எசப்பாட்டு – வயல்வெளி
ஈரம் உலர்ந்திடா இன்பப் படுக்கை
இறக்கை விரித்துப் பறந்திடும் புள்ளினம்
ஈன்று புறந்தந்த இளசின் இருப்பிடம்
இல்லையெனச் சொல்லாது என்றும் நெல்லினை
ஈந்து வழங்கி இன்புறும் விளைநிலம்
இல்லம் முழுதும் இனிமை ததும்ப
ஈடில்லா மகிழ்ச்சி இடையறாது வழங்கிடும் !!
– வெ. மதுசூதனன்.
வெள்ளி யோடைச் சரிகை சீண்ட
பச்சைப் பட்டுச் சேலை பூண்டு
வெட்கி நாணிய கதிரைக் கண்டு
இச்சை நானும் கொண்ட துண்டு
சுவரோவியமாகி தொங்கிய வயல்வெளி மீது!
– ரவிக்குமார்
இயற்கை அவதிகளின் வடிவமான
புழுவும் பூச்சியும் உலவுமிடம்
இறக்கை முளைத்த கொசுவுக்கும்
விஷம் ஏந்தும் பாம்புக்கும் உறைவிடம்
இரவுநேரத் துயிலழைப்பை விரட்டி
உரநாற்றம் துளைப்பது கவலைக்கிடம்
இடுப்பை ஒடித்து மங்கையர்
கண்ணீருடன் களையெடுப்பது இவ்விடம்.
புழுவும் பூச்சியும் எம்மினிய தோழர்கள்
புகுந்து வெளிவரும் இயற்கை உழவர்கள்
புதுநெல் கடித்து வளைபுகும் எலிகளைப்
புசித்து முடித்து நெல்காக்கும் பாம்புகள்!!!
இயற்கை வனப்பினை இன்னமும் வளர்த்து
இன்பமாய்த் துயிலுக்கு வித்திடும் இன்னுரங்கள்!
இளமையாய் உடலின் ஆரோக்கியம் பேணிட
இயல்பாய் உழைக்க வைத்திடும் களையெடுப்பு !!!
இயற்கை உழவர்கள் உணவைக் கெடுப்பானேன்?
காவல் பாம்புகள் உழவரைக் கடிப்பானேன்?
உரத்தின் நெடி சாக்கடைவாசி கொசுவையே தடுப்பானேன்?
களையெடுப்பது ஆரோக்யமெனின் எலும்பாக காணுவானேன்?
நெருப்பது சமைப்பதால் நேரதாய் உண்போமோ?
இலையது உதவுவதால் எறியாமற் போவோமோ?
அவையவைப் பயனுக்கே அவையவை உறுதுணை
அரவமும் மண்புரள் புழுவதுவும் அத்தரத்தவையே!!!
எலும்பென உன்கண் எடைபோடும் உருவம்
இரும்பென உறுதியாய் இறுதிவரை திகழும்!!
இயற்கை உரங்களில் இருப்பதிலை பெருநெடி
செயற்கை முறைகளைத் தவிர்ப்பதே மிகச்சரி!!!
அழுகிய சாணம் வயலை ஊட்ட
ஆழமாய் உழுது சேற்றை கூட்ட
அடுக்கி வகையா நாற்றை நாட்ட
ஆற்று நீரும் மண்ணை தேற்ற
அண்டி வரும் களையை அகற்ற
ஆடிக் காற்று தூலியாய் ஆட்ட
அழகு பச்சை கோடியை காட்ட
ஆடும் வயல் நெஞ்சை தாலாட்ட
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
– உன் பாட்டிற்கு எசப்பாட்டு பாட வந்த பாரதி
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
அதைக் கேட்டுக் கிறுகிறுத்து போனேனடா
அந்தக் கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா…
– கவிமணி
பாரதியும் வந்திந்தப் பத்திரிகையில் எமையெழுத
பாரதனில் யாம்செய்த புண்ணியம் தானென்னே
– பாரதத்தின் மூலைகளில் பசுமையைய்க் காத்திட
பாங்குடனே இறைஞ்சிடும் பரிதாபக் காணிநிலங்கள்!!!
அள்ளி தெளித்த பச்சை!
அழகாய் அமைந்த மஞ்சள்!
நிலத்தின் எல்லையில் நீலம்!
வின் முட்டும் கரடு!
சுவரற்ற ஓலை மாளிகை!
பிரம்மாவின் மறு பெயர் யோகியோ!
– பட்டிக்காட்டான்
அள்ளி தெளித்த பச்சை –
>>> ஆசையாய் குதித்த குளத்து நீரில்
அழகாய் அமைந்த மஞ்சள் –
>>> ஆதவன் எதிரில் துவண்ட கதிரில்!
நிலத்தின் எல்லையில் நீலம் –
>>> நிலத்தடி மண்ணிலும் அமிலமாய் நீலம்!
வின் முட்டும் கரடு –
>>> வயல் மட்டும் பொட்டல் காடு!
சுவரற்ற ஓலை மாளிகை –
>>> சோறற்ற மன்னரின் சுகமான ஆளுகை
பிரம்மாவின் மறு பெயர் யோகியோ –
>>> >பயிரிட்டவன் மட்டும் தானிங்கு பாவியோ?
-தட்டிக்கேட்டான்
ஆசையாய் குதித்த குளத்து நீரில்
>>>> அழகாய் நீந்தும் அழகிய கெண்டை!
ஆதவன் எதிரில் துவண்ட கதிரில்!
>>>>>தெளித்தது சாரல் தெளிந்தது பயிர்
நிலத்தடி மண்ணிலும் அமிலமாய் நீலம்!
>>>>> நிலமகள் தன்னின் இயற்கையின் ஜாலம்!
வயல் மட்டும் பொட்டல் காடு!
>>>>அறுவடை முடிந்த அடுத்த நாள் மட்டும்!
சோறற்ற மன்னரின் சுகமான ஆளுகை
>>>>>இது பரங்கியர் தங்கிய கிழட்டு மாளிகை!
பயிரிட்டவன் மட்டும் தானிங்கு பாவியோ?
>>>>உழப்பவன் யாவர்கும் இது வரலாற்று நீதியே!
– பட்டிக்காட்டான்
உழுதவன் கணக்குப் பார்த்தா ஒன்னும் மிஞ்சலை
கஞ்சி தொட்டி தொரந்தாச்சு
எலிக்கறியும் தின்னாச்சு
வானம் பார்த்த பூமியாச்சு
மழை பேஞ்சும் நாளாச்சு
அண்டை அயலாரும் தண்ணி இல்லைன்னாச்சு
தற்கொலைக்கு நேரமாச்சு.