மனையடி மரபுகள்
தமிழர் பண்டைய பிறப்பிடங்களில் குடிமனை கட்டுவதற்கு சான்றோர் பல வரையறைகளைத் தந்துள்ளனர். இவை மக்களின் அடிப்படை நடைமுறைகளை வைத்து அமைந்திருப்பினும் ஒருகாலத்தில் கடவுளர் வழிப்பாட்டைக் கொண்டு அமைந்தது என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் மனையடி மரபுகள் யாவை, முடிந்தளவு அவற்றிற்கான விளக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.
தமிழர் வாழ்ந்த இடங்கள் இடைவெப்பப் பிரதேசங்கள், வட அமெரிக்க வாழ்மக்கள் குளிர் பிரதேங்களில் வாழுகின்றனர். எனவே சில வரையறுப்புகளை நேரடியாக உபயோகிக்க முடியாமலும் போகலாம். எனினும் அவற்றின் பொதுவான விளக்கங்களை அறிந்து அவைகளை நமது சூழலில் எவ்வாறு பாவிக்கலாம் என்பதை வாசகர்கள் என்று வாசிப்போர் சிந்தித்துச் செயல்படலாம்.
வீடு கட்டுவோர் மரபின் படி நிலமாகிய பூமாதேவிக்கு நன்றி செலுத்தி நில அகழலை ஆரம்பிக்கலாம். இதை வடமொழி சார்ந்த நூல்கள், வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து புருஷன் எனும் நிலத்தேவதையை வணங்குமாறு வர்ணி்க்கிறது.
நிலத் தெரிவு
இதில் அடிப்படைக் குறிக்கோள் என்னவெனில் மனைகட்ட மாசற்ற நிலம் தேவை. எனவே நிலம் எப்படி இருக்கவேண்டும் என்று பரிசோதித்துப் பார்த்தல் அவசியம். இதை நவீன நிலஅளவையாளரும், நில அகழ்வு ஆராச்சியாளரும் செய்கின்றனர். நிலமானது உறுதியானதாகவும், பாரம் தாங்கக்கூடிய இறுக்கமான மண் கலவையைக் கொண்டிருத்தலும் அவசியம். இதன் காரணமாகத் தான் பாறையடிவாரம் கூடிய மேடான அமெரிக்க நியூயோர்க் மாநில மான்ஹாட்டன் தீவில் அதி உயரமான கட்டிடங்களையும், அரிசோனா, நெவாடா, கலிபோனியா மாநில பாலைவனப் மணல்ப் பகுதிகளில் பெரும்பாலும் நிலத்தை ஒட்டிய அகலமான கட்டிடங்களையும், காணலாம்.
மண்ணின் கலவை சேறு, கல், பாறை, கூழாங்கல், மணல் போன்றவற்றை ஆராய்ந்து அறிந்து மனை கட்டுவது நன்று என்று பண்டைய கைநூல்கள் சொல்லுகின்றன. கட்டிடங்கள் பலகாலம் நிலைத்திருக்க, மனி மனை புகுவோர் செழித்து சிறப்பாக வாழ மனையடி மரபுகள் பல வழிவகைகளைக் கூறுகின்றன.
மனை கட்டுவதற்கு முன்னர் பல புவியல், மற்றும் பல தரபொருத்தங்களையும் மனையடி மரபு சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக தற்போது விஞ்ஞான ரீதியில் கட்டிட அகழ்வுகள் நடத்தப்படினும், பண்டையகாலத்தில் மனையடிவாரக் குழிகள் என்பது யாது? அதன் அளவு முறை கோல்களில் என்ன என்றேல்லாம் சான்றோர் விவரித்துள்ளனர்.
ஒரு கட்டிடம் கட்டும் போது தாய்ச்சுவர்கள் primary walls of construction நன்கு அமைப்பதற்கான வழிமுறை, அதன் பிரதான பயன் என்னவென்று அறிந்து செயற்படச் சொல்லுகிறது. மேலும் மனையடி மரபுகள் வீடுகட்ட வேங்கை, தேக்கு மரங்கள் சிறந்தவை என்கிறது. மினசோட்டா மாநிலத்திலும், ஒன்ராரியோ மாகாணத்திலும் ஓக், ஊசியிலைக்காட்டு சீடர் மரங்களே பாவி்க்கப்படும்.
மனையமைப்பு வழிமுறை
பிரதான அறைகள், தானிய/உணவு சேகரிப்பு அறைகள் , பிரதான படுக்கை அறைகள் போன்றவற்றை வடகிழக்கில் அமைத்துக்கொள்வது சிறந்தது. மேலும் குளியல் பகுதி, வழிபாட்டு அறைகள் ஆகியவற்றை வீட்டின் கிழக்குப்பகுதியிலும் அமைக்கலாம். மேலும் இதர படுக்கையறைகள் கிழக்கு நோக்கியும், இடமில்லாவிடின் மேற்கிலும் அமைத்துக் கொள்ளலாம்.
சமையலறை, விருந்தோம்பலறை போன்றவற்றை தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம். படிப்பறை, மற்றும் ஆயுத, உபகரண உபயோகம், சேகரிப்பு அறைகளை தென்மேற்குப் பகுதியில் வைத்துக் கொள்ளலாம். (இவற்றுக்கு வட அமெரிக்காவில் சேற்று அறை mud room, போர்வை, காலணி சேகரிப்பு coat and shoe closet, மற்றும் துவையல் அறை washing machines போன்றவை உதாரணங்கள்).
ஆபரணங்கள், உடைபோன்றவற்றை வடக்குப்பகுதியி்ல் வைத்துக்கொள்ளுமாறு கூறுகிறது மனையடி மரபு.
வாயில் வரையறைகள்
மனையடி மரபு மேலும் நிலைக் கதவுகள் ஒரே பலகையில் அமைது சாலவும் நன்று என்று கூறுகிறது. இதை யாப்பானியத் தச்சத் தொழிலும் சரியெனக்கூறுகிறது. கதவுப்பலகையானது ஒரே பலகையில் செய்வதால் பல பயன்கள் உண்டு. ஒரே மரத்தின் நடுவில் கணுக்கள் (knots) இல்லாத பலகைகள் மிகவும் உறுதியானவை. காலகாலத்துக்கும் நடுவில் விரிசல்கள் ஏற்படாமல், தெறிக்காமல் நிலைக்கக் கூடியவை. அழகியல் ரீதியிலும் மரப்பலகையில் நரம்புகள் கீழ் இருந்து மேல் செல்வது பார்வைக்கு எளிமை தரும். எழிமையைத்தரும்[SR1] .
ஒரே பலகையில் செய்ய இயலாவிடின் 3,5,7 பலகைகளை உள்ளவையாகக் கதவை அமைக்குமாறு கூறுகிறது மரபு. இதிலும் இப்பலகைகள் ஒரே மரத்தாலானவையாக இருக்க வேண்டும் என்றும் சான்றோர் வலியுறுத்துகின்றனர்.
இனி கதவு இணைக்கப்படும் வாசற்படிக்கு வருவோம். தமிழ் மரபுகளின் படி தலைவாசற்படிகளை விட உள் வாசற்படிகள் சிறிது உயரமாக இருக்கவேண்டும் என்கிறது. வீட்டின் வாசல் அமைப்பிலும் சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. மனைவாசல் இடமிருந்து விடப்படுமானால் அது கிழக்கு மேற்கில் நீண்டும், வடக்குத் தெற்கில் குறுகியதாகவும் இருக்கவேண்டும் என்கிறது.
வாசலானது வரவேற்புக்கு முக்கியமான இடம். எனவே வருவோர் வசதியாக வந்து தரிக்கவும், தங்கவும், வரவேற்கக்கூடியதாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது வீட்டுக்கு வருவோர் அல்லது மீழுபவர்கள்[SR2] வாசலடியில் சிறிது நேரம் தரித்து உரையாட வும் இடையூறு இல்லாமல் அமைவது நல்லதாகும்.
மனையொன்று கட்டி அதே காணியில் இன்னுமொரு இருப்பிடம் கட்டவேண்டும் என்றால் அதன் அளவுமுறைகள் தனியாகக் கணக்கிடப் படவேண்டும் முதல் வீட்டுடன் இணைக்கக் கூடாது என்கிறது மரபு. இதற்கு தற்கால விஞ்ஞானரீதியிலும் பதில் உண்டு. அதாவது கட்டிடங்களின் பாரம்தாங்கு தன்மையை structural integrity குழப்பலாகாது. இதைப் பொருட்படுத்தாவிட்டால் கட்டிடத்தின் தாங்குதன்மை படிப்படியாக இழக்கப்பட்டு இயற்கை மற்றும் செயற்கைக்காரணிகளால் பாரிய இடிதல்கள் கூட ஏற்படலாம்.
மரபுப்படி மேல்மாடிகள் கட்டுவதானால் பூகோள காந்தசக்தியையும் கருத்தில் கொண்டு கிழக்குப்பகுதியிலும், வடக்குப்பகுதியிலும் கட்டுவது நன்று. மாடிப்படிகளையும், வாசல்களையும் வடக்கு நோக்கி, அல்லது கிழக்கு நோக்கி வைப்பது நல்லது. வட அமெரிக்காவில் இது பிரத்யேக வெளிமேடைத்தளம் Outside deck கட்டிடங்கள் அமைக்க ஏற்ப ஒரு அறிவுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டுக்கழிவுநீர் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் இருந்து போவது நன்று என்கிறது மரபு. இது வட அமெரிக்காவில் ஏற்கனவே தாபிக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களில் சாத்தியப்படாது. . காரணம் கழிவு நீர் அகற்றல் நகரக்கால்வாய்களுக்கு இறுதியில் சென்றடைய வேண்டும் எனவே அதை தனிப்பட்ட மனையாளர் நிர்ணயிக்க முடியாது.
மேலும் மனைகளில் பிரதான வாசலில், அல்லது சமையல் அறைகளை அடுத்து கழிவறைகள் இருப்பதைத் தவி்ர்த்துக் கொள்ளுமாறு மனையடி மரபுகள் கூறுகின்றன.
மனையடியில் மரங்கள்
மனையமைக்கும் போது சுற்றுச்சூழல் பற்றியும் சான்றோர் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு அருகில் சிறு இலைகள் உடைய புளி,அகத்தி,முருங்கை, நாவல் போன்ற மரங்களையும் , சுவாசத்திற்கு இடையூறாகக்கூடிய பருத்தி, இலவு, எருக்கு போன்ற மரங்களையும் தவிர்க்குமாறு கூறப்படுகிறது.
வடஅமெரிக்காவில் சிறு இலைகள் உடைய மரங்கள் சொற்பம். ஆயினும் மினசோட்டா, ஒன்ராரியோவில் அழகாயிருப்பினும் அழும்அலரி weeping willow, yew, juniper போன்ற மரங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
அதே சமயம் பழம்தரும் மரங்கள் செடிகொடிகளைப் பேணுவது வீட்டின் செழிப்பிற்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள் சான்றோர்கள்.
யோகி