ட்ரிக் ஆர் ட்ரீட் (தந்திரமா? பரிகாரமா?)
அமெரிக்க நாடெங்கும் அனைத்துச் சிறுவர் சிறுமியரால் விரும்பிக் கொண்டாடப்படுவது ஆண்டுதோறும் அக்டோபர் 31ம் தேதி நடக்கும் ஹாலோவீன். இக்கொண்டாட்டத்தின் வரலாறு பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்நிகழ்வைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஹாலோவீன், அந்நாட்களில், அயர்லாந்தில், கிராமப்புறங்களில் ஒரு மதச்சடங்காக நடைபெற்று வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது.
இன்னும் சில குறிப்புகள் இது மறைந்து போன புனித ஆத்மாக்களின் நினைவாகக் கொண்டாடப்பட்டது என்கிறது. மற்றுமொரு கருத்துப்படி இது நவம்பர் மாத முதல் இரண்டு நாட்கள், இறந்து போனவர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் கொண்டாடப்படும் ALL HALLOW’S DAY என்பதற்கு முந்தைய தினம் நடைபெறுவதால் HALLOWS EVE என்று பெயர் பெற்று அதுவே மருவி ஹாலோவீன் என்றானது என்று கூறுகிறது.
இன்னொரு கூற்றின் படி அயர்லாந்து நாட்டில் ‘சாஹெய்ன்’ (இறந்தவர்களின் கடவுள்) என்ற பெயரில் ‘இறந்தவர்களுக்கான நாளாக’ வணங்கி வந்ததாகவும் உலகம் முழுதும் வெவ்வேறு நாட்டினரும், மதத்தினரும் தங்களது முன்னோரின் நினைவாக ஏதேனும் ஒரு வகையில் மரியாதை செலுத்தி வந்திருக்கின்றனர் என்றும் தெரிகிறது. தென்னமெரிக்க நாடுகளில் El Día de los Muertos, சீனாவில் ‘ஆவிகள் விழா’. ஜப்பானில் ‘பான்’, கொரியாவில் ஹன்காவி, நேபாளத்தில் ‘ஜியா ஜெட்ரா’ யூதர்களிடையே ‘யோம் கிபுர்’ என்று பல பெயர்களில் மறைந்து விட்ட முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இருண்டு காணப்படும் குளிர்காலத்தில் இறந்து விட்டவர்களின் ஆன்மாக்கள் ஆவிகளாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமென நம்பிய அயர்லாந்து நாட்டினர் , தங்கள் வீடுகளின் முன்பு சொக்கப்பனை (bonfire) கொளுத்தி, உணவு படைத்து அந்த ஆவிகளை சாந்தப்படுத்தி அனுப்பி வைத்தார்களாம்.
இப்படிப் பல கருத்துகளும் நம்பிக்கைகளும் இருந்தாலும், விவசாயிகள் கோடைக்கால அறுவடை எல்லாம் முடிந்து, குளிர்காலத்துக்கு முன்பாக நடத்திய கொண்டாட்டம் இது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஸ்காட்லாந்தில் இவ்வழக்கத்தில் சில வேறுபாடுகளுடன் மக்கள், ஆவிகளைப் போல உடையணிந்து அக்கம் பக்க வீடுகளுக்குச் சென்று உணவுப் பறிமாறிக் கொண்டார்கள். பின்னாட்களில், தெற்கு அயர்லாந்தில், வெள்ளைக் குதிரை போல் மாறுவேடமணிந்த ஒருவர் ஊர்ச் சிறுவர்களை அக்கம் பக்க வீடுகளுக்கு அழைத்துச் செல்ல, அவ்வீடுகளில் உள்ளவர்களும் தங்கள் வாழ்க்கையில் நல்வினைகள் நிகழ வேண்டுமென அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வந்தனர். சொக்கப்பனைக்குப் பதிலாக, அறுவடையான பெரிய நூல்கோல்களை வெட்டி அதனுள் விளக்குகள் வைத்து வீடுகளை அலங்கரித்து வந்தார்கள். பிற்காலங்களில் சிறுவர்கள் ஆவிகளைப் போலவும்,இறந்து போன சிலரின் உருவங்கள் போலவும் உடையணிந்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கு செல்ல, அவர்களும் இது போன்ற துர் ஆவிகள் வரவோ, துர் செயல்கள் நடக்கவோ கூடாது என்று அவர்களுக்கு உணவுப் பண்டங்களைக் கொடுத்து வந்தனர். .
மெதுவாக மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் பரவிய இவ்வழக்கம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாட்டினர் அமெரிக்க நாடுகளுக்கு குடியேறிய போது அமெரிக்க நாட்டிலும் பரவியது.
அப்போது அமெரிக்க நாட்டில் முன்பனிக் காலத்தில் கிடைக்கக் கூடிய பூசனிக்காயும் / பரங்கிக்காயும் நூல்கோலுக்கு பதிலாக அலங்கரிக்க பயன்பட்டது. உலகப் போரின் சமயத்தில் சர்க்கரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, குழந்தைகளுக்கு இனிப்புகள் கிடைக்காமல் போனது. அவர்களுக்குப் பொதுவாக விழாக்கள் போன்ற சுப தினங்களின் போது மட்டுமே இனிப்புப் பண்டங்கள் கிடைத்தன. அதையொட்டி, ஹாலோவினுக்கும் உணவுப் பொருட்களுக்குப் பதிலாக இனிப்புப் பொருட்கள் வழங்கத் துவங்கினர்.
சம்பிரதாயமாக நடந்து வந்த ஹாலோவின் விழாவில் வர்த்தக உலகின் பார்வை பட்ட பின்பு, ஆலோவின் மத நம்பிக்கைகளைத் தாண்டிய ஒரு பொது விழாவாக, வேடிக்கை விழாவாக மாறிப் போனது.
இன்று, கிறிஸ்துமசுக்கு அடுத்து மக்கள் அதிகமாகச் செலவழிக்கக் கூடிய நிகழ்வாகி விட்டது ஹாலோவின்.
சிறுவர்களுக்கான முகப் பூச்சு, தலைச் சாயம் எனப் பலவகையான ஒப்பனைப் பொருட்களின் அணிவகுப்பு பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளைச் சுண்டி இழுக்க, பல வித உளவியல் ஆராய்ச்சிகள் நடத்தி, ஒவ்வொரு வருடமும் புதுப்புது வடிவில் அலங்கார ஆடைகள், உடன் அணியும் இதரப் பொருட்கள், வீட்டுக்கான அலங்கார விளக்குகள், வாழ்த்து அட்டைகள், மிட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்கள் எனப் பல துறைகளிலும் புதிய உத்திகளைப் பயன்படுத்தி சந்தையில் பொருட்களை நிரப்பி விடுகின்றனர். அது மட்டுமல்லாமல் பலரையும் அச்சுறுத்தும் திகில் திரைப்படங்கள் இந்தச் சமயத்தில் வெளியிடப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு மட்டும் ஏழு மில்லியன் டாலர்களுக்கு ஹாலோவின் சம்பந்தப்பட்ட பொருட்கள் வர்த்தகமாகியுள்ளதாகப் புள்ளி விவரக் கணக்கு தெரிவிக்கிறது.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இவ்விழாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோர் கூடும் பார்ட்டி நிகழ்வுகளிலும் அதிகப் பணம் புரள்கிறது.
பதினெட்டு முதல் இருபத்தி நான்கு வயதுக்குட்பட்டவர்களில் 89.1 சதவிகிதத்தினர் இவ்விழாவில் பங்கெடுக்கின்றனர். மதுபான விற்பனையும் ஹாலோவின் வாரத்தில் அதிகரித்து காணப்படுகிறது.
ஒரு சமயத்தில் ஹாலோவினைக் காரணமாகக் கொண்டு பல விதமான வன்முறை / திருட்டுச் சம்பவங்கள் நிகழத் துவங்கிய பின்னர், ஹாலோவின் கொண்டாட்டங்களுடன் கூடிய அச்சுறுத்தும் விஷயங்கள் குறைந்து, பொழுதுபோக்கு விஷயங்கள் அதிகரித்து வருகின்றன.
எது எப்படியோ, முன்னோருக்கு மரியாதை என்னும் கோட்பாட்டினை மறக்காமல் இருந்தால் சரி.
– ரவிக்குமார்