வாசகர்களுக்கு வணக்கம்
வாசகர்களுக்கு வணக்கம் மற்றும் 2015 ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி முடித்து சில தினங்களே ஆகியுள்ள நிலையில், வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
என்ற பொய்யாமொழிப் புலவனின் கூற்றுக்கொப்ப, விவசாயமே எல்லாச் சமூகங்களின் முதுமெலும்பான துறையாக இருந்து வந்துள்ளது. கடவுள் என்னும் முதலாளி நேரடியாகக் கண்டெடுத்த தொழிலாளி விவசாயி மட்டுமே என்றார் கவியரசர். அதுபோன்ற பெருமைகளுக்கு உரித்தான, தன்னிகரில்லாத் தொழிலான விவசாயத்திற்கு உதவிகரமாக இருக்கும் அனைத்து உயர்திணை, அஃறிணைப் பொருட்களுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் திருநாளாகும்.
முப்போகம் விளைந்த காலங்களில், அதற்கு முழுமுதற்காரணம் சூரியன் என்று உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள். ஓஸோன் லேயர் என்றால் என்னவென்று தெரிந்திராத காலம். எந்தக் காலங்களில், சூரியனின் ஒளியில் எந்தவிதச் சத்துப் பொருட்கள் இருக்கும் என அறிந்து அதற்கேற்ப விவசாயம் செய்தவர்கள் நம் முன்னோர்கள். சூரியன் மற்றும் விவசாயத்திற்கு உதவிகரமாக விளங்கும் மாடுகள், ஏர்கலப்பை என அனைத்திற்கும் உளமார்ந்த நன்றி செலுத்தும் இப்பண்டிகை விவசாயிகள் மற்றும் தமிழர்களின் வாழ்வில் மிகவும் உயர்ந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுவது வியப்புக்குரிய விஷயமன்று. அத்தகைய பெருமையுடைய பண்டிகைக்கான வாழ்த்துக்களை பனிப்பூக்களின் சார்பில் வாசகர்களுக்கு மீண்டும் உரித்தாக்குகிறோம்.
இந்தியா பல வேறுபட்ட சமஸ்தானங்களை ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட ஒரு ஐக்கிய தேசம் என்பது நாமறிந்ததே. ஒரு கோப்பை மதுவிற்காக நாட்டை எழுதித்தந்த மன்னர்களும் வாழ்ந்தனர், அதே காலகட்டத்தில் ஒரு பிடி மண்ணை அன்னியனிடமிருந்து காப்பதற்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்த தியாகச் சுடர்களும் மன்னர்களாக இருந்த பூமியது. இதுபோன்ற அனைத்துத் தரத்தினரையும் அவரவர்களின் தேவைக்கேற்ப சமரசம் செய்து, ஒன்று சேர்த்து, ஒரு வலுவான குடியரசாக மாற்றிய பெருமை இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார். வல்லபபாய் பட்டேலையே சாரும். அவர், அனைத்து சமஸ்தானங்களையும் இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவாக அறிவித்த நாளே ஜனவரித் திங்கள் 26ஆம் திகதி.இந்நாளையே குடியரசு நாளாக இந்தியா கொண்டாடுகிறது. விரைவில் வர இருக்கும் இந்தக் குடியரசு நாளுக்கான வாழ்த்தையும் தெரிவித்து வணங்குகிறோம்.
வழக்கம் போல இந்த மாதத்தின் படைப்புகளனைத்தையும் படித்துத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர்.