கண்கள் இல்லாக் காதல்
கண்கள் இல்லாக் காதல்
கண்கள் காணாக் காளையர் தமக்கும்
கருத்தில் வந்து தோன்றும் காதல்
பெண்கள் உறவு புரிந்தவர் எவர்க்கும்
புறத்தில் நின்று போற்றும் காதல்.
தேசம் விட்டுத் தேசம் பெயர்ந்து
காசது தேடிக் கடலும் கடந்த
பாசம் மிக்க பலரும் போற்றும்
சுவாசம் ஒத்த உணர்வே காதல்.
இளமையில் தோன்றி பூரித்து நின்று
இனிமையே என்றும் வலம்வர இயைந்து
வளமையும் தாண்டி வறுமையே வரினும்
தனிமையது இன்றித் தழுவுவதே காதல்.
உடலின் அழகை உணர்வில் கொண்டு
உருவம் ஒன்றே உள்ளத்தில் நின்று
உலவும் மனிதனின் உள்ளுணர்வு முழுதும்
உறவாய் நிறைக்கும் உணர்வே காதல்.
பக்கத்தில் நின்று பரிவுடன் கோதும்
பறக்கும் அந்த முடியும் சொல்லும்
பலசுகம் துறந்து பரவலாய் நின்று
பலமாய்க் கொள்ளும் பண்பதே காதல்.
அன்புள்ள அன்னையும் அரூபமாய்ப் போய்விட
அவனியில் எவரும் ஆத்மார்த்த உறவாய்
அருகினில் இலையெனும் அவநிலை போக்கிட
அவதரித்த பேருறவு அதுவே காதல்.
இரவினில் உறக்கம் இழந்திடும் வயதிலும்
இருப்பது உறவெனும் இனிமைச் செய்தியை
இவ்வுலகு முழுதும் இயம்பிடச் செய்திடும்
இனிமைப் பொருளே இதமான காதல்.
கட்டழகுக் கன்னியைக் கனவினில் நினைத்து
கருத்து முழுவதும் களையுடல் சுவைத்து
கணங்கள் அனைத்தும் களிப்பிலே கழித்து
கலங்கித் தவிக்கும் காளைக்கும் காதல்;
கல்யாணம் முடித்துக் கட்டிலில் இணைந்து
கரம்பிடித்த மனையாளும் கருத்தரிக்க – மகிழ்ந்து
களையாய் ஓரிரு பிள்ளைகள் பெற்றுக்
களிப்பும் கண்ணீருமாய் வாழ்வதும் காதல் !!!
– வெ. மதுசூதனன் –
Tags: love