எசப்பாட்டு – உயிர்
அன்னையின் தயவாலே அகிலத்தில் வந்துதித்து
முன்வினைப் பயனாலே முழுதான வாழ்வுபெற்று
தன்வினைச் செயலாலே தரைமீது இன்னலுற்று
நல்வினை எதுவென்றே நயமாக உணரமுனைந்து
கண்முன்னே காண்பதெலாம் நிலையானதென நினைந்து
மனமுன்னே சென்றிட மதியின்றிப்பின் தொடர்ந்து
ஊன்பின்னே சிதைந்திட உலகமெலாம் கசந்து
மண்மீதே வீழ்ந்திட மடிந்திடும் உயிரதுவே!!
– வெ. மதுசூதனன்
மேகத்திடை பெய்த மதியொளி வெளியில்
மோகத்திடை ஒத்த மனங்களின் ஜதியில்
தாகத்திடை எழுந்த அலையின் துளியில்
நாளத்திடை விழுந்த அணுவின் புள்ளியில்
அரங்கிடை பெருத்த யாக்கைப் பையில்
ஞாலத்திடை உதித்த பிழை யுருவில் – என
புவியிடை திரிந்து நிலையாது நலியும்.
வெளியிடை கலந்து காற்றுடன் கரையும்.
– ரவிக்குமார்.
நீர்க்குமிழிக்கு அலைகள் உயிரா?
அலைகளுக்கு கடல்நீர் உயிரா?
கடல்நீருக்கு நதிகள் உயிரா?
நதிகளுக்கு மேகங்கள் உயிரா?
காலைக்கு கதிரவன் உயிரா?
இரவுக்கு நிலவொளி உயிரா?
கனவுக்கு கற்பனை உயிரா?
மனிதனுக்கு ஆத்மா உயிரா?