\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பணயம்

Filed in இலக்கியம், கதை by on January 21, 2015 1 Comment

payanam_620x350பார்க்கிங்கிற்குள் நுழையும் போது ஏழு இருபத்தி நான்காகிவிட்டிருந்தது. போச்சு. இன்று சரியான நேரத்தில் ட்ரெயினைப் பிடிக்க முடியாதெனத் தோன்றியது சாரிக்கு. வழக்கமாக பிடிக்கும் ட்ரெயினைப் பிடித்தாலே நார்த் ஸ்பிரிங்கிலிருந்து ஏர்போர்ட் போய்ச் சேர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஏழு இருபத்தியாறை விட்டால் அடுத்த வண்டி ஏழு முப்பத்தி எட்டுக்குத் தான். எல்லாம் அந்த வால்வோ சண்டாளனால் வந்தது.

 

வீட்டை விட்டு சரியான நேரத்துக்குத் தான் கிளம்பினான் சாரி. இத்தனைக்கும் வைஷூ ஸ்கூல் பஸ்ஸுக்கு லேட்டாகி விட்டது என்று கேட்டபோது கூட மைதிலியை ட்ராப் பண்ணிவிடச் சொல்லிவிட்டு ஓடி வந்தான். ட்ரான்சிட் பார்க்கிங் வரை எல்லாம்  சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. பார்க்கிங் வாயிலில் அந்த வால்வோ வண்டிக்காரன் வழியை மறித்துக் கொண்டு நின்று விட, உள்ளே போகவும் முடியாமல் வெளியே வரவும் முடியாமல் சிக்கிக் கொண்டு ..அவஸ்தை. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் போராடித் தான் அவனது வண்டியை அகற்ற முடிந்தது. பாவம் அவனைக் குறை சொல்லியும் பயனில்லை. இருபது வருடங்களுக்கு முந்தைய மாடல் என்று பார்த்தாலே தெரிந்தது.. ஓரமெல்லாம் துருப் பிடித்து, ஓட்டை விழுந்து… அவனும் காலில் விழாத குறையாகத்தான் மன்னிப்பு கேட்டான். ஓடிப் போய்ப் பார்க்கலாமா? ஒரு வேளை ட்ரெயின் ஓரிரு நிமிடங்கள் லேட்டாகியிருந்தால்?

ஓடினான்…  இல்லை .. பயனில்லை.. போய்விட்டிருந்தது. செல்போனில் மணி பார்த்தான். ஏழு இருபத்தியெட்டாகி விட்டிருந்தது. அடுத்த வண்டி வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும். ‘மறுபடியும் வண்டியைத் தவற விட்டுட்டேனா?’ மூச்சு வாங்க ஆங்கிலத்தில் பேசி சாரிக்குப் பக்கத்தில் வந்து நின்றான் ஒரு தாடிக்காரன். தன்னிடம் கேள்வியாக கேட்டானா அல்லது ஆதங்கத்தைச் சொன்னானா என்று புரியாத சாரி, ‘ஆமாம் ..அப்படித்தான் தெரிகிறது..’ என்று சொல்லி வைத்தான்.

 

‘எல்லாம் அந்த ___யால் வந்தது’ என்று எதோ ஒரு பெண்ணைத் திட்டினான். செல்ஃபோனைப் பார்த்தான். ‘அடுத்த வண்டி வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது’ என்று மார்த்தா ரெட்லைன் அட்டவணையைச் சாரியிடம் காட்டினான். ‘நீங்களும் வண்டியைத் தவற விட்டு விட்டீர்களா?’ என்று கரிசனமின்றிக் கேட்டான். பொறுமையின்றி, மண்டையைத் தேய்த்தவாறே  சில அடிகள் நடந்தான். திரும்பவும் சாரியிடம் வந்து ‘அடுத்த வண்டி முப்பது செகண்ட் லேட்டாம் .. பாரு.. பாரு ..’ என்று செல்ஃபோனைச் சாரியின் முகத்தருகே நீட்டினான். இதென்ன தேவையில்லாத அவஸ்தை என்று தோன்றியது சாரிக்கு. அடுத்த ஐந்து நிமிடங்களில் நான்கைந்து முறை சாரியிடம் ஃபோனைக் காண்பித்து ஏதேதோ பேசினான் அவன். ‘ஹே .. ரிலாக்ஸ் .. இன்னும் மூன்று நிமிடங்களில் வண்டி வந்துவிடும் பதட்டப்படாதே’ என்றான் சாரி. ‘ரைட்.. நான் ரொம்ப பதட்டப்படறேன் .. அமைதியாயிருக்க முயற்சிக்கிறேன் என்றவன் இரண்டடி நடந்து சென்றான். மறுபடியும் செல்ஃபோனைப் பார்த்தவன் சாரியிடம் மெதுவே நடந்து வந்தான் அமைதியாகக் கடுமையான குரலில். ‘இந்த முறை நீ பதட்டப்படாமல் பாரு’ என்று ஃபோனைச் சாரியின் முகத்தருகே நீட்டினான். சொரேரென்று ஷாக் அடித்தது போலிருந்தது சாரிக்கு..

மைதிலியும், வைஷுவும்..  மேலும் முகமூடி அணிந்த இரு மனிதர்களும்.. கையில் துப்பாக்கிகளுடன்.

ண்டி போய்க்கொண்டிருந்தது. நடப்பது விளங்காமல் வெளிறிய முகத்துடன் அமர்ந்திருந்தான் சாரி. பக்கத்தில் அந்த தாடிக்காரனும்.  ‘இங்க பாரு சாரி … நார்மலா இரு.. மத்தவங்க கவனம் நம்ம மேல விழற மாதிரி வெச்சுக்காதே. நான் சொல்றதை அமைதியாக் கேளு. குறுக்கே எதையும் பேசக் கூடாது. அது தான் உன் மனைவிக்கும், பிள்ளைக்கும் நல்லது. என்னைப் பார்’.

அவனைப் பார்த்தான் சாரி. அவனது கண்களில் கண்டிப்பிருந்தது. ‘யார் நீ?’.

‘என்னை விடு.. விஜயராகவாச்சாரி உன்னோட முழுப் பெயர்.. சாரின்றது உன் குடும்பப் பேரு.. நான் சாரின்னு தான் கூப்பிடப் போறேன்…’

 

‘ஏன் இப்படியெல்லாம் பண்றே?’

‘இங்க பாரு சாரி.. நான் முன்னாடி சொன்ன மாதிரி நடுவிலே எதுவும் பேசாதே! நீ ஏர்போர்ட் போய்ச் சேருவதற்குள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். சொன்னதை மட்டும் செய். முக்கியமா, பதட்டப்படாதே.. முகத்தை நார்மலா வெச்சுக்கோ .. உன் மனைவியும் மகளும் பத்திரமா இருப்பாங்க. நாங்க சொல்லப் போறதை நீ செஞ்சு முடிச்ச அரை மணி நேரத்திலே அவங்க உன் வீட்டிலே இருப்பாங்க’

 

‘என்னிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பணமெல்லாம் கிடையாது. நான் ஒரு சாதாரண எஞ்சினியர்.’

 

‘இல்லையில்லை பணமெல்லாம் கிடையாது .. நீ சொன்னியே எஞ்சினியர் .. ஏவியேஷன் எஞ்சினியர் அங்க தான் உன்னுடைய உதவி தேவை.’

 

‘உனக்கு எப்படி தெரியும்?’

 

‘இங்க பாரு. அதையெல்லாம் விளக்கமா சொல்றதுக்கு நேரமில்லை .. பல மாதங்களா சேகரிச்ச விஷயங்கள்.. நீ போயிங்ல ஏவியேஷன் எஞ்சினியர். ரெண்டு வருஷமா, ஜாக்சன் இன்டர்நேஷனல்லயிருந்து கிளம்பற டெல்டா போயிங் ஃப்ளைட்ஸ் எல்லாத்திலேயும் ப்ரொப்பல்ஷன் சிஸ்டத்தைச் செக் பண்ணி அப்ரூவ் பண்றது உன்னுடைய வேலை .. உன்னுடைய அப்ரூவல் இல்லாம எந்த விமானமும் கிளம்பாது. வீட்டிலேயிருந்து லஞ்ச் எடுத்துட்டு போவே .. வெளியில சாப்பிடப் பிடிக்காது. உன் பொண்ணு ஈகிள் சர்க்கிள் ஸ்கூல்ல நாலாவது படிக்கிறா.. உன் மனைவி பி.என்.ஜி. பேங்க்ல செக்யுரிட்டி ஆடிட்டிங் ஸ்பெஷலிஸ்ட். மூணு மாசத்துக்கு முன்னாடி ஹவாய் போய் வந்தீங்க. உன்னுடைய கிரெடிட் ஸ்கோர் 793. க்ளீன் சிவிலியன் ரெகார்ட்ஸ். இப்படி உன்னுடைய பர்சனல் டேட்டா எல்லாம் இருக்கு. இங்க பாரு’ என்று செல்ஃபோனைக் காட்டினான்.

 

வைஷு, மைதிலி, அவளது அப்பா அனந்தராமனோடு எடுத்த புகைப்படங்கள், சாரியின் வீட்டுப் புகைப்படம், கிரெடிட் ஹிஸ்டரி இன்னும் பல தஸ்தாவேஜுகளைக் காட்டினான்.

ஆச்சரியம் கலந்த பயத்துடன் தாடிக்காரனின் முகத்தைச் செய்வதறியாமல் பார்த்தான் சாரி. ‘என்ன செய்ய வேண்டும் நான்?’

 

‘சொல்றேன்.. இன்னைக்கு உன்னோட ஸ்கெட்யூல் படி நீ நாலு ஃபிளைட்ஸைச் செக் பண்ணனும். பதினொண்ணு பத்துக்கு, டெல் அவிவ் போகப் போற ஃப்ளைட்ல ஒரு சின்ன வேலை செய்யணும்.  நான் கொடுக்கற பையை நீ ஃப்ளைட்ல வெக்கணும்.’

 

‘என்ன சொல்ற நீ? அதெல்லாம் செய்ய முடியாது..’

 

‘பதட்டப்படாமல் யோசிச்சுப் பாரு ..உன்னுடைய மனைவி, மகள் ரெண்டு பேரையும் நீ செய்யப் போற இந்தச் சின்ன வேலையால தான் காப்பாத்த முடியும். உன்னை நம்பி இருக்கிறவங்க அவங்க..’

 

‘நீ நினைக்கிற மாதிரி கிடையாது..நான் வெளியிலேயிருந்து எதையும் உள்ளே எடுத்துட்டுப் போக முடியாது. அது மட்டுமில்லாம கேபினுக்குள்ள போறதுக்கு எனக்கு அனுமதியில்லை.’

 

‘உன்னால முடியாததைச் செய்யச் சொல்ல நான் முட்டாள் கிடையாது. கேபினுக்குள்ள எல்லாம் நீ போக வேண்டாம். வழக்கமா நீ போகும் எஞ்சின் சேம்பர்ல தான் வேலை. அங்கதான் உன்னுடைய வெரிஃபிக்கேஷன் வேலையெல்லாம் எப்பவும் செய்வே இல்லையா? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பல மாசங்களா உன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிச்சுத் தான் உன்னைத் தேர்ந்தெடுத்தோம். உன்னுடைய கம்ப்யூட்டர் பேக் ஸ்கேனர்ல போகும் போது எப்படி பீப் பண்ணுமோ அதே அளவுக்கு பீப் பண்ணக் கூடிய பொருளைத் தான் நான் இந்த பேக்கில் வைத்திருக்கிறேன்.’ தனது நீண்ட கோட்டை விலக்கி உள்ளிருந்த பையைக் காட்டினான் அவன்.

அச்சு அசலாக சாரியின் பையைப் போன்று இருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு பூதங்குடி வல்வில் ராமர் கோவிலில் வாங்கிய கயிறு ஒன்றைத் தனது கைப்பையின் ஓரத்தில் கட்டி வைத்திருப்பான் சாரி.. அது போலவே ஒரு கயிறைக் கட்டி வைத்திருந்தான் தாடிக்காரன். சாரிக்குச் சடாரென பொறி தட்டியது. சில வாரங்களுக்கு முன்பு இதே போன்றதொரு ரயில் பயணத்தின் போது முன்பின் அறியாத எவனோ ஒருவன் சாரியினுடைய பையைப் பார்த்து அங்கலாய்த்து, தானும் அது போன்றதொரு பையை வாங்கப் போவதாகத் தெரிவித்து புகைப்படமெல்லாம் கூட எடுத்துக் கொண்டானே .. அப்படியானால்? இவர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை..

 

‘நீ செய்யப் போறது ரொம்பச் சின்ன வேலை. உன்னுடைய பைக்கு பதிலாக நான் கொடுக்கப் போகும் இந்தப் பையை எடுத்துட்டுப் போய்,  கம்ப்யூட்டர் இல்லாம புரபல்ஷன் வெரிஃபிகேஷன் பண்ணிவிட்டு பையை எஞ்சின் சேம்பர்லயே விட்டுட்டு வந்துடணும்..’

 

தூக்கிவாரிப் போட்டது சாரிக்கு. ‘அதெல்லாம் நடக்காத காரியம். எஞ்சின் சேம்பர்ல நிறைய கேமரால்லாம் இருக்கு. அது மட்டுமில்லாம உன்னுடைய பையை முதல்ல உள்ளே கொண்டு போறதே நடக்காத காரியம் .. நிறைய செக்பாயிண்ட்ஸ் இருக்கு.. தயவு செய்து என்னை விட்டுடு.. என் மனைவி, குழந்தையை அனுப்பிடு.’

 

‘குரலை உயர்த்தி, அழுது மத்தவங்க கவனத்தை இழுக்க நினைக்காத… நீ செய்யற ஓவ்வொரு தவறான செயலும், உன் மனைவியும், பிள்ளையும் திரும்ப உன்னிடம் வருவதற்கான வாய்ப்பைக் குறைத்துக் கொண்டேயிருக்கும்.’

 

‘இல்லை.. அப்படியெல்லாம் செய்யாதே … நான் அழலை’

 

‘தட்ஸ் குட். இங்க பாரு 777 ஃப்ளைட்டைப் பத்தித் தலைகீழா நின்னு சொல்லக்கூடிய பல பேர் எங்க டீம்ல இருக்காங்க .. நீ சொல்ற அதே எஞ்சின் சேம்பருக்குள்ள தான் ஒரு பையன் திருட்டுத்தனமாப் பயணம் செஞ்சான். எஞ்சின் சேம்பர்ல, புரபல்ஷன் செக்‌ஷன்ல கேமரால்லாம் கிடையாது. இந்தப் பையை உள்ளே எடுத்துப் போவதற்கு உனக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். உன்னுடன் வேலை பார்க்கும் சிலர் அதற்கு வழி செய்வாங்க. அவங்க கடந்த  பதினைஞ்சு நிமிஷமா இங்க உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்காங்க .. இன்னைக்கு முழுக்க உன்னைக் கண்காணிச்சுகிட்டே இருப்பாங்க.’

 

சுற்றுமுற்றும் பார்த்தான் சாரி.. தூரத்தில் கெவின் யாருடனோ பேசியபடி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். நீயுமா கெவின்??

 

‘கெவினும் உன்னுடைய ஆளா?’

 

‘பேரெல்லாம் கேட்காதே .. இன்னும் பல பேர் இந்த நொடியில் உன்னைக் கண்காணிக்கிறாங்க. அதனால தப்புத்தப்பா யோசிக்கிறதை விட்டுட்டு நான் சொன்னைதை மட்டும் செய்..’

 

‘என்ன பண்ணனும்?’

 

‘இவ்வளவு நேரம் சொன்னது தான்.. இந்தா இந்தப் பையை எடுத்துக்கோ. உன்னுடைய பையைக் கொடு. உன்னுடைய ரெண்டு செல்ஃபோனையும் கொடுத்துடு. இந்த செல்ஃபோனை வச்சுக்கோ. இதிலிருந்து வேற யாரையும் கூப்பிட முடியாது. எங்களிடமிருந்து வர கால்ஸ் மட்டும் தான் நீ பேச முடியும். இந்தப் பையை வழக்கமா நீ உன்னுடைய பையைக் கொண்டு போற மாதிரி கொண்டு போ. ஒருத்தராலும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. வழக்கமா நீ செய்யற வெரிஃபிக்கேஷனைப் பண்ணு. அப்ரூவல் சைன் பண்ணதுக்கப்புறம் அதை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கோ. இந்த ஃபோனை நாங்கள் பத்து நிமிடத்துக்கொரு முறை ஆக்செஸ் செஞ்சிகிட்டேயிருப்போம். உன்னுடைய கையெழுத்தோட அப்ரூவல் ஃபார்ம் டவுன்லோட் ஆன பத்து நிமிஷத்திலே உன் மனைவியும், பிள்ளையும் வீட்டிலே இருப்பாங்க.’ அவனது தோளிலிருந்து பையை எடுத்துச் சாரியின் பைக்குப் பக்கத்தில் வைத்தான்.

 

‘இதில் என்ன இருக்கிறது?’

 

‘அது பத்தியெல்லாம் நீ கவலைப்படாதே.  முக்கியமா இன்னொரு விஷயம். இதை எந்தக் காரணம் கொண்டும் நீ திறக்கக் கூடாது.’ அவனது செல்போனை சாரியிடம் கொடுத்தான்.

 

‘அப்படியானால்?…’

 

‘எதுவும் கேட்காதே. நான் சொன்னதை ஞாபகம் வைத்துக் கொள். நீ தினமும் செய்யும் வேலை தான். பதட்டப்படாதே. முகத்தில் எந்த கலவரமும் வேண்டாம். எந்த விதத்திலேயும் இதில் நீ சம்பந்தப்பட்டதாகத் தெரியாது. இதை எடுத்துக் கொள்.. உன் செல்ஃபோனையும் பையையும் கொடு’. தரையில் இருந்து பையை எடுத்து அவனது கையில் திணித்தான்.

 

‘இல்லை.. என்னால் முடியாது.. பயமாயிருக்கு’ அவன் திணித்த பையைக் கீழே வைத்தான் சாரி ..

 

‘கத்தாதே.. எதுவும் சாமர்த்தியமாக செய்ய நினைக்காதே .. உனக்கு வேறு வாய்ப்பேயில்லை. தைரியமாச் சொன்னதை மட்டும் செய். உன்னுடைய பையைக் கொடு. நான் ஈஸ்ட்பாயிண்டில் இறங்கி விடுவேன்.  அங்கிருந்து வேறு இருவர் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள். எதுவும் முட்டாள்தனமாகச் செய்யாதே. ஞாபகமிருக்கட்டும் உன் மனைவி, மகள் இருவரின் உயிரும் உன் கையில் தான் உள்ளது. நான் பையைக் கீழே வைக்கிறேன் .. உன் பையையும் வை .. நான் உன் பையை எடுத்துக் கொள்கிறேன்..’ ஏதோ நண்பனுக்கு அறிவுரை சொல்வது போல் சொன்னான் தாடிக்காரன். சாரியின் செல்ஃபோன்களை வாங்கிக்கொண்டான்.

 

‘வேண்டாம் என்னை விட்டு விடு. நான்..’

 

‘நிறுத்து..’ சாரியை மேலும் பேச விடாமல் குறுக்கிட்டான். ‘நாளைக் காலை இதே நேரத்தில், உன்னுடைய பையும், செல்ஃபோன்களும் உன்னிடம் சேர்ப்பிக்கப்படும். வேறு எந்த முறையிலும் போலிசையோ, உன் மனைவியையோ தொடர்பு கொள்ள நினைக்காதே. உன் அலுவலகத்திலும் உன்னைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன். மடத்தனமாக எதையும் செய்யாதே. ஆல் த பெஸ்ட்.’ மீண்டும் பையை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டுத் தரையிலிருந்த மற்றொரு பையை எடுத்துக்கொண்டு இறங்குவதற்குத் தயாராக எழுந்து சென்று வாசலருகே நின்று கொண்டான்.

 

குப்பென்று வியர்த்து விட்டிருந்தது சாரிக்கு. ஈஸ்ட் பாயிண்டில் இறங்கி விட்டான் தாடிக்காரன். ஏர்போர்ட் போவதற்கு முன் காலேஜ் பார்க்கில் இறங்கி விடலாமா? தாடிக்காரன் சொன்ன மாதிரி வேறு யார் தன்னைப் பார்க்கிறார்களோ என்ற பயம் வேறு. எழுந்து கதவருகே சென்றான். எவனோ ஒருவன் ‘உங்க பையை மறந்துட்டீங்க’ என்றான். அப்படியானால் இவன் தாடிக்காரனுடைய ஆளோ? புரியவில்லை. தூரத்தில் சாரியுடன் வேலை செய்யும் டோனியும் நின்றிருந்தான். இவனும் தாடிக்காரனின் ஆளோ?

ர்போர்ட் ஸ்டேஷனில் இறங்கினான் சாரி. வழக்கமாகப் போகும் வழி தான் எல்லாமே புதிதாக, புரியாத இடம் போல் தோன்றியது. எல்லோரும் தன்னையே பார்ப்பது போலிருந்தது. இயந்திரமாக நடந்து தன் அலுவலகத்துக்குள் செல்லும் வாயிலருகே வந்து நின்றான். ஸ்கேனர் செக் பாயிண்டில் ஸ்காட் இருந்தான்.

இவனிடம் உதவி கேட்கலாமா? ‘குட்மார்னிங் சாரி. உன்னுடைய நாள் எப்படி போய்க்கிட்டிருக்கு’ என்றான் ஸ்காட். இவனும் தாடிக்காரனின் ஆளோ? அவனது முகத்தில் கலக்கத்தையும், குழப்பத்தையும் கவனித்தவன்  ‘உன் முகமே சொல்கிறது உனது நாள் சரியில்லையின்னு .. எனக்கும் அப்படித்தான் .. சரி சரி .. உன் பையை ஸ்கேனர் பெல்ட்லே வை’ என்றான். சாரி பையை ஸ்கேனர் பெல்ட்டில் வைத்தான். கடவுளே, இவனாவது பார்த்து பையில் என்ன இருக்கிறது என்று சொல்வானா? பை நகர்ந்து சென்று ஸ்கேனர் கம்பார்மெண்டுக்குள் நுழைந்தது.

 

‘ஹே, ஸ்காட் இங்க ஒரு நிமிஷம் வர முடியுமா?’ பின்னால் நடந்து வந்த டோனி சரியான நேரத்தில் அவனை அழைத்தான்.

 

‘உன்னுடைய பையை அந்த பக்கத்தில் எடுத்துக்கோ’ என்று சொல்லிவிட்டு டோனியை நோக்கி நடந்தான் ஸ்காட். ஸ்கேனருக்குள் பை நுழைந்ததும் பீப் பீப் என்று கத்தியது.

 

ஒரு நிமிடம் நின்று திரும்பிய ஸ்காட், ‘வழக்கம் போல் செல்ஃபோனைப் பையிலேயே வைத்து விட்டாயா? எடுத்துக்கிட்டுப் போ. நாளையிலேயிருந்தாவது செல்ஃபோனைத் தனியா வை..’ என்று அலட்சியமாக சொல்லிக் கொண்டே டோனியிடம் பேசச் சென்றான். அடப்பாவி எல்லோருமே இதில் கூட்டாளிகளா?

 

ஒன்பதேகால் மணி சுமாருக்கு 777  விமானம் ஹேங்கருக்குள் வந்து நின்றது. தொழில்நுட்பப் பணியாளர்கள் தங்களது பணிகளை முடித்து விட்டு இறங்கினார்கள். பின்னர் சாரி உட்பட மூன்று பொறியாளர்கள் கொண்ட குட்டி வேன் வர, வேனிலிருந்த ஹைட்ராலிக் லிஃப்ட் வழியாக விமான எஞ்சின் பகுதிக்குள் அவர்கள் நுழைந்தனர். சாரிக்குள் பெரிய போராட்டமே நடந்தது. பைக்குள் என்ன இருக்கும்? திறந்து பார்க்க பயமாக இருந்தது. ஏதாவது செய்யப் போய் அவர்கள் மைதிலி, வைஷூவை ஏதாவது செய்துவிட்டால். அப்படியானால் விமானத்தில் பயணிப்பவர்கள்? எத்தனை மைதிலிகள், எத்தனை வைஷூக்கள்? என்ன செய்வது? கண்கள் இருட்டிக்கொண்டு மயக்கம் வருவதைப் போலிருந்தது சாரிக்கு. என்ன செய்கிறோம் என்றே புரியாமல் எதெல்லாமோ செய்தான்.

 

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழித்து அவர்கள் வெளியே வந்த போது, சாரியின் கையில் மட்டும் பை இல்லை. வெரிஃபிகேஷன் ஃபார்மில் கையெழுத்திட்டனர். சாரி, தாடிக்காரன் கொடுத்திருந்த ஃபோனில் யாருமறியாமல் படமெடுத்தான்.

 

‘ஏன் இப்படி வேர்க்கிறது உனக்கு. உடம்புக்கு ஒண்ணுமில்லையே..’ உடன் வந்தவர்கள் கடமைக்காக கேட்டனர்.

 

இனி என்ன செய்வது என்று புரியவில்லை சாரிக்கு. லீவ் எடுத்துக் கொண்டு போய் விடலாமா? அது நமக்கு எதிரான சாட்சியாக அமைந்து விடுமோ? முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொள்ள வேண்டும் ; சகஜமாக நடந்து கொள்ள வேண்டும். மைதிலிக்கு ஃபோன் பண்ணலாமா? பாவம் அவள் எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ? அவர்களை விட்டுவிட்டிருப்பார்களா? நாமேதாவது நடுவில் குழப்பி விட்டால்? ஃபோனெடுத்துப் பேசினால் நான் போலீசைக் கூப்பிடுகிறேன் என்று யாராவது நினைத்து விட்டால்? வேண்டாம் காத்திருப்போம்.

 

எந்த நேரத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது சாரிக்கு. பத்து மணி சுமாருக்கு விமானம் பயணத்துக்குத் தயாராகி ஹேங்கரை விட்டு வெளியே சென்றது. அடுத்த ஒரு மணி நேரம், விமானம் கிளம்பிச் செல்லும் வரை, நரகமென்றால், அதன் பிறகு வேறொரு விதமான பதட்டம். விமானம் ஒழுங்காகப் போய்ச் சேருமா?

 

மாலை வெராந்தாவில் எதிரே வந்த டோனி, “உன் மாமனாருக்கு இப்போ பரவாயில்லையா? பேசினாயா என்றான்”. ஒரு வேளை இந்தியாவிலும் இவர்கள் ஆட்களை வைத்துள்ளார்களோ?

 

“என் மாமனாருக்கு என்ன?”என்று டோனியைப் பிடித்து உலுக்கினான்.

 

“இல்லை, காலையில் ட்ரெயின்லே வரும்போது உன் பக்கத்து வீட்டுக்காரன் எவனோ உன் மாமனாருக்கு உடம்பு மோசமா இருக்கிறதாகவும். உன்னை கவனமாப் பாத்துக்கும்படியும் சொல்லியிருந்தான் … அதான் அப்பப்ப உன்னை கவனிச்சுகிட்டிருந்தேன். இப்போ எப்படி இருக்கார்” என்றான் மலங்க மலங்க.

அப்படியானால்? இவன் நிஜமாக அவர்களது அடியாள் இல்லையா?

 

“அப்போ ஸ்கேனிங் பெல்ட் .. ஸ்காட்டிடம் நீ பேசியது?”

 

“போன வாரம் அவனுடைய காருக்கு பாட்டரி மாத்தணும்னு சொல்லிகிட்டிருந்தான். நாளைக்கு வீட்டுக்கு வந்தா மாத்தித் தரேன்னு சொல்லிகிட்டிருந்தேன்..”

 

“அப்படின்னா மைதிலி விஷயம் உனக்குத் தெரியாதா?”

 

“யாரு மைதிலி?”

 

அவசர அவசரமாக அவனிடம் ஃபோனை வாங்கி மைதிலிக்கு ஃபோன் செய்தான். ஃபோனை எடுக்கவில்லை சண்டாளி.. ராங் நம்பரென்று நினைக்கிறாளோ? தனது மேஜைக்கு ஓடி அலுவலக எண்ணிலிருந்து கூப்பிட்டான். எடுத்தாள். பேசினான்.

 

“ஹலோ மைதிலி”

 

“சொல்லு குட்டிப்பா .. எங்கே போனே இன்னைக்கு முழுக்க.. எத்தனை தடவை ஃபோன் பண்றது”

 

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன் .. சௌரியமா, பத்திரமா இருக்கியா.. வைஷு எங்க?

 

“எங்க சௌரியத்துக்கு என்ன கொறச்சல்.. காலம்பற தானே பாத்துட்டுப் போனே? தூர தேசமா போயிட்டம்? நான் சொல்ல வந்ததைக் கேளு.. இன்னைக்கு ..”

 

“எங்கருந்து பேசற நீ இப்போ..”

 

“ஆத்துலேருந்துதான் .. ஏன்?”

 

“இல்ல கேட்டேன்.”

 

“அத விடு .. இன்னைக்கு என்ன வேடிக்கைன்னா .. காலம்பற அவசர அவசரமா வைஷுவை ட்ராப் பண்ணலாம்னு போறச்சே.. நம்ப தெரு மொனைலே ஒருத்தன் என் வண்டியை நிறுத்தினான்.. ஒடனே ஒரு ரெண்டு தடியனுங்க மூஞ்சையெல்லாம் மூடிக்கிட்டு ஓடி வந்தானுங்க.. எங்க ரெண்டு பேரையும் எறக்கி நிக்க வெச்சு ஒரு அஞ்சு நிமிஷம் ஏதேதோ கேட்டு பயமுறுத்தினாங்க .. நேக்கு கண்ணுல முட்டிண்டு அழுகையே வந்துடுத்து ..எங்கள ஃபோட்டோல்லாம் எடுத்தாங்க..

கடைசீல என்ன நடந்தது சொல்லு பாப்பம்?”

 

சொல்லித் தொலையேண்டி ஜடமே .. நினைத்துக் கொண்டான்..

 

“கடைசீல பாத்தா .. நம்ப சேனல் 7 காராளாம் .. ‘வாட் வுட் யூ டூ’ கேண்டிட் கேமரா ஷோவாம்.. போன உசுரு திரும்ப வந்தது நேக்கு .. அப்புறம் அவாளே எங்கள கார்ல ஏத்தி அனுப்பி வெச்சா”

 

“அப்ப..”

 

“என்னடா குட்டி … இவ்வளவு கஷ்டப்பட்டுச் சொல்றேன் ..ரியாக்‌ஷனே இல்லாம அப்புறங்கறே? ஆஃபீஸ் டென்ஷனா? சீக்கிரமா வா .. வைஷு உன்னண்ட அதையெல்லாம் சொல்லணும்னு துடிச்சிண்டிருக்கா..”

 

ஃபோனைக் கட் பண்ணினான் சாரி .. அப்ப இதெல்லாமே ஒரு நாடகமா? நம்மையும் படம் பிடித்திருப்பார்களோ? குழம்பிப் போனான். சற்று ஆறுதல் ஏற்பட்டது. வெட்கமாகவும் இருந்தது.  நிஜமாகவே அவர்கள் நம்மையும் டீ.வியில் காண்பிப்பார்களோ? உலகமே தன்னைப்   பார்த்து சிரிக்கப் போகிறதா? அல்லது எதிர்த்துப் பேச முடியாத கோழை எனப்போகிறதா? எப்படியாவது சொல்லட்டும் ..அப்பாவிகள் உயிரிழக்கும் பழிக்கு ஆளாகாமல் இருந்தால் சரி. டேட்டா டவரில்  பணி புரியும் ராம்குமாருக்கு ஃபோன் போட்டான்.  பொதுவாக வானில் தற்போது பறந்து கொண்டிருக்கும் போயிங் விமானங்களின், உயரங்களையும், எஞ்சின் நிலைமையையும் கேட்டறிந்தான் .. அதில் டெல் அவிவ் சென்று கொண்டிருக்கும் விமானத்தைப் பற்றியும் ராம் சொன்னது சிறிது நிம்மதியளித்தது. எதுவுமில்லை … வெடிகுண்டெல்லாம்  எதுவுமில்லை .. விமானத்துக்கு ஒண்ணும் ஆகாது,  பயப்பட வேண்டாமெனத் தோன்றியது.

 

வீடு சென்றபின்னும் இருப்புக் கொள்ளவில்லை சாரிக்கு.. இன்னும் எட்டு மணி நேரம் ,ஆறு மணி நேரம்  என்று விமானம் டெல் அவிவ் சென்றடையும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தது அவனது மனம். விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் அலாரமில்லாமல் எழுந்தான். பெருமாளே .. எதுவும் நடக்காம இருந்திருக்கணும் என்று நினைத்துக் கொண்டு ஜலவாதிப் பணிகளை முடித்துவிட்டு முதல் வேலையாக டேட்டா டவருக்குப் பேசினான். ராம்குமாருக்கு பதில் ஹம்சத்வனி இருந்தாள், தெலுங்கு கலந்த ஆங்கிலத்தில் அட்லாண்டாவிலிருந்து கிளம்பி இலக்கைச் சென்றடைந்த விமானங்களின் ரிபோர்ட்டை படித்தாள்.

 

ஜகார்தா – செஸ்னா கிரவுண்ட் சீரோ நைனர்

நியூ டெல்லி – எஸ்.சீ.எல்

சிட்னி எஸ்.எஸ்.எல். என்று படித்துக் கொண்டு வந்தவள்

டெல் அவிவ் எஸ்.சீ.எல்.  என்று உச்சரித்ததும் சாரி துள்ளி குதித்தான் .. சேஃப் க்ளீயர் லாண்டிங் …

 

‘தாங்க யூ .. ஹம்சா ..’ என்று மடிப்பு ஹம்சாவை பார்த்த கணக்காய் உணர்ச்சிவசப்பட்டான்.

 

‘மைது .. மைது.. ‘ என்று எட்டு ஊருக்கு கேட்கிற மாதிரி அழைத்தான் …

 

‘நான் குளிச்சிண்டிருக்கேன்..’

 

‘சரி .. சரி மெதுவாக் குளி .. சாயந்தரம் வர்றச்சே நம்ம ரசிக்லால் கடையிலே நெய் தோசையும் .. மணிப்பூர் அல்வாவும் வாங்கிண்டு வந்திடறேன் ..   நீ சமைச்சிண்டிருக்க வேண்டாம் ..’

 

ஃபோன் அடித்தது .. ஸ்டீவ், அவனது உயரதிகாரி பேசினான் ..’என்னய்யா பண்ணியிருக்கே நீ..’ என்று தான் தொடங்கினான்.  சப்த நாடியும் அடங்கிப் போனது சாரிக்கு .. அப்படி என்றால் ஹம்சா சொன்னது தவறோ .. டெல் அவிவ் ப்ளைட் வெடித்து விட்டதோ ..

 

‘நான் பேசறது கேக்குதா .. உன்னுடைய கம்ப்யூட்டர் பையை சேம்பருக்குள்ளவே வெச்சிட்டு வந்திருக்கே .. நல்ல வேளை, நம்ம போயிங் ஆளே அதை பாத்திருக்கான் .. யாருக்கும் தெரியாம அப்புறப்படுத்திட்டான்  .. பையிலிருந்த  உன் பேரையும், கம்ப்யூட்டரையும் பாத்துட்டு அவன் என்னைக் கூப்பிட்டான் ..     டோனி நேத்து உங்க மாமனார் உடம்பு சரியில்லாம இருக்கிறதா சொன்னான்… அந்த மாதிரி இருந்தா லீவு போட்டுட்டு விட்டிலே இருக்கிறது தானே … இந்த மாதிரி  நீ தப்பு செஞ்சது தெரிஞ்சா நம்ம மெயிண்டனென்ஸ் காண்ட்ராக்டே கான்சல் ஆயிருக்கும் … இன்னைக்காவது தெளிவாயிருக்கியா .. ‘ என்னென்னவோ பேசினார் ..

சாரிக்கு மீண்டும் மகிழ்ச்சி தொத்திக் கொண்டது .. இதுக்கே இப்படி சொல்றியே .. குண்டு வெடிச்சிருந்தா என்னை என்ன பண்ணியிருப்பே என்று நினைத்துக் கொண்டான்.

 

மைதிலி இன்னும் குளித்து முடிக்கவில்லை . டீ.வியைப் போட்டான், பாக்ஸ் பைவ் சானல்.. நார்க்ராஸ் பகுதியில் மிகச் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் பலர் மாண்டதாக காண்பித்தார்கள் ..  அவர்களில் சிலரின் புகைப்படத்தை காண்பித்தார்கள் .. வயதான வெள்ளைக்காரப் பெண்மணி, ஒரு ஹிஸ்பானிய குடும்பம், ஒரு நடுத்தர தம்பதியினர் .. அடுத்த வந்த புகைப்படத்தில் பார்க்கிங்கில் பார்த்த வால்வோ  ட்ரைவரும், ட்ரெயினில் வந்த தாடிக்காரனும்…

 

– மர்மயோகி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. vince says:

    wow interesting till d end …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad