மாதுளைப் பழத்தின் மகிமை
பார்த்தாலே மனதைப் பூரிக்க வைக்கும் பளிங்குச் செம்பு போன்ற பழம். அதன் சிவப்பு வர்ணஜாலமோ தனி. மஞ்சள், செம்மஞ்சள், இளச் சிவப்பு, கடும்சிவப்பு என வர்ணங்களின் கலவையோடு எண்ணெய் தேய்த்து மினுக்கியது போன்றதொரு கொள்ளையழகு. மரத்திலிருந்து பறிக்கும்போது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டு பார்ப்பவர்களையெல்லாம் ஈர்க்கும் குணாதிசயம் உடையது மாதுளைப்பழம்.
மாதுளையை மெதுவாகப் பிரித்தால் உள்ளே திறக்கும் இளமஞ்சள் சுவர்கள், சுளைகள் கூடிய பொக்கிஷ அறைகள். இவை ஒவ்வொன்றிலும் மாணிக்கக் கற்கள் போன்று மினுங்கும் சாறினால் போர்த்தப்பட்ட சிவப்புச் சுவை பைகள். அவற்றினுள்ளே காண்பது முத்துப்போன்ற மாதுளை விதைகள்.
உணவு
அறுசுவைகளில் மூன்றைத் தருகிறது இந்த அருமைப்பழம். மாதுளை பழத்தின் தித்திக்கும் செவ்விரசமானது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத் தருகிறது. இப்பழம் உடலைக்காக்கும் உயிர் வளியேற்ற எதிர்பொருளான Antioxidant மிகுந்தது. மாதுளைப் பழத்தின் எதிர்ப்புச்சக்தி மற்ற பழங்கள் அல்லது பச்சைத் தேயிலைகளை விட உக்கிரமானது. மாதுளையின் தோல். மனிதரின் தோலை மாசுபடத்தும் பாக சூரியகதிரிலிருந்து பாதுகாக்கும் தன்மையுடையது. UVA protection.
மாதுளைச்சாறு வெட்பதட்ப மாற்றம், சுற்றுச் சூழல் மாற்றம் மற்றும் முதுமை காரணமாகத் தோலின் அடியில் இருக்கும் கொழுப்பு தேய்வதைத் தவிர்த்து சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். இன்று சந்தையில் கிடைக்கும் பல தோல் களிம்புகள் மாதுளைச் சாறு கொண்டவையே..
கிடைக்கும் காலம்
வட அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் மாதுளைப்பழங்கள் செம்டம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை கிடைக்கும். இந்தியாவிலும், சீனாவிலும், மத்தியகிழக்கிலும் பழச் சந்தைகளில் வருடம் பூராவும் கிடைக்கும்.
மாதுளை வரலாறு
மாதுளையானது மித வெப்பமண்டலப் பழமாகும். இது பாரசீகத்தில் இன்றைய ஈரானிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே கிறிஸ்துவுக்கு முன்னர் தோன்றிய தாவரமாகும். பின்னர் பாரசீகத்தில் விவசாய ரீதியில் உற்பத்தி செய்யப்பட்டது. எனினும் யுதம், கிறீத்தவம், இஸ்லாம், பௌத்தம் போன்ற மதங்கள் யாவற்றிலும் மாதுளை முக்கிய பழமாகக் காணப்பெறுகிறது.
மொகஞ்சதாரோ நாகரீகச் சின்னங்களிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாதுளை உபயோகத்தில் இருந்தது தெரியவருகிறது. மேலும் கடல், தரை வர்த்தக பரிமாற்றங்களினாலும், சமய வழிபாட்டுத் தொடர்புகளினாலும் மத்திய கிழக்கு ஹெற்றைற் Hittite,அசிரியன் Assyrian, பீனீசியல் Phoenician,எகிப்திய Egyptian நாகரீகங்களிலும் கிழக்கில் சீன நாகரீகங்களிலும் மாதுளையின் மகிமை பரவியுள்ளது. பல நாகரீகங்களும் தமது உடல், உளவியல், சமயம் மற்றும் அலங்காரங்களுக்கு மாதுளம் பழத்தை முதன்மையாக பாவித்தது வரலாற்று ஆதாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அதன் பின்னர் ரோம் நாட்டினர் மாதுளையை போமா+கிராநேட் அதாவது பல் விதைகள் கொண்ட ஆப்பிள் பழம் என்று வர்ணித்தனர். இவர்கள் மாதுளைப்பழத்தை பாலுணர்வை ஊக்குவிக்கும் திரவியமாக நினைத்தார்கள். ரோம யுவதிகள் தமது மணவாழ்க்கை துவங்குகையில் மாதுளைத் துளிரிலைத் தண்டுகளை கிரீடமாக bridal wreaths அணிந்து கொண்டனர். அக்காலங்களில் மாதுளை ரோமர் ஆதிக்கப்பகுதிகளில் காதல் பழம் என்று கருதப்பட்டதாம். அரேபியர்கள் தமது கவிதைகள், இதிகாசங்களில் மாதுளையின் இளஞ்சிவப்பு பூவை பெண்களின் உதடுகளுக்கும், கனியை மார்பகத்திற்கும் ஒப்பிட்டனராம். பல கிழக்காசியச் சமூகங்கள் செம்மாதுளைச் சாறு ஒருவரின் ஈனமான எண்ணங்களையும் பொறாமைகளையும் அகற்ற உதவும் என்று கருதினராம்.
சீனாவில் இன்றும் மூன்று வகையான நிறைவுகள் என்னும் அடிப்படைத் தத்துவத்தின் படி மஞ்சள் எலுமிச்சை பழம் கடவுளுடைய அருட்பார்வைக்கும், செம்மஞ்சள் பீச் பழம் நீண்ட ஆயுளுக்கும், மாதுளை காரிய சித்திக்கும் அடையாளமாக கருதப்படுகின்றன. மேலும் சீனர் செம்பவள முத்துக்கள் கொண்ட சங்கு போன்ற மாதுளம் பழத்தை செழிப்பான வருங்கால சந்ததிகளைக் குறிப்பிடுவதற்காக தமது பீங்கான் மற்றும் பட்டுப்புடவை சித்திரங்களிலும் சேர்த்துக் கொண்டனர்.
மாதுளையின் மகிமை யூத மற்றும் கிறீஸ்தவ மதங்களிலும் தெளிவாகக் காணப்படுகிறது. யூத மதத்தில் அவர்கள் அடிப்படைச் சமய நூலான டோறா / ரோறா வில் இனவிருத்தியாற்றல் மாதுளையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள 613 அறக்கட்டளைகளும் ஒரு மாதுளைப் பழத்தின் விதைகள் போன்றவை என்றும் கருதப்பட்டுள்ளது. பண்டைய யூதக் கோயில்கள் மாதுளையின் வரைவுகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ தேவாலயங்களில் தொழ வரும் பக்தர்கள் மாதளைப் பழத்தின் விதையைப் போன்றவர்கள் என்று விவரிக்கப்படுகிறது. மேலும் விவிலியக் கதைகளில் வரும் ஆதாமும் ஏவாளும் மாதுளையையே உண்டார்கள் எனவும், அது பிற்காலத்தில் மேற்கத்திய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஆப்பிளாகிவிட்டது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுவர். கிபி 15, 16ம் நூற்றாண்டுகளில் மாதுளை புடவைகளிலும், கம்பளங்களிலும், வெள்ளி ஏதனங்கள், நகைகளிலும், சுவரில் அணியும் துணிமணிகளிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
தமிழ் மற்றும் அயற்சமூகத் தொடர்புகள்
சங்ககாலத் தமிழப்பாக்களிலும், தமிழர் உணவு, மருத்துவத் தயாரிப்புக்களிலும் மாதுளை இடம்பெறவே செய்கிறது. எமது மூதாதைகள் மாதுளைப்பழத்தின் உருவகத்தைப் பலவாறும் சிந்தித்துள்ளனர். மாதுளைப்பழமானது சந்ததி பெருக்கம், தனம் தானிய வளச் செழிப்பு, கருவுறுதல், வலிமை போன்றவற்றிற்கான பிரதான குறியாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாதுளை இந்திய நாட்டில் பெரும்பாலும் மகராஷ்டிரா, கஷ்மீர் மாநிலங்களிலும்,தெலுங்கு தேசத்திலும், சொற்பளவு தமிழ்நாட்டிலும், இலங்கையில் வடக்கு மாகாணத்திலும், அண்டைய
வேலணைத் தீவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமெரிக்கக் கண்டத்திற்கு மாதுளைப் பழம் ஸ்பானியர்களின் குடியேற்றத்தின் மூலம் அறிமுகமானது . அவர்கள் தென் அமெரிக்காவில் வெப்ப வலயப்பிரதேசங்களிலும், மெக்ஸிகோ நாட்டிற்கும், அமெரிக்க கலிபோர்னியா, புளோரிடா மாநிலங்களிலும் பரவ வழிவகுத்தனர்.
மாதுளைத் தாவரப் பராமரிப்பு
மினசோட்டா மாநிலம் மற்றும் மேல் ஐரோப்பியப் பிரதேசங்களில் மாதுளையானது அதன் பூக்களின் அலங்காரத்திற்காக உள்வீட்டில் வளர்க்கக் கூடியவை மாத்திரமே. இயற்கையாக மித வெப்ப மண்டலப் பிரதேசத்தில் மாதுளை மரமானது சராசரியாக 10-20 அடி உயரம் வரை வளரக்கூடியது. உலர்ந்த மாதுளை விதைகளில் இருந்தோ அல்லது வெட்டிய கிளைத்துண்டுகளில் இருந்தோ புதியச் செடியை உருவாக்கிக் கொள்ள முடியும். மாதுளை மரம் முற்றிலும் கனிகளைத் தர ஏறத்தாழ 7 வருடங்கள் வரை ஆகலாம். மாதுளை மரமானது ஏறத்தாழ 30 வருடங்களிற்குச் செழிப்பாகப் பழங்களைத் தர வல்லது. ஆயினும் விவசாய உற்பத்திக்காக வளர்க்கப்படும் தாவரங்களில் வருடா வருடம் கிளைகளை வெட்டி பழ உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.
மாதுளை விதைகளை அகற்றிச் சேகரிப்பது எப்படி?
பல குறிப்புகளில் மாதுளைப் பழத்தைப் பாதியாகப் பிளந்து கவிழ்த்து ஒரு மர அகப்பையால் தட்டி கிண்ணத்தில் சேகரிக்குமாறு கூறினாலும் அம்முறை விதைச்சாறுகளைச் சிதற வைத்து பரப்பிக் குதப்பிவிடலாம்.
-யோகி