ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8
பிரிவுத்துயர்
எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ சொல்லி மீளாதவை.
“கடிதங்களில் வாழும் மனிதரானோம்
ஐந்து வருடங்கள்
மனைவியுடனும் சின்ன மகனுடனும்
கடிதத்தில் குடும்பம் நடத்தும்
என் நண்பன்
எட்டு வருடங்கள்,
தாயின் முகத்தை
கடிதத்தில் தேடும்
என் மச்சான்….” 1
கடிதங்கள்தான் உறவுப் பாலங்களாக நீள்கின்றன. குடும்பங்கள் சின்னாபின்னமாகி, உறவுகளைக்கூடச் சந்தித்து ஆறுதலடைய முடியாத நிலையில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் தமது வாழ்நாளின் பாதிக் காலத்துக்கு மேல் புலம்பெயர்ந்த நாடுகளிலேயே கழித்து விடுகின்றனர். வேறு சிலர் அகதி அந்தஸ்துப் பெற்று தான் சென்று வாழும் நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிடத் துடிக்கின்றனர்.
“ஒரு அகதி விண்ணப்பம்” 2 என்ற அர்ச்சுனாவின் கவிதையில் முற்றுப்பெறாத ஒரு அகதி விண்ணப்பம் பற்றிய நினைவுகளாக நீள்கின்றது. ரசனையற்ற வெறுமையான வாழ்வின் நிலை கூறி, தமது சொந்தங்கள், மனைவி, பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அகதி அந்தஸ்துக்காக அலைந்து திரிவதையும் கூறி நீண்டு செல்கிறது இந்தக் கவிதை.
‘அம்மாவுக்கு’ என்ற கவிதையில் வரும் சில வரிகள் வாழ்வில் வெறுப்புற்ற, பிரிவுத்துயர் மிகுதியினால் தவிக்கும் சிலரின் மன உளைச்சலினை வெளிப்படுத்துவதாக உள்ளன.
“வாழ்க்கையொன்றும் அழகாக இல்லை
அருவருப்பான
மண்புழுவைப்போல்
சொதசொதவென
நாட்கள் நகர்கின்றது.” 3
வாழ்வை விற்று வயிற்றுப் பிளைப்புக்காகப் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சென்று உழைத்துக் களைத்துச் சலித்துப் போன இளைஞர்களின் நலிந்து போன குரலாக ஒலிக்கின்றது வ.ஐ.ச.ஜெயபாலனின் ஒருகவிதை.
“யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிறாங்பேட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்…” 4
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் திசைக்கொன்றாய்ப் பிரிந்து, உலகெங்கும் பரந்து வாழும் நிலையில், குடும்ப நிகழ்வுகளில் கூடப் பங்கெடுக்க முடியாமல் சீரழிந்து அவலப்படுவதாகக் கவலை கொள்கிறார் கவிஞர். புலம்பெயர்ந்த பலரின் இன்றைய வாழ்வியல் நிலையினை, அனுபவப் பகிர்வுகளை, தாயக உறவுகள் பற்றிய ஏக்க உணர்வுகளை, புலம்பெயர்ந்தவர்களின் மனோவியல் நிலைகளினைப் படம் பிடித்துக் காட்டுவதாக மேற்படி கவிதை வரிகள் அமைந்து விளங்கின.
அடிக்குறிப்புகள்
23. திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.63
24. மேலது, பக்.105-106
25. மேலது, பக்.70
26. மேலது, பக்.38
-தியா-
தியா மிக அருமையான கட்டுரை.
சத்யா
நெகிழ்ச்சியான மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது