உலகச் செம்மொழி – அத்தியாயம் 15
அத்தியாயம் 14 செல்ல இங்கே சொடுக்கவும்
மனோன்மணியம் சுந்தரனார் எழுதியது போன்று பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின அவற்றில் கடைசியாக தோன்றிய மொழி மலையாளம். இதை ஒத்துக்கொள்ள சிலர் தயங்கினாலும் பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். திராவிட மொழி வரலாற்றை முதன் முதலில் ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்த தமிழே சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாள மொழியானது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார்.
இன்றும் என்னுடைய பார்வையில் மலையாளத்தை தனிமொழியாக பார்க்க இயலவில்லை. தமிழில் ஒரு வட்டார வழக்காகவே அம்மொழியை பார்க்க இயலுகின்றது. தஞ்சை வட்டார வழக்கு பேசும் எனக்கு கன்னியாகுமரி வட்டார வழக்கையோ அல்லது கொங்கு வழக்கையோ அல்லது சென்னை வழக்கையோ புரிந்துகொள்வது எவ்வளவு கடினமானதோ அவ்வாறே இந்த மலைபுரத்து தமிழும் எனக்கு சற்றே கடினமானது ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய தமிழ். பறைதல், விளித்தல், ஞான் என்று பல அட்சர சுத்தமான அருந்தமிழ் சொற்களைப் பயன்படுத்தும் வட்டார வழக்கே மலையாளம்.
போன தலைமுறையிலேயே சென்னையில் குடிபெயர்ந்துவிட்ட மலையாள நண்பருடன் மினியாபொலிசு நகர சாலையில் பேசிக்கொண்டு கார் ஒட்டிச் சென்றுகொண்டிருந்த போது அவர் என்னைப் பார்த்து தனது அண்ணா ஒருபழமொழி சொன்னார், எனக்கு என்னனு தெரியலை என்று சொன்னார். பழமொழியைச் சொல்லுங்க பார்ப்போம் என்றேன். அவர் அதற்கு அது ஒரு மலையாள பழமொழினு சொன்னார்.சும்மா சொல்லுங்க நண்பரே என்றதும் அவர் சொன்னது ’ஆறிய கஞ்சி பழங் கஞ்சி’ என்றார். அதற்கு நான் தள்ளி போடும் எதுவும் பயனற்றது என்றேன். அவர் அதற்கு அது மலையாள பழமொழியாச்சே என்றார். அதற்கு நான் தமிழிலும் அதேதான் என்றேன்.
பிறகு ஒரு சமயம் அய்யா தேவநேய பாவானரை படிக்கும் போது சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மலையாள பழமொழிகள் தமிழில் உள்ளதை உணர்த்தியிருந்தார். பொதுவாக பிறமொழி கலப்புகள் படித்த மேல்தட்டு மக்களையே தாக்கும் அது சாமானியரிடம் புகுவதற்கு பலகாலம் பிடிக்கும். பிறமொழிகளின் தாக்கம் சேரத் தமிழின் அடிமட்டத்தை இன்னும் எட்டவில்லை என்றே தோன்றுகிறது.
-சத்யா-
தொடரும்
wiki
தேவநேய பாவானர் திராவிட மொழிகள்