\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்

kbalanchanda_620x620தமிழ்த் திரையுலகின் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் கடந்த செவ்வாய், டிசம்பர் 23ம் தேதி காலமானார்.

கைலாசம் பாலச்சந்தர் 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்பதாம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தவர். அறிவியலில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்று ஏ.ஜி.ஸ் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார். இங்கு அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதி, நடித்து  அரங்கேற்றி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற இவரது நாடகங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

இவரது நெருங்கிய நண்பரான திரு. நாகேஷ் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த தெய்வத்தாய் படத்தின் வழியே திரையுலகில் கால் பதித்தார். மேடை நாடகங்களிலிருந்து திரைப்படங்கள் மாறுபட்டிருந்த காரணத்தால் மிகுந்த தயக்கத்துக்கு பிறகே அப்படத்துக்கு வசனமெழுத ஒப்புக் கொண்டார். இவரது கதை வசனத்தில் உருவாகி கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘சர்வர் சுந்தரம்’ பெரும் வெற்றி பெற்றது.

1965ல் இவர் இயக்கிய ‘நீர்க்குமிழி’ என்ற படம், தமிழ்த் திரையுலகை புரட்டிப் போட்டது என்றால் அது மிகையில்லை. அழகான நாயகன், நாயகி, அவர்களது காதல், பாடல்கள் என்ற ரீதியில் படங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த நாகேஷை வைத்து மருத்துவமனையிலேயே நடக்கும் முழு நீளப் படத்தை கதையின் வலிமை, மற்றும் கதை சொல்லும் முறையால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தார்.

பின்னர் இவர் இயக்கிய எதிர் நீச்சல், எதிரொலி, நாணல், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம் போன்ற படங்கள் இவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. அழுத்தமான கதை, இயல்பான அதே சமயம் கூர்மையான வசனங்கள் இவற்றை முதன்மையாக வைத்தே இவரது படங்கள் அமைந்தன. ஒரு வரியில் சொல்லக் கூடிய கதையாக இருந்தாலும், மிக அழுத்தமான கதாபாத்திரங்களைக் கொண்டு நுணுக்கமான முடிச்சுகளைப் போட்டு, சுவாரசியம் குறையாமல் அவற்றை அவிழ்ப்பதில் பாலச்சந்தருக்கு நிகர் அவர் மட்டுமே.

 

இதன் காரணமாகவே பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிக, நடிகையரே இவரது படங்களில் பெரும்பாலும் இடம்பெற்றனர். எண்ணற்ற புது முகங்களை இவர் அறிமுகப்படுத்துவதற்கு இதுவே வாய்ப்பானது. தனது படங்களில் யதார்த்தமான பாத்திரங்களையே காண்பித்திருப்பார் பாலச்சந்தர். இவரது கதை மாந்தர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினராக இருப்பார்கள். மாடிப்படி மாது, மேஜர் சந்திரகாந்த், பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை, ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் போன்ற பெயர்களும் பாத்திரங்களும் என்றுமே தமிழ் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும்.

எந்த ஒரு கதைப் பாணிக்குள்ளும் சிக்காமல், வெவ்வேறு விதமான கதைகளைக் கையாண்டுள்ளார் பாலச்சந்தர். ‘இரு கோடுகள்’, ‘மூன்று முடிச்சு’, ‘மரோ சரித்ரா’ போன்ற காதல் கதைகள், ‘பாமா விஜயம்’, ‘நவக்கிரகம்’,’தில்லு முல்லு’ போன்ற நகைச்சுவைப் படங்கள், ‘நூற்றுக்கு நூறு’, ‘எதிரொலி’ போன்ற சஸ்பென்ஸ் படங்கள், ‘தண்ணீர் தண்ணீர்’, ‘வானமே எல்லை’ போன்ற சமூக அக்கறைப் படங்கள் என பல வகையானவை. இவரது ‘ருத்ர வீணா’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற படங்கள் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தின.

இவரது காதல் படங்கள் சோக முடிவினையே கொண்டிருந்தன. ஜெயிக்கும் காதல் மறக்கப்பட்டு விடுகின்றன, தோற்கும் காதல் சகாப்தங்களாகின்றன. அதையே என் படங்களின் உத்தியாக கையாள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் பாலச்சந்தர்.

ஒவ்வொரு படத்திலும் புதுமைகளைப் புகுத்திக் கொண்டே இருப்பதில் ஆர்வம் மிக கொண்டிருந்தார் அவர். இவரது தாமரை நெஞ்சம் படத்தின் இறுதிக் காட்சி இந்தியத் திரைப்பட வரலாற்றில் பதிக்கப் படவேண்டிய ஒன்று.

பாலச்சந்தரின் திரைப்படப் பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. எங்குமே வலிய திணிக்கப்படாமல் கதையோட்டத்தை பாதிக்காமல் இயல்பாக அமைந்தவை. ‘பாலு படத்துக்கு பாட்டெழுதுவது பரீட்சைக்கு போற மாதிரி. என்ன சிச்சுவேஷன் தருவாருன்னு எதிர்பார்க்கவே முடியாது’ என்று அவரது படங்களுக்குப் பல பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். திரைப்படத்தின் கதையை நகர்த்தும் விதமாக பாடல்கள் எழுதி வாங்கிக் கொள்வதில் வல்லவர் அவர். பல படங்களில் கதையையும், மாந்தரின் குணங்களையும், அவர்களது மனப் போராட்டங்களையும் விளக்கும் வண்ணம் அவரது படத்தின் பாடல்கள் அமைந்தன. ‘மியுசிகல்’ எனப்படும் இசையை மட்டும் முன்னிறுத்தி ‘நினைத்தாலே இனிக்கும்’ எனும் ஜனரஞ்சகப் படத்தின் மூலம் இசைப் பிரியர்களின் தாகத்தையும் தணித்து வைத்தார். அதே போல் எளியவர்க்கும் இசை போய்ச் சேர வேண்டும் என்பதில் தணியாத தாகம் கொண்டிருந்தவர் பாலச்சந்தர். தனது ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் அழுத்தமாக இதைச் சொல்லியிருப்பார். அதே போல் பாரதியின் மீது அதீத பற்றுள்ளவர் அவர். பல படங்களில் பாரதியின் பாடல்களை விரும்பும் பாத்திரங்களைச் சித்தரித்திருப்பார்.

மனித மனங்களை, அதன் போராட்டங்களை எடுத்துச் சொல்வதில் வல்லவரான பாலச்சந்தர் சில படங்களில் மனித மனங்களின் வக்கிரத்தையும் எடுத்துக் காண்பிக்கத் தயங்கவில்லை. ‘அரங்கேற்றம்’, ‘மன்மத லீலை’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தப்புத் தாளங்கள்’, ‘நிழல் நிஜமாகிறது’ போன்ற படங்கள் சமூகத்தின் பாராட்டுகளையும், கண்டனங்களையும் சரி சமமாகப் பெற்றுத் தந்தன. பெண்களை இழிவுப் படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டது.

பின்னர் வந்த ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘சிந்து பைரவி’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கல்யாண அகதிகள்’ போன்ற படங்கள் மூலம் துடைத்தெறிந்தார். ‘அக்னி சாட்சி’, ‘நூல் வேலி’, ‘நாற்பத்தி ஏழு நாட்கள்’, ‘புதுப் புது அர்த்தங்கள்’, ‘ஜாதி மல்லி’, ‘கல்கி’ படங்களில் பெண்களின் மனப் போராட்டங்களையும் அழுத்தங்களையும் மிக அழகாக எடுத்துச் சொல்லியிருப்பார்.

தொண்ணூறுகளின் மத்தியில், திரைத்துறையின் பாதை மாறிப் போன பிறகு, சின்னத்திரை பக்கம் திரும்பிய பாலச்சந்தர் அங்கும் தனது முத்திரையைப் பதித்து ‘ரயில் சிநேகம்’, ‘கையளவு மனசு’ போன்ற தொடர்களை இயக்கினார்.

ஏழு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, தாதா சாஹேப் பால்கே விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுக் குவித்தவர் பாலச்சந்தர்.

இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட பாலச்சந்தரின் இழப்பு தமிழ்த் திரையுலகின் சகாப்தம் ஒன்று முடிவதற்கு ஒப்பானது. ஆனால் அவரது படைப்புகள் திரைப்படங்கள் உள்ள வரை நிலைத்து நின்று அவரின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும். அவரது மறைவுக்கு பனிப்பூக்கள் குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • ரவிக்குமார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad