\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பொங்கக் காசு

Filed in இலக்கியம், கதை by on January 21, 2015 0 Comments

pongal-potkaasu_620x875பொங்கலோ பொங்க… பொங்கலோ பொங்க…

ஊரு செழிக்க, ஊத்த, மழை பெய்ய..

பொங்கலோ பொங்க…

நாடு செழிக்க, நல்ல மழை பெய்ய..

பொங்கலோ பொங்க…

தனது கர்ண கொடூரக் குரலுடன் சத்தமாய்ப் பாடிக் கொண்டே, கையிலிருந்த தட்டு ஒன்றில் சிறு குச்சியால் தட்டிக் கொண்டே வீட்டு முற்றத்தில் பொங்கி வழியும் பொங்கல் பானையைச் சுற்றிக் கொண்டு நடந்து சென்றார் ராமச்சந்திர அம்பலம். அவரைப் பின்பற்றி அவரின் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் முதல் மருமகள், அவள் வயிற்றுப் பிள்ளை எட்டு வயது பிரவீன் என ஒரு பெரிய பட்டாளமே பாடலைப் பின்னால் பாடிக்கொண்டே, அவரைப் பின் தொடர்ந்து நடந்து சென்றது. அம்பலம் வழக்கமாக தனது பேரன் பிரவீனுக்கு பண்டிகைக் காலங்களில் ஐந்து ரூபாய் கொடுப்பார். பொங்கலுக்கு மட்டும் பத்து ரூபாய், உழவர்கள் இல்லம் என்பதால் பொங்கலுக்குச் சிறப்பு அதிகம்.

அம்பலம் ஊரிலேயே பெரும்புள்ளி. தனவந்தர். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணமுள்ளவர். அவரால் பயனடைந்தவர்கள் அந்த ஊரில் ஏராளம். அந்த ஊரில் அவர்தான் நாட்டாமை, அவர் கூறுவதே இறுதித் தீர்ப்பு. நேர்மையாகத் தீர்ப்பு வழங்குபவர், ஆனாலும் சில சமயங்களில் அவரையே அறியாமல் தவறு இழைத்து விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால்தான் நீதித்துறையில் அத்தனை கட்டுப்பாடுகளை விதித்து, தாமதங்களை ஏற்படுத்தி, பலரைச் சாதக பாதகங்களை விவாதிக்கச் செய்து தீர்ப்பு வழங்குகின்றனர். அது போன்ற கவனமான ஆராய்ச்சிகள் இல்லாமல் வழங்கப்படும் தீர்ப்புகள் சில முறை தவறுவதில் ஆச்சரியமேதும் இல்லையல்லவா!

ஒரு முறை   கணவன் மனைவி பிரச்சனை ஒன்று அவரிடம் பஞ்சாயத்திற்கு வருகிறது. கணவன் காளையன் மனைவி
ராசுவின் மேல் சந்தேகம் கொள்கிறான். பக்கத்து வீட்டுக்காரனுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதே பிராது.

ராசு புத்திக் கூர்மையான பெண்.கிராமத்துப் பெண்களுக்கே உரித்தான வெட்கம் அதே சமயத்தில் வெடுக்கெனப் பேசும் சாதுர்யம் கொண்டவள். இந்தச் சாதுர்யமே பல சமயங்களில் அவளைத் துடுக்கான பெண்ணாகக்
காட்டும். திருமணத்திற்கு முன்வரை அனைவரிடமும் சகஜமாகப் பழகுவாள். அவளைச் சுற்றி குழந்தைகள் கூட்டம் எப்பொழுதும் வலம் வரும். காளைகளின் கூட்டமும் வலம் வரும், அழகானவள் என்பதால். ஆனால் அவர்களையெல்லாம் நெருக்கமாக என்றும் அவள் அனுமதித்ததில்லை. சகஜமாகப் பேசினாலும், அளவுக்கதிமாக நெருக்கமாகின்றனர் எனத் தெரிந்தால், உடனடியாகச் சீறி விழுந்து அந்த உறவை முறித்து விடுவாள். சில சமயங்களில் அவர்களின் எலும்பை முறிப்பதற்கும் தயங்குபவளல்ல அவள்.

கல்யாணத்திற்குப் பிறகு இந்த கிராமத்திற்குக் குடி வந்தவள். கணவன் காளையன் கட்டுப்பெட்டியான விவசாயி. மனைவி தனக்குக் கட்டுப்பட்டவள், மற்றவரிடம் பேசுவதற்குக் கூட, தன்னிடம் அனுமதி பெற வேண்டுமென நினைப்பவன். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சம்பத், கிராமத்துப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருப்பவர். வயதில் குறைந்து, இன்னமும் திருமணம் செய்து கொள்ளாதவர் எனினும், மிகவும் முதிர்ச்சியும், நல்லெண்ணமும் கொண்டவர். ராசுவை ஒரு நல்ல நண்பியாக மனதார ஏற்றுக் கொண்டவர். ஆனால் அந்தச் சிறு கிராமத்தில் அப்படி நினைப்பவர்கள் அவ்வளவு அதிகமில்லை என்பதே நிதர்சனம்.

தனது தோழிக்கு, பொங்கல் திருநாளை முன்னிட்டு, அன்புடன் அவர் வழங்கிய பணத்தைத் தொலைவிலிருந்து பார்த்துக் காளையனிடம் தவறாக யாரோ சொல்லிவிட, அதிலிருந்து தொடங்கியது காளையனின் சந்தேகம். தேடிப் பிடித்து, சாமிப்படத்தின் முன்னர் அவள் வைத்திருந்த அந்தப் பணத்தைத்தான் பஞ்சாயத்தாரின் முன்னர் ஆதாரமாகக் கொடுத்திருந்தான் காளையன்.

பஞ்சாயத்தில் மிகத் தீவிரமாக விசாரணை நடக்கிறது. கிட்டத்தட்ட பத்து மனிதர்களுக்கு மேல் ராசுவுக்கு எதிராக சாட்சி சொல்கின்றனர். பெரும்பாலானவர்கள் அவளால் உறவோ, எலும்போ முறிக்கப்பட்டவர்கள். இதன்மூலம் தங்களின் பழியைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

அனைத்து சாட்சிகளையும் விசாரித்தாகிவிட்டது. அம்பலம் பொங்கல் பூஜையை முடித்துக் கொண்டு தீர்ப்பு சொல்வதற்குச் செல்கிறார். அவரும் ராசுவை பலமுறை கவனித்துள்ளார். அவரால் அந்தப் பெண் அப்படிப்பட்டவள் என்று நம்ப இயலவில்லை. ஆனால் சாட்சியங்கள் அனைத்தும் அவளுக்கு எதிராகவே இருக்கின்றன. சாட்சியங்களை வைத்துத் தீர்ப்புச் சொல்ல வேண்டுமெனில் அவள் குற்றவாளி என்றே தீர்ப்புச் சொல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் அவரின் மனசாட்சி அவள் குற்றவாளியாக இருக்க இயலாது என அடித்துச் சொல்கிறது. இந்த
மனப் போராட்டங்களுடனேயே அவர் பொங்கல் பூசையை முடித்தார்.

ஊருக்கு நடுவிலிருந்த ஆல மரத்தினடியில் மொத்த ஊரும் கூடிவிட்டது. அனைவருக்கும் என்ன தீர்ப்பு என்று கிட்டத்தட்ட புரிந்து விட்டிருந்தது. அழுது அழுது சிவந்த கண்களுடன் செய்யாத தவறுக்காகத் தண்டனை அனுபவிக்க இருப்பதை நினைத்து இன்னும் அழுதுகொண்டே நின்று
கொண்டிருக்கிறாள் ராசு. தன் மகளின் மேல் முழு நம்பிக்கை இருந்தாலும், “ஆம்பிளைப் பசங்ககிட்ட பேசாதடி” என சிறு வயது முதல் தாம் கூறிய அறிவுரைகளைக் கேட்காததால் இந்த நிலை வந்ததே என்று நொந்துகொண்டே அவளின் பெற்றோர் அழுது கொண்டு நின்றிருக்கிறார்கள்.

உயிரைவிட மானத்தைப் பெரிதாக நினைக்கும், திருக்குறளும் பாரதியும் நன்கு படித்துத் தேர்ந்த ஆசிரியர் சம்பத், தனக்குக் கிடைக்கப் போகும் தவறான தண்டனையை நினைத்துக் கலங்கியபடி நின்று கொண்டிருக்கிறார். கண்கள் முழுக்க சிவந்திருக்க, நடக்கும் செயலின் கட்டுப்பாடு எதுவும் தன்னிடமில்லாத நிலையில், தோளிலிருந்த துண்டைச் சரிசெய்து கொண்டு, அம்பலம் மேடையிலிருந்து கீழிறங்கி தீர்ப்புச் சொல்லத் தயாராகிரார்.

எங்கிருந்தோ “தாத்தா…………” என்று சத்தமிட்டுக் கொண்டே ஓடி வருகிறான் பேரன் ப்ரவீன். ஓடிவந்து அருகில் நின்று, மூச்சு இறைத்துக் கொண்டே, “தாத்தா, தாத்தா….” என்று கூவிக்கொண்டிருக்கிறான் அவன். “டேய்.. பயலே.. இங்கெல்லாம் வரக்கூடாது… அங்குண போயி ஆத்தாகிட்ட ஒக்காரு…” என அதட்டலாகச் சொன்ன தாத்தாவைப் பார்த்து… “தாத்தா… ஐயா… சார் வந்து.. ம்ம்… சார் வந்து…” என இழுக்க, தன் பேரன் நடக்கும் வழக்குக்கு  சம்பந்தமாய் ஏதோ சொல்ல வருகிறான் என்பதை உணர்ந்த அம்பலம், அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க முன்வருகிறார்.

“தாத்தா… சாரு…… ராசக்காக்கு.. பொங்கக் காசு குடுத்தத நாம் பாத்தே….” எனக் கூறி முடிக்க, மொத்தக் கூட்டமும் அமைதியானது. ராசுவின் முகத்தில் ஒரு அளப்பரிய மகிழ்ச்சி….. சம்பத் ஓடிச் சென்று அந்தச் சிறுவனைக் கட்டியணைக்கத் தயார்…

“ஏண்டா பேராண்டி, என்னத்தடா பாத்த …” அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அம்பலம் அவனை விசாரிக்கத் தொடங்குகிறார். “தாத்தா… போன வாரத்துல நான் சாரு வீட்டுக்குப் பாடம் படிக்கப் போகயில, சாரு அக்காகிட்டப் பேசிகினு இருந்ததப் பாத்தேன்… சாரு அக்காகிட்ட காசு குடுத்து, பொங்கலுக்குச் சீல வாங்கிக்கன்னாக, அக்கா அவுக கால்ல விளுந்து கும்புட்டுக்கிச்சு”

அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை. காளையனின் கண்கள் இப்போது கலங்கத் தொடங்கின. அற்புதமான ஒரு உறவை அசிங்கமாக
நினைத்தோமே எனக் கதறியழத் தொடங்கினான். ராசுவின் கண்களின் இப்பொழுது ஆனந்தக் கண்ணீர். சம்பத் பெரு மூச்சு விடத் தொடங்கினார்.

“ஆத்தா மகமாயி… நாஞ்செஞ்ச பூசைக்குப் பலன் கொடுத்ததுக்கு நன்றி ஆத்தா.. சின்னப் புள்ள வடிவுல வந்து நான் தப்பாத் தீர்ப்புச் சொல்லாமப் பாத்துக்கிட்டியே ஆத்தா…” என மனதிற்குள் நன்றி சொல்ல ஆரம்பித்தார்…

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad