ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-9
தகுதிக்கேற்ற தொழிலின்மை
தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நிற-இன ரீதியிலான வேறுபாடுகள் அதிகளவில் உணரப்பட்டன. தாயகத்தில் ஓரளவு படித்த பலரும் புலம்பெயர்ந்து சென்று தமது அந்தஸ்து, தகுதியை விடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக எந்த வேலையினையும் செய்யத் துணிந்தார்கள். புதிய இடம், அந்நிய மொழியறிவு இன்மை போன்றனவும் புகலிடத் தமிழர்களை மிகவும் பாதித்தது.
“தகுதி வேலை ஊதியம்
சமன்பாடு குழம்பிய நிலையில்
இன்னுமொரு முதலாளித்துவத் தெருவில் நான்
ஒரு பிராங்கெனினும்
என் ஊதியம் பெருக்க
முதலாளி குண்டியைக் கூட
துடைக்கத் தயார்
என்னைப் பார்த்து
இன்னொரு துடைப்பான்
சிரிப்பதாயின் சிரி
இப்போது யதார்த்தத்தைப் புரிந்த
ஒரு
அகதித் தொழிலாளி நான்”1
இந்த வேலையைச் செய்யலாம் இதைச் செய்யக் கூடாது என்ற சங்கடங்கள் இன்றி தமது ஊதியத்தைப் பெருக்குவதற்காக முகம் சுழிக்காது இழிந்த வேலைகளைச் செய்யக் கூடியளவுக்கு இவர்களை, இவர்களின் தேவைகள் மாற்றியமைத்துள்ளன. பொதுவாகப் புலம்பெயர்ந்து சென்ற பாதிக்கு மேற்பட்ட இளைஞர்கள் இன்று இத்தகைய நிலைக்கு ஆளாகியிருப்பது உண்மை.
முன்னர் ஓரிடத்தில் குறிப்பிட்டது போல கறுப்பர், நாடோடிகள், பிச்சைக்காரர், அகதிகள் என்று வெள்ளையர்களால் இகழப்பட்ட புலம்பெயர்ந்தோர் தமது வியர்வையைச் சிந்தி உழைத்துத் தாம் வாழும் நாடுகளுக்குப் பெருமை சேர்க்கின்றனர் என்பதை, “வீதியும் செம்மண் கால்களும்”28 என்ற மணிவண்ணனின் கவிதை அழகாகக் கூறுகின்றது. சொந்த மண்ணில் மரியாதைக் குறைவென நினைத்த வேலைகள் புலம்பெயர் தேசத்தில் மரியாதை பெறுவதையும், றெஸ்ற்ரோறன்டில் எச்சில் கோப்பை கழுவி பணம் ஈட்டுவதையும் குறிப்பிட்ட கவிஞர், ஆப்பிரிக்க, துருக்கிய, அரபிய, பாகிஸ்தானிய, சீனா, சிறிலங்கா போன்ற தேசங்களின் இளைஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய ஒரு உற்பத்திப் பொருளுக்கு ‘உற்பத்தியுரிமை’யை மட்டும் மிகச் சுலபமாக மேலைநாட்டினர் பெற்றுவிடுவதாகவும் ஆதங்கப் படுகிறார்.
வேலைப்பளு
ஒரு மனிதன் எவ்வளவுதான் உழைத்தாலும் ஓய்வென்பது முக்கியமானதொன்று ஆனால் இரவு பகலாக ஓய்வின்றி உழைத்துக் குடும்ப நலனுக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலரும், தமது உடலுக்கு ஓய்வளிக்காது சாதாரணமான சின்ன விருப்பங்களைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
“பூக்களோடு நின்று
புகைப்படமெடுக்கும் ஆசை
ஆண்டுகளாய் தொடர்கிறது
வேலை, சமையல், நித்திரையென
வாழ்க்கை படர்கிறது” 2
யதார்த்தமான வரிகளின் மூலம் ஒருவரின் உள்ளக் கிடக்கையை வெளிக்கொண்டுவந்த விதம் பாராட்டப்பட வேண்டியது. இவர்களின் வாழ்க்கை எந்தவிதமான மகிழ்வூட்டல்களுமின்றி நகர்வதை இதன்மூலம் உணரமுடிகின்றது. வேறுசிலர் நகைச்சுவையான முறையில் தமது வேலைப்பளுவின் கொடுமையினைச் சொல்லி பிறரைக் கண்கலங்க வைத்துவிடுகின்றனர்.
“வேலைக்குப் போகும்போது
தூக்கத்தில்
அருகில் இருக்கும்
பெண்ணின் மேல்சாய
அவள் சிரிக்க
பதிலுக்குக் கூடச் சிரிக்கமுடியாது
வேலை என்னைத் துரத்துகிறது.
எனது ஆண்டவரே!
விடியலுக்குச் சற்றுமுன் தூங்குகிறேன்
காலை எழுந்து ஓடுகிறேன்…………..” 3
‘ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்’ என்ற தலைப்பிலமைந்த இந்தக் கவிதையில் தூங்குவதற்குக்கூட நேரமின்றி உழைத்துக் களைத்துப்போன தன் நிலையைக் கடவுளுக்குரிய விண்ணப்பமாகச் சொல்லி முடிக்கிறார் கவிஞர்.
தம்பாவின் ‘மாறுபாடு’ என்ற கவிதை நாளும் பொழுதும் வேலையுடன் போராடும் புலம்பெயர்ந்த சராசரி இளைஞர்களின் வாழ்வியல் நிலையினைக் கூறி, அவனது கடினமான வேலையையும் சொல்கிறது.
“வினாடி எனப்பொசுங்கும் நாட்களுடன்
போராடிக் களைத்து வீடு திரும்பும்
நாழிகையில்,
மலைகளில் உயரும் தெருமுனை வீட்டில்
‘ஹாய்!’எனக் கைவீசும் சிறுமியின்
சிறு இதழ் விரிக்கும் புன்னகையில்
உறைந்து போகும் என்களைப்பு!” 4
வேலைப்பளுவுக்கும் களைப்புக்கும் மத்தியில் ஒரு சிறுமியின் கையசைப்புடன் கூடிய புன்னகையில் லயித்திருக்கும், ஒருவரின் துயர்தோய்ந்த கதையைக் கவிதை வரிகளில் தந்தமை சிறப்பானது. குழந்தையின் சிரிப்புக்கு நிகர் உலகில் ஒன்றுமேயில்லை என்ற உண்மை இங்கு புலனாகின்றது. என்னதான் களைப்புடன் வீடு திரும்பினாலும் ஒரு சிறுமியின் கையசைப்புடன் கூடிய சிரிப்பு அவனுக்கு ஊக்க மருந்தாக இருந்தமைகொண்டு இதனை அறியலாம்.
அடிக்குறிப்புகள்
- திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.103
- மேலது, பக்.38
- மேலது, பக்.37
- மேலது, பக்.107
-தியா-