\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

Poet-Ramalingam-pillai_420x445”கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்”

மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தனது அற்புதத் தமிழால் இவ்வாறு விளக்கி எண்ணற்ற இளைஞர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தவர் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை . இந்தத் தொடரின் தலைப்பான

“தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”

என்பது அவரின் புகழ் பெற்ற “தமிழன்” என்ற பாடலில் வரும் பல்லவியே. பல அருமையான எளிமையான தமிழ்க் கவிகளைப் புனைந்து தமிழுக்குத் தொண்டாற்றியதோடு மட்டுமல்லாமல் மக்களை எழுச்சியுறச் செய்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர் நாமக்கல் கவிஞர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனூர் என்ற கிராமத்தில் 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதியன்று பிறந்தார் நம் கவிஞர். அவரின் தந்தையார் பெயர் வெங்கடராமன், தாயார் அம்மணியம்மாள், இந்தத் தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர் இராமலிங்கம் பிள்ளை. இவருக்கு முன்னால் பிறந்த ஆறு பெண்களில் மூவரும், ஒரு ஆண் குழந்தையும் குழந்தையிலேயே இறந்துவிட பெற்றோர் அருந்தவமிருந்து பெற்ற ஆண்பிள்ளை இவராவார். அவரின் தாய் சிறுவயதில் கொடுத்த உபதேசம், “எது வேண்டுமானாலும் செய், பொய் மட்டும் சொல்லாதே, போக்கிரி என்று பெயரெடுக்காதே” என்பது மட்டும் தானாம். தாயின் ஆசையைக் கடைசிவரை சிரமேற்கொண்டு வாழ்ந்து காட்டிய உத்தமர் அவர்.

சிறு வயதிலிருந்தே அவருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கையில், ஒரு நாள் கல்லூரியின் முதல்வர் எலியட்ஸ் மாணவர்களை ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுமாறு பணித்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தைப் படிக்கலானார். இராமலிங்கம் பிள்ளை, கொடுக்கப்பட்ட கட்டுரையை எழுதி முடித்து விட்டு, மீதமிருந்த நேரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியர் புத்தகம் படிப்பது போன்ற நிலையைத் தத்ரூபமாக வரைந்து காட்டி மிகுந்த பாராட்டுப் பெற்றாராம். அதன் பிறகு முதல்வர் எலியட்ஸ் இவரது ஓவியம் வரையும் ஆற்றலை வளர்க்கப் பலவிதங்களிலும் உதவினார். இவர் வரைந்த ஓவியங்கள் அந்தக் காலத்தில் நல்ல விலைக்குப் போயின. அவர் வரைந்த ஓவியங்களில் ஒன்றான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை, டெல்லியில் நடந்த அவரின் முடிசூட்டு விழாவிற்குச் சென்று பரிசளித்தார். ஓவியத்தைப் பார்த்த மன்னரின் குடும்பம் அதனை வெகுவாகப் பாராட்டி, தங்கப் பதக்கம் ஒன்றைப் பரிசாக அளித்தது.

முதலில் பாலகங்காதர திலகர் போன்றோரின் தீவிரவாதக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், நாமக்கல் கவிஞர் நாளடைவில் ஒரு காந்தியவாதியாக மாறினார். மகாத்மாவின் மிதவாதக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு வளர்த்துக் கொண்ட அவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் நாமக்கல் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கவிஞர், காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவித்தார். திருச்சியில் பணியாற்றுகையில், மகாகவி பாரதியாரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றார். அவரிடம் தானியற்றிய பாடல் ஒன்றைப் பாடிக் காட்டி பாராட்டும், “புலவன்” என்ற பெயரையும் பெற்றாராம் நாமக்கல் கவிஞர்.

சிறந்த ஓவியர், சீரிய விடுதலைப் போராட்ட வீரர் என்பதுடன் சந்தம் சற்றும் தப்பாமல், எளிமையான மொழியில் அமிழ்தினும் இனிமையான தமிழ்க் கவிதைகளைத் தந்தவர் என்பதே அவரைப் பற்றிய குறிப்பை ”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” பகுதியில் எழுதுவதற்கு முழுமுதற் காரணம். கடவுள் என்னும் கருத்துக் குறித்து மிக அதிகமான அளவு அற்புதக் கவிதைகள் புனைந்துள்ளார் கவிஞர். கீழ்க்காணும் கவிதை மிகவும் பிரபலமான ஒன்று;

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?
……….
……….
அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

எதைக் கேட்டாலும் இல்லையில்லை என்றும் சொல்லும் கண்மூடித்தனமான நாத்திகத்தையே பகுத்தறிவு என நினைக்கும் பலரின் மத்தியில் உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை விளக்கிட இதைவிடத் தெளிவான வெளிப்பாடு ஒன்று இருக்குமா எனத் தெரியவில்லை. பகுத்தறிவு மட்டுமல்லாமல், எல்லா மதங்களும் கூறும் உயர்வான பரம்பொருள் ஒன்றே என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கும் கவிதை இதுவே.

தனது உள்ளத்தில் முழுவதுமாய்த் தலைவராக ஏற்று, உலகிலேயே ஒப்பாரும் மிக்காருமற்றவராய் நம்பிய மகாத்மா குறித்து அவர் எழுதிய ஒரு மிகவும் சுவையான ஒரு கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து சில பகுதிகளைக் காணலாம்.

தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.
……….…….
புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்
போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில்
களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த
தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும்
உத்தமரைக் ‘கண்டோமா’ என்னும் ஏக்கம்
ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே!

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி
நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட
அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து
அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும்
உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை.

என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால்
எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ?
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ?
கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக்
கரைந்துருகும் காந்தியை நாம் நேரில் கண்டோம்
இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்
எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க

என்ன அழகான சொல்லாட்சி, அருமையான நடை, எளிமையான வெளிப்பாடு, கவித்துவம், உண்மை – தமிழ் பேச, படிக்கத் தெரிந்த அனைவருக்கும் இதனைப் போன்ற கவிதைகளைப் படிக்கையிலே உள்ளம் உவகையில் துள்ளும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மேலும் காந்தியின் பெருமைக்கு ஈடான அவரின் அஹிம்சை குறித்து எவ்வளவு அழகாகக் கூறுகிறார் பாருங்கள்

ஆயுதத்தால் மிகச் சிறந்த ஹிட்லர் எங்கே ?
அவன் துணைவன் முஸோலோனி அகந்தை எங்கே ?
மாயமிகும் போர் புரிந்த டோஜோ எங்கே ?
மாநிலத்தை சீர் குலைத்து மறைந்தார் அன்றோ ?
போர் புகுந்த பிணக்காடாய் உலகைக் கண்டும்
பின்னும் அந்த போர் வெறியைப் பேசலாமோ ?
தாயறிந்த அன்பினையே உருவாய்த் தாங்கும்
தவசி எங்கள் காந்தி சொலும் சாந்தி கொள்வோம் !

மற்றொரு கவிதை, கிட்டத்தட்ட தத்துவம் போலத் தோன்றும் கவிதை. ஆனால் மீண்டும் அஹிம்சை குறித்துப் பேசும் கவிதைதான்.

வெற்றி வெற்றி என்பரேல்
வெற்றி பெற்ற தென்னவோ ?
சுற்றும் முற்றும் பாரெலாம்
சூரை யான ஊர்களும்

பெற்ற தாய்கள் ஓலமும்
போய் புகுந்த கோலமும்
இற்றொழித்த சுற்றமும்
இவைகளே நம் வெற்றிகாண் !

அந்தக் காலத்தில் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த கொடுமையான வழக்கமான தீண்டாமை குறித்து மிகவும் கடுமையாகவும், அதே சமயத்தில் சுருதி தவறாத தமிழ்ச் சொல்லாட்சியுடன் இவ்வாறு சாடுகிறார் கவிஞர்.

செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?
……….
……….
ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும்
நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது
பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும்
பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் திகதி, அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்குத் தமிழகத்தின் அரசவைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவரே தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்.

சாகித்ய அகாடமி விருது பெறும் கூட்டத்தில் இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவுக்கு, நாமக்கல் கவிஞரை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்: “ஆடு ராட்டே, சுழன்று ஆடு ராட்டே என்று பாட்டெழுதி தமிழ் நாட்டையே சுழன்று ஆடச் செய்தவர்”. நாமக்கல் கவிஞரின் தனிப்பட்ட பெருமைகளையும், தேச பக்தியையும், ஆழ்ந்த தமிழறிவையும் விவரமாகவும், சுவையாகவும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விளக்கியதாகக் குறிப்புகள் கூறுகின்றன.

அறிஞர் அண்ணா அவர்களின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற மேற்கோளைக் கேட்டிருப்பீர்கள். அந்த மேற்கோள் நாமக்கல் கவிஞரைக் குறித்து, குறிப்பாக அவரின் தமிழ்ப் புலமை குறித்து அண்ணா வியந்து பாராட்டியதன் வெளிப்பாடு. அரசியல் துறையில் இருவேறு துருவங்களான அமைப்புகளைச் சேர்ந்திருந்தாலும் இவரின் தமிழ்ப் பெருமை தன்னைப் புளகாங்கிதம் அடையச் செய்வதாக அண்ணாதுரை அவர்கள் கவி நயமாகக் குறிப்பிட்ட வெளிப்பாடு அதுவே.

அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே ‘கவிதை’ எனப்படும்.

கவிதையின் இலக்கணமாக நாமக்கல் கவிஞர் குறிப்பிடுவது இதையே.

இந்த இலக்கணம் சற்றும் மாறாமல் தனது கவிதைகளைச் சிறப்புறப் புனைந்து வாழ்க்கையின் வாழும் நெறிமுறைகளிலிருந்து சற்றும் விலகாமல் தனது வாழ்வை நடத்தி செவ்வனே வாழ்ந்த தமிழறிஞராகிய, தேச பக்தரை இந்த உலகுக்கு ஈந்த தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நாம் தலை நிமிர்ந்து நடப்பதில் வியப்பேதுமுண்டோ !!

– வெ. மதுசூதனன்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. லெட்சுமணன் says:

    அவருக்கு சிறப்பு செய்யும் வகையிலேயே தலைமைச்செயலகத்தின் 10 மாடி கட்டிடத்திற்கு அவர் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad