கண்ணதாசன்
“அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்”
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி, அவரை மிக நெருக்கமாக, நன்றாக அறிந்த ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை. நாம் கவிஞரைப் பற்றி முதலில் பார்ப்போம்.
சிறுகூடல்பட்டியில், சாத்தப்பன், விசாலாட்சி தம்பதியருக்கு 1927ஆம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி, எட்டாவதாக பிறந்தவர் முத்தையா. ஒன்பது பிள்ளைகளைப் பெற்ற இத்தம்பதியர் வறுமையின் காரணமாக தங்களது ஐந்தாவது பிள்ளை கண்ணப்பனையும், ஆறாவது பிள்ளை சீனிவாசனையும் தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். சீனிவாசன் தாய், தந்தையரைப் பிரிய மனமின்றி அழுத போது, அவருக்கு பதிலாக தான் தத்து போவதாகச் சொல்லி முன் வந்து தத்துச் சென்றவர் முத்தையா.
அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த முத்தையா பள்ளியிலிருந்து வெளியேறி ‘ஏஜாக்ஸ் ஒர்க்ஸ்’ நிறுவனத்தில் டெஸ்பாட்ச் பாயாக வாரம் ஐந்து ரூபாய் கூலிக்கு வேலை செய்து வந்தார். அவரது அண்ணன் சீனிவாசன் (ஏ.எல்.எஸ்) தான் அங்கு பொருளாளர். அலுவலகத்தில் வேலை இல்லாத சமயங்களில் தனது எழுத்தார்வத்தை தணித்துக் கொள்ள எழுதிய ‘நிலவொளியில்’ என்ற கதை ‘கிரகலட்சுமி’ என்ற பத்திரிகையில் வெளியானது. எழுத்தில் ஆர்வமுற்ற முத்தையா பின்னர் சென்னை வந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சண்டமாருதம் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். பத்திரிகை சரியாகப் போகாத காரணத்தால், சில மாதங்களில் ‘சண்டமாருதம்’ நிறுத்தப்பட்டு, மாடர்ன் தியேட்டர்ஸின் கதை இலாகாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் முத்தையா. பின்னர் கவிதைகள் பால் ஈர்க்கப்பட்ட முத்தையா, சினிமாப் பாடல்கள் எழுதுவது என முடிவு செய்து, தன்னைப் போன்று எட்டாவதாகப் பிறந்த கண்ணனின் மீது நாட்டம் கொண்டு, ‘பாரதிதாசன்’, ‘கம்பதாசன்’ போன்று தன்னைக் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
1949ம் ஆண்டு, ஜுபிடர் நிறுவனம் தயாரித்து, ராம்நாத்தின் இயக்கத்தில் வெளியான ஷேக்ஸ்பியரின் கதையான ‘கன்னியின் காதலி’ படத்துக்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படத்திற்கு ஆறு பாடல்களை எழுதிய கண்ணதாசன் முதலில் எழுதிய பாடல் ‘கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’. அவரது பாடல்கள் பரவலாகப் பேசப்பட்டாலும், 1952 ஆம் ஆண்டு, ஏ,எம். ராஜாவின் இசையில் வெளியான ஆடிப்பெருக்கு திரைப்படப் பாடல்கள் தான் கண்ணதாசனுக்கு பெரிய அளவில் புகழைப் பெற்றுத்தந்தது. குறிப்பாக “காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா” என்ற பாடல் பாடகி சுசிலா, ஏ.எம்.ராஜா, கண்ணதாசன் மூவருக்கும் திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளியான மகாதேவியில் ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா’ என்ற பாடலும் மாலையிட்ட மங்கையில் இடம்பெற்ற ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடலும் அவரைப் பாடலாசிரியர் என்று திரையுலகம் ஏற்றுக் கொள்ளச் செய்தது .
இடையே வங்க மொழியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களுக்கு வசனம் எழுதினார். பின்னர் எம்.ஜி.ஆர். நடித்த திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே போன்ற படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். இந்த நேரத்தில் அவரது பல பாடல்கள் புகழ் பெற முழு நேரப் பாடலாசிரியரானார் கண்ணதாசன்.
தொடக்கத்தில் திமுக தலைமையில் அங்கம் வகித்த கண்ணதாசன் அக்கட்சியின் கொள்கைகளை ஆதரித்து பல முறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். சிறையிலிருந்த போது திரைப்படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். அப்படி அவரது கதையில் வெளிவந்த படம் இல்லறஜோதி. அக்காலங்களில் தீவிர நாத்திகராக இருந்தவர் தனது பெயருக்கு “பெண்களின் அழகான கண்கள் மீது நான் கொண்ட மோகத்தினால் கண்களுக்கு தாசன் அதாவது கண்ணதாசன்” என்று பெயர் சூட்டிக் கொண்டதாகச் சொல்லி வந்தார்.
பின்னர் கருத்து வேறுபாடுகளினால் திமுகவில் இருந்து விலகிய அவர் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் சில காலங்களிலேயே அரசியலிலிருந்து விலகியவர் சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். மாலையிட்ட மங்கையைத் தொடர்ந்து அவர் தயாரித்த சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. இதனால் பெரும் கடன் தொல்லைக்கு ஆளானார்.
திரைப் பாடல்களில் சூசகமாகத் தனது சொந்த கருத்துகள், அபிலாஷைகளைப் பதித்து அவற்றை சம்பந்தப்பட்டவர் மட்டுமே அறிந்துக் கொள்ளும்படி எழுதக் கூடியவர் கண்ணதாசன்.
ஒரு முறை பாவ மன்னிப்பு என்ற படத்துக்கு பாடலெழுத பீம்சிங், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் அமர்ந்திருந்தவருக்கு தொலைபேசி அழைப்பு வர எழுந்து போய்ப் பேசி விட்டு வந்தார். திரும்பி வந்த போது கவிஞரின் முகத்தில் கலவரம் படர்ந்திருப்பதை உணர்ந்த எம்.எஸ்.வி. அது பற்றி வினவிய போது எதுவும் சொல்லாதவர், பாடலை எழுதிக் கொடுத்து விட்டு உடனே கிளம்பிவிட்டார். ஏதோ சரியில்லை என்று எம்.எஸ்.விக்கு தோன்ற அன்றிரவு கண்ணதாசனின் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்த போது, படத் தயாரிப்புக்காக வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்ததாகவும் கடனை செலுத்த முடியாததால், வீட்டை ஜப்தி செய்ய ஆட்கள் வந்திருந்ததாகவும் தெரிவித்தார். ஏன் இதை அப்போதே சொல்ல வில்லை என்றதற்கு கவிஞர் “டேய்.. அழும் போது தனிமையில் அழணும், சிரிக்கும்போது நண்பர்களோடு சிரிக்கணும்! கூட்டத்தில அழுதா நடிப்புன்னுவாங்க .. தனிமையில சிரிச்சா பைத்தியம்னு சொல்லுவாங்க ..” என்றாராம். அவர் அன்று மதியம் எழுதிய பாடல்? “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார், நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்”. அந்தப் பாடலுக்கான சம்பளத்தில் ஜப்தியை தள்ளிப் போட முடிந்தது.
திமுகவில் இருந்த போது காமராஜரின் மீது தனிப்பட்ட முறையில் பற்று கொண்டிருந்தாலும், தான் சார்ந்திருந்த கட்சிக்காக அவரை எதிர்க்க வேண்டியிருந்தது. இந்தச் சூழ்நிலையில் பட்டணத்தில் பூதம் படத்துக்காக எழுதப்பட்ட பாடல் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி”. காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி.
ஒரு முறை, பாடல் பதிவுக்காக ஸ்டுடியோவில் அமர்ந்திருந்த போது யாரோ ஒருவர் விற்பனைக்காக வெளிநாட்டு மது வைத்திருப்பதை அறிந்து அதை வாங்க முற்பட்டார் கவிஞர். தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் பணம் கேட்டும் கிடைக்காததால், படத்தயாரிப்பாளர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க அவர் கவிஞரைத் திட்டிப் பணம் கொடுக்க மறுத்து விட்டார். திரும்பி வந்த கண்ணதாசன் எழுதிய பாடல் “அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே. ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே”.அவர் பணம் கேட்டது அவரது அண்ணன் தயாரிப்பாளர் ஏஎல்.சீனிவாசனிடம்.
தனக்கு அவமானம் ஏற்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொண்டதில்லை கவிஞர். சிவகங்கைச் சீமை தயாரிப்பின் போது, படத்தளத்துக்கான வாடகை கொடுக்க முடியாததால் அதன் உரிமையாளர் வேறொரு படநிறுவனத்துக்குத் தளத்தை வாடகைக்குக் கொடுத்து விட்டார். கண்ணதாசன் எவ்வளவு மன்றாடியும், அவர் ஏற்றுக் கொள்ளாததால், மனமொடிந்து இந்தப் படத்தளம் எரிந்து சாம்பலாகட்டும் என்று சாபம் விட, உண்மையில் அன்று மாலை ஒரு தீ விபத்தில் அத்தளம் எரிந்து சாம்பலாகிவிட்டது.
அதே போல் அவர் ஊரிலிருந்து சென்னை வந்து சேர்ந்த முதல் நாள் இரவு நேரமாகிவிட்டபடியால், காந்தி சிலையருகே படுத்து உறங்கிய போது, காவல் துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டார். அதை மனதில் கொண்டு கறுவி வந்த கவிஞர், தான் தயாரித்த சுமை தாங்கிப் படத்தில் ஜெமினிகணேசன் நடிப்பில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற பாட்டுக்குக் காந்தி சிலையைப் பின்புலமாகத் தேர்ந்தெடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் இரவில் அந்தக் காட்சி நடப்பதாகச் செய்திருந்தார். இயக்குனர் ஸ்ரீதரும், ஒளிப்பதிவாளரும் ஒளி அமைப்பதில் உள்ள இடர்பாடுகளை எடுத்துரைத்த போது தனது எட்டு அம்பாசிடர் கார்களைக் கொண்டு அந்தப் பாடலுக்கான ஒளியை ஏற்பாடு செய்தும், தனது கார்களை இங்குமங்கும் ஓடவிட்டும் காட்சி அமையுமாறு செய்திருந்தார். மிகச் சிறப்பான ஒளிப்பதிவாக அமைந்த அந்தக் காட்சியும் பாடலும் இன்றும் மனதில் நிற்பவை.
இது போன்று சிறு பிள்ளைகளுக்கே உரிய கோபத்தைக் கொண்டிருந்த கவிஞர் அவற்றை எளிதில் மறந்து விடும் மனமும் படைத்திருந்தார். ‘கவலையில்லாத மனிதன்’ படத்தில் தனக்குப் பல இன்னல்கள் ஏற்பட காரணமாகயிருந்தவர் சந்திரபாபு என்று வெளிப்படையாகக் கூறி வந்தாலும், சந்திரபாபு ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்றொரு சொந்தப் படம் தயாரித்தபோது எந்தக் காழ்ப்புணர்வும் இல்லாமல் பாடல்கள் எழுதிக் கொடுத்தவர்.
அனுபவம் தான் இறைவன் என்று நம்பிய கவிஞர் தனது இறப்பினை இந்த உலகம் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்றறிய ”கண்ணதாசன் இறந்து விட்டார்” என்று தானே மற்றவர்களுக்குத் தொலைபேசியில் கூறி வீட்டின் முன் பதைபதைத்து வந்து கூடிய பலரைப் பார்த்து சிரித்த அனுபவமும் அவருக்குண்டு.
1950ஆம் ஆண்டு கண்ணதாசன் பொன்னம்மா என்பவரை மணமுடித்தார். பின்னர் சில நாட்களிலேயே என்.எஸ்.கே. நாடக குழுவில் நடிகையாக இருந்த பார்வதியையும் மணந்தார். தலா ஏழு பிள்ளைகள் என பதினான்கு பிள்ளைகள் பிறந்த பின்பு, புலவர் வள்ளியம்மை என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
தமிழக அரசியலில் சிக்குண்டு வழக்கொழிந்து போன அரசவைக் கவிஞர் என்ற பதவியைக் கண்ணதாசனுக்காகவே மீண்டும் கொணர்ந்து, அவரை ‘அரசவைக் கவிஞராக’ நியமித்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் அரசியல் சார்ந்தும், திரைத்தொழில் சார்ந்தும் நிறையக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. கண்ணதாசனை அறிந்தவர்களால் அவரை நிரந்தரமாகப் பகைத்துக் கொள்ள முடியாது என்பதற்கு இது ஒரு சான்று.
பலவித பலவீனங்களுக்கு ஆட்பட்ட கண்ணதாசன், “நான் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்குண்டு. நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்.” என்று வெளிப்படையாகச் சொல்லத் துணிந்தவர்.
திரைப்படப் பாடல்கள் வழியே, நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களுக்காகப் பல நுண்ணிய உணர்வுகளைச் சித்தரித்ததில் கண்ணதாசனுக்கு நிகர் எவருமில்லை.ஐயாயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள் மட்டுமின்றி, தனிக்கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், இலக்கியத் திறனாய்வுகள், நாடகங்கள், சுயசரிதை என இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களிலும் ஜொலித்தவர் அவர்.
தொடக்கத்தில் நாத்திகனாக இருந்தவர், பின்னர் அர்த்தமுள்ள இந்து மதம் எனும் தலைப்பில் பத்துப் பாகங்களும், இயேசு காவியம் எனும் தலைப்பிலும் ஆன்மிகக் கருத்துகளை புத்தகங்களாக எழுதினார்.
இவரது “சேரமான் காதலி” எனும் படைப்புக்கு சாகித்ய அகாதமியின் விருதும் கிடைத்தது.
1981ல் ஒரு சொற்பொழிவுக்காக சிகாகோ வந்தவர், உடல் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பலனின்றி, அக்டோபர் 17ம் தேதி மரணமடைந்தார்.
தனது இறப்புக்கு தானே “ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு..!” என்று இரங்கற்பா எழுதிக் கொண்டவர், தன்னைப் பற்றிய சுயசரிதையில் எழுதிய வரிகள் தான் நீங்கள் இக்கட்டுரையின் துவக்கத்தில் படித்தது.
“வள்ளுவன், இளங்கோ, பாரதி மட்டுமல்ல நானும் ஏமாந்தேன்” என்றொரு பாடலில் எழுதியிருந்தார் கவிஞர். அந்த வரிசை வளராமல் அவரோடு நின்று போய்விட்டது என்பது கசப்பானதொரு உண்மை.
-இரவிக்குமார்.
**//வள்ளுவன், இளங்கோ, பாரதி மட்டுமல்ல நானும் ஏமாந்தேன்” என்றொரு பாடலில் எழுதியிருந்தார் கவிஞர்.அந்த வரிசை வளராமல் அவரோடு நின்று போய்விட்டது என்பது கசப்பானதொரு உண்மை.//**
இப்படி தீர்மானமாய் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை
Excellent