப்பு’ தொடர்பாக இவர் செய்த பரிந்துரைகள் பல காரணங்களினால் ஏற்றுக் கொள்ளப்படாததால் பதவி விலகி எதிர்கட்சித் தலைவராகச் சில காலம் செயல்பட்டார்.

இந்து மதத்தில் இருந்த பல பிரிவுகளில் சலிப்படைந்து, தன் நண்பர்கள் பலருடன் புத்த மதத்துக்கு மாறினார். தாழ்த்தப்பட்ட மக்களின் ஏற்றத்துக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் அம்பேத்கர். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ந்தேதி காலமானார்.

1990ஆம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. இன்றும் இவரது பொருளாதார, அரசியல் சாதனைகள் மறக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக மட்டுமே இவர் பார்க்கப்படுவது சற்றே நெருடலான விஷயம்.

-ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad