வருடாந்திர மாநில பொருட்காட்சி
மினசோட்டா மாநிலம் விவசாயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த சமூகம். இவ்விடம் கோடைக் கால வருடாந்திர மாநிலப் பெருப் பொருட்காட்சி குழந்தைகளில் இருந்து கொடுக்குப் பல் இல்லாத கொள்ளுத்தாத்தா வரை யாவரும் விரும்பி்ப் போகும் ஒரு திருவிழா. வருடாந்திரப் பொருட்காட்சி 1265 Snelling Ave North நிரந்தரச் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.மினசோட்டா மாநிலச் சந்தை அமெரிக்காவில் நடத்தப்படும் கோடைகாலப் பெருஞ் சந்தைகளில் ஒன்று. இந்த மைதானம் 320 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது.
வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய், பல வண்ணக் காற்றாடி என்று தொடங்கி, பண்ணை விலங்குகளைச் சிறுவர் சிறுமியர் காட்சி செய்து பரிசு பெறுவது என்பது வரையில் ஒருபுறம் குதூகலமாய் நடந்து கொண்டிருக்கும். பார்வையிடவும், பேரம் பேசவும் பலவகைப் பழைய மற்றும் புதிய விவசாய, மோட்டார் வாகன வரிசைகளையும், குதூகலச் சவாரிகளையும் பெறக்கூடிய ஒரே இடமும் இதுதான்.
மேலும் நீங்கள் சாப்பாட்டு இராமர்களோ, சீதைகளோ இல்லை, சாதாரண குடிமக்களாயிருந்தாலும் சரி இந்தச் சந்தை யாவருக்கும் பசி கிளப்பிச் சவால்விடுவது வழக்கம். நாக்கு நடனமாட வாயும் வயிறும் நிரம்ப வெண்ணெய் உருக உருக அவித்த சோளம் தொட்டு கிட்டத்தட்ட 60 வகையான உணவுகள் தடியின் நுனியி்ல் (food on a stick) தரக்கூடிய ஓரே நூதன இடம்.
இம்முறையும் 350 உணவகங்கள் 450 வெவ்வேறு தின்பண்டங்களையும் 28 ரகப் புதிய உணவு வகைகளையும் கொண்டு மக்களைக் கவர்ந்தனவாம். இதை அறிந்து குதூகலமான சந்தையைப் பார்வையிடவும் இம்முறை ஏறத்தாழ ஓன்றரை மில்லியனிற்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளனர்.
பண்ணை விவசாயத்தில் பிற்காலத்தில் நாட்டமிருந்தால் மேலும் பன்னிரண்டு நாட்களில் பல்கலைக்கழக விவசாயபீடப் பிறப்பகத்தில் சுமார் 200 கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் மற்றும் பன்றிக்குட்டிகள் பிறப்பதையும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
பனிப்பூக்கள் சஞ்சிகை படப்பிடிப்புக்குழுவும் அங்கே சென்றிருந்து, தங்களின் புகைப்படக் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர். அவற்றில் சில வாசகர்களின் பார்வைக்கு இதோ;
தொகுப்பு: யோகி அருமைநாயகம்
படப்பிடிப்பு: பிரபு ராவ்