நிதர்சனம்
சரமென பொழிந்த நீர்த்துளி ஓடையில்
சுகித்து மகிழ்ந்து நீராடி ஓய்கையில்
சிப்பியென் இதழோரம் தங்கிய ஓர்துளியை
சிதறாது துடைத்திட ஓர் பணிப்பெண்!
கெண்டை விழிகள் சிந்தைக் கவர்ந்திட
கரும் மை தீட்டினாள் ஒருவள்!
கணைவில் புருவம் கர்வம் சேர்த்திட
கவனங் கூட்டி திருத்தினாள் ஒருவள்!
கற்றைக் கூந்தலை அலையாய்க் கோதி
கலையாது களைந்து கட்டிட ஒருத்தி!
கனத்து கொழுத்த கொங்கை இரண்டை
கரும்பச்சை கச்சையில் அடைத்திட ஒருத்தி!
வெண்பளிங்கு தந்தமென ஒளிரும் கழுத்தில்
வைரக் கண்டிகை புனைந்தாள் தோழி!
வைடூரிய வளைகளை கைகளில் பூட்டி
விரலுக்கு மோதிர மிட்டாளொரு தோழி!
ஆலிலை இடையில் பட்டாடை சுற்றி
ஆழிமுத்து ஆரமிட்டு கட்டிட ஒருபெண்!
ஆரணங்கு எந்தன் மாவிலைப் பாதங்களில்
ஆதரவாய் மருதோன்றி பூசிட ஒரு பெண்!
நானிலம் போற்றும் மன்னன் மகளென
நாணியே நானும் நிலையில் நின்றேன்
நாடியே வந்த நிழற்பட கலைஞன்
நாபியை சுழித்து நன்முலைத் திருத்தி
நாளை நாடெங்கும் நாவிதர் நிலைய
நாட்காட்டியை நடன நங்கை நிந்தன்
நிகரில்லா நிழலோவியம் நிறைத்திடும் என்றே
நாலாயிரம் திணித்து கனவினைக் கலைத்தான்!!
– ரவிக்குமார்
Tags: love