தமிழனென்று சொல்லடா – அருணகிரிநாதர்
ஏற்கனவே எழுதியுள்ளபடி, தமிழுக்குத் தொண்டு செய்த பெரியவர்களைப் பற்றி எழுதுவதே இந்தத் தொடரின் நோக்கம். மேற்கத்திய மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர் சமுதாயம் மட்டுமின்றி, தினந்தோறும் தமிழ் தமிழென மேடைகளில் முழங்கி, தமிழால் வயிற்றுப் பிழைப்பை நடத்தி, ஆனால் தமிழுக்கென எந்தவிதத் தியாகமும் புரிந்திடாத போலித் தமிழறிஞர்கள் பலரும் அறியாத அல்லது அறிந்து கொள்ள முயலாத இன்னொரு மாபெரும் தமிழறிஞர் அருணகிரிநாதர். அவர்கள் அறிந்து கொள்ள முயலாததற்குப் பல சொந்த லாபங்களே காரணமென்று அவர்களை ஒதுக்கிவிட்டு நாம் நம் போக்கில் நல்லவற்றைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.
வாழ்வில் பெரிய அளவில் தவறுகள் புரிந்திருந்தாலும், மனதார உணர்ந்து, திருந்தி, நல்வழிப்பட முயல்பவருக்கு அவரவர்களின் நம்பிக்கைக்கேற்ப அரூபமான தெய்வமோ அல்லது அனைவரும் உணரும் இயற்கையோ வழிகாட்டுதலாக அமையும் என்பதற்கு அருணகிரிநாதரின் வாழ்வு மிகப் பெரிய உதாரணம்.
அவரின் பிறந்த ஊர் பற்றி இறுதியான கருத்து இல்லையெனினும், பொதுவாகப் பலர் அவர் திருவண்ணாமலையில் பிறந்ததாகக் கணிக்கின்றனர். வேறு பலர் காவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து, பின்னர் திருவண்ணாமலையில் குடியேறியதாகவும் கூறுகின்றனர். எது சரியாக இருப்பினும், தனது வாழ்நாளின் பெரும்பாலான பகுதியை ஆண்டிமடம் எனப் பெருமையாய் அழைக்கப்படும் திருவண்ணாமலையில் கழித்த மற்றுமொரு ஞானதேசிகன் அருணகிரிநாதர் ஆவார். அவர் வாழ்ந்த காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு.
அருணகிரிநாதரின் தந்தையார் பெயர் திருவெங்கட்டார் மற்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கூறப்படுகிறது. அவரின் தமக்கையார் இவரின் மீதிருந்த பாசத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் இவரைக் கவனித்துக் கொள்வதிலேயே காலம் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இவருக்கு உரிய வயதில் திருமணம் நடந்தேறியது. ஆனாலும், மிகவும் பெண்ணாசையுடையவராகக் காலம் கடத்தி வந்துள்ளார். பெருவியாதி எனப்படும் தொழுநோயால் பீடிக்கப்பட்டார். தொழுநோய் பீடித்தவரிடம் யாரும் நெருங்கிடா நிலையில், மனைவியும் வெறுத்தொதுக்கினார். பெண்ணாசையால் அவதியுறும் தம்பியிடம், தமக்கையானவர் மிகுந்த வேதனையுடனும், கோபத்துடனும் தன்னையே கொள்ளுமாறு கூற, தன்னுடைய தவறால் குடும்பம் அடைந்த நிலையை எண்ணி வெட்குற்று, மனம் திருந்தினார். உடனடியாக வீட்டை விட்டும் வெளியேறினார்.
கால்போன போக்கில் சென்ற அருணகிரிநாதரை ஒரு பெரியவர் சந்திக்க அவரே அருணாசலேஸ்வரர் என எண்ணலானார். அருணாசலேஸ்வரர் போலத் தோன்றிய அந்தப் பெரியவர் குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்து சென்றாராம். அதன்பிறகும் குழப்பத்தில் தொடர்ந்த அருணகிரிநாதரின் மனநிலை அவரைத் திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. குதித்துத் தற்கொலை செய்து கொள்ளவிருந்த அருணகிரிநாதரை, குன்றுதோராடும் குமரக் கடவுளே தன் இரு கரங்களால் தாங்கி உயிர் காத்ததாகச் சொல்லப்படுகிறது.
இது நாத்திகம் பேசுபவர்களால் ஏற்றுக் கொள்ள இயலாத கருத்து என்பது நமக்கு விளங்குகிறது. இருக்கிறதா, இல்லையாவென ஆராய்ச்சி செய்யும் பகுத்தறிவு உள்ள நம் போன்றவர்கள் கொள்ள வேண்டிய விளக்கம் ”தன் உள்ளம் முழுவதும் முருகக் கடவுளை ஒருமுகமாய் நினைந்து நின்ற அருணகிரிநாதரின் தற்கொலை எண்ணம் அவரின் அழுத்தமான முருகக் கடவுள் மேலிருந்த பக்தியால் பொடிப்பொடியானது” என்பதேயாகும்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர், அருணகிரிநாதர் தேனொழுகும் தமிழினிலே முருகக் கடவுள்மீது தெவிட்டாத பாடல்கள் பல புனைந்துள்ளார். அவரின் படைப்புக்களில் கீழ்க்கண்ட நூல்கள் மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிடப் படவேண்டியவை;
திருப்புகழ்
கந்தர் அந்தாதி
கந்தரலங்காரம்
கந்தர் அனுபூதி
திருவகுப்பு
சேவல் விருத்தம்
மயில் விருத்தம்
வேல் விருத்தம்
திருவெழுக்கூற்றிருக்கை
இவற்றில் பல இடங்களில் அவர் யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் என இலங்கையிலுள்ள பல இடங்களையும் குறித்துப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பித்தக்கது.
தமிழில் சந்தக் கவிகளுக்கு ஆதி கர்த்தா அருணகிரிநாதர் என்றால் அது மிகையாகாது. “திருப்புகழைப் பாடப் பாட, வாய் மணக்கும்” என்பதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். திரைப்படத்தில், எந்தவித தொழில் நுட்ப உயர்வுகளும் இல்லாத அந்தக் காலத்திலேயே டி.எம். சௌந்தரராஜன் மூச்சுவிடாமல் பாடிப் பெருமைப்படுத்திய “முத்தைத் தரு பத்தித் திருநகை” பாடல் அருணகிரிநாதரின் திருப்புகழிலிருக்கும் புகழ் பெற்ற வரிகளெனப் பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது ஐயமே. பெருமைக்குரிய இந்தத் திருப்புகழில் 1307 இசைப் பாடல்கள் குவிந்துள்ளன. மேலும், இவை 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுடன் இருப்பதாகவும் தமிழிசை மேதைகள் கணித்துள்ளனர்.
திருப்புகழின் மேலான பொருள் என்னவென்று ஒரு சிறு பார்வை செய்வோம். இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளைத் தந்து அருள வேண்டும். அதாவது, உலகிலுள்ள உயிரனங்களனைத்திற்கும் ஆரோக்கியமான வாழ்வை வேண்டிச் செய்யும் ஒரு பிரார்த்தனை இதுவாகும். இதிலென்ன பிழையிருக்க முடியும்?
திருப்புகழிலுள்ள சொல்லாட்சியும், அச்சொற்பிரயோகத்தில் வரும் சந்த நயமும், கேட்போரைக் குளிர்விக்குமென்பதில் நமக்கேதும் ஐயமில்லை. ஒருசில வரிகளைக் கீழே பாருங்கள், அதனைச் சற்று சரளமாய் படித்துப் பாருங்கள், உங்களையறியாமல் அதிலுள்ள இசை உங்களை ஆட்கொள்ளும்;
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ….. எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ….. அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….. இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….. ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ….. கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ….. முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ….. பெருமாளே.
திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. ஞான மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பாடல்களின் உட்பொருள் சற்று எளிதாகப் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்த, விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து, அவருடன் நட்பும் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். இந்த மன்னன் அருணகிரி நாதரை மரியாதையுடன் பேணிக் காத்து வந்தான். இந்த மன்னனின் அரசாட்சிக் காலத்தில் வாழ்ந்து முடித்ததாக அருணகிரிநாதரின் வாழ்வு குறித்துக் கூறப்படுகிறது.
சாதாரண மனிதனாகச் சுகபோகங்களில் திளைத்து, ஒரு சமயத்தில் விரக்த கதியில் ஞானம் பெற்று, பக்தி மார்க்க வழியாகவே ஞான மார்க்கத்தைப் பெருமளவு போதித்த அருணகிரிநாதரின் பெருமையை மேலே குறிப்பிடப்பட்ட அவரின் தமிழாக்கங்களின் மூலம் படித்தறியலாம். ஞான மார்க்க விடயங்களைத் தெள்ளு தமிழில் விளக்கிய பெரியவர் அருணகிரிநாதரை வணங்கி, அவரின் ஆக்கங்களைப் படித்துப் பயன் பெறுவோமாக!!
– வெ. மதுசூதனன்.
Hi Madhu :
Nice writing and provided detailed information.
thank you.
Bala