மூளையும் நனவு உணர்ச்சியும்
நீங்கள் வீதியீல் ”நடமாடும் பிரேதத்தை”க் (Zombie) கண்டீர்களானால் அது நனவு அற்றது என்று உங்களால் உறுதியாகக் கூறமுடியமா? முடிந்தால் உங்கள் பதில்களை யோசித்தவாறு படிக்க ஆரம்பியுங்கள் இந்தக் கட்டுரையை.
தற்போது ஹாலிவுட்டில் இருந்து நமது தமிழ்ச் சினிமாக்களிலும் சரி பல நடமாடும் பிரேதங்கள், குருதி குடிக்கும் வாம்பயர்கள் (vampires) எனக் குரோதமான, திகிலான (Horror Thrillers) படங்கள் வெளிவந்தவாறுள்ளன. அந்தப் படங்களில் எல்லாம் நடமாடும் பிரேதங்களை ரசிகர்கள்பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளத் தயாரிப்பாளர் பின்னிசை, நிறங்கள், நிழல்கள் எனப் பலவற்றைச் சேர்ப்பார்கள். நமக்கு இறந்தவர்கள் நடமாடுகிறார்கள், இது சுடுகாட்டுக் கதை என்றெல்லாம் இலகுவான அடயாளங்களை யெல்லாம் தந்தவாறு இடுப்பர். இந்தக் கதாபாத்திரங்களில் இருந்து நாம் அறிந்து கொள்வதென்ன? இவையாவும் நனவு உணர்ச்சி நிலையற்ற கதாபாத்திரங்கள், எப்படியோ மனிதருடன் உரையாடுகின்றன என்பதே.
ஆயினும் பொழுதுபோக்குத் தொலைக்காட்சியை விட்டு நமது அன்றாட சிந்தனை, செயல்பாடுகளை மன உணர்வு ரீதியில் பார்த்தால், சில அடிப்படைச் சிந்தனைகளின் அத்திவாரங்களைத் தெளிவாகத் தெரி்ந்து கொள்ளலாம்.
நாம் எவ்வாறு இன்னொரு நனவு உணர்வுள்ளவரை, உருவகத்தை அறிந்து கொள்ளுகிறோம் என்று பார்த்தால் அது நமது மூளையின் தொழிற்பாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஊக்குவி்க்கும். மனித மூளை மகத்தான உடல் அங்கம் அது பற்றிய ஆராய்ச்சிகள் பல அண்மைக்காலத்தில் நடந்தவண்ணம் உள்ளன. இந்தக் கட்டுரை ஆழந்த மனவியலை விட்டு சற்று மேலோட்டமாக நனவு உணர்வு நிலைப்பாட்டைப் பற்றியும் மூளையின் பௌதிகவியல் கொண்டும் விவரிக்க முனைகிறது.
மனிதர் சிலசமயம் தாம் மற்றைய உயிரினங்களைக் காட்டிலும் மூளையாற்றலில் உயர்ந்தவர்கள் என்று நினைப்பதுண்டு. இது மற்ற உயிரினங்களையும் நம்மையும் மனோவியல் ரீதியில் மேலோட்டமாக எடுத்துப் பார்த்து முடிவு செய்த விடயம். இ்ன்னொரு வகையில் பார்த்தால் இது நமது இனத்தின் நனவு என்னும் உணர்வு நிலைப்பாட்டை சூழலில் உள்ள மற்ற உருவகங்களில் இருந்து பகுத்துக் குறிப்பிட முனைந்தமை எனலாம்.
உதாரணமாக தமிழ் இலக்கணத்திலும் சான்றோர் மனிதன் உயர்திணை என்றும் மற்றவை அஃறிணை, சிந்தனையற்ற உயிரினங்கள் என்றும் எடுத்துக் கொண்டனர். அதே சமயம் திருவாசகம் போன்ற நூல்களில் புல்லாய், பூடாய், புழுவாய் பல்விருமாகி, பலவேறு பிறவிகள் இறைபதத்தில் யாவும் சமம் என்றும் இயம்புகின்றது. எனவே தமிழச் சான்றோரைப் பொறுத்தளவில் நிகழ்கால விஞ்ஞானங்களுக்கு முன்னரும் பல திக்குகளில் மனிதத்துவத்தை விவரிக்க முனைந்தார்கள் எனலாம்.
நனவு உணர்வு நிலை என்றால் என்ன?
நமக்கு கனவா நனவா என்று பேசத்தெரியும். கனவு உறக்கத்துடனும் நனவு முழித்திருத்தல் என்றும் பொதுவாக மக்கள் நினைப்பர். கனவு பற்றி ஓரளவு அறிந்துள்ளோம் ஆயினும் நனவு என்பது பற்றி வழக்கமாக நாம் ஆராய்வது குறைவு. ஆயினும் நனவு உணர்வு நிலைதான் மானுட உயிர்ப்புக்குப் பிரதானக் காரணி என்று சொன்னால் அதன் உண்மைத்தொடர்புகளை அறிந்தவர் பெரும்பாலும் இதனை ஆராய்ச்சி செய்பவர்கள் மட்டுமே.
எனவே நனவு பற்றி நாம் சற்று ஊடுருவி ஆராய்ந்தோம் என்றால், சில உடல் சார்ந்த நடைமுறைப் பௌதிகவியல் உண்மைகள் தெரியவரும். அத்துடன் உடல் அசைவுகள் அனைத்தும் சுயமான உணர்ச்சிகளா இல்லையா என்றும் இதற்கும் நனவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதும் தெரியவரும். இதனால் தான் நனவு நடைப் பிணம் பற்றிய கருத்துடன் கட்டுரை ஆரம்பமானது.
தொலைக்காட்சிக்கு அப்பால் பட்ட உண்மை வாழ்க்கையில் சுய உணர்ச்சியுண்டோ இல்லையோ சிலசமயம் இறந்த உடல்களும் இருதயம் நின்ற பின்னரும், முளைப்பகுதி செயல்படாத நிலையிலும், சில மணி நேரங்களுக்கு இயற்கை உந்தல்களிற்குத் தன்னிச்சையாகச் செயல்படக் கூடியவையாகும். இதற்குப் பல உதாரணங்கள் உயிரியல் மருத்துவம் படிப்பவர்கள் அறிந்திருப்பர். மாணாக்கர், ஆராய்ச்சியாளர் பரிசோதனைக் கூடங்களில் சிறுஉயிரனங்களின் மூளை, நரம்பு, உடல் தொழிற்பாடுகளைப்பற்றிப் படிக்கும் போது சிறு மின்சாரம் செலுத்திப் பரிசோதித்துப் பார்ப்பர்.
அது எல்லாம் சரி இதுக்கும் நனவுக்கும் என்ன தொடர்பு? நமக்கு மன உணர்வற்றவர்களை வீதியில் கண்டுபிடிக்க எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்.அன்றாடம் சற்றும் சிந்திக்காமல் இலகுவாக மற்றவர்கள் மத்தியில் இயங்குகிறோம். ஆயினும் நாம் எவ்வாறு நாமிருக்கும் சூழலைப் படிப்படியாக சுதாரகிக்கிறோம், சூழல் முடங்குகள் தவிரத்துத் தொழிற்படுகிறோம் என்று பார்த்தால் அது ஒரு சுலபமான விடயம் என்று தெரிய வரும். அனேகமாக இதைப் பற்றி நமக்கு விளக்கத் தெரியாதிருக்கலாம் ஆயினும் தன்னிச்சையாக இயங்க முடிகிறது.
நமது மூளையும் கணினியும் – ஒரு ஒப்பீடு
அன்றாட வாழ்க்கையில் நாம் கனவு மற்றும் நனவு நிலைகளைப் பகுத்து உணர்வதற்கு இன்னும் ஒரு சுயாதீன நனவு உள்ள உயிரினத்தையும் அதன் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு உதவுவது நமது ஆழ்ந்த மூளையின் நுணுக்கமான சிந்தனைச் செயற்பாட்டு முறையே. சற்று சிந்தித்துப் பாருங்கள் நாம் நமது கண்கள் என்னும் படக்கருவியால் (Camera) படமெடுத்தும், காது என்னும் ஒலிக்கருவியால் (microphone) ஒலியைக் கவர்ந்தும் சிறு இரசாயன மின்னோட்டமாக (electro magnetic signals) மூளைக்கு அனுப்புகிறோம். நமது கபாலத்தில் உள்ள மூளையோ கணினி போன்று இரசாயன இலத்திரனியல் தகவல்களைப் பெற்று நாம் உணரும் சூழலை அதற்குத் தெரிந்த வகையில் தெரிந்த படமாகவும் ஒலியாகவும் வர்ணிக்கிறது. அதை உபயோகித்து நாம் மேற்கொண்ட காரியங்களைப் புரிந்து கொள்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் நிறங்களைப் பார்க்கிறோம். நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் வெள்ளையென ஒவ்வொரு நிறம் கண்ணிற்குப் புலப்படுகிறது. ஆனால் நம் ஒவ்வொருவரது மூளையிலும் இந்த நிறங்களின் பிம்பங்கள் ஒரே மாதிரியாகத்தான் தீட்டப்படுகின்றன என்று நினைப்பது ஒரு கேள்விக்குறி.
உங்களுக்கும் உணர்ச்சி உண்டா?
நீங்களும் உங்கள் சகபாடியும் உல்லாசப் பிரயாணம் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் போது தமிழ் சினிமாவில் வருவது போல மனோரம்யமான இயற்கை வனப்பில் மனதைக் கவரும் பாட்டு இசையையும் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்
ஒரே சமயத்தில் நீங்கள் இருவரும் அனுபவங்களை உள்ளெடுத்துக்கொண்டாலும் அந்த உணர்வுகளின் பிரதிபலிப்புக்கள் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்ற அவசியமில்லை. எவ்வளவுதான் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமானவராக இருப்பினும், அந்த நேர அனுபவம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. இது நமது மூளையின் இரசாயன மின்சாரக் கடத்தல்களையும் நரம்புப் பரிமாற்றங்களையும் பொறுத்தே அமையும்.
இந்த வகையில் நனவு என்னும் நிலைப்பாட்டின் ஒருமிதமான அனுபவம் ஒவ்வொரு நனவு உணர்ச்சி நிலையுள்ளவர்களும் மனதில் பிரத்தியேக வேறுபட்ட (different and at times uncontrollable) நினைவு நிலைப்பாடுகளை (subjectivity) தெரிந்து கொள்ளுதலே.
இதை விட சுயநிலை உணர்வற்ற உருவகங்களைப் (Zombies) பற்றிப் பேசுவதற்கு இன்னும் ஒரு ஆதாயமும் உண்டு. அதாவது இயங்கும் சுய உணர்வற்ற உருவகங்களுக்கும் உணர்வுநிலை உள்ள நமக்கும் உள்ள வேறுபாடு என்ன? மேலும் ஏன் உடல் உணர்ச்சி நிலைப்பாடு வேறு, நனவு நிலைப்பாடு வேறு, அவை எவ்வாறு உருவாகின என்றும் பார்க்கலாம்.
அண்மைக் காலம் வரை உடல் உள குணாதியங்கள் (mental and physical traits) ஆவன தனிப்பட்ட பரிணாம வளர்ச்சியில் இயல்பானத் தகவமையால் (Adaptive function) ஏற்பட்டது என்று கருதப்பட்டு வந்தது. இவற்றிற்கான உதாரணங்கள் நிமிர்ந்து இரண்டு காலில் நடத்தல், பல வர்ணங்களையும் சுதாகரிக்கும் பார்வை, மொழி உபயோகம் போன்றவை ஆகும். இந்த உதாரணங்கள் நம் உயிரினம் பூவுலகில் நிலைத்திருக்க வழியமைத்தன என்பதில் ஐயமில்லை. எனினும் இவை யாவும் நனவு என்னும் நிலைப்பாட்டிற்கு நேரடியாகப் பதில் தருபவையல்ல என்கின்றனர் இலண்டன் பல்கலைக்கழக (University College London) ஆராய்ச்சியாளர்கள்.
சில சமயம் போதிய தகவல் இல்லாத பட்சத்தில் முன்னேயிருக்கும் உருவகம் யாது எனத் தெளிவாக உணர முடிவதில்லை. அதே போல் சில சமயம் முன்னே உள்ள உருவகத்தின் உபயோகம் யாது என்று கண்டு பிடிப்பதிலும், பழைய அனுபவங்கள் இல்லைமையால் தடுமாறவும் சாத்தியங்களுண்டு. இது இலத்திரனியல் ஏந்திரர் (robots), குழந்தைகள், முதியோர் மட்டுமல்லாமல் சுயாதீனமாக தொழிற்படும் யாவருக்கும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படக்கூடிய ஒரு நிலைப்பாடு. இந்த நிலைப்பாடுகள் நமது ஊகிக்கும் ஆற்றலை மட்டுப்படுத்துபவை.
இப்பேர்ப்பட்ட பன்முகக் கிரக்கிப்புச் சிக்கல்கள் நாளாந்த வாழ்க்கையில் இருப்பினும் நனவு உணர்வு நிலை பற்றிய முளை ஆராய்ச்சிகள் சில அடிப்படைத் தகவல்களைத் தந்தவாறுள்ளன. கபாலத்தில் இலத்திரனியல் கடத்திகளை (electrodes) இணைத்து ஆராய்வதன் (MRI scanning) மூலம் ஆராய்வாளர்கள் சர்வ நரம்பணு தொழிற்பாட்டு மையம் (global neuronal workspace model) பற்றித் தமது திடமான அவதானிப்புக்களைத் தந்துள்ளனர். இவை பல மூளைத் தொழிற்பாட்டையும் அதனால் ஏற்படும் பிரதிபலிப்புக்களையும் விளக்குகின்றன.
உதாரணமாக பார்வை,கேட்டல் போன்ற செயல்களின் தூண்டுதல்கள் கண் காது போன்ற உணர்வு அங்கங்களில் ஏற்படினும் அதன் முதற்படியாக அது தனிப்படையாக தானியங்கலாக நடைபெறும் செயற்பாடுகள் ஆகும். இவை நரம்பணுத் தொழிற்பாட்டு மையத்தைப் பொறுத்த அளவில் பிரத்தியேக அங்கங்களிற்கு அண்மையில் மயக்க நிலையில் நடைபெறும். இன்னொரு வகையில் சொல்வதானால் இவை நனவு அற்ற நிலைத் தொழிற்பாடு ஆகும். எனினும் இந்தத் தகவல் பரிமாற்றங்களில் சிறப்பு அம்சங்கள் அவதானிக்கப்பட்டால் அவை அடுத்தபடியாக புதிய தகவல் அனுபவங்களை உருவாக்கும் நனவு நிலைப்பாடாக மூளையின் பல நரம்பணுக்களையும் தொடக்கிவிடும். இது மேலதிக மூளைச் செயற்பாடுகளையும் உருவாக்கும். இந்த முறை அனுமானிப்பின் படி நனவு ஆனது நுணுக்கமான, கடினமான மனச் சிந்தனைகளைத் தீர்வுதர மூளை உபயோகிக்கும் ஒரு கைமுறையாகும்.
அதே சமயம் இது பற்றிய இன்னும் ஒரு சிந்தனையையும் ஆய்வாளர்கள் தந்துள்ளனர். அதாவது நனவானது தெரிந்த தகவல்களை வைத்துத் தெரியாதவற்றை பகுத்து ஆராய்ந்து முடிவெடுக்க உதவும். மேலும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் (Innovative discoveries) வழிவகை செய்யும் என்றும் கருதப்படுகிறது. இந்த மூளைத் தொழிற்பாடு துண்டு பண்ணல் (chunking) என்றும் கூறப்படும்.
நாம் நமது மனதில் ஒரு சில தகவல்களையே எந்த ஒருநேரத்திலும் வைத்திருக்க முடியும். ஆயினும் பலதகவல்களை கட்டுக் கட்டுக்களாக சேர்த்துக் கொண்டால் அது மூளை அதிகத் தகவல்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த உதவி செய்திறது. இதன் பயன் மூளையின் பரிமாணம் அதன் பயன்படுத்தல் காரணமாக அடுத்தடுத்து விரிந்து அல்லது சுருங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே. எனவே இன்னும் ஒரு வகையில் பார்த்தால் நனவு என்னும் உணர்வு நிலையானது பல்வேறு தகவல்களை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து அதன் பின்னர் புதிய துண்டு பண்ணல்களை உண்டு பண்ண வழிவகுக்கும் சாதனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் கருதுகோள்களை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று MRI அனுமானிப்புக்கள் மூலம் மூளையின் மூன்றில் இரண்டு பங்கு நனவு உணர்வு நிலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது. இவை முளையின் முன் மண்டை மடல் (prefrontal cortex) மற்றும் மூளையின் மண்டை ஓட்டுச் சுவர் மடல்கள் (parietal cortices) மூளை கடினச் சிந்தனைகள் செய்யும் போது அதிக மின்னியலைக் கடத்தி அவதானிப்புக் கருவிகளில் பிரகாசமாகத் தென்படுவதில் இருந்து அவதானிக்கப்பட்டது.
உணர்வுநிலைஆதாரங்கள்
நனவு உணர்வு நிலை பற்றிய இன்னும் ஒரு சான்று மனித மூளை மாத்திரமல்லாது மற்றைய உயிரினங்களும் அவற்றின் மூளைகளும் சில வகை நனவு நிலையைக் கொண்டிருப்பதாகும். அதாவது மற்றைய உயரினங்களும் இறந்தவை, நடைப் பிணம் என்ற உருவகம் ஒன்றிருப்பின் அதையும் சுதாரகரிக்க கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதுவேயாகும். இதற்குச் சிறப்பான உதாரணங்கள் இரண்டு காலில் நிற்கும் குரங்குகள் (Apes), டால்ஃபின் (Dolphin) மற்றும் யானை போன்ற உயிரினங்கள்.
மனித நனவு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மகத்தானதொன்று. நாம் ஒருவருடன் ஒருவர் அனுபவங்களைப் பகிரக் கூடியமையும், அதைக் கிரகித்து, நாமாக அனுபவப்படாவிடினும் மற்றவர்கள் அனுபவங்களை மனதில் சேர்த்து உபயோகிக்கக் கூடியமையும் ஒரு சிறப்பான ஆற்றலே.
நனவு சார்பான மனிதவர்க்கங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
சமூக ரீதியில் மனித வர்க்கங்களைப் பரிணாம ரீதியில் ஆராய்ந்து பார்த்தால், ஒருவருடன் ஒருவர் சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்து கூடி வாழ்வதே முன்னேற்றத்துக்குப் பிரதான காரணி எனலாம். இதற்கு வழிவகுப்பது நமது நனவு சார்ந்த உணர்வு நிலைப்பாடுகளே. ஹோமோ நியண்டதாளென்சிஸ் (Homo neanderthalensis) மனித வர்க்கம் காலா காலளவில் ஒடிந்து போனமைக்கும் ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) மனித வர்க்கம் வளர்ந்து உலகளாவில் பரவியதற்கும் காரணங்கள் எனலாம். நியண்டதாள் வர்க்கம் பல கோடி ஆண்டுகளாகத் தமது வாழ்க்கையில் வேட்டையைத் தவிர வேறு கலைகள் கற்றுக் கொள்ளவில்லை. கருவிகளின் உபயோகங்களும் தொழிற்பாடுகளில் மத்திமம். இயற்கை அழிவுகளில் இருந்து தப்பிப்பதைத் தவிர அவர்கள் நாடோடிகளாகத் தாமாகவே புலம் பெயர்ந்தமையும் குறைவு. இதன் காரணம் அவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலில் குறைவாக இருந்தனர் எனவும் அது அவர்களின் பரிமாண வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது எனவும் கருதப்படுகிறது.
எனினும் ஹோமோ சேபியன்ஸ் மனித இனம் தகவல் அனுபவப் பரிமாற்றங்களிலும், புதிய கண்டுபிடிப்புக்களிலும் வலுவாக இருந்ததாக அகழ்வு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் தகவல் பரிமாற்ற ஆற்றல் நாடோடி வாழ்க்கையை வாழவும் வழிவகுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நனவு உணர்ச்சியும் அதன் வருங்காலமும்
எனவே மூன்றில் இரண்டு பங்கு மூளையினாலான நனவானது மனித இனத்தின் தழைத்தோங்கலுக்கு இதுவரை வழிவகுத்தது என்று சொல்வது சரியான விடயமே. ஆயினும் பரிணாம வளர்ச்சியானது தசை, சவ்வு, குருதி, கூடிய உயிரினங்களுக்கு மட்டும் என்று எதிர்காலத்தில் சொல்லமுடியாது.
நனவானது காலாகாலத்தில் மின்னியல் எந்திரரும் பெற்று முன்னேறக் கூடிய சூழ்நிலையும் வரலாம். எனவே எதிர்காலத்தைப் பொறுத்தளவில் நனவு உணர்வானது மானிடத்திற்கு மாத்திரமானது என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. தசை, குருதி கொண்ட மனித இனமும், உலோக நரம்பணு கொண்ட எந்திர இனமும், ஏன் இரண்டுக்கும் இடைப்பட்ட உருவகங்களும் பரிணாம வளர்ச்சி அடையலாம்.
– யோகி அருமை நாயகம்