மின்னேசோட்டா பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்
மின்னேசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்
அட்வான்செட் (Advanced) எனப்படும் கல்விக்கான மிக உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மினசோட்டா தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழு பரிந்துரையை அண்மையில் வழங்கியிருக்கிறது. அட்வான்செட் (www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும் உலகளாவிய நிறுவனம் ஆகும். இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும், 32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் 50 மாநிலங்களிலும் ஏற்கத்தக்க கல்வி மதிப்பீட்டு நிறுவனம் அட்வான்செட் ஒன்று தான். அட்வான்செட் வரையறுக்கும் பள்ளி மதிப்பீடுகளைத் மீறியதொரு தரம் இன்று வரை எதுவுமில்லை என்று சொல்லலாம்.
அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.) நான்காண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பாகும். அ.த.க.வின் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் தற்பொழுது 62 பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் அமெரிக்க நாட்டைத் தவிர, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இயங்கும் பள்ளிகளும் அடங்கும். இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழ் பயின்று வருகிறார்கள். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் மாணாக்கரும் பயன்படுத்தும் வகையில் கல்வி மேலாண்மை அமைப்புக்கான மென்பொருளை நிறுவியுள்ளது அ.த.க. தற்காலத் தொழில்நுட்ப உதவியுடன், மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது, இவற்றின் மூலம் வகுப்பறை கல்வியைக் கடந்து மேல் நிலை மாணாக்கர் பழகுத் தமிழுக்கான இலக்கணம் பயிலவும், அறிமுக நிலை மாணாக்கர் ஊடாட்டு கருவிகள் வாயிலாக அடிப்படையானத் தமிழ் எழுத்துகளையும், சொற்களையும் கற்க வழிவகை அமைத்துள்ளது.
இந்தவகையில் மினசோட்டா தமிழ்ப் பள்ளியானது அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் கல்வித் திட்டங்களையும், பாட முறைகளையும் பின்பற்றும் பள்ளிகளில் ஒன்றாகும். அட்வான்செட் நிறுவனத்தின் சார்பில், கல்வித்துறைச் சார்ந்த வெவ்வேறுவல்லுனர்கள் அடங்கிய குழு மினசோட்டா தமிழ்ப் பள்ளியை ஆய்வு செய்தது. அக்டோபர் மாதம் 10, 11ம் தேதிகளில், மினசோட்டா தமிழ்ப் பள்ளியின் ஹாப்கின்ஸ் மற்றும் வுட்பரி கிளைகளில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வுக்குழுவினர் தனித்தனியாகப் பிரிந்து அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று பாடம் நடத்தப்படும் முறைகளையும், மாணவர்களின் புரிதலையும் கண்டறிந்தனர். இவ்வாறு பல நிலைகளில் தனித்தனியாக பிரிந்து ஆய்வு செய்து முடிவில் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அதன்படி, அட்வான்செட் அமைப்பின் 30 ஆண்டு கல்வித்துறை அனுபவத்தில் இத்தமிழ்ப்பள்ளி அமைப்பினைப் போன்றதொரு தன்னார்வு கல்வி நிறுவனத்தைக் கண்டதில்லை என்றும், பயிற்றுவித்தல் என்பது இத்தன்னார்வலர்களுக்கு முதன்மை பணியாக இல்லாவிடினும் தரமான கல்வி மற்றும் கல்வி நிறுவனத்துக்கான அத்தனைத் தேவைகளையும்/பணிகளையும் இவர்கள் திறம்படச் செய்வது கண்டு வியக்கிறோம். எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் ஆய்வுக்குழுவினர் தமிழ் மொழியின் மேல் கொண்டிருக்கும் பற்றைப் பள்ளி நிர்வாகக் குழு, ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணாக்கர் உட்பட அனைவரின் கண்களிலும் தாங்கள் காண முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். மினசோட்டா தமிழ்ப் பள்ளி அரசு நடத்தும் பொதுப்பள்ளிகள் பெற்ற சராசரிப் புள்ளிகளை விட, அதிகப் புள்ளிகள் பெற்று சீர்மிகு தரத்துடன் நடப்பதாக, அட்வான்செட் தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
பள்ளியின் இயக்குனர் திருமதி. விஷ்ணுப்ரியா மணிகண்டன் இதைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஜான் செடெய் தலைமையிலான 5 கல்வியாளர்கள் குழு இரண்டு நாள் தணிக்கைக்குப் பின் மினசோட்டா தமிழ்ப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க முழுப் பரிந்துரையை வழங்கியுள்ளது. எனவும், மினசோட்டா தமிழ்ப் பள்ளி அ.த.க. மற்றும் மிசௌரி தமிழ்ப் பள்ளியுடன் இணைந்து கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் பணியாற்றி இந்த அரும் இலக்கினைப் அடைந்துள்ளது. என்றும், தமிழ்ப்பள்ளி அங்கீகாரம் பெறுவதற்கான வேலைகளைத் துவங்கியது முதற்கொண்டு அ.த.க. வின் சேவைகள் பள்ளிகளுக்கு எந்த அளவு பயன்படுகிறது என்பதை உணர்ந்து அறிய முடிந்ததுடன் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் வேலைகள் மிகப்பெரும் அளவில் எளிமையாக்கப்பட்டதற்கு அ.த.க. வின் செயல்முறைகளும் நெறிகளும் கல்விக்கான கோட்பாடுகளும் உறுதுணையாக இருந்தன. எனவும் குறிப்பிட்டார்.
செய்தித்தொகுப்பு – காண்டீபன்