புதுமைப் பதுமை
வழிமீது விழிவைத்துக் காத்திருந்தாள், கன்னல்
மொழிபேசி மனங் கவரும் ஏந்திழையாள்
களிபாடிச் சேர்ந்திருக்கப் பார்த்திருக்கும், சிற்பி
உளிபேசும் சிறப்பான கற்சிலையாய்…
ஊர்விட்டு வெளியுலகு சென்ற வில்வேந்தன்
போர்முடித்து வருநாளை ஆவலுடன் நோக்கி
சோர்வுற்று, சோறின்றிப் பசலை கண்டு
கார்மேகம் சூழ்ந்துவரக் கவலையுற்றே…
கொலைகளைப் புரிந்திடும் தொழிலே போரன்றோ
கலைகளைப் போற்றிடும் எம்கணவன் புரிவானோ
சிலைகளை ரசித்தவன் சிதைகளை விளைப்பானோ
அலைகளாய்ப் பொங்கிய அதிர்வுணர்வாலே…..
போரினை நிறுத்திப் புரிந்திடுக அமைதி
கூறிய புத்தனைச் சிந்தையில் போற்றி
சீரிய முறையினிலே கணவனைத் திருத்த
காரிகைக் காத்து நின்றனளே..… !!!
-வெ. மதுசூதனன்