இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6
கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனை போலீஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் விளக்கி கார்டையும் ஒப்படைக்கிறான்.
ஆனால், ராஜேந்திரன் அந்தக் கார்டுடன் தனது பர்ஸ் முழுவதையும் தவற விடுகிறார். அதே நேரத்தில் இறந்த சபாரத்தினத்தின் சம்பந்தி சண்முக சுந்தரத்திடம் போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. தட்சிணா மூர்த்தியின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர் தேசிகனின் மகள் டாக்டர் புஷ்பா கடத்தப்பட்டுகிறாள். தட்சிணா மூர்த்தியை அவர் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக ஃபோனில் டாக்டருக்கு மிரட்டல் வருகிறது. இதற்கு நடுவில் செல்வந்தர் வேலாயுதமும் ஒரு சில தனவான்களும் தட்சிணா மூர்த்தியிடம் சிக்கிய மைக்ரோ எஸ்.டி கார்டை எவ்வாறு கைப்பற்றுவது எனப் பேசிக் கொண்டு இருக்கின்ற பொழுது, வேலாயுதம் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அவரைத் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கையில் ஒரு தொலைபேசிச் செய்தி தந்த கலவரத்தால் உடனடியாக எழுந்து செல்கிறார்.
ராஜேந்திரன் தவற விட்ட பர்ஸைக் கண்டெடுத்த துப்புறவு ஊழியன் மாசான், பர்ஸிலிருந்த பணத்திற்காக அதனைத் தானே வைத்துக் கொள்வது என்று முடிவு செய்கிறான். அப்பொழுது அதனைத் தேடி மருத்துவமனை வளாகத்திற்கு வந்த ராஜேந்திரனைச் சந்திக்கிறான். இதனிடையே கல்லூரியிலிருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பாரதி, சிலரால் கடத்தப்பட்டு ஒரு பாழடைந்த கட்டிடத்திற்குள் கட்டி வைக்கப்பட்டிருக்கிறாள்.
அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
திங்கட்கிழமை மாலை ஆறு மணி:
சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தனது மோட்டர் சைக்கிளில் புதுவயல் கிராமத்திலிருந்து காரைக்குடி பைபாஸ் ரோட் வழியாக தேவகோட்டை நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருக்கிறார். வேலாயுதத்தைத் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கையில் வந்த தொலைபேசி அழைப்பின் மறுமுனையில் கூறப்பட்ட தகவல், “சார், இங்குண ஒரு பொம்பளப் புள்ளயக் கட்டிப் போட்டு வச்சுருக்கானுவ சார்… யாரு, எவருன்னு வெளங்கல, நா ஆடு மேச்சுகுனு இருக்கையில பொறகால இருக்குற குட்டிச்சுவரு வளியாப் பாத்தே சார்…..” அதனைத் தொடர்ந்து முருகன் ராஜேந்திரன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துப் போலீஸ் படை ஒன்றை அனுப்பக் கோரிவிட்டு, தானும் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்.
ஒரு இருபது நிமிடப் பயணம், தொலைபேசிச் செய்தி சொன்ன இடத்தை அடைந்து விட்டார் முருகன். ரைஸ் மில்லைக் கடந்து சற்றுத் தொலைவிலிருந்த பாழடைந்த கட்டிடத்தின் வாசலில் நிறுத்தப் பட்டிருந்த பாரதியின் காரைப் பார்க்கிறார் முருகன். தானழைப்பு விடுத்த காரைக்குடிப் போலிஸ் படை இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை என்பதை உணர்ந்த முருகன், சற்றுத் தொலைவிலேயே மோட்டார் சைக்கிளின் இன்ஜினை அணைத்துவிட்டு ஒரு மரத்தின் பின்னால் மறைந்து என்ன நடக்கிறதென நோட்டமிடத் தொடங்குகிறார்.
ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்தக் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக ஒருவன் நடந்து வருவது நிழலாகத் தெரிய, சற்று உன்னித்துக் கவனிக்கத் தொடங்குகிறார். இன்னும் ஓரிருவர் நெருக்கமாகப் பின் தொடர்வது தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அவசரத்தில், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பைனாகுலரை எடுத்துப் பார்க்கத் தொடங்குகிறார். இப்பொழுது அந்தக் காட்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது, மூன்று ஆண்கள் மயக்க நிலையிலிருந்த பெண்ணொருத்தியைச் சுமந்து கொண்டு நடந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் வெளியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரை நோக்கி விரைகின்றனர்.
போலீஸிற்கு விஷயம் தெரிந்தது இவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், அதனால் இடத்தை மாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்த முருகன், காரைக்குடிப் போலீஸ்படை இன்னும் வராததால், தானே அந்தக் காரைத் தனது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்வது என முடிவெடுக்கிறார்.
அந்தக் கார் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பிறகு அதனைப் பின் தொடர்ந்து செல்வதற்காக பைக்கைச் சற்று கட்டிடத்தின் முன்னர் திருப்பிய முருகன், கட்டிட வாசலில் யாரோ ஒருவன் படுத்திருப்பது போலத் தெரிய, சற்றுக் குழப்பமடைகிறார். பைக்கை அவசரமாகப் படுத்திருப்பவன் அருகில் ஓட்டிச் சென்று பார்த்துவிட்டு உடனடியாகக் காரைப் பின் தொடர்ந்து செல்லலாம் என்று நினைத்துச் சென்ற முருகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுத்திருந்ததாக முருகன் நினைத்த அந்த மனிதன் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவனது உருவத்தையும் உடையையும் பார்க்கையில் ஒரு ஆடு மேய்க்கும் இளைஞனைப் போலக் காணப்பட, இவன் தான் தனக்கு ஃபோன் செய்திருக்க வேண்டும் என ஊகித்தார். காரைப் பின் தொடர்ந்து செல்வதைவிட இவன் அருகில் சென்று இவனைக் காப்பாற்ற முயல்வது என்று முடிவு செய்து பைக்கை நிறுத்தி விட்டு இறங்கி நடக்கலானார் முருகன்.
திங்கட்கிழமை மாலை ஆறு மணி முப்பது நிமிடம்:
கானாடுகாத்தான் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சிலிருந்து பல விவரங்களை அறிந்து கொண்டிருந்தார் கான்ஸ்டபிள் ஏகாம்பரம். தான் கண்டுபிடித்த விபரங்களனைத்தையும் ஹெட் கான்ஸ்டபிள் சுப்பையாவிடம் முழுவதுமாக விளக்கியதோடல்லாமல், தனது பணியின் கோட் ஆஃப் காண்டக்ட் சொல்வதேற்ப அத்தனை விவரங்களையும், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து சபாரத்தினம் கொலைக் கேஸ் என்று எழுதப்பட்ட கோப்பில் பத்திரமாக வைத்தார்.
அவர் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சிலிருந்து அறிந்த விபரம், சபாரத்தினத்துடன் ஃபோன் செய்த ஆசாமி ஒரு கிராமத்து வீட்டிலிருந்து பேசியிருக்கிறான் என்பதே. அந்த வீட்டு ஃபோன் ராமநாதன் என்ற பெயரில் பதிவாயிருந்தது. அந்த ராமநாதனின் முகவரியும், ரோடில் குத்தப்பட்டு விஸ்வேரஸ்வய்யா மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை முடிந்து படுத்துக் கிடக்கும் ஃபோட்டோகிராஃபர் தட்சிணா மூர்த்தியின் முகவரியும் அருகருகே உள்ள வீடுகளெனத் தெளிவு படுத்தின.
தவிர அந்தத் தொலைபேசியிலிருந்து வேறு எந்த நம்பர்களுக்கு எல்லாம் ஃபோன் செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் அறிந்து வைத்திருந்தார் ஏகாம்பரம்.
பல அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான அழைப்புகள் இந்தக் கொலைக்குத் தொடர்புடையதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு சில அழைப்புகள் இதனுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புடையவர்களுடன் பேசியது போலப் புலப்பட்டது.
ஒன்று, வேலாயுதம் மற்றும் தனவந்தர்கள் சீட்டு விளையாடும் கிளப்பின் தொலைபேசி எண். இந்த நம்பருக்கு முந்தைய இரவு இரண்டு அழைப்புகள் சென்றுள்ளன.
இன்னொன்று, குத்துப் பட்டுக் காயமடைந்திருந்த தட்சிணா மூர்த்தியை மெனக்கெட்டுத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துக் கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருந்த கணேஷின் செல்ஃபோன் நம்பருக்குச் செய்யப்பட்டிருந்தது. அவனின் அவுட்கோயிங்க் கால்களையெல்லாம் கம்ப்யூட்டரில் போட்டு ஆராய்ச்சி செய்ததில் கிடைத்த ஒற்றுமைகள் இவை. கணேஷிற்கு வந்த மிரட்டல் தொலைபேசிகளைப் பற்றிக் குறிப்புகள் இருந்ததால், அவனை மிரட்டி ஃபோன் செய்தது ராமநாதன் தான் என்று போலீஸ் தரப்பிலிருந்து முடிவுக்கு வந்திருந்தனர்.
அது தெரிந்தவுடன், ராமநாதனை விசாரிக்க ஏட்டு சுப்பையாவும், கான்ஸ்டபிள் ஏகாம்பரமும் ஜீப்பில் புறப்பட்டு அவன் இல்லம் நோக்கிச் சென்றனர். வெளியிலிருந்து பார்த்த பொழுது ராமநாதனின் வீடு திறந்து கிடந்தது. திறந்து கிடந்த வீட்டைப் பார்த்ததும் சுப்பையாவும் ஏகாம்பரமும் உஷாரானார்கள். சுப்பையா இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கையில் தயார் நிலையில் வைத்துக் கொண்டு உள்நோக்கிச் செல்ல, ஏகாம்பரம் அவரைக் கவனத்துடன் பின் தொடர்ந்தார்.
உள்ளே நுழைந்தவுடன் வீட்டில் பெரிய அளவு கலவரம் நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டனர். கவனத்துடன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வீட்டின் உள் கட்டை அடைந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே வெறுந்தரையில் ரத்த வெள்ளத்தில் ஒரு ஆண் இறந்து கிடந்தான். அருகில் சென்று முகத்தைப் பார்க்கையில் அது ராமநாதன்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட போலீஸ்காரர்கள் ஏமாற்றத்தில் உறைந்தனர்.
திங்கட்கிழமை மதியம் ஏழு மணி:
மருத்துவமனையின் வராந்தாவில் தரையில் உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தான் மாசான். அவனைச் சுற்றி இரண்டு மூன்று போலீஸ்காரர்கள். சற்றுத் தொலைவிலிருந்த பெஞ்சில் ராஜேந்திரன் அமர்ந்திருக்க, அவரருகே காதர் அண்ணன் நின்று கொண்டிருந்தார்.
ராஜேந்திரனின் கடும்பார்வைக்கும் கறாரான பேச்சுக்கும் பயந்து, மாசான் உண்மை முழுவதையும் கக்கி விட்டிருந்தான். அவரின் பர்ஸ் தரையில் கிடைந்ததையும், அதிலிருந்த பணத்தை, பேராசையின் காரணமாகத் தான் எடுத்துக் கொண்டதாகவும், அத்தனை பணத்தையும் திரும்பித் தந்துவிடுவதாகவும் பல முறை கூறி மன்றாடி, மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தான் மாசான். ஆனால், ராஜேந்திரனின் கவனம் பணத்திலில்லை என்பதும், அந்த எஸ். டி. கார்டைக் கைப்பற்ற முழுமூச்சாய் முயன்று கொண்டிருக்கிறார் என்பதும் மாசானுக்கு விளங்க வெகு நேரம் பிடித்தது.
”எசமான், என்னய மன்னிச்சிருங்க… பாவிப்பய, காசுக்கு ஆசப்பட்டுப் புட்டேன்.. நீங்க சொல்ரமரி ஏதோவொன்னு இருந்துச்சு எசமான்.. சின்னதா… அது என்னன்னு தெரியாம அங்குணதான் வீசி எரிஞ்சு புட்டே எசமான்.. போனா தேடிப் பாக்கலாம்…” என்று தேய்ந்த ரெகார்ட் போலச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான் மாசான்..
அவன் சொல்வது நம்புவது போல இருந்தாலும், எதனையும் நம்புவதற்குத் தயாராக இல்லாத விரைப்பான அதிகாரி ராஜேந்திரன் இன்னமும் யோசித்துக் கொண்டு தானிருந்தார். எப்படிரா அது ஒரு போலீஸ்காரனோடதுன்னு தெரிஞ்சும் தூக்கி எறிஞ்ச?
கேட்டுவிட்டு வராந்தாவில் யோசனையுடன் அடுத்து என்ன செய்வது, எங்கு போய்த் தேடுவது என்ற யோசனையுடன் குறுக்கும், நெடுக்கும் நடை பயிலத் தொடங்கினார் ராஜேந்திரன்.
திங்கட்கிழமை மதியம் ஏழு மணி முப்பது நிமிடம்:
காரைக்குடியில் தனது இல்லத்தில் லிவிங்க் ரூமில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் டாக்டர் தேசிகன். ஃபோனில் மிரட்டிய குரலையும், அதிலிருந்த உறுதியையும் நினைத்ததில் வந்த பயம் அது. தனது ஒரே மகள் புஷ்பாவிற்கு என்னவாயிற்றோ என்ற கவலை வயிற்றைப் பிசைந்து கொண்டிருந்தது. ஃபோனில் வந்த மிரட்டலைப் பொருட்படுத்தாது, தனது தொழில் தர்மமே மிகையானது என எண்ணி தட்சிணா மூர்த்திக்குச் சரியான முறையில் அறுவைச் சிகிச்சை செய்தது தவறோ என எண்ணத் தொடங்கினார்.
அந்த ஃபோன் கால் வந்ததிலிருந்து, ராஜேந்திரனிடம் பேசியதன் பேரில் இரண்டு கான்ஸ்டபிள்கள் காவலுக்காக அவருடனேயே இருந்து வருகின்றனர். அவர்கள் மூலம் ஒருசில விஷயங்களை அறிய முடிந்தது. அதில் வந்த செய்தி, தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த ராமநாதனும் கொலை செய்யப் பட்டான் என்பதே. அவனும் இல்லையெனில் யாரேனும் தம்மைத் தொடர்பு கொள்வார்களா, தன் மகளின் கதியென்ன என்ற துயர் அவரை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.
வீட்டில் தனியொருவராக அமர்ந்து கொண்டு, தன் மகளைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டிருக்கையில், என்ன செய்வதென்று அறியாமல் வீட்டின் இரண்டாம் கட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர பாரில் அமர்ந்து கொண்டு ஒருவராக ஃபாரின் ஸ்காட்ச் ஊற்றிக் கொண்டு குடிப்பதற்குத் தாயாராகியிருந்தார் டாக்டர். ராஜேந்திரன் டாக்டருக்கு புஷ்பாவைக் கண்டுபிடித்துக் கொடுப்பது தனது கடமையென்று உறுதியளித்திருந்தார். ராஜேந்திரனின் மீது அளவுகடந்து மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கும் டாக்டர், அவர் கூறுவது போல் நடப்பது என முடிவெடுத்திருந்தார்.
அவரின் அட்வைஸ் படி வீட்டிலிருந்து அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பது என்ற முடிவில், மது அருந்தத் தொடங்கியிருந்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தால், சீருடை அணிந்த காவலர் இருவர் இருப்பது தெரிய, அவர்களையும் அழைத்துக் குடிப்பதற்கு கம்பெனி கேட்கலாமா என ஒரு கணம் நினைத்தார். பிறகு, சீருடையில் ட்யூடி நேரத்தில் இருக்கும் காவலர்கள் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என நினைத்து அவர்களைக் கூப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டார்.
இரண்டாவது ரவுண்ட் ஸ்காட்ச் உள்ளே இறங்கிக் கொண்டிருக்கையில் வீட்டின் பின்புறத்திலிருந்து ஏதோ சத்தம் வருவது போல உணர்ந்தார். ஜன்னல் வழியே பார்த்துக் கான்ஸ்டபிளை அழைக்கலாமென்று நினைக்கையில், இரண்டு கான்ஸ்டபிள்களும் கண்ணிற்குப் படவில்லை. சரி, ஏதாவது பீடி பிடிக்கலாமென்று போயிருப்பார்கள் என நினைத்துக் கொண்டு, தானே சென்று பார்க்கலாம் என எழுந்தவர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். காரணம், தனக்கு எதிரே ஆஜானுபாகுவாய் ஒரு உருவம் கையில் ஒரு பிஸ்டலுடன் நிற்பதைப் பார்த்ததுதான்.
என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் அந்த உருவம் துப்பாக்கியை அசைத்து அவரை ஒரு சேரில் அமரச் சொன்னது, துப்பாக்கியைப் பார்த்துக் கொண்டே, வேறு வழியில்லாமல் சேரில் அமர்ந்தார் டாக்டர் தேசிகன்.
(தொடரும்)
– வெ. மதுசூதனன்.