சாண்டாலாந்து … (மேசிஸ் கிறிஸ்துமஸ் கோலாகலம்)
சாண்டாலாந்து … (மேசிஸ் கிறிஸ்துமஸ் கோலாகலம்)
குளிரும் இருள் சாரலும் அதிகமாகும் மார்கழிப்பனியிலே யாவரையும் குழந்தைகளாக்கி மனதார அனுபவிக்க வைக்கும் ஒளி மயமான கோலாகலமே மினசோட்டா மாநில மேசிஸ் அலங்காரம்.
இம்முறை சாண்டாவின் உதவியாளர்களாகிய எல்வ்ஸ் எனும் கற்பனை மனிதர்களின் வாழ்க்கை அடிப்படையில் அலங்காரக் கண்காட்சி அமைக்கபெற்றது. இதற்காக சாண்டா, அவரது பாரியார், மேலும் 76 எல்வ்ஸ்களின் அசையும் உருவகங்கள் அமைக்கப்பட்டதாம்.
மினியோப்பொலிஸ் நகரி்ல் 52 வருடங்களாக டெயிட்டன் மார்ஷல் ஃபீல்ட் தாபனங்கள் (தற்போதைய மேஸிஸ் நிறுவனம்) கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் வெவ்வேறு கருப்பொருளைக் கொண்டு இந்தக் காட்சியறையை வடிவமைத்து வருகிறது.
இவ்வருட காட்சியறை சாண்டாலாந்து என்று அழைக்கப்பட்டது. சுமார் 20 தச்சர்கள், மேலும் பல ஓவிய, சிற்ப, தையல், பாவையாட்டி கலைஞர்களால் ஏறத்தாழ ஒரு மாதத்தில் உருவாக்கப்பட்டதாம். பல ஒலி, ஒளி அமைப்பு கலைஞர்களின் உதவியால் முன்னூறுக்கும் மேற்பட்ட விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாண்டின் அலங்காரத்துக்கு மட்டுமே 400 காலன்களுக்கும் அதிகமான நிறச்சாந்துகள் (color paints) பூசப்பட்டனவாம்.
மேலும் சாண்டாவிற்கான விளையாட்டுப் பொருட்கள், எழுநூறுக்கும் மேற்பட்ட பரிசுக் கோரிக்கை அடங்கிய, கையினால் எழுதப்பட்ட தபால்களும், அலங்காரிக்கப்பட்ட பரிசில்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைத் தவிர மேஸிஸ் தாபனத்தாரின் 800 கடைகளிலும் பிரத்யேகமாக கோலாகலமான அலங்காரங்கள் நடைபெற்றன என்பதும் இவ்விடம் குறிப்பிடத்தகும்.
படங்கள் : ராஜேஷ் கோவிந்தராஜன்
தொகுப்பு : யோகி