ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-7
(பகுதி-6)
தாய்நாடு பற்றிய ஏக்கம்
புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் ஆங்காங்கே தாய்நாடு பற்றிய ஏக்கவுணர்வு பிரதிபலிப்பதனைக் காணலாம். தனது வீடு, தனது ஊர், தனது நகரம், தனது தேசம் பற்றிய பிரதிபலிப்புக்களை மிகவும் அற்புதமான முறையில் கவிதைகளில் அமைத்தனர்.
“கனவு
உன்னதமான
எனதும் உனதுமான கனவு.
ஆலமரங்களுக்கும்
அஸ்க்க மரங்களுக்குமிடையிலான
ஊஞ்சல் கட்டும் கனவு.
பனைக்கும் கிறான் மரத்துமிடையே
பாலமிடும் கனவு”18
எமது ஆழ்மனதில் உள்ள நிறைவேறாத ஆசைகளும் கற்பனைகளும் கனவுகளாக மேலெழுகின்றன. நீண்ட காலமாக ஊரைப் பிரிந்த ஏக்கத்தில் புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் ஒருவனின் கனவிலும் கூடத் தனது கிராமம் பற்றிய சிந்தனை வந்து போவதை மிகவும் அழகாகப் படம் பிடித்துக் காட்டினார் கவிஞர்.
“நிலவுக்குப் போதல்” என்ற தலைப்பிலமைந்த பின்வரும் கவிதை புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்களின் மனப் பிரதிபலிப்பை அப்படியே பதிவு செய்துள்ளது.
“மாட்சிமைமிக்க
மண்ணின் வாழ்வு
மங்கிய நிழற்படச் சுருள்களாக
மனக் கண்ணில் விரிந்து
மானுடத்தைச் சதா உறுத்தும்”19
சொந்த மண்ணின் சுகமதனை எந்த மண்ணும் தந்திடாது என்ற உண்மையினை உணர வைக்கும் கவிவரிகள் இவை. நடுங்க வைக்கும் குளிரிலும் நாடு விட்டு நாடு ஓடாமல் தன் சொந்த நாடே கதியென வாழும் தாய்மண் மீது பற்றுக் கொண்ட ‘மக்பை’ என்ற ஒரு பறவையினம் வ.ஐ.ச.ஜெயபாலனை மிகவும் பாதித்துள்ளது.
“ ‘துருவப் பறவைகளே தேடுமுந்தன் தாய்நாட்டை
வழிப்போக்கன்
குண்டி மண்ணைத் தட்டுவது போல்
தட்டிவிட்டு வந்தவன் நீ’
மக்பை சொல் தீக்கோலாய்
மனதில் குறிபோடும்”20
‘மக்பை’ என்ற பறவையைப் பார்க்கும் போதெல்லாம் தாயகத்தைப் பிரிந்து வந்துவிட்டேனே என்ற குற்றவுணர்வு மேலிடுவதை அவதானிக்க முடிகின்றது. இங்கு ‘மக்பை’ என்ற பறவை தாய் மண்ணின் மீது கொண்ட அகலாத பற்றின் குறியீடாக வெளிப்பட்டது.
புலம்பெயர்தேசத்தின் ஓய்வற்ற, இயந்திர வாழ்வும், தனிமையும் ஒருவிதமான விரக்தியின் விளிம்புக்கு இட்டுச்செல்ல அவற்றினால் உந்தப்பட்ட பலர் தமது கவிதைகளைத் தாயக உணர்வு நிலையுடன் சேர்த்து, இரங்கல் உணர்வுடன் எழுதினர்.
“வெள்ளியும் நிலவும் போல
சிலபோது மறைந்தவர்கள்
நல்ல மரணம் வரும் நாள்வரை
ஊரோடும் உறவோடும்
கிளைவிட்டு வேரோடி
செழிக்கும் மரமாவோம்
இனி அங்கு”21
என்றோ ஓர் நாள் நாடு திரும்பலாம் என்ற நம்பிக்கை சிறிய அளவில் முளைவிடுவதை இக் கவிதையில் அவதானிக்க முடிகிறது.
‘நிலவும் நானும்’ என்ற தலைப்பிலமைந்த பிறிதொரு கவிதையில் தன் உறவுகளுடன் கூடியிருந்து உண்டு மகிழ்ந்த அந்தக் காலத்து நினைவுகளைச் சொல்லி; மீண்டும் அப்படியொரு காலம் வருமா என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி ஏக்கத்துடன் நகர்கிறது.
“நான்
என் தேசத்துக்குச் செல்வேன்
தேசம் எரிகின்ற போதும்
அது எழுகின்ற போதும்
வாழ்கின்ற
என் தேசத்து மனிதர்களோடு
புன்னகை செய்வேன்”22
இங்குக் குடும்ப உறவுகளைப் பிரிந்த ஏக்கம் வெளிப்படுத்தப் பட்டாலும், தன் தேசம் எரிகின்ற போதும் அது எழுகின்ற போதும் தானும் ஒரு பங்காளியாக இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொக்கி நிற்பதையும் உணர முடிகின்றது.
பொதுவாக ஒரு நாடென்பது இயற்கை அம்சங்கள் மட்டும் நிறைந்ததல்ல. அதற்கும் மேலாக உறவுகளின் பிணைப்பினால் உருவான குடும்பம், குடும்பங்கள் கூடிக் கட்டிய சமூகம், சமூகங்களின் திரட்சியினால் உருவான சமுதாயம், சமுதாயத்தின் கூட்டிலான நகரம், நகரங்களின் கூட்டிலான நாடு என ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து விரிந்து செல்லும் இயல்புடையது. தமிழர்கள் பொதுவாகவே கட்டுப்பாடுடைய கலாசாரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், அதிலேயே ஊறித் திளைத்தவர்கள். சென்ற இடமெல்லாம் தம் பண்பாட்டை, நாகரிகத்தை நிலைநிறுத்த முனைபவர்கள் என்பதையும், தம் மண்ணின்மீது இடையறாத பற்றுடையவர்கள் என்பதையும் மேற்கண்ட கவிதை வரிகள் அச்சொட்டாகப் பிரதிபலித்து நிற்கக்காணலாம்.
18. திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.51
19. மேலது, பக்.128
20. மேலது, பக்.36-37
21. மேலது, பக்.65
22. மேலது, பக்.69
-தியா-