\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இனிய சந்திப்புக்கள்

முன்குறிப்பு – இந்தக்கதை 1600 களில் அமெரிக்க வடகிழக்குப்பாகத்தில் குடியேறிய ஐரோப்பிய மக்களுக்கும் ஆதிவாசிகளிற்கும் இடைப்பட்ட தொடர்புகளை விவரிக்கிறது.

Plymouth_1_620x773களைத்திருந்த புருவத்துடனான டார்சன் தனது கண்ணோட்டத்தை புல்மேட்டுக்கு அப்பால் மலைச்சாரலிடையே ஒடிவரும் ஆற்றை நோக்கிச் செலுத்தினார். ஆமாம் இன்றும் சரக்குப்பண்டங்களை ஏற்றிவரும்  ஓடங்கள் வருவதாகத் தெரியவில்லை.

மெதுவாக அடுப்பங்கரையில்   எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குப்  பக்கத்தில் உள்ள மேசை வாங்கில் குடும்பத்தினருடன் வந்து அமர்ந்தார்.

டார்சன் அவர் மனைவி, மகன் ஒலிவர், மகள் பெர்டசியுடன்  புதிய இங்கிலாந்து என்று கூறப்படும் புதிய கண்ட நிலப்பரப்பில் எங்கோ ஒரு ஆற்றங்கரையில் வாழ்ந்து வருகின்றார். பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கை அண்மைக்காட்டை நம்பியே அமைகிறது.

புதிய இங்கிலாந்து நிலப்பரப்பு பகலில் வெயிலையும் மாலையில் படுங்குளிரையும் தரும் இடமொன்றாகும். இவ்விடம் குடிசையில் அடுப்பானது வாழும் வீட்டிற்கு வெப்பம் தருவதற்காகவும் அதே சமயம் பெரிய உருக்கு இரும்பு  கேத்திலில் உணவு தயாரிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. கேத்திலானது விறகு அடுப்பின் மேலே தொங்குவற்கும் மரத்தில் இரும்புக் கொழுவி ஒன்றும் காணப்பெறும்.

டார்சனின் மனைவி “இன்று இரவுணவு முயல் கூழ்கஞ்சியும், பெர்டசி அயல்காட்டில் பறித்து வந்த ஸரோபெரிப் பழங்களுமே மன்னியுங்கள் ரொட்டியில்லை” என்றார்.

“எப்போது தான் அந்தக் கப்பல்கள் எனக்குக் அன்றாட ரொட்டி செய்யக் கொதுமை மா கொண்டு வரும்?” என்று கூறி வெளியில் ஊடுருவிப் பார்த்து அங்கலாய்த்தார்.

அதனைக் கேட்ட டார்சன் தனது மனைவியாரைப் பார்த்து “தாயாரே நாம் இன்றைய உணவுக்கு முயல்களைக் காட்டில் பிடித்ததே பெரிய விடயம், மேலும் பெருவேட்டை போக துப்பாக்கிக்கு வெடிமருந்தே இல்லை, அடுத்தமுறை வேட்டைக்கு எப்படிப் போவது என்று தான் தெரியவில்லை” என்றார்.

“தந்தையாரே அதுதான் நாம் மீன் பிடித்து சாப்பிடவேண்டும்” என்றான் மகன் ஒலிவர்.

மற்றைய  யாவரும் புன்சிரிப்பாகினர், காரணம் ஒலிவர் எதாவது சாக்கு  சொல்லி ஆற்றில் மீன் பிடிக்கப் போவதையே விரும்புவான் என்பது அறிந்த விடயமே.

டார்சன் சொன்னார் “மகனே நீ மீன் பிடித்து எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் உடனே போய்வா காரணம் அடுத்து நாம் விறகு கொத்த வேண்டும்.”

டார்சனும் ஒலிவரும் போசனம் முடித்து தமது அடுத்த வேலையில் இறங்கினர். உணவு இருக்குமோ இல்லையோ அன்றாடக்குடிலில் விறகு இன்றி நெருப்பில்லை, நெருப்பு இன்றிப்போனால் சமையல் சாப்பாடும் இல்லை, குளிரில் நித்திரையும் இல்லை. எனவே சாப்பாட்டின் பின் உடன் இளைப்பாறுவது என்பது அறியாத கடினமான காட்டு வாழ்க்கையை அனுபவித்தது இந்தக் குடியேறி குடும்பம்.

வெறுங்காட்டில் குடியேறிய  பண்டைய கால ஐரோப்பிய மக்கள் வீட்டு வேலைகளை தாய், தந்தையரும், பிள்ளைகளும் பகிர்ந்து செய்வதே  வழக்கம். பிள்ளைகளின் கல்வியானது கடவுள் துதிப்பாடல்களைத் தவிர்த்து தமது சுற்றாடலில் வாழ்க்கைப்  பிரதானமாகக் கொண்ட அனுபவங்களை வைத்து அமைந்தது. எனவே பெரியவர்களை மதித்து அவர்கள் செய்யும் பணிகளில் சிறுபிள்ளைகள் கை கொடுத்துப் பயில்வதே பிரதான படிப்பு முறை.

ஒலிவரும் பெர்டசியும்  அன்றாட வேலைகள் செய்யும் போது வெறுங்காலில் தான் நடமாடுவர். காரணம் இருக்கும் ஒரே ஒரு சாப்பாத்து ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் போகும் போது இல்லை ஊர்த் தேவாலயம், மற்றும் நடைபேறுகளின் போது பாவிக்கத் தேவையானவை .  எனவே பிள்ளைகள் காலணிகளைப் பக்குவமாக வைத்துக்கொள்வர்.

குடும்பத்து ஆண்கள் விறகு  வெட்ட, தாயார் அடுக்களையில் நிற்க மகள் பெர்டசி சமைக்கும் அண்டாவில் குடிநீர் பெற ஆற்றை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

ஆறு குடிசையில் இருந்து கண்ணளவில் தெரியினும் உண்மையில் பல தூரம் புல்மேடுகளையும் அடர்த்தியான செடிகொடிச்சிறுகாட்டையும் தாண்டிச் சென்று வரவேண்டும். தந்தையார் டார்சன் குடிசையில் இருந்து ஆற்றங்கரை  வரை ஒரு சிறிய பாதையை வெட்டித்தந்திருந்தார்.

இது பளுவான  நீர் கொள்ளும் ஏதனத்தை விழுந்து எழும்பாமல் பல தூரம் வெறுங்காலில் தூக்கி வர ஒத்தாசையாக அமைத்துள்ளது.

பெர்டசி ஆற்றங்கரையில் பாறைகளிடையே அண்டாக் கலத்தை அலசிக் கொண்டிருக்க கடைக்கண்ணில் ஏதோ தெரிந்தது ஆற்றில். உடன் தலை நிமிர்ந்து பார்த்து  வியந்தாள்  .

உடனே வீட்டை நோக்கிச் சைகை காட்டி புற்களினூடு துள்ளி வீட்டாரின் அவதானிப்பைத் தேடினாள். மகள் நீர் அள்ளச்சென்றதை அவதானித்துக் கொண்டிருந்த தாயார், ஆண்களை ஒருக்கால் ஆற்றங்கரையைப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

விறகு வெட்டிக்கொண்டிருந்த டார்சன், ஒலிவரைப்பார்த்து ஏன் பெர்டசி சைகை காட்டுகிறாள் என்று வினவினார். அவனும் பெர்டசி ஏதாவது பாம்பைக் கண்டிருப்பாளோ என்னமோ என்றான். அதே சமயம் டார்சனும் ஆற்றோரத்தை சற்று ஊடுருவிப்பார்த்தார்.

தூரத்தில் ஆதிவாசிகளின் நீண்ட குடைந்த மர ஓடம் பெர்டசி நீர் பெறும் கரையோரத்தை  நோக்கி வருவதை அவதானித்தார். பெர்டசி நீர் பெறும் இடம்தான் ஆற்றடியில் படகு இறங்கும் இடமும் ஆகும்.

டார்சனும் தனது விறகுக்கோடரியைப் போட்டு விட்டு கரையோரத்திற்கு விரைந்தார். ஒலிவரும் தனது கோடரியும் விட்டு விட்டு தந்தையைத்தொடர்ந்தான். ஆதிவாசிகளுடனான ஐரோப்பியத் தொடர்புகள் சர்வசாதாரணமாகிவிட்டன. எனவே ஆதிவாசிகளும் ஐரோப்பியக்குடியேற்றக்காரர்களும் சந்திப்பதும் பண்டமாற்றம் செய்வதும் வழமையான தொன்று. படகு ஆற்றங்கரையை வந்தடைந்து படகில் இருந்து இறங்கியவர்களை ஒலிவர் நோக்கினான். மூன்று பெரியவர்களும் ஒரு சிறுவனும் காணப்பட்டனர். மூன்று பெரியவர்களில் ஒருவர் தலைவர் என்பது அவர் தலையில் அணிந்திருக்கும் கம்பீரமான வெள்ளைப் பருந்து இறகில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

எனினும் அவர்கள் உடைகளும் பாவனையும் தெரிந்த முகங்களாகக் படவுமில்லை. ஒலிவரும், பெர்டசியும் தந்தையுடன் அயல் ஆதிவாசிகளின் குடில்களிற்குப் போய் வந்துள்ளனர். எனவே இவர்கள் வடக்கில் இருந்து வரும் புதிய முகங்கள் என ஒலிவர் ஊகித்துக்கொண்டான்.

டார்சனைப்பார்த்து மகள் பெர்டசி கேட்டாள் தந்தையாரே “நாம் இவர்களை எதிர் பாக்கிறோமா?” என்று. “இல்லை. நீ மேலே போய் தாயாருடன் குடிசையினுள் இருப்பதே நல்லது” என்றார். “இல்லத் தந்தையாரே உங்களுடன் இங்கு இருந்து பார்க்க ஆவலாக உள்ளேன் ஐய்யா” என்று அவாவுடன் வேண்டிக்கொண்டாள் பெர்டசி.

இந்தக் காட்டுக்குடியேற்றங்களில் மனித சஞ்சாரம்  வெகுகுறைவு எனவே பிள்ளைகள் யார் வருவினும் ஆவலுடன் தொடர்பு கொள்ளப் பார்ப்பதும், புதிய தகவல்களைத்தெரிந்து கொள்ள அங்கலாய்ப்பதும் வழக்கம். இதை டார்சன் நன்கறிவார், எனவே மகளை கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டார்.

ஆதிவாசித்தலைவன் டார்சனைக்கண்டதும் “வரவேற்புக்கள் ..வரவேற்ப்புக்கள்” என கைகூலுக்கக் கனிவாகக் கைநீட்டினான் .

பெர்டசி  “அட.. அவர்களுக்கும் எமது மொழி தெரிகிறதே” என்று குசுகுசுத்தாள் தனது சகோதரனிடம்.

உண்மையில் ஆதிவாசித்தலைவன் சசேமிற்குத் தெரிந்த ஒரே ஒரு சொல் அதுதான் எனவே மிகுதி உரையாடல்களை டார்சனும் ஆதிவாசித் தலைவனும் சைகை மொழியிலேயே  பரிமாறிக்கொண்டனர்.

தலைவன் சசேம் தன்னோடு வந்த இரு ஆதிவாசிகளுக்கும் கைச்சாடை செய்ய அவர்களும் படகிலிருந்து பெரிய மதிப்புள்ள பல மிருகத்தோல் சுருட்டிய பொட்டலத்தை ஆற்று மணலில்,  டார்சனின்  அருகில் விரித்தாராகள். ஆதிவாசித்தலைவன் தனது சுட்டுவிரலால் மிருகத்தோல்களையும், தனது ஆதிவாசிகள்-காசு வாங்கும் இடுப்புப் பொட்டலத்தையும் காட்டி இறுதியில் டார்சனையும் சுற்றிக்காட்டினான்.

“ஆ, பண்டமாற்றம் செய்ய வந்துள்ளீர்களா?” என சைகைமொழியிலும் பேச்சிலும் கேட்டார் டார்சன். ஆமாம் என்று தலையாட்டினான் தலைவன் சசேம்.

டார்சன் பதிலாக பாய்க்கப்பல் வந்த பின்னர் தான் தாம் ஆதிவாசிகளுடன் வணிகம் செய்யலாம் அது வரை தன்னிடம் வசதியில்லை என்று தெரிவித்தார்.

சசேம் தோல்களை மீழ எடுத்துப்படகில் வைக்குமாறு தனது ஆட்களுக்குச் சைகை செய்தான். அதே சமயம் டார்சனிடம் தான் டார்சன் கூடியேற்றத்தின் வெள்ளை ஐரோப்பிய வர்க்கத் தலைவரைக் காணலாமா என்று கேட்டான்.

அதற்கு டார்சனும் ஆமாம் என்று கூறி தாம் அவர்களை அவ்விடம் புல் மேடுகளினுடு ஊக்கர் எனப்படும் ஐரோப்பியரின் வீட்டிற்கு அடுத்த நிலப்பரப்புக்கு மூன்று ஆதிவாசிகளையும் அழைத்துச் சென்றார்.

இவற்றையெல்லாம் வியப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர் பிள்ளைகள்.

அதே சமயம் ஒலிவரின் ஒரே ஆர்வம் படகில் வந்த தனது வயதளவில் உள்ள ஆதிவாசிச் சிறுவன் மீதும் அவன் செய்யும் செயல்களிலும் தான். ஒலிவர் தானும் அந்தப் பையன் போல் தோல் ஆடைகளும் மோக்கஸின் என்னும் சப்பாத்தும் போட்டால் எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்தான். அதே சமயம் பாய்மரக் கப்பல் இனியும் வரவில்லை என்றால் இந்த ஆடைகள் அனைத்தும் காலாகாலத்தில் கிழிந்து தானும் ஆதிவாசிகள் போல் மாறிவிடுவோமோ என்றும் தனக்குள் யோசித்தான்.

பெரியவர்கள் உரையாடும் போது சாந்தமாக இருந்த ஆதிவாசிச்சிறுவன் அவர்கள் அகன்ற தருணத்தில், தனது மடியில் இருந்து ஒரு சிறு பிராணியை வெளியே மணலில் விட்டான். அந்தப் பிராணி சிறிய மண்ணிற உரோமத்தையும், குட்டி வெள்ளைக் கண்களையும் நீண்ட வாலையும் கொண்டதாகக் காணப்பட்டது. மெலும் பூனைக்குட்டி மாதிரித் துள்ளித், துள்ளி சிறுவனைச் சுற்றி ஓடி விளையாடியது.

ஆ, அது ஆட்டர்  பிராணி என சுதாரித்துக் கொண்டான் ஒலிவர். ஆற்றங்கரை யோரங்களில் புதிய இங்கிலாந்துப் பிரதேச நீர் சார்ந்த இடங்களில் இந்தப் பிராணிகளை ஒலிவர் கண்டுள்ளான். ஓட்டர் பிராணி இயற்கையாகவே நீரில் சுயமாக விளையாடித்திரியும், எனினும் அது குட்டி நாய் போல ஆதிவாசிச் சிறுவனின் மடியில் சொல் வழி கேட்டு இருப்பது வியப்பாகவே இருந்தது.

பெர்டசி இதைப்பார்த்து விட்டு “ஒலிவர் போய் அந்தப் பையனுடன் பேசு” என்று தனது சகோதரனைத் தள்ளினாள்.

“சரி சரி விடு நான் போய்ப் பேசுகிறேன்” என்று தங்கையிடம் இருந்து விடுபட்டு அந்தச் சிறுவனை அணுகினான் ஒலிவர்.

“நான் இனி தந்தையார் போல சைகைப்பாசையில் தான் பேசவேண்டுமாக்கும்” என்றான் பெர்டசியிடம்.

ஆனால் அவர்களுக்கு வியப்புத் தரும் வகையில் “எப்படிச் சுகம்?” என்றான் ஆதிவாசிச்சிறுவன்.

“ஆகா உனக்கும் எமது பாசை தெரியுமா?” என்று ஆவலோடு கேட்டான் ஒலிவர்.

சிறுவன் தான் தனது தந்தையுடன் மற்றய ஐரோப்பியக் குடியேற்றங்களிற்கு வடக்கில் போயுள்ளதாக சிறு சொற்களிலும், சைகைமூலமும் தெரிவித்தான். பெர்டசி உனது பெயர் என்ன என்று சைகையிலும், பின்னர் சுட்டு விரலால் தனது நெஞ்சத்தைக்காட்டி நான் பெர்டசி என்றாள். ஒலிவர் தனது சுட்டுவிரலால் பெர்டசி போன்று நான் ஒலிவர் என்றும் ஆதிவாசிப் பையனுக்குக் கூறினான்.

அப்பையன் கண்கள் பிரகாசமாகின. நீங்கள் சொல்வது புரிகிறது எனத் தலையால் சைகை காட்டி அடுத்து தனது சுட்டுவிரலால் தன்னைக்காட்டி தன் பெயர் “வானோ” என்றான்.

Plymouth_2_620x850பெர்டசியும் ஒலிவரும் எங்கே இருந்து ஆட்டர் மிருகத்தைப் பிடித்தாய் என்று ஒரே குரலில் கேட்டனர். வானோ ஆட்டரின் பெயர் நிகிக் என்றான். “எவ்வாறு ஆட்டரைப் பழக்கினாய்?” என்று வினவினான் ஒலிவர். கேட்டது என்னவென்று புரியாமல் வானோ “மீன் பார்” என்றான் இருவருக்கும்.

அடுத்து வானோ அவன் செல்லப்பிராணி நிக்கிக்கை படகின் ஓரம் நீரில் விட்டு அவன் மொழியில் ஏதோ சொன்னான். உடனே ஆட்டர் நீரில் குதித்து ஆற்றுக்குள் போனது. பெர்டசி “ஐய்யய்யோ! அந்த பிராணி அநியாயமாக ஆற்று நீரில் முகிழ்ந்து விட்டதே!” என்று கூறி பரிதாபப் பட்டாள். ஆனால் ஒலிவருக்குத் தெரியும் ஆட்டர் ஒரு நீர்நிலைகள் சார்ந்த உயிரினம், அதற்கு நன்றாக நீந்தத்தெரியும் என்று. ஒலிவர் தனது ஆற்றோரக், கடலோர போய் வரல்களில் இதை நன்கு அவதானித்துள்ளான். ஆயினும் இந்த விடயம் பெர்டசிக்குத் தெரியாது, காரணம் அவள் பெரும்பாலும் தாயாருடன் வீட்டில் இருப்பவள்.

எனினும் வானோ ஏன்தான் ஓட்டரை நீருக்குள் விடுவித்தான் என்று சிந்திக்கத் தொடங்கினான் ஒலிவர். அதே சமயம் ஆற்றில் நீரைக் கிழித்து வாலினால் அசைந்து அசைந்து வாயில் பெரிய சாமன் மீனைக் கொண்டு வந்தது ஆட்டர்.

வானோ “பாருங்கள் என் செல்லப்பிராணியின் வேலையை”  என்று பெருமையுடன் காட்டினான் ஒலிவருக்கும் பெர்டசிக்கும். மேலும் ஆட்டர் பிடித்த பெரும் சாமன் மீனை ஒலிவர் கையில் அன்பளிப்பாகத் தந்தான். ஒலிவரும் வானோவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

“ஆகா இப்படிப் பட்ட செல்லப்பிராணி நமக்கும் நல்லதாக அமையுமே” என பிரமிப்புடன் வாய் விட்டுக் கூறினான் ஒலிவர். மேலும் ஒலிவர் வானோவின் அம்பு வில்லிலும் கரிசனம் செலுத்தினான். வானோவும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் எடுத்துக்காட்டினான். ஒலிவர் “நானும் இப்படி அம்பு வில்லு ஒன்றை செய்தால் நன்றாகவே இருக்கும்” என்றான்,

அம்பு வில்லு இருந்தால் வெடி மருந்தே தேவையில்லை, தனது தந்தையாகும் கடினமில்லாமல் வேட்டையிடிக் குடும்பத்திற்கு உணவு பெறலாம் என்றெல்லாம் யோசித்தான் ஒலிவர்.

விவரம் வடிவாகத் தெரியாவிடினும் ஆதிவாசிப் பையன் தனது இடுப்புப் பையிலிருந்து மிகவும் மினுக்கப்பட்ட வாம்பம்-காசில் ஒன்றை ஒலிவர் கையில் அழுத்தினான். ஒலிவர் மனம் நெகிழ்வுடன் இது எனக்கா என்று கேட்டான். வானோவும் ஆமாம் என்று தலையாட்டினான். ஒலிவர் “நீ உன்னிடம் உள்ள அனைத்தையும் எனக்குத் தரத் தேவையில்லை” என்றான். ஆயினும் வானோ ஒலிவரின் கைவிரல்களை மூடி வைத்திருக்குமாறு சைகை செய்து, சென்று வருகிறேன் என்று படகிற்கு விடைபெற்றான். அதே சமயம் இருபிள்ளைகளது  தந்தைகளும் மற்றவர்களும் ஆற்றங்கரையை அண்மித்தனர்.

ஒலிவர் திரும்பி தங்கை பெர்டசியைக் கேட்டான் “நாம் என்ன வானோவிற்குக் கொடுக்க முடியும்?”. அதே சமயம் அவன் தனது காற்சட்டைப் பையைத் துளாவி ஒரு வெள்ளி ஆறு பென்ஸ் நாணயத்தை எடுத்தான். அந்த நாணயம் ஒலிவர் பக்கத்து ஊரில் சிறு வேலைகள் செய்ததில் பெற்ற சிறு ஊதியம். அதை வானோவிடம் கொடுத்தான்.

வானோ விவரம் தெரியாமல் அதை உணவென்று நினைத்து வாயில் போட்டான். பெர்டசி சத்தமாக வானோவிடம் கூறினாள் “எனது அண்ணன் தந்தது தின்பண்டம் அல்ல”.

ஆ அப்படியா இப்போது புரிகிறது என்று தலை, கை பதில் சைகை செய்தான் வானோ.

“சரி சரி நாங்களிருவரும் உடனே பண்டமாற்று வணிகம் செய்ய முடியாவிட்டாலும் எமது பிள்ளைகள் நன்றாகத் தமது நேரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்றார் டார்சன்.

ஆதிவாசித் தலைவனும் மற்றவர்களும் அதை ஆமோதிக்கிறோம் என்று சைகை செய்தனர். பாய்மரக்கப்பல் வந்த பிறகு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று விடை பெற்றனர். டார்சன் விடை கொடுக்க ஆதிவாசிக் குழுவினர் படகை வடக்கு நோக்கிச் செலுத்தினர்.

ஒலிவர், தங்கை பெர்டசியிடமும் தாயாரிடமும் அந்த வானோ மாதிரி ஆட்டரை மீன் பிடித்துத் தரப்பழக்கியும், அம்பு வில்லு எய்து வேட்டையாடப் பழகினால் தான் குடும்பத்திற்கு எவ்வளவு ஒத்தாசையாக இருக்கமுடியும் என்று சொன்னான்.

“நீ சொல்லுவதும் சரிதான் ஒலிவர்,  நான் இரவுணவுக்கு என்ன செய்வோம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், தற்போது வானோ அன்பளித்த மீனை துப்பரவு செய்து தா அதுவே உதவலாக இருக்கும்” என்றார் தாயார். எல்லோரும் சிரித்துக் கொண்டு இரவுணவுக்குத் தயாரானார்கள்.

– யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad