மினசோட்டாவில் இந்தியத் திருவிழா – 2014 (IndiaFest)
மினசோட்டா மாநில இந்தியக் குழுமியம் கோலாகலமாக 2014ஆம் ஆண்டுக்கானபண்டிகையைக் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மினசோட்டா மாநிலத் தலைமையக மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழா மினசோட்டா மாநில ஆளுனர் மதிப்புக்குரிய மார்க் டெய்ட்ன் (Mark Dayton) அவர்களின் அனுசரணையுடன், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஏறத்தாழ 10,000 மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.
வருகை தந்தவர்கட்கு நல்லெண்ணத்தைப் பகிரும் வகையில் பல கலாச்சார அம்சங்களை அரங்கேற்றிக் காட்டினர். இந்தியாவிலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பலமொழி பேசும் மக்கள் அவரவர்கள் தங்களின் கலாச்சாரக் குழுக்கள், ஆன்மீகச் சங்கங்கள், மொழி சார்ந்த பாடசாலைகள் மற்றும் யோகாகசனக் குழுக்கள் எனப் பல்வேறு அமைப்புக்களின் மூலம் இந்த விழாவில் பங்கேற்றனர்.
பல்வேறு இந்திய உபகண்ட உணவு வகைகள் மற்றும் பாலிவுட் நடனங்கள், படம் பிடித்தல், மருதாணி பூசுதல் போன்றவையும் இடம் பெற்றன. மினசோட்டாவில் தமிழ்க் கலாச்சாரமும், தமிழ்க் கல்வியும் சிறப்பாக போதித்து வரும் பள்ளிகள் தங்களின் பள்ளி குறித்த நிகழ்வுகளை அங்கே வருகை தந்திருந்த பெற்றோர்கள் மற்றும், மாணாக்கர்களின் பார்வைக்கு வைத்திருந்தன.
பனிப்பூக்கள் சஞ்சிகையின் படப் பிடிப்புக் குழுவும் இந்த விழாவைக் கண்டு களிப்பதற்காகவும், அதனை படம்பிடித்து வெளியிடுவதற்காகவும் இந்த விழாவில் பங்கேற்றது. எமது குழுவினர் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இந்த விழாவின் புகைப் படங்களைப் பார்த்து மகிழவும்.
– தொகுப்பு: யோகி அருமை நாயகம்
– படங்கள்: ராஜேஷ் கோவிந்தராஜன்